BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 26 November 2014

தமிழரின் மருத்துவம் : நொச்சி இலைகளின் மருத்துவக் குணங்கள்


சாலை ஓரங்களிலும் வேலிகளிலும் காணப்படும் நொச்சி புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் :  இத்தாவரத்தில் லைனோலியிக், ஒலியிக், பால்மிடிக் போன்ற கரிம அமிலங்கள், கரோட்டின், வைட்டமின் சி ஈரிடாய்டு குளுகோசைடு, குக்குபின், நெகுண்டோசைடு, நிசிண்டாசைடு உண்டு.

காசநோய் புண்களை குணப்படுத்தும் : இலைகள் உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது. நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது.

மூட்டுவலிக்கு மருந்து : முழுத்தாவரமும், சிறந்த மருத்துவ பயன் கொண்டது. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

குடல்பூச்சிகளுக்கு எதிரானது : வேர் சிறுநீர் போக்கு தூண்டுவி, சளி அகற்றும்.காய்ச்சல் போக்குவி, வலுவேற்றும். கட்டிகள் மற்றும் குடல்வலி, பசியின்மை, பெருவியாதி ஆகியவற்றில் மருந்தாக உதவுகிறது. குடல் பூச்சிகளுக்கு எதிரான செயல்திறன் கொண்டது. வேர்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட சாராயத் தயாரிப்பு மூட்டுவலி மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சலை போக்க வல்லது.

கல்லீரல் நோய்களுக்கு மருந்து : மலர்கள் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. காலரா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. விதைகளும் குளிர்ச்சி தருபவை, தோல்வியாதி மற்றும் பெருவியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

கனிகள் நரம்புகளுக்கு வலுவேற்றியாக உதவுகின்றன. காய்ந்தவை கிருமி நாசினியாகச் செயல்படுகின்றன. நீர் கோர்வை போக்கக் கூடியவை. மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

தமிழ் மொழியின் வளம் : பருவங்களுக்கான பெயர்கள்


ஆண்களின் ஏழு பருவங்கள்:-
  • 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன்
  • 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
  • 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
  • 15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
  • 16 வயதிற்குண்டான பருவம் – விடலை
  • 17 வயது முதல் 30 வரையிலான பருவம் - காளை
  •  30 வயதுக்கு மேலான பருவம் - முதுமகன்
பெண்களின் ஏழு பருவங்கள்:-
  • 1 வயது முதல் 8 வயது வரை - பேதை
  •  9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
  • 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
  • 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
  • 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
  • 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
  • 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்

தேர்தலைக் கண்காணிக்க ஐ.நா. அதிகாரிகளுக்கு அழைப்பில்லை : இலங்கை

இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்கவிருப்பதாகக் கூறியுள்ள அந்த நாட்டு அரசு, ஐ.நா. அதிகாரிகளை அழைக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரிய கூறியதாவது: 
நடைபெறவிருக்கும் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட வெளிநாட்டுக் குழுக்களுக்களை அழைக்க முடிவு செய்துள்ளோம். எனினும், இந்தத் தேர்தலில் ஐ.நா. கண்காணிப்பாளர்களை அழைக்கப் போவதில்லை. பொதுவாக, ஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள்தான் தேர்தலைக் கண்காணிப்பார்கள். ஒரு நாட்டில் முதல் முறையாகத் தேர்தல் நடைபெறும்போதும், தேர்தலில் முறைகேடுகள் நிகழும் அபாயம் இருக்கும் போதும்தான் ஐ.நா. குழு கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளும்.

இலங்கையில், தற்போது அத்தகைய சூழல் இல்லை என்பதால், ஐ.நா. கண்காணிப்புக் குழுவின் அவசியம் இல்லை என்றார் அவர். இலங்கையில், அதிபர் ராஜபட்சவின் பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அந்த நாட்டில் பொதுத் தேர்தலை நடத்த அவர் முடிவு செய்தார். அதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி பொது வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கு முன்னதாக, வரும் டிசம்பர் மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் தபால் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் ஆணையம் அறிவித்தது.

மரண தண்டனை குறித்த ஐ.நா. தீர்மானம் : எதிர்த்து வாக்களித்தது இந்தியா



மரண தண்டனை நிறைவேற்றத்தை உலக நாடுகள் தாற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து ஐ.நா. பொதுச் சபை முன் வைக்கப்பட்ட தீர்மானத்தை எதித்து இந்தியா வாக்களித்துள்ளது. தங்கள் சட்டங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளைத் தண்டிக்கும் நாடுகளின் உரிமையை அந்தத் தீர்மானம் புறக்கணிப்பதால் அதனை எதிர்த்ததாக இந்தியா விளக்கமளித்துள்ளது. சமூக, மனிதாபிமான, கலாசார விவகாரங்களை கவனித்து வரும் ஐ.நா.வின் மூன்றாவது குழு, குறிப்பிட்ட சிலருக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உலக நாடுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. 18 வயதுக்கு உள்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மன நலன் அல்லது அறிவுத் திறன் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை உறுப்பு நாடுகள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 114 நாடுகளும், எதிராக 36 நாடுகளும் வாக்களித்தன. 34 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த 36 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதுகுறித்து, ஐ.நா.வுக்கான இந்தியத் தூதுக்குழுவின் முதன்மைச் செயலர் மயங்க் ஜோஷி அளித்த விளக்கம்: மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடனேயே அந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அது இந்தியாவின் சட்டக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. சட்டதிட்டங்களை வகுப்பதற்கும், குற்றவாளிகளை அந்தச் சட்டப்படி தண்டிப்பதற்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் முழு உரிமை உள்ளது. அந்த உரிமை இந்தத் தீர்மானத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் "அரிதிலும் அரிதான' வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு நியாயமான விசாரணைக்கும், மேல் முறையீட்டுக்கும் வழிவகை உள்ளது. ஏற்கெனவே, கர்ப்பிணிகளுக்கான மரண தண்டனையை நிறுத்தி வைப்பதற்காகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மரண தண்டனைக்குத் தடை விதித்தும் இந்தியச் சட்டத்தில் பல பிரிவுகள் உள்ளன.
இந்தியச் சட்டப்படி 18 வயதுக்குள்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றப் படுவதில்லை என்றார் மயங்க் ஜோஷி.

"செம்மொழிகள் வாரம்' கொண்டாடப்பட வேண்டும்



நாடு முழுவதும் "செம்மொழிகள் வாரம்' கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தினார். இது தொடர்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து அவர் பேசியதாவது: மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில் "சம்ஸ்கிருத வாரம்' கொண்டாட மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிஎஃப்எஸ்இ) பள்ளிகளுக்கு ஆணையிட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் எட்டாவது பிரிவில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு மொழியை மட்டும் கொண்டாட வேண்டும் என்று அரசு கூறியுள்ளது வியப்பாக உள்ளது. மேலும், சம்ஸ்கிருதம் செம்மொழி என்றும் கூறியுள்ளது. தமிழ் உள்பட ஐந்து மொழிகள் செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுள்ளன என்பதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். "செம்மொழிகள் வாரம்' என்று கொண்டாடப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் அப்பொழுதே வலியுறுத்தினார்.

ஆனால், மத்திய அரசு சம்ஸ்கிருதத்தை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது. அதை மட்டுமே செம்மொழியாகக் கருதுகிறது. சம்ஸ்கிருத வாரம் மட்டும் கொண்டாடவில்லை. அத்துடன், "குரு உத்ஸவ்' கொண்டாடுவது மேலும் சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் உருவாகியுள்ள இந்த ஐயத்தைப் போக்க "செம்மொழிகள் வாரம்' கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மாநிலங்கள் விரும்புக்கூடிய மொழிகளை கொண்டாட இது வழிவகுக்கும் என்றார் டி.கே. ரங்கராஜன்.

தில்லி - சென்னை புல்லட் ரயில் சேவை : சீனாவில் உயர்நிலைக் குழு ஆலோசனை



தில்லி - சென்னை இடையே அதிவேக புல்லட் ரயில் சேவைக்கான வழித்தடம் அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயவும், தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறவும் இந்திய ரயில்வேயின் உயர்நிலைக் குழுவினர், சீனாவில் முகாமிட்டுள்ளனர். இந்திய ரயில்வேயின் ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்தின் உயரதிகாரி சதீஷ் அகர்வால் தலைமையிலான உயர்நிலைக் குழு, பெய்ஜிங்குக்கு திங்கள்கிழமை வந்தது. அங்கு, சீனாவின் அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் இந்தக் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தியா, தற்போது இரண்டு அதிவேக புல்லட் ரயில் சேவை வழித்தடங்களை அமைக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. இதில் ஒன்று, ஜப்பான் நாட்டின் உதவியுடன் மும்பை - ஆமதாபாத் இடையே அமைக்கப்படவுள்ளது. மற்றொன்று, சீன உதவியுடன் தில்லி - சென்னை இடையே அமைகிறது.சீனாவின் பெய்ஜிங் - குவாங்க்ஸூ இடையே 2,298 கி.மீ. தொலைவுக்கு அமைந்துள்ள புல்லட் ரயில் வழித்தடம்தான் உலகிலேயே மிகவும் நீளமானதாகும். இந்தியாவில், சுமார் ரூ. 2 லட்சம் கோடி செலவில், தில்லி - சென்னை இடையே 1,754 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படவுள்ள வழித்தடம், உலகின் இரண்டாவது மிக நீளமான புல்லட் ரயில் வழித்தடமாக இருக்கும்.

சீன அதிபர் ஜீ ஜின்பிங் கடந்த செப்டம்பர் மாதம் தில்லி வந்தபோது, இந்தியாவில் புல்லட் ரயில் சேவை தொடங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் அடிப்படையில், புல்லட் ரயில் சேவைக்கான சாத்தியக்கூறு ஆய்வை சீனா இலவசமாக செய்து தருகிறது. மேலும், இந்திய ரயில்வேயின் 100 அதிகாரிகளுக்கு புல்லட் ரயில் சேவை தொடர்பான பயிற்சி தரவும், அதிவேக ரயில் சேவைக்குத் தகுந்தபடி பழைய ரயில் நிலையங்களை மேம்படுத்துவதுடன் புதிய நிலையங்களை அமைக்கவும்,இந்தியாவில் ரயில்வே பல்கலைக்கழகம் நிறுவுவதற்கு உதவவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே, இந்திய ரயில்வே உயரதிகாரிகள் குழு தற்போது சீனாவில் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கான பயிற்சி விரைவில் தொடங்கவுள்ளது. தில்லி - சென்னை புல்லட் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் அடுத்த ஆண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தில்லி - சென்னை இடையே தற்போது இயக்கப்படும் விரைவு ரயிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மூலம், பயண தூரத்தைக் கடக்க 28 மணி நேரம் பிடிக்கிறது. மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயில் இயக்கப்பட்டால், இந்தப் பயண நேரம் வெறும் 6 மணி நேரமாகச் சுருங்கிவிடும் என்பது குறிப்பிடத் தக்கது.

நாடாளுமன்றத்தில் கடும் அமளி : கருப்புப் பணம், காப்பீட்டு மசோதா விவகாரம்



கருப்புப் பணம் விவகாரம், காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை, புதிய சிபிஐ இயக்குநரை நியமிக்கும் விவகாரம் ஆகியவை தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை பிரச்னை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் இரு முறை ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை காலை 11 மணிக்கு அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் தொடங்கியதும், நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "கருப்புப் பணம் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும். எனவே, கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். ஆனால், "விதிகளின்படி கேள்வி நேரத்தை ரத்து செய்ய அனுமதிக்க முடியாது. நோட்டீஸ் கொடுத்தால் அனுமதிக்கிறேன்' என்று சுமித்ரா மகாஜன் கூறினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள், "கருப்புப் பணத்தைத் திரும்பக் கொண்டு வாருங்கள்' என்ற வாசகம் எழுதப்பட்ட கருப்பு நிறக் குடைகளை ஏந்தியபடி அவையின் மையப் பகுதிக்கு வந்து குரல் எழுப்பினர். அவர்களுடன் சேர்ந்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி கட்சி, ஆம் ஆத்மி ஆகியவற்றின் உறுப்பினர்களும் குரல் எழுப்பினர். ஆனால், இந்த விவகாரத்தை எழுப்ப சுமித்ரா மகாஜன் அனுமதி மறுத்தார். இதையடுத்து நிலவிய கூச்சல், குழப்பத்தால் மக்களவை முதலில் நண்பகல் 12 மணி வரையிலும், பின்னர் மீண்டும் கூடிய போதும் நீடித்த அமளியால், பிற்பகல் 2 மணிவரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. 

சிபிஐ புதிய இயக்குநர் மசோதா: பிற்பகலில் அவை கூடிய போது, சிபிஐ புதிய இயக்குநர் தேர்வுக் குழுவில் மக்களவையில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியின் தலைவரை உறுப்பினராக இடம் பெற வைக்கும் வகையில், தில்லி போலீஸ் சிறப்பு அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவை மத்திய பணியாளர் நலத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் முன்மொழிந்தார்.அதில் "சிபிஐ இயக்குநரைத் தேர்வு செய்யும் குழுவில் அதன் உறுப்பினர்களில் யாரேனும் இல்லாத போதும், குழுவால் தேர்வாகும் சிபிஐ இயக்குநரின் நியமனத்துக்கு எவ்விதப் பாதிப்பும் இருக்காது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையும் மீறி மசோதாவை ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

மாநிலங்களவையில் : மாநிலங்களவை காலையில் புதிய நடைமுறைப்படி கேள்வி நேரமின்றி அதன் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் தொடங்கியது. அப்போது, அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்யும் தேர்வுக் குழுவின் தலைவரும், பாஜக மூத்த உறுப்பினருமான சந்தன் மித்ரா, தனது குழுவின் அறிக்கை அளிக்கப்படும் தேதியை டிசம்பர் 12-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கு காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். தேர்வுக் குழு உறுப்பினர்களுடன் ஆலோசிக்காமல் சந்தன் மித்ரா தன்னிச்சையாக அவைக்குள் கால நீட்டிப்புக் கோருவதை ஏற்க முடியாது என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரம் தொடர்பாக அவை விதிகளை மேற்கோள்காட்டி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சந்தன் மித்ரா ஆகியோரும் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஆனந்த் சர்மா, மார்க்சிஸ்ட் உறுப்பினர் ராஜ்வீ ஆகியோரும் பரஸ்பரம் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, நீண்ட விவாதத்துக்குப் பிறகு தேர்வுக் குழு அறிக்கை தாக்கல் செய்ய டிசம்பர் 12-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஹைதராபாத் விமான நிலையத்துக்கு சூட்டப்பட்டிருந்த ராஜீவ் காந்தி பெயர் நீக்கப்பட்ட விவகாரத்தை ஆந்திரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பினர். இதனால் ஏற்பட்ட அமளியால் அவை நடவடிக்கைகள் சில நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர், நண்பகல் 12 மணிக்கு அவை கூடிய போதும் இதே விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை அலுவல் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, மத்திய அமைச்சரவையில் புதிதாகச் சேர்க்கப்பட்டவர்களை அவைக்கு பிரதமர் நரேந்திர மோடி சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிமுகம் செய்து வைத்தார். இதனிடையே, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், "கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களைக் காப்பாற்றவே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுகின்றன' என்று குற்றம்சாட்டினார்.

இன்று விவாதம்?
கருப்புப் பணம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இந்நிலையில், கருப்புப் பணம் மீட்பு தொடர்பான விவாதம், இரு அவைகளிலும் புதன்கிழமை நடைபெறும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media