BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 22 March 2014

இத்தாலியில் இருந்து வெறுங்கையை வீசி வந்த சோனியா, உலக பெண்களில் 6வது பணக்காரராக ஆனது எப்படி?


உத்தர பிரதேச மாநிலத்தில், புரன்பூர் பகுதியில், பாஜக சார்பில் பேசிய மேனகா காந்தி, காங்கிரஸ் தலைவர் மற்றும் தனக்கு அக்காள் முறை வரும் சோனியாகாந்தியை கடுமையாக தாக்கி பேசினார். பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது:

சோனியா காந்தி இந்த நாட்டின் மருமகளாக இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு வந்த போது எதையும் கொண்டு வரவில்லை. வெறும் கையை வீசிக் கொண்டுதான் வந்தார். அவர் மீது இந்திய மக்கள் அனைவரும் அன்பு மழை பொழிந்தனர். பாசம் காட்டினார்கள். ஆனால் சோனியா அதற்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை.

இன்று உலகப் பெண் மணிகளில் 6–வது பெரும் பணக்காரராக சோனியா உள்ளார் என்று மேற்கத்திய பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து, எப்படி வந்தது?

சோனியா திருமணம் முடிந்து வந்த போது ஒரு பைசா கூட வரதட்சணை பெற்று வரவில்லை. அப்படிப்பட்டவருக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

நாட்டின் மின் திட்டங்கள், சாலை திட்டங்கள், கல்வித் திட்டங்களில் மாபெரும் ஊழல் நடந்துள்ளது. நமது எதிர்கால சிறுவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது.

சோனியாவும் அவரது காங்கிரஸ்காரர்களும் ஆங்கிலேயர்களை விட 100 மடங்குக்கு மேல் இந்த நாட்டில் ஊழல் செய்து சுரண்டியுள்ளனர்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் துப்பாக்கி குண்டுகளையும், தடியடிகளையும் நம் முன்னோர்கள் வீரத்துடன் எதிர்கொண்டனர். ஆனால் அந்த சாதனைகளை எல்லாம் முறியடிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் கடந்த 10 ஆண்டுகளில் ஊழல்கள் செய்துள்ளனர்.

இவ்வாறு மேனகாகாந்தி கூறினார்.

பாஸ்போர்ட் நகலை வரும் 7-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், சோனியாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு


1984-ம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையத்துக்கு சோனியா காந்தி வந்தபோது, அவரிடம் இந்த வழக்கு தொடர்பாக சம்மன் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சோனியா தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் இல்லை என்றும் சம்மன் ஏதும் வழங்கப்படவில்லை என்றும் வாதிடப்படுகிறது.

இந்த வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: “கடந்த ஆண்டு செப்டம்பர் 2 முதல் 12 வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சோனியா காந்தி இருக்கவில்லை என்பதற்கான ஆதாரம் ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை. அவர் அமெரிக்காவுக்கு வந்தாரா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள, பாஸ்போர்ட் நகலை வரும் ஏப்ரல் 7-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் ஏன் சிதம்பரம் போட்டியிடவில்லை?-பாஜக‌




நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஓடி ஒளிந்து கொண்டது ஏன் என்ற கேள்வியை அனைவரையும் போல,  பாஜகவும் எழுப்பியுள்ளது. டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக கூறியது:

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் 7 ஆண்டு கள் வரை நிதியமைச்சராக இருந் தவர், இப்போது தேர்தலில் போட்டியிட மறுத்து ஓட்டமெடுத்துள்ளார். தனது சாதனைகளைக் கூறி மக்களிடம் வாக்குக் கேட்டு செல்ல அவருக்கு விருப்பமில்லை என்றே தெரிகிறது.

காங்கிரஸில் அவர் ஒருவரது நிலைமை மட்டும் அப்படியில்லை. ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியின் நிலையே இப்படித்தான் உள் ளது. தேர்தலில் நிச்சயம் தோல்வி யடைந்துவிடுவோம் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த மனநிலை. 10 ஆண்டுகளில் மக்களுக்கு ஏதாவது சிறு நன்மை யாவது செய்திருந்தால்தானே அவர்களால் ஓட்டுக் கேட்டு செல்ல முடியும்?!

இவ்வாறு பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

மத்திய பிரதேசத்து பழங்குடி பெண்களின் குறைகளை கேட்டறிய நேரில் சென்ற ராகுல்


காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று பழங்குடி பெண்களுடன் கலந்துரையாடினார்.  பத்பத்பாரா கிராமத்தில் உள்ள ஒரு மரத்தடியில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போது, அப்பகுதி மக்களிடையே தான் பேச வரவில்லை என்று கூறிய ராகுல் காந்தி, அவர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளை கேட்டறிய வந்ததாக குறிப்பிட்டார்.

அங்குள்ள காடுகளில் முக்கிய தொழிலாக விளங்கும் பீடி இலை உற்பத்தி மற்றும் சேகரிப்பு பணியை ராகுல் காந்தி அரை மணி நேரம் பார்வையிட்டார்.

அப்போது, தங்கள் பகுதியில் முக்கிய தொழிலாக விளங்கும் பீடி இலை சேகரிப்பு பணி மிகவும் கடினமானது என்றும், அடிக்கடி குழந்தைகள் மற்றும் குடும்பத்தை விட்டு செல்ல வேண்டியுள்ளது என்றும் ஒரு பெண் தெரிவித்தார். குடிதண்ணீர் கிடைக்கவில்லை என்று மற்றொரு பெண் கூறினார். மற்றொரு பெண், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊதியம் குறைவாக கிடைப்பதாக குறை கூறினார். அவர்களின் குறைகளை பொறுமையாகக் கேட்ட ராகுல்காந்தி, எந்த பயமும் இன்றி இந்த பெண்கள் பேசியது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறுகிறோம்-வைகோ


ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:

இன்றைக்கு நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. தமிழ்நாட்டில் ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணியாகும். இது மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இந்த கூட்டணி தான் ஜெயிக்கும். தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.

40 தொகுதியிலும் ம.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்ற எண்ணத்தோடு நாங்கள் செயல்படுவோம்.

தமிழர்களுக்கு நன்மை செய்யும் கூட்டணியாக இந்த கூட்டணி அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க– தி.மு.க. பரிமாணம் தகர்ந்து விட்டது. நாடெங்கும் நரேந்திர மோடிக்கு ஆதரவு பெருகி வருகிறது. அவர் பிரதமராக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஆர்வமுடன் ஓட்டளிப்பார்கள். இந்தியாவில் இனிமேல் காங்கிரஸ் ஆட்சிக்கு வரக் கூடாது. காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது.

இலங்கை இனப்படுகொலை, மீனவர்கள் கைதுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் காரணம். எனவே சில கட்சிகளை சேர்த்து காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் நிலையும் வந்து விடக் கூடாது. காங்கிரசால் நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் நரேந்திரமோடி தான் பிரதமர் என்றும் கூறுகிறோம். எனவே எங்கள் கூட்டணிக்குதான் தமிழக மக்கள் ஆதரவு தருவார்கள்.

இவ்வாறு வைகோ கூறினார்.

தேர்தலில் சீட் வாங்கி தர லஞ்சம் கேட்ட‌ ஆம் ஆத்மி உறுப்பினர்களை கேஜ்ரிவால் நீக்கினார்

ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட சீட் வாங்கி தருவதற்கு சில நிர்வாகிகள் பணம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததன் அடிப்படையில் விசாரணை நடத்திய கட்சியின் தலைவர் கெஜ்ரிவால், அதிரடியாக நடவடிக்கை எடுத்து இரண்டு உறுப்பினர்களையும் நீக்கினார்.

இதுபற்றி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “அருணா சிங் மற்றும் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வாங்கி தருவதாக கூறி சிலரிடம் பணம் கேட்டுள்ளனர். இது தொடர்பான பணபரிமாற்றம் நடக்கவில்லை. ஆனால், பேச்சுவார்த்தை நடந்துள்ளது. மேலும் எந்த வேட்பாளர் மீதாவது நம்பகமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால் அவர்களின் டிக்கெட்டுகள் உடனடியாக ரத்து செய்யப்படும்” என்றார்.

உத்தர பிரதேச மாநிலம் மிஸ்ரிக் தொகுதியில் போட்டியிட ராஜேஷ் என்பவர் விருப்பம் தெரிவித்திருந்தார். அவரிடம் பணம் கேட்டுள்ளனர். அவரது புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்னால் நிச்சயம் நரேந்திரமோடியிடம் சண்டைபோட முடியும். உங்களுக்கு வேண்டியதை கேட்டு பெற்றுத்தர முடியும்.



கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நாகர்கோவிலில் திறந்த வேனில் நின்று பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின் போது, தமிழக மக்கள் சுபிட்சமாக, நன்றாக வாழ தான் எந்த தியாகத்தையும் செய்யத்தயார் என்றும், த‌னக்கு எதுவும் தேவை இல்லை, தான் எந்த சாதியையும், மதத்தையும் சாராதவன் என்று அவர் கூறினார்.

பிரச்சாரத்தின் போது மேலும் அவர் பேசியதாவது:

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக‌ சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் நிற்கிறார். அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்களுக்கு நல்லது செய்வதற்காக நாம் வந்திருக்கிறோம். 2016-ம் ஆண்டு விஜயகாந்த் முதல் அமைச்சர் ஆவதற்காக வாக்கு கேட்டு வரும்போது மற்ற கோரிக்கைகளை பற்றி சொல்லுங்கள். தற்போது தே.மு.தி.க.வோடு பா.ஜனதா, பா.ம.க., ம.தி.மு.க., கொங்கு, ஐ.ஜே.கே. போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கட்சிகளுக்கும், இந்த கட்சிகளின் வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

தி.மு.க.வுக்கும், அ.தி. மு.க.வுக்கும் மாறி, மாறி ஓட்டுப்போட்டது போதும். அவர்களுக்கு ஓட்டுப்போட்டு என்ன மிச்சம். ஏதாவது நல்லது செய்து கொடுத்திருக்கிறார்களா? இல்லையே. அப்படி செய்து கொடுத்திருந்தால் நான் ஏன் இங்கு வருகிறேன். நாடும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் போராடுகிறேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றுதான் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறோம். நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் காசை வாங்கிக்கொண்டு, மேல்சபை எம்.பி. சீட் வாங்கிக்கொண்டு பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால் நான் பெட்டி வாங்கியதாக தவறாக கூறி வருகிறார்கள்.

மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமையும் பட்சத்தில் முதல் திட்டமாக மீனவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாரதீய ஜனதா அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் கூறி உளளார். நரேந்திர மோடியை பிரதமராக்கினால் மாநில திட்டங்களுக்கு வேண்டிய திட்டங்களை அவரால் செயல்படுத்திட முடியும்.

தஞ்சாவூரில் 9 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. இது நாடா அல்லது காடா? இரவில் தான் மின்சாரத்தை திருட முடியும் என்பதைப்போல அனைவரும் அயர்ந்து தூங்குகிற நேரத்தில் கரண்டை திருடுகிறார்கள்.

என்னால் நிச்சயம் நரேந்திரமோடியிடம் சண்டைபோட முடியும். உங்களுக்கு வேண்டியதை கேட்டு பெற்றுத்தர முடியும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்கநாற்கர சாலைத் திட்டம் பா.ஜனதா ஆட்சியின் போது பிரதமராக இருந்த வாஜ்பாயால் நிறைவேற்றப்பட்ட திட்டமாகும். எனவே நாங்கள் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் அல்ல. சிறுபான்மை மக்களுக்கு விரோதிகள் ஜெயலலிதாவும், கருணாநிதியும்தான். தமிழக மக்களுக்கு என்ன செய்யவேண்டும்? அவர்களுக்காக எப்படி போராட வேண்டும்? என்று பார்க்க வேண்டும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

மோடி, ராகுல், கேஜ்ரிவாலை கடத்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு திட்டம்


மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது முக்கிய அரசியல்வாதிகள் சிலரை கடத்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தீவிரவாத அமைப்பின் பட்டியலில் ராகுல் காந்தி, நரேந்திர மோடி, அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பு உள்ளதாக, இந்தியன் முஜாகிதீன் தலைவர்களான யாசின் பட்கல், அசதுல்லா அக்தர் ஆகியோர் கடந்த 2003-ல் கைது செய்யப் பட்டனர். அவர்களை விடுவிக்க அரசியல் தலைவர்களை பிணைக்கைதிகளாக கடத்திச் செல்ல இந்தியன் முஜாகிதீன் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறைக்கு கடந்த வாரம் ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த கடத்தலுக்கு உதவியாக தடை செய்யப்பட்ட தீவிரவாத மாணவர் அமைப்பான சிமியின் ‘ஸ்லீப்பர் செல்’உறுப்பினர்களும் ஈடுபட உள்ளதாகவும், கடைசி நேரத்தில் இதை தீவிரவாதத் தாக்குதல்களாகவும் மாற்ற வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது

தீவிரவாதிகள் தரப்பில் உத்தரப் பிரதேசம், பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியும் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் பல்வேறு போலி பெயர்களில் வாங்கி பேசப்பட்ட மொபைல் போனின் பேச்சுகளை ஒட்டுக் கேட்டதில் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக மன்மோகன் சிங், சோனியா, ராகுல் தமிழகம் வருகை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தமிழகம் வர இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் அறிவித்துள்ளார்.

அவர் நிருபர்களுக்கு சென்னையில் நேற்று பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் பேசியதாவது:

சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்ய தமிழகம் வர உள்ளனர். அவர்களின் வருகை குறித்த தேதி தெரிந்த பின்னர் பிரச்சார தேதி முடிவு செய்யப்படும்.

நாங்கள் யாரையும் தாக்கி பேசாமல், நாங்கள் செய்த திட்டங்களை கூறி மட்டுமே பிரச்சாரம் செய்வோம்.

பா.ஜ.க.வின், முரண்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தை முடித்து வைத்து சென்னையில் பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், இலங்கை பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். "இலங்கை பிரச்சினையை பொறுத்தவரையில், நாங்கள் (பா.ஜ.க.) ஆட்சிக்கு வந்தால் இலங்கை அரசை, 13-வது அரசியல் சட்ட திருத்தை நிறைவேற்ற வைப்போம்." என்றோ, அல்லது பிரச்சினைக்கு தீர்வு காண வேறு என்ன திட்டம் இருக்கிறது என்றோ கூறவில்லை. சென்னை, திருச்சியில் பேசிய பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியும் இந்த பிரச்சினைகளை எப்படி தீர்ப்போம் என்று கூறவில்லை.

இருநாட்டு மீனவர்களுக்கிடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்து, 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இலங்கை கடற்படையின் அராஜக செயல் ஆகும். இது இலங்கையில் யாரோ பேச்சுவார்த்தைக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இதனை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மீனவர் பிரச்சினை குறித்து, இலங்கையில் உள்ள இந்திய தூதர், டெல்லி மற்றும் சென்னையில் உள்ள இலங்கை தூதர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால், பா.ஜ.க. ஆட்சி காலத்தில் தான், இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 56 படகுகள் நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டன. அவற்றிற்கும், காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் நஷ்டஈடு வழங்கப்பட்டது.

இவ்வாறு ஞானதேசிகன் கூறியிருந்தார்.

சென்னை சைதாப்பேட்டையில், உதயசூரியன் பொன்விழா வளைவு மறைப்பு


நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகின்ற நிலையில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இதையொட்டி, பொது இடங்களில் உள்ள கட்சி சின்னங்கள், சுவர் விளம்பரங்கள், அரசு துறை நிறுவனங்களில் இருக்கும் முதல்-அமைச்சரின் படங்கள், கட்சி தலைவர்களின் படங்கள் மற்றும் தேர்தல் விளம்பரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உதயசூரியன் வடிவிலான கருணாநிதி பொன்விழா வளைவு மட்டும் திறந்த நிலையில் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, விருகம்பாக்கம் பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஜி.முரளி நேற்று முன்தினம் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்று அளித்தார்.

புகார் மனுவில், சென்னை சைதாப்பேட்டை, அண்ணாசாலை பகுதியில் உள்ள உதயசூரியன் வடிவிலான கலைஞர் பொன்விழா வளைவு இன்னமும் மறைக்கப்படாமல் உள்ளது, தேர்தல் நடத்தை விதிமுறைப்படி உடனடியாக அதனை மறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரை அடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் , சைதாப்பேட்டையில் உள்ள உதயசூரியன் வடிவிலான அந்த பொன்விழா வளைவை நேற்று துணியால் மறைத்தனர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media