BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 13 April 2014

காங்கிரஸ் கட்சி இல்லையென்றால் எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது-தங்கபாலு

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுப்ரமணியனை ஆதரித்து மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு நாமக்கல்லில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சி இல்லையென்றால் எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது எனக் கூறினார். மேலும் அவர் பேசியதாவது:

காங்கிரஸ் கடந்த 65 ஆண்டுகளாக இந்த மண்ணுக்காக போராடிய இயக்கம். தமிழகத்தில் காமராஜர் தலைமையில் நிறைவேற் றப்பட்ட திட்டங்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அவருக்கு இணையான சாதனையை எந்த கட்சியும் படைக்கவில்லை. நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் தலைமையில் தொடர்ந்து மக்களுக்கு நல்லாட்சி செய்து வருகிறோம். 70 கோடி மக்களுக்கு உணவு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் உலகளவில் இந்தியாவில் மட்டுமே உள்ளது.

தமிழகத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் முறையாக செயல்படுத்தவில்லை. அதனால், மக்களுக்கு வழங்கும் தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் போடப்படும் என உத்தரவு போட்டுள்ளோம். காங்கிரஸ் கட்சி இல்லையென்றால் எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. அரசியலில் மாற்றம் வரலாம். ஆனால், உண்மையை மறைக்க முடியாது.

மதசார்பற்ற கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தால் அதற்கு கை குலுக்கி ஆதரவளிப்போம் என கருணாநிதி சேலத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசினார். இதற்கு என்ன அர்த்தம் என அனைவருக்கும் தெரியும்.’

இவ்வாறு தங்கபாலு பேசினார்.

மோடி அலை அல்ல பாஜக அலை தான் வீசுகிறது - முரளி மனோகர் ஜோஷி .

இன்று முரளி மனோகர் ஜோஷி அளித்த பேட்டியில் , இன்று நாடு முழுவதும் மோடி அலை வீசவில்லை மாறாக பாஜக அலை தான் வீசுகிறது . இந்த அலை ஒரு தனி நபரை குறிக்கவில்லை , கட்சியை அடையாளப் படுத்துகிறது . மோடிக்கு அனைத்து மக்களிடம் இருந்தும் , கட்சியின் அனைத்து
தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது என்றார் .

மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதால் ஜோஷி அவர்களுக்கு கான்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது . இது பற்றி கூறுகையில் இந்த முடிவை தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் . ஆனால் இது கட்சி ஒன்றாக கூடி எடுத்த முடிவு  என்றார் .

பாஜக வின் தேர்தல் அறிக்கையை வடிவமைத்தவர்  முரளி மனோகர் ஜோஷி

மோடி இல்லற வாழ்வில் ஈடுபடவே இல்லை; கருணாநிதி அப்படியா?- வைகோ

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் டி.ஆர். பச்சமுத்துவை ஆதரித்து வைகோ நேற்று பெரம்பலூரில் பிரச்சாரம் செய்தார். அப்பொழுது அவர், "முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினை, இலங்கையுடனான மீனவர் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளில் தமிழகம் நீதி பெற நாம், 39 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும் மற்றும் இதுவரை தமிழகம் கொடூரமாக வஞ்சிக்கப்பட்ட நிலை மாற வேண்டும்." என்று கூறினார். மேலும் அவர் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் தாக்கி பேசியதாவது:

தனக்கு திருமணமான தகவலை மறைத்திருக்கிறார் மோடி என்று ஆவேசமாய் கருணாநிதி சுட்டிக் காட்டுகிறார். 1 விரல் அடுத்தவரை சுட்டும்போது 3 விரல்கள் தன்னை சுட்டும் என்பதை அறியாதவரா அவர். மோடியின் திருமணம் ஒரு பால்ய விவாகம். திருமணம் ஆனதும் மோடி சன்னியாசியாக இமயமலை சென்றார். அந்த பெண்மணி ஆசிரியை கனவில் படிக்கச் சென்றார். அவர்கள் இல்லற வாழ்வில் ஈடுபடவே இல்லை. ஆனால், கருணாநிதி அப்படியா? இதற்கு மேலும் கருணாநிதி பேசினால் என்னிடம் இருந்தும் சவுக்குகள் வெளியாகும்.

ஜெயலலிதா பிரதமர் கனவில் திளைக்கிறார். எந்த நாட்டுக்கு என்று தெரியவில்லை. ஏதேனும் தீவினை விலைக்கு வாங்கி அதற்கு பிரதமர் ஆகப்போகிறாரா. பேச்சுவார்த்தை என்ற பெயரில் கம்யூனிஸ்ட்களை தினந்தோறும் இழுத்தடித்து, கடைசியில் மரியாதை இல்லாது வெளியேற்றி இருக்கிறார். இந்த அனுபவம் எங்களுக்கும் உண்டு என்ற வேதனையில் இதை சொல்கிறேன்.

இவ்வாறு வைகோ பேசியிருந்தார். 

ரஜினியை சந்தித்தார் மோடி!



தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னை வந்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். சென்னை - போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.35 மணிக்கு இந்தச் சந்திப்பு நடந்தது.

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, ரஜினிக்கு மோடி வாழ்த்து தெரிவிக்க நேரில் சந்திதத்தாக பாஜகவினர் கூறினர்.

தற்போது கூட்டணி இறுதியாகி பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், மீண்டும் தமிழகம் வர மோடி முடிவு செய்தார். இங்கு அவர் 3 நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளார். முதல்கட்டமாக இன்று சென்னை - மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையின் 3 தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு டெல்லி செல்லும் நரேந்திர மோடி, மீண்டும் 16 மற்றும் 17-ம் தேதிகளில் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

பாஜக தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீட்டைப் பற்றி ஒரு வார்த்தைகூட இடம்பெறவில்லை


காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் சனிக்கிழமை இரவு நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:

பாஜக தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீட்டைப் பற்றி ஒரு வார்த்தைகூட இடம்பெறவில்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நச்சுக் கருத்துக்கள் பல உள்ளன. வெவ்வேறு மதங்கள் கொண்ட இந்திய நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ராமர் கோயில் கட்டுதல், பொதுசிவில் சட்டம் அமலாக்கம் ஆகியவை சிறுபான்மையினர் நலனைப் பாதிக்கும் செயலாகும். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தினால் நாட்டில் மதக்கலவரம் ஏற்படும் சூழல் உருவாகும்.

அதிமுக, திமுக கட்சிகளின் எல்லை தமிழகம் வரை மட்டும்தான். அவர்கள் மத்திய ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி கிடையாது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கா விட்டால் பாஜக தலைமையிலான மதவாத ஆட்சிதான் அமையும். இவ்வாறு சிதம்பரம் பேசினார்.

2014 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், முதல் முறையாக பாஜகவை விமர்சித்த ஜெயலலிதா

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெயலலிதா, முதல்முறையாக பாஜகவை விமர்சித்து பேசினார். கரூர் தொகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட ஜெயலலிதா பேசியது:

தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினையாக விளங்குவது காவிரி நதிநீர்ப் பிரச்சினை. காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும், காவிரி பிரச்சினையைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

மத்தியிலே பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தாலும், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தாலும் இரு கட்சிகளிடையே வேறு எந்தப் பிரச்சினைகளில் மாறுபாடு இருந்தாலும், வேறு எது எப்படி இருந்தாலும் காவிரி நதிநீர்ப் பிரச்சினையை பொறுத்தவரை பாஜகவும், காங்கிரசும் ஒரே விதமான கொள்கையைத் தான் கடைபிடித்து வருகின்றன. தமிழ்நாட்டை, தமிழக மக்களை இரு கட்சிகளுமே வஞ்சித்து வருகின்றன.

 அதை போலவே, கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி இருந்தாலும், காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், வேறு எதில் அவை மாறுபட்டு இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட திறந்து விடக் கூடாது என்பதில் இரு கட்சிகளுமே உறுதியாக உள்ளன, தீவிரமாக செயல்படுகின்றன.

எனவே, காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கும் வாக்களிக்கக் கூடாது. பாஜகவுக்கும் வாக்களிக்கக் கூடாது.

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களையும், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களையும், இந்தத் தேர்தலில் அவர்கள் போட்டியிடுகின்ற அனைத்து தொகுதிகளிலும் நீங்கள் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

ஜெயாவின் பிரதமர் கனவு பலிக்காது; திமுக, அதிமுக ஒரு தொகுதி கூட ஜெயிக்காது-அன்புமணி ராமதாஸ்

மயிலாடுதுறை தொகுதி பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து பா.ம.க. மாநில இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

நரேந்திர மோடியை பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் இந்தியாவில் முதன்மை மாநிலமாக குஜராத்தை மாற்றினார். அங்கு மின் வெட்டு கிடையாது. தண்ணீர் பிரச்சினை கிடையாது. விலை வாசி உயர்வு இல்லை. பொருளாதார வீழ்ச்சி இல்லை. நரேந்திர மோடி பிரதமரானால் இந்தியா மிக சிறந்த நாடாக மாறும். வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரம் வளர்ச்சி அடையும். நதிகள் இணைக்கப்பட்டு தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

இலங்கை தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ ஏற்பாடு செய்யப்படும். தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடிக்க முடியும். அ.தி.மு.க.–தி.மு.க.வுக்கு மாற்று அரசு வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள். இந்த ஏக்கத்தை போக்க 7 கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளோம். இதுவே தேசிய ஜனநாயக கூட்டணி.

அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு சட்சிகளுக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது. ஆனால் பாரதிய ஜனதாவில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மட்டுமே. ஜெயலலிதா பிரதமர் கனவு காண்கிறார். இந்த கனவு பலிக்காது. பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பெற்றி பெறாது.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

மோடி முதல் முறையாக‌ மனைவியின் பெயரை வேட்பு மனுவில் வெளியிட்டதன் காரணம்

கடந்த தேர்தல்களில் எல்லாம் மனைவி பெயரை குறிப்பிடாமல் இருந்த மோடி, இம்முறை குறிப்பிட்டதற்கு காரணம்,  “ரீசர்ஜன்ஸ் இந்தியா” என்ற அமைப்பு தாக்கல் செய்த மனு. அந்த அமைப்பு தாக்கல் செய்த‌ மனுவில், “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முக்கிய விவரங்களை தெரிவிக்காமல் காலியிடமாக விட்டு விடுகின்றனர். அத்தகைய மனுக்களை நிராகரிக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.

மனுதாரரின் நியாயத்தை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், “வேட்புமனு முழுமையாக நிரப்பப்படாமல் இருந்தால், அதை நிராகரிக்க சட்டத்தில் இடமுண்டு. ஆனால், தெரிவிக்கப்படாத விவரங்கள் குறித்து விசாரிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. புகார்கள் வந்தால் விசாரித்து குற்றவியல் நடவடிக்கைக்கு உத்தர விடலாம்” என்று குறிப்பிட்டது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, வேட்பாளர்கள் தங்கள் விவரங்களை தெரிவிக்காமல் இருந்தால், இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, “வேட்பாளர் குறித்த விவரங்களை அறிந்து கொள்வது வாக்காளரின் அடிப்படை உரிமை. எனவே, வேட்புமனுவில் முக்கிய விவரங்கள் குறிப்பிடப்படாமல் காலியாக இருந்தால், அது செல்லாததற்கு சமம். அதை தேர்தல் அதிகாரி நிராகரிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்படுத்திய நிர்பந்தம் காரணமாகவே, மோடி எந்த சர்ச்சைக்கும் இடம் கொடுக்க கூடாது என தனக்கு திருமணமான விவரத்தையும், மனைவியின் பெயரையும் நிரப்பியே வேட்பு மனு தாக்கல் செய்தார் எனக் கூறப்படுகிறது.

மன்மோகன் சிங் கூட மேல்-சபை தேர்தலில் போட்டியிட தாக்கல் செயத வேட்புமனுவில் மனைவி பெயர் குறிப்பிடவில்லை- பாஜக

கடந்த தேர்தல்களின் வேட்புமனுவில் நரேந்திர மோடி தனது மனைவியின் பெயரை குறிப்பிடாதது குறித்து காங்கிரஸ் கட்சியினர் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், நேற்று குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், மன்மோகன் சிங் டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த போது பிரமாண பத்திரத்தில் தனது மனைவியின் பெயரை குறிப்பிடவில்லை என்று கூறி அவரது பிரமாண பத்திரத்தின் நகலை காண்பித்தார். பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை கிளப்பும் வழக்கம் நம் நாட்டில் கிடையாது என்றும், அப்படி இருக்கும் போது இதுபோன்ற பிரச்சினைகளை நாம் ஏன் கிளப்பவேண்டும்? என்றும் கூறினார்.

2013-ம் ஆண்டு டெல்லி மேல்-சபைக்கு மன்மோகன் சிங் மீண்டும் போட்டியிட்ட போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் நகலை தான் ரவிசங்கர் பிரசாத் காட்டினார்  என்று குஜராத் மாநில பாரதிய ஜனதா தலைவர்கள் தெரிவித்தனர்.

மோடி பிரதமராக வர வேண்டுமென விரதம் இருந்து புனித யாத்திரை சென்றிருக்கிறார் அவரது மனைவி ய‌சோதா பென்

பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், தனது கணவர் பிரதமராக வேண்டும் என பல மாதங்களாக விரதம் இருந்து, புனித யாத்திரை கிளம்பியிருக்கிறார்

 தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்டவராகக் கருதப்படும் யசோதா, கடந்த நான்கு மாதங் களாக தன் கணவர் பிரதமராக வேண்டி செருப்பு அணிவதை விட்டு விட்டாராம். இவர், குஜரத்தின் தலைநகரில் இருந்து சுமார் 80 கி.மீ தொலையில் உள்ள உன்ஜா கிராமத்தில், தனது இரு சகோதரர்களுடன் வாழ்ந்து வாழ்கிறார். இது, மோடியின் சொந்த கிராமமான வத்நகரில் இருந்து 32 கி.மீ தொலைவில் உள்ளது. 1968-ல் மோடி மணமுடித்த போது யசோதா ஏழாம் வகுப்பு பயின்று கொண்டிருந்ததாகவும், தம் படிப்பை தொடருவதற்காக, மணமான சில நாட்களில் அவரது தந்தையிடம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படு கிறது. ஆனால், படிப்பிற்காகச் சென்றவரை மோடி திரும்ப அழைக்கவில்லை.

"பல வருடங் களாக அவர் செய்த பூஜைகளுக்கு பலன் அளிக்கும் வகையில், மோடியே யாசோதாவை தன் மனைவி என வெளிப்படையாக அறிவித்துள்ளார். இது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. சுமார் 45 வருடங்களுக்கு முன் மோடி, ஆர்.எஸ்.எஸ் தொண்டுக்காக தம் குடும்பத்தை விட்டு சென்ற பின்,  வேறுயாரையும் திருமணம் செய்ய யசோதா விரும்பியதில்லை என யசோதா பென்னின் சகோதரர் கமலேஷ் மோடி கூறியுள்ளார்.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media