BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 23 March 2014

அழகிரியை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கேட்ட வைகோ


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவின் பொதுச் செயலர் வைகோ இன்று மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, மதிமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர். மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்குமாறு, அழகிரியை சந்தித்து  வைகோ கேட்டுக்கொண்டார்.

இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் வைகோ கூறியது:

"நானும், அழகிரியும் விமான நிலையத்தில் சந்தித்தோம். இருவரும் பரஸ்பரம் அன்பை பரிமாறிக் கொண்டோம். அப்போது, என்னை வீட்டிற்கு வரும்படி அழகிரி அழைப்பு விடுத்தார். அதை ஏற்று இன்று அவரை சந்தித்தேன்.

இந்த சந்திப்பின்போது, வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டேன்.

குறிப்பாக, விருதுநகரில் போட்டியிடும் எனக்கும், மற்ற மதிமுக வேட்பாளர்களுக்கும் ஆதரவு கோரினேன்.

நாங்கள் மனம்விட்டு பேசிக்கொண்டோம். அப்போது, எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று அழகிரி கூறினார்."

மதிமுகவுக்கு அழகிரி ஆதரவு தெரிவித்தாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் கூறியதற்கு அதுதானே அர்த்தம்? என கூறினார் வைகோ.

கள்ள ஒட்டு போடுங்கள் என மக்களிடம் கூறிய சரத்பவார்


மராட்டிய மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மந்திய விவசாயத்துறை மந்திரியுமான சரத்பவார் தொண்டர்களை கள்ள ஓட்டு போட கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நவிமும்பையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சரத்பவார், தொண்டர்களை இரண்டு முறை ஓட்டு போட கோரிக்கை விடுத்துள்ளார். மராட்டியத்தில் உள்ள சாத்ரா தொகுதியில் ஏப்ரல் 17ம் தேதியும், நவிமும்பை தொகுதியில் 24ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் சரத்பவார் தனது தொண்டர்களிடம், முதலில் சாத்ரா தொகுதியில் ஓட்டு போடுங்கள். பின்னர் நவிமும்பை தொகுதியிலும் உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள். அதற்குள் அடையாள மையை அழித்துவிடலாம் என்று கூறியுள்ளார்.

மத்திய மந்திரி சரத்பவாரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது இந்தியாவின் தேர்தல் விதிகளை மீறும் விதமாக உள்ளது என்று கண்டனங்கள் எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்போவதாக பாரதீய ஜனதா தலைவர் வினோத் தாவ்டே கூறியுள்ளார்.

மலேசிய விமானத்தின் பாகங்கள் காணப்படுவதாக‌ ஆஸ்திரேலியா மீண்டும் உறுதி


ஆஸ்திரேலியா மற்றும் இந்திய நாட்டின் விமானங்கள், மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுவந்தன. இரு தினங்களுக்கு முன் 24 மீட்டர் நீளம் மற்றும் 5 மீட்டர் நீளமுள்ள விமானத்தின் பாகங்கள் போன்ற பொருட்கள் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் மிதப்பதாக ஆஸ்திரேலிய செயற்கோள் அனுப்பிய படங்களில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

தற்போது விமானம் குறித்து மேலும் ஒரு நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது. மரத்தாலான மெத்தை போன்ற பொருள் ஒன்றும், பெல்ட்களும் இன்று கண்டதாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை போலவே பிரான்ஸ் நாடும் இந்திய பெருங்கடலில் விமான பாகங்கள் போன்ற பொருட்கள் மிதக்கும் செயற்கைகோள் புகைப்படத்தை மலேசியாவிற்கு அனுப்பிள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை மலேசிய அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர். வெகு விரைவில் விமானம் குறித்த தவகல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

புதுக்கோட்டை மாநாட்டில் ஜெ.வை விமர்சித்த சிதம்பரம்


நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட சிதம்பரம்,  தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசினார். மேலும் அவர்,  தான் இந்த தேர்தலில் போட்டியிடாத காரணங்களையும் கூறினார்.

முப்பது ஆண்டுகள் மக்களவையில் பணியாற்றியதோடு முக்கிய துறைகளில் அமைச்சராகவும் தான் இருந்துவிட்டுதாகவும்,  தொடர்ந்து காந்திய வழியில் நிர்மாணியப் பணிகளை செய்ய வேண்டுமென த‌னது மனம் சொல்வதாகவும்,  இளைஞர்கள் பொறுப்புக்கு வரவேண்டும் என்றுதான் தான் வழிவிட்டதாகவும் கூறினார்.

மாநாட்டில் மேலும் அவர் பேசியதாவது:

காரைக்குடியில் வெள்ளிக் கிழமை பிரச்சாரத்துக்காக வந்த முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசு தமிழகத்துக்கு ஒன்றுமே செய்யவில்லை எனக் கூறினார். அவர் வான்வழிப் பயணத்தை விட்டுவிட்டு தரை வழியாக பயணித்தால்தான் தமிழகத்தில் மத்திய அரசு என்னென்ன திட்டங் களை செய்துள்ளது என்றும் மக்களின் நிலைமைகளும் தெரியும். மத்திய அரசு செய்ததை பட்டியலிட்டால் நீங்கள் மறுக்கத் தயாரா?

அந்தக் கூட்டத்தில் 2009-ம் ஆண்டு சிவகங்கை தொகுதி மக்களவைத் தேர்தல் முடிவை நான் மாற்றி அறிவித்துக்கொண்டதாக முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளரால் தொடரப் பட்ட வழக்கின் சாட்சி விசாரணை 2013 ஜன. 31-ல் தொடங்கியது. முதலில் மனுதாரரில் இருந்து தொடங்கியது. இதில் 19 வாய்தாவில் 10 வாய்தாவுக்கு அவர் வரவில்லை.

இதைத்தொடர்ந்து குறுக்கு விசாரணைக்கான 17 வாய்தாக்களில் 8 வாய்தாக்களுக்கு அவர் வரவில்லை. இவ்வாறு வாய்தா வாங்கினால் எப்படி வழக்கு முடியும்? வழக்கு முடியாததற்கு காரணம் நான் அல்ல அப்போதைய உங்கள் வேட்பாளர்தான்.

இந்த ஒரு வழக்கை மட்டும் குறிப்பிட்டாரே, டான்ஸி நிலம், சட்டத்துக்கு புறம்பாக 4 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல், சொத்துக்குவிப்பு வழக்கு இதைப்பற்றியும் அவர் பேச வேண்டியதுதானே?

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலி தாவே இந்த நீதிபதிதான் வழக்கை விசாரிக்க வேண்டும், இந்த அரசு வழக்கறிஞர்தான் வாதாட வேண்டும் என்றெல்லாம் சொல்லாமா?

மத்திய அரசு கொண்டு வந்த பிற்பட்டோருக்கு 69 சதவீதம் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற முடியாதென்றும் அதன்பிறகு பல்வேறு வாதங்களுப்பிறகு 50 சதவீதம் இடஒதுக்கீட்டை ஒத்துக்கொண்டவர்தான் முதல்வர்.

தமிழகத்தில் 5 முனைப்போட்டியைப் பற்றி எனக்கு கவலை இல்லை. காங்கிரஸ் தனி வழியில் பயணிக்கிறது. முந்தைய தேர்தலைவிட கூடுதலாகப் பணியாற்றுவோம்.

தமிழகம் நாட்டின் முதல் மாநிலமாக வரும். 2031-ல் இந்தியா உலக நாடுகளில் முதல் 3 நாடுகளில் ஒன்றாக உயரும். அதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு ப.சிதம்பரம் பேசியிருந்தார்,

அரசியலை கைவிட்டு, காந்தியின் பாதையில் மக்கள் சேவையாற்ற விரும்புகிறேன்



புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் நேற்று நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்பொழுது அவர் கூறியதாவது:

இது வரையில் 8 தேர்தல்களில் போட்டியிட்டுள்ள நான், 17 ஆண்டுகள் மத்திய மந்திரியாக பணியாற்றியுள்ளேன். நான் மந்திரியாக பதவி வகித்த துறைகள் ஜவுளித்துறையை போன்று சாதாரணமானது அல்ல. அப்படி இருந்திருந்தால் மனஅமைதியுடன் பணியாற்றி இருப்பேன்.

ஆனால், மத்திய உள்துறை மற்றும் நிதித் துறை மந்திரி என்ற வகையில் அன்றாடம் 18 மணிநேரம் உழைக்க வேண்டியுள்ளது. எனக்கு தற்போது 68 வயது ஆகின்றது. இந்த வயதில் இன்னும் எவ்வளவு தூரம் என்னால் பயணம் செய்ய முடியும்? பிறந்தவர்கள் எல்லாம் பூமிக்கு திரும்பியே தீர வேண்டும்.

மறுபிறவி என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே, இனி தேர்தல் அரசியலை கைவிட்டு, காந்தியின் பாதையில் மக்கள் சேவையாற்ற விரும்புகிறேன்.

இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

நாங்களாவது ஏ.டி.எம் களை திறந்தோம், ஜெ. மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறார்- கார்த்திக் சிதம்பரம்.


 மதுரை டென்னிஸ் சங்கம், டி.வி.எஸ் நிறுவனம், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து மார்ச் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை டென்னிஸ் போட்டி மதுரையில் நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழாவில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுயது:

"சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழக்கும் என முதல்வர் கூறினார். ஆனால், டெபாசிட் இழப்பது யார் என்பதை மக்களே தீர்மானிப்பர். அவர் கூறிய வார்த்தைகளை நான் அர்ச்சனையாக ஏற்றுக் கொள்கிறேன். 'ஆல் இன் ஆல் அம்மா.. சொல்வதெல்லாம் சும்மா…' நாங்கள் மக்களின் தேவைக்காக ஏ.டி.எம் மையங்களை அமைத்தோம். ஆனால், அவரோ டாஸ்மாக் மதுக் கடைகளை மட்டுமே அமைத்திருக்கிறார்"

இவ்வாறு கார்த்திக் சிதம்பரம் கூறினார்.

தேசிய நதிநீர் குறித்து பேசும் ஜெயலலிதா தமிழக நதிகளை இணைக்கலாமே. அதை ஏன் செய்யவில்லை?


தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜோயலை ஆதரித்து, செல்வநாயகபுரம் பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டபோது தேமுதிக தலைவர் விஜய்காந்த் பேசியது:

"தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் அதிகம். உப்பளத் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். உப்புத் தொழில் நலிவடைந்து வருவதுக்கு தமிழக அரசு சரியான ஒத்துழைப்பு அளிக்காததே காரணம்.

திருச்செந்தூருக்கு தினமும் வெளிநாடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீர், சுகாதாரம் படுமோசமாக உள்ளது. தாமிரபரணி ஆற்றில் உள்ள அணைகள் தூர்வாரப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சங்கரன்கோவில் இடைத்தேர்தலின் போது பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, உடன்குடி அனல்மின் நிலையம் தமிழக அரசின் நிதி ரூ.8000 கோடியில் நிறைவேற்றப்படும் என்றார். ஆனால், இதுவரை ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை.

நான் பணக்காரர்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால், ஏழைகள், நடுத்தர மக்கள் பணக்காரர்களாக வேண்டும் என்பது தான் எனது எண்ணம். மத்தியில் ஊழல் இல்லாத ஆட்சி அமைக்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்.

ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா வேண்டும் என நான் கூறுகிறேன். ஆனால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் வேண்டாம் என்கிறார்கள். இதில் இருந்தே அவர்கள் ஊழலுக்கு ஆதரவானவர்கள் என்பது தெரிகிறது.

தேசிய நதிநீர் குறித்து பேசும் ஜெயலலிதா தமிழக நதிகளை இணைக்கலாமே. அதை ஏன் செய்யவில்லை. மக்கள் சிந்திக்க வேண்டும்.

நரேந்திர மோடி பிரதமரானால் இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.

மக்களுக்கு திமுக, அதிமுக நன்மை செய்திருந்தால் நான் கட்சியே தொடங்கியிருக்க மாட்டேன். தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது தான் எனது நோக்கம். அதை செய்யாமல் விடமாட்டேன்."

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media