இலங்கையில் உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது நடந்த ஏராளமான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உலகறிந்தவை. அடுத்த மாதம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இது தொடர்பாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஒரு தீர்மானம் கொண்டு வர உள்ளன. இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமை அமைப்பின் தலைவர் நவிபிள்ளை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:-
இலங்கையில் உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களைப் பொருத்தமட்டில் இலங்கை அரசு தொடர்ந்து உண்மையை அம்பலத்துக்கு கொண்டு வரவும், நீதி வழங்கவும் தவறி வருகிறது. அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறுவது அல்லது பிற காரணங்களை சொல்வது இனியும் ஏற்கத்தக்கதல்ல என்று நம்புகிறோம். அடிப்படையில், அரசியல் தலைமையின் (அதிபர்) விருப்பம்தான் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்தப் பிரச்சினையில், சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்படவேண்டும். உள்நாட்டில் நடத்தப்பட்ட விசாரணை தோல்வியுற்ற நிலையில், சர்வதேச விசாரணைதான் புலன்விசாரணையில் புதிய தகவல்களைக் கொண்டு வரும். உண்மையையும் அம்பலப்படுத்தும்.
இதற்கு பதில் அளித்து, ராஜபக்சே அரசு சார்பில், ஜெனீவாவில் அமைந்துள்ள இலங்கையின் நிரந்தர தூதரகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டதாவது:
நவி பிள்ளையின் அறிக்கை, முழு விவரமும் அறியாமல் முன்கூட்டியே புகார் கூறுவதும், அரசியல் ஆக்குவதும், ஒரு சார்பானதும் ஆகும். இலங்கை விவகாரத்தில் அவர் இதைத்தான் பின்பற்றி வருகிறார். எப்படி இருந்தாலும், இலங்கை தன் சுய நல்லிணக்க செயல்பாடுகளை தொடரும். இதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. அந்த அறிக்கையின் முடிவையும், பரிந்துரையையும் இலங்கை அரசு முழுமையாக நிராகரிக்கிறது. அது ஒருதலைப்பட்சமானது. தேவையற்றது. இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் விவகாரத்தில் தலையிடுவதும் ஆகும். அந்த அறிக்கையில், போரினால் கற்ற படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகள் அடிப்படையில் உள்நாட்டு நடவடிக்கைகள், செயல் திட்டங்கள் குறித்து போதுமான தகவல் இல்லை.
இவ்வாறு ராஜபக்சே அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது