BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 7 April 2014

மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டி சிக்னலை கண்டறிந்த‌ ஆஸ்டிரேலியா கருவி

மலேசிய விமானம் நொருங்கி இந்தியப் பெருங்கடல் பகுதியில் விழுந்திருக்கலாம் என்று கணிக்கப்படும் இடத்தில், கருப்புப் பெட்டியிலிருந்து வெளியேறும் சிக்னல்களை ஆஸ்திரேலிய கடற்படையின் உபகரணங்கள் கண்டறிந்துள்ளன. பேட்டரியின் ஆயுள் காலம் இன்று அல்லது நாளை காலாவதி ஆகிவிடும் என்பதால், தற்போது கண்டறியப்பட்டுள்ள சிக்னலை கொண்டு தரவுகளை ஆராயும் பணி தீவிரமடைந்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய கடற்படையின் கூட்டு நிறுவனமான ஜே.ஏ.சி.சி. தளபதி ஆங்கஸ் ஹவ்ஸ்டன் கூறியதாவது:

"தேடலில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் மிகவும் நம்பிக்கைக்குரிய தகவல் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படை கப்பல் கேடயம் இரண்டு மணி நேரத்தில் இரண்டுக்கும் அதிகமான சிக்னல்களை கண்டறிந்துள்ளது. கடல் பரப்பிலிருந்து சரியாக 4,500 மீட்டர் கீழே இந்த சிக்னல் கருவியில் பதிவாகியுள்ளது. எனினும், விமானம் தொடர்பாக எந்த தகவலும் இதுவரை பெறப்படவில்லை. தெற்கு இந்திய பெருங்கடலில் இங்கிலாந்தின் எச்.எம்.எஸ். (HMS) எக்கோ என்ற ஒலி சிக்னல்களை கண்டறியும் மேம்படுத்தப்பட்ட நீர் மூழ்கி கப்பல் மூலம், கருப்புப் பெட்டியின் சிகனல் பெறப்பட்ட இடத்திற்கு விரைந்துள்ளது. அங்கிருந்து ஒலி தரவுகள் மூலம் கண்டறியப்பட்ட சிக்னல்கள் எம்.எச்.370 விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து பதிவானதா என்று உறுதி செய்ய வேண்டும்."

ஐ.டி. நிறுவனங்கள் உள்பட அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் ஏப்ரல் 24 அன்று விடுமுறை



மக்களவைத் தேர்தலையொட்டி, இம்மாதம் 24-ம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைதேர்தல் 24.04.2014 அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

1951-ம் வருட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 135B-ன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் (தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உட்பட), உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் ( தினக்கூலி / தற்காலிக / ஒப்பந்த பணியாளர்கள் உட்பட) தேர்தல் நாளான 24.04.2014 (வியாழக்கிழமை) அன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பு வழங்கப்படவேண்டும் என அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ராஜபட்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் வைகோ, குஜராத் கலவரத்தை மறந்துவிட்டாரா?

சிவகங்கை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கிருஷ்ணனை ஆதரித்து தா.பாண்டியன் பேசியதாவது:

பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் ரகசிய தொடர்பு உள்ளது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணியில் சேருவதற்கு கம்யூனிஸ்டுகள் தடையாய் இருப்பார்கள் எனக் கருதி தான், ஜெயலலிதா கம்யூனிஸ்டுகளை கழற்றி விட்டுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டத்தை தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா. இதன் மூலம் நம்பிய தமிழக மக்களுக்கு அவர் துரோகம் செய்துள்ளார்.

தமிழகத்தில் கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவர் கூட்டணி வைத்துள்ள மோடியின் குஜராத்தில் உள்ள 9 அணு மின்நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பாரா?

ராஜபட்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் வைகோ, குஜராத் கோத்ரா கலவரத்தை மறந்துவிட்டுப் பேசுகிறார். ராஜஸ்தானில் 38 எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்றவே, முகேஷ் அம்பானி, மோடியை பிரதமராக்க செலவு செய்கிறார். மோடியை பிரதமராக்கினால் நாட்டின் வளத்தையே வளைத்துப் போடலாம் என அம்பானி முயற்சிக்கிறார். குஜராத்தில் உபரி மின்சாரம் இருந்தும், 11 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.

இந்தியா பரம ஏழை நாடு என்கிறார்கள். ஆனால் சுவீடன் நாட்டு வங்கியில் ரூ.70 லட்சம் கோடி கறுப்புப் பணமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை மீட்கும் முயற்சியில் காங்கிரஸ் அரசு ஈடுபடவில்லை. இதில் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் அக்கறை காட்டவில்லை. அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகள் எல்லாம் சுவீடன் வங்கிப் பணத்தை மீட்டுள்ளன. இந்தியா மட்டும் பணத்தை மீட்பதில் அக்கறை காண்பிக்கவில்லை.

இவ்வாறு தா.பாண்டியன் பேசியிருந்தார்.

யுவராஜ் சிங் இல்லத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது!

நேற்று வங்கதேசத்தில் நடந்த இருபது ஓவர் உலக கோப்பை இறுதி சுற்றில், இலங்கை அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதைய‌டுத்து, ஆத்திரம் அடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்,  சண்டிகரில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இல்லத்தின் மீது கற்கள் வீசி தாக்குதலில் ஈடுபட்ட‌னர். 

இது பற்றி தகவல் அறிந்ததும், காவல் அதிகாரிகள் யுவராஜ் சிங் இல்லத்திற்கு விரைந்து, ஆத்திரத்துடன் இருந்த கும்பலை கட்டுபடுத்தி, அவர்களை அங்கிருந்து விலக செய்தனர்.

21 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே யுவராஜ் சிங் சேகரித்து இருந்தார். அதிரடியாக ஆடி கொண்டிருந்த விராத் கோலிக்கு கடைசி நான்கு ஓவர்களில், 7 பந்துகள் விளையாட மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணி 130 ரன்கள் மட்டுமே மொத்தமாக எடுக்க முடிந்தது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து, யுவராஜ் சிங் இல்லத்தை கற்கள் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

"திமுக தலைவர் கருணாநிதி, சிறுபான்மை மக்களுக்காக பாடுபடுபவர்", கரூரில் குஷ்பூ பிரச்சாரம்

கரூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் சின்னசாமிக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பிரச்சாரம் செய்தார். சிறுபான்மை இனத்தவருக்கு பாடுபடுபவர் திமுக தலைவர் கருணாநிதி என்று கூறிய அவர், பிரச்சாரத்தின் போது பேசியதாவது:

நான் திமுக.வைச் சேர்ந்தவளாக இங்கு வரவில்லை, உங்களில் ஒருத்தியாக, உங்கள் வீட்டு மருமகளாக, மகளாக உங்கள் முன்பு வந்துள்ளேன். நீங்கள் கடந்த முறை தம்பிதுரைக்கு ஓட்டுப்போட்டு வெற்றிபெற செய்தீர்கள். உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள், அவர் ஒரு முறை யாவது உங்களை சந்திக்க வந்தாரா? உங்களுக்காக எதுவும் செய்தாரா?

ஆனால், திமுக தலைவர் கருணாநிதி, சிறுபான்மை மக்களுக்காக பாடுபடுபவர். இஸ்லாமிய மக்களின், உரிமைகளை நிலைநாட்டி பாதுகாக்கும் பாதுகாவலர். கடந்த முறை சட்டப் பேரவைத் தேர்தலில் பள்ளப்பட்டியில் 18 ஆயிரம் வாக்குகள் அளித்து திமுக.வின் கே.சி.பழனிச்சாமியை வெற்றிபெற வைத்தீர்கள். இந்த முறை மக்களவைத் தேர்தலில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சின்னச்சாமியை வெற்றிபெற வைக்க வேண்டும். ஒரு சாமியை (கே.சி.பழனிச்சாமி), ஜெயிக்க வைத்த நீங்கள் இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் இன்னொரு சாமியை (சின்னசாமி) ஜெயிக்க வைக்க மாட்டீர்களா? கண்டிப்பாகச் செய்வீர்கள்.

சின்னசாமியும், கே.சி.பழனி சாமியும் தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவார்கள். இந்த வெற்றியால் மத்தியில் ஆட்சி அமைக்க முடிவெடுப்பதில் திமுக ஒரு முக்கிய அங்கமாகத் திகழும். அதனால் தமிழகத்துக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும்.

இவ்வாறு குஷ்பூ பிரச்சாரம் செய்திருந்தார்.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்ததால் தான், காங்கிரஸ் வளர்ச்சி பெறாமல் போனது-தங்கபாலு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி. தங்கபாலு திருவாரூரில் நிருபர்களுக்கு நேற்று அளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

 “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் முந்தைய அரசு கொண்டுவந்த திட்டங்களை முடக்குவது வழக்கமாக உள்ளது. ஆனால், மத்தியில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த எந்தத் திட்டத்தையும் அடுத்து வரும் அரசு புறக்கணிக்க முடியாத வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

மத்திய அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைந்துள்ளதால், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் முழு வெற்றியைப் பெறும். மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து எதிர் கொள்வதால் கட்சித் தொண் டர்கள் எழுச்சி பெற்றுள்ளனர். இதனால், முன்னைவிட கட்சி வேகத்தோடு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த காலங்களில் அதிமுக, திமுகவுடன் காங்கிரஸ் மாறிமாறி கூட்டணி வைத்திருந்ததால், காங்கிரஸ் வளர்ச்சி பெறவில்லை என்பதே சரி. தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து களமிறங்கும் சூழ்நிலை தொடர்ந்தால்தான் தமிழகத்தில் காங்கிரஸ் வேகமாக வளரும்.

இலங்கையில் தமிழர்கள் உரிமை பெற மத்திய அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மத்திய அரசின் ரூ.8,000 கோடி நிதியுதவியில் அங்கு தமிழர் பகுதியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.”

இவ்வாறு தங்கபாலு கூறினார்.

தேர்தலையொட்டி சென்னையில் முன்னெச்சரிக்கையாக 1,225 பேர் கைது, இதில் 400 பேர் பிரபல ரவுடிகள்

தமிழகத்தில் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் மட்டும் சுமார் 2,800 பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். இவர்கள் அனைவரையும்
அந்தந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் மார்ச் 31-ம் தேதிக்குள் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தர விட்டிருந்தார். அதன்படி 1,710 பேர் காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். துப்பாக்கிகளை ஒப்படைக்காதவர்களை கணக்கெடுத்து அவர்களிடம் இருந்து அதை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,225 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 400 பேர் பிரபல ரவுடிகள். மேலும் தலைமறைவாக உள்ள 350 குற்றவாளிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நான் முதல்வரான பிறகு தமிழகத்தில் அராஜகம் அழிந்து, சட்டத்தின் ஆட்சி அச்சமின்றி நடக்கும் உயர்ந்த நிலையை மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனர்- ஜெயலலிதா

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைமையிலும், அதில் 9 ஆண்டுகள் திமுகவின் ஆதரவுடனும் நடந்து வந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் பல சீரழிவுகளை நாட்டில் ஏற்படுத்திவிட்டன. எடுத்துக்காட்டாக, திமுக அமைச்சர் முன்னின்று நடத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நாட்டுக்கு இழப்பு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலால் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு, அரசுக்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்கியதில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று மக்கள் பணம் எத்தனை, எத்தனை வழிகளில் எல்லாம் சில தனி நபர்களின் சொத்துகளாக மாறின என்பதை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்துக்கும் காரணம் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசின் மக்கள் விரோதச் செயல்கள்தான்.

சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தில் இருந்து, பி.எஸ்.என்.எல். இணைப்புகளை முறைகேடாக சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டதுவரை எந்தெந்த வகைகளில் முடியுமோ அந்தந்த வகைகளில் எல்லாம் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், நாட்டின் பொதுச் சொத்தை சூறையாடினர். 10 ஆண்டுகால சீரழிவை இப்போது சரிசெய்யாவிட்டால் நாடு இன்னும் பல தலைமுறைகளுக்கு மீண்டு எழ முடியாத நிலைக்கு தள்ளப்படும். எனவேதான், இந்தத் தேர்தலை நாட்டின் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தப் போகின்ற தேர்தல் என கூறி வருகிறேன்.

‘யாருடைய சொத்துக்கும் உத்தரவாதமில்லை’ என்ற காட் டாட்சியை திமுக நடத்தியது. நில அபகரிப்பு, இயற்கை வளங்களை சூறையாடுதல், ஊழல் மலிந்த ஆட்சிமுறை, அதிகார துஷ்பிரயோகம், நிர்வாகச் சீர்கேடு, பொதுத்துறை நிறுவனங்களை கடனில் தள்ளிய பரிதாபம் என்று தமிழகத்தை அனைத்து நிலைகளிலும் சீர்குலைத்த ஆட்சியாக கருணாநிதியின் திமுக ஆட்சி இருந்தது.

நான் முதல்வரான பிறகு தமிழகத்தில் அராஜகம் அழிந்து, சட்டத்தின் ஆட்சி அச்சமின்றி நடக்கும் உயர்ந்த நிலையை மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனர். அதுபோல காங்கிரஸ், திமுகவால் இந்த நாட்டுக்கு ஏற்படுத்தப்பட்ட சீர்கேடுகளைகளைய மத்திய ஆட்சிப் பொறுப்பில் அதிமுக அமர்வது அவசியமாகிறது. இத்தேர்தலில் நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதன்மூலம் மத்திய ஆட்சியில் முக்கிய பங்கினைவகிக்க வேண்டும். எனவே, முழுமையான வெற்றியைப் பெற வேண்டும் என்பதே கட்சியினர் ஒவ்வொருவரின் லட்சியமாக இருக்கட்டும்.

இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

காமராஜர் பள்ளிகளை திறந்தார்; திராவிட கட்சிகள் சாராய கடைகளை திறந்தன: ஜி.கே.வாசன்

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.செல்வராஜை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியை எந்த சக்தியாலும் முறியடிக்க முடியாது. வரும் காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் முதல் இயக்கமாக வளரும். காங்கிரஸ் கட்சி தன்மானத்தோடும் தனித் தன்மையோடும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாக்காளர்களை தைரியமாக சந்திக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளாக செய்த திட்டங்களின் அடிப்படையிலேயே இன்று தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது.

பாஜக மோடியை பிரதமர் வேட்பாளராக அறிமுகம் செய்துள்ளது. மோடி என்பது பெயரா? பொருளா? என்றுகூட தமிழக மக்களுக்கு 6 மாதத்துக்கு முன்பு வரை தெரியாது. அந்த கட்சியினரே அவரை எதிர்க்கும்போது, பதவி ஆசையில் குஜராத்தை விட்டுவிட்டு, வேறெங்கோ போட்டியிட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். மக்கள் தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்தால் 6 மாதத்தில் மீண்டும் ஒரு தேர்தல் நடைபெறும்.

காமராஜர் பள்ளிகளை திறந்தார். ஆனால், திராவிடக் கட்சிகள் இரண்டும் கிராமங்கள் தோறும் சாராயக் கடைகளைத் திறக்கின்றன. 47 ஆண்டுகள் எந்த வளர்ச்சியையும் தராமல் அணைகள் கட்டுமிடங்களில் எல்லாம் மனைகளை கட்டிக் கொண்டவர்கள் திராவிடக் கட்சியினர். மின் வசதி, தொழில், கட்டுமான மூலப்பொருள்கள், பஞ்சாலை, விசைத்தறி தொழிற்கூடங்கள் அனைத்தும் இன்று பல பிரச்சினைகளை சந்திப்பதற்கு காரணம் தமிழக அரசுதான் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

அதிமுக தேர்தலுக்குப் பிறகு, எந்த கட்சியில் சேர்ந்தால் லாபம் கிடைக்கும் என்று யோசிக்கிறது. திமுக 9 வருடம் நம்மிடம் பதவி சுகம் அனுபவித்துவிட்டு, நமக்கே மதச்சார்பின்மையை பாடம் சொல்லிக் கொடுக்கிறது. மூன்றாவது அணியான பாஜக அணி, பதவிக்காக ஒன்று சேர்ந்த சந்தர்ப்பவாத கூட்டணி. நான்காவதாக ஆங்காங்கே தெரியும் கம்யூனிஸ்டுகள், ரஷ்யாவில் மழை பெய்தால், இந்தியாவில் குடைப் பிடிப்ப வர்கள். 2008-ல் மத்திய அரசின் 4-ம் ஆண்டிலிருந்து வெளியேறிய கம்யூனிஸ்டுகளுக்கு அன்று முதல் இறங்கு முகம்தான்.

2004, 2009-ல் இந்தியாவில் மதவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமை காங்கிரஸுக்கே சேரும். தொடர்ந்து மூன்றாவது முறையும் இந்த முயற்சி தொடரும். அதற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் பிரச்சாரத்தின் போது பேசியிருந்தார்.

மக்களவைத் தேர்தலுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று துவக்கம்

நாடு முழுவதும் மக்களவைத்தேர்தல் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே 12-ம் தேதி வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு வடகிழக்கு மாநிலங்களான அசாமின் 5 தொகுதிகளிலும் திரிபுராவின் ஒரு தொகுதியிலும் நடைபெறுகிறது.

அசாமில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் தேஜ்புர், கோலியாபுர், ஜோராஹாட், திப்ருகர், லக்கிம்புர் ஆகிய 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  திரிபுராவில் மொத்தமுள்ள மூன்று தொகுதிகளில் திரிபுரா மேற்கு தொகுதிக்கு மட்டும் திங்கள்கிழமை வாக்குப் பதிவு நடக்கிறது. இங்கு மார்க்சிஸ்ட் வேட்பாளர் சங்கர் பிரசாத் தத்தாவும் காங்கிரஸ் வேட்பாளர் அருணோதய் சஹாவும் போட்டி யில் உள்ளனர். 12 லட்சம் வேட்பாளர்கள் வாக்களிக்க இருக்கும் இந்தத் தொகுதியில் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அசாமில் மீதம் உள்ள மூன்று தொகுதிகளுக்கும் திரிபுராவின் ஒரு தொகுதிக்கும் வரும் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media