BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 24 April 2014

கடந்த முறை பெற்றதை விட அதிகமான இடங்களை திமுக பெறும்- கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி, இன்று மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட கோபாலபுரம் சாரதா பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

 "மக்களவை தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என நம்புகிறேன். இந்தத் தேர்தல் திமுகவுக்கு சாதகமாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எனவே சாதகமாக இருக்குமென்று நம்புகிறேன். கடந்த முறை பெற்றதைவிட அதிகமான இடங்களை தி.மு.க. பெறும். அ.தி.மு.க. பணத்தில் புரளுகிற கட்சி. எனவே அவர்கள் பணம் பட்டுவாடா செய்கிறார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் பல முறை புகார் செய்யப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை"

இவ்வாறு கருணாநிதி கூறியிருந்தார்.

கங்கை மாதா அழைத்ததால்தான் புனித பூமியான வாரணாசியில் நான் போட்டியிடுகிறேன்.

வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட நரேந்திர மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் மோடி செய்தியாளர்களிடம் பேசியதாவது: "வாரணாசியில் போட்டியிடுவது குறித்து யோசிக்கும் போதெல்லாம், பாஜகவினர் விருப்பத்தின் பேரிலேயே இத்தொகுதியில் போட்டியிடப்போகிறேன் என நினைத்திருந்தேன்.

ஆனால், இப்போது தான் எனக்கு புரிகிறது, பாஜகவினர் விருப்பமோ அல்லது என் சுய விருப்பமோ என்னை வாரணாசியில் போட்டியிட வைக்கவில்லை. கங்கை மாதா அழைத்ததால்தான் புனித பூமியான வாரணாசியில் நான் போட்டியிடுகிறேன். அன்னை மடியில் தவழும் குழந்தை பெறும் உணர்வை வாரணாசியில் நான் பெறுகிறேன். காசியை, உலக நாடுகளின் ஆண்மீக தலைநகராக மாற்றுவேன். காசி நகரின் ஏழை நெசவாளர்கள் வாழ்க்கை தரம் உயரச் செய்வேன். இவற்றை நிறைவேற்ற கடவுள் எனக்கு துணை நிற்க வேண்டும்."

இவ்வாறு மோடி பேசினார்.

வாக்களிக்க விடுமுறை அளிக்காத விப்ரோ, ஹெ.சி.எல்., டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நாளன்று அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் விப்ரோ, ஹெ.சி.எல்., டெக் மகிந்திரா, சொடெக்ஸோ உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்கள் இன்றும் வழக்கம் போல் செயல்பட்டன.

சோழிங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் ஆர். ஜெயந்தி தேர்தல் ஆணைய உத்தரவை மீறி இந்நிறுவனங்கள் இயங்கியதாக தெரிவித்தார். மேலும், அங்கு பணிபுரிந்த சுமார் 3,500 ஊழியர்களையும் காவல்துறையினர் உதவியுடன் வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தனர். தேர்தல் ஆணைய உத்தரவை மீறியதாக 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மோடி அலை வீசவில்லை; மே 16 வரை பொறுத்திருங்கள்; காங்கிரஸ் பெரும்பான்மை பெறும்- மன்மோகன் சிங்

அசாம் மாநிலத்தில் தனது மனைவி குர்சரன் கவுருடன் பிரதமர் மன்மோகன் சிங் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: "தேசத்தில் 'மோடி அலை' வீசவில்லை. அப்படி ஒன்று இருப்பதாக ஊடகங்கள் மிகைப்படுத்துகின்றன. காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்றுவிடும் என கூறப்படுகிறது, அதற்கு சாத்தியம் இல்லை. மே 16-ம் தேதி தேர்தல் முடிவுகள் வரை காத்திருங்கள். காங்கிரஸ் பெரும்பான்மை பெறும். நாட்டு மக்கள் அனைவரும் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்" என்றார்.

முன்னதாக லோகபிரியா கோபிநாத் பொர்டோலி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கனபாரா சென்றார். அங்கு, அசாம் முதல்வர் தருண் கோகோய், அசாம் காங்கிரஸ் தலைவர் புவனேஸ்வர் கல்டியா ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். அங்கிருந்து வாக்குச்சாவடிக்கு காரில் சென்றார்.

தேர்தலை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகள் மூடியிருப்பதால், ஆந்திராவிற்கு தமிழகத்தில் இருந்து படையெடுப்பு


மக்களவைத் தேர்தலை யொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மதுபானப் பிரியர்களின் கவனம் ஆந்திரா பக்கம் திரும்பியுள்ளது.

இவர்கள் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தூர், குடிபாலா, சத்தியவேடு, எஸ். ஆர். புரம் , நகிரி, புத்தூர், பலமனேர், வி. கோட்டா, குப்பம் பலமனேர் ஆகிய ஊர்களுக்கு படையெடுத்து செல்கின்றனர். பஸ்கள் மட்டுமன்றி கார், பைக் மூலமாகவும் இவர்கள் வருகின்றனர்.இதனால் கடந்த 2 நாள்களாக ஆந்திர எல்லைகளில் உள்ள மது பானக் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.மேலும் இங்கு ‘கள்’ விற்பனையும் விறுவிறுப்பாக உள்ளது.

இந்நிலையில் வேட்பாளர்களின் சீக்ரெட் ஏஜென்ட்டுகள் மூலம், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு மதுபான பாட்டில்கள் பஸ்கள் மூலம் கொண்டுசெல்லப்படுவதாக வந்த தகவலின் பேரில் ஆந்திர - தமிழக எல்லைகளில் கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தாயும் மகனும் சேர்ந்து நாட்டைக் கொள்ளையடிக்கின்றனர்- நரேந்திர மோடி


"எங்கள் குடும்பத்தை குறி வைத்து பாஜக தாக்குகிறது. இதனால் நாங்கள் மேலும் பலப்படுவோம்." என்று பிரியங்கா காந்தி தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, குஜராத்தின் கலோல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:

நீங்கள் மேலும் பலமடைவீர்கள் என்று சொன்னீர்கள். கடந்த 60 ஆண்டுகளாக உங்கள் குடும்பம் (நேரு குடும்பம்) மட்டுமே வளர்ந்துள்ளது. ஆனால், இன்றைய பிரச்சினை தேசத்தை எப்படி வலுப்படுத்துவது என்பதுதான்.

நீங்கள் (பிரியங்கா) உங்களை வலுப்படுத்திக் கொள்ள நினைக்கையில், பாஜக வலுவான தேசத்தைக் கட்டமைக்க விரும்புகிறது. எங்களைப் பொருத்த வரையில் மக்களின் குரலை விட வலிமையானது வேறெதுவும் இல்லை. உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக காங்கிரஸ் தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.

பாஜக கேள்வியெழுப்பும் போதெல்லாம், என் மீது மேலும் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறது. அவை பயனற்றுப் போகும் போது, காங்கிரஸ் தலைவர்கள் சிபிஐ-யைத் தவறாகப் பயன்படுத்தும் பிரச்சினையைக் கொண்டு வருகின்றனர். பிரச்சினை அடிப் படையிலான போராட்டத்தை முன் வைக்கமுடியாமல் காங்கிரஸார் பின்தங்கி விட்டதாக நினைக்கி றேன்.

தாயும் மகனும் (ராகுல்-சோனியா) சேர்ந்து நாட்டைக் கொள்ளையடிக்கின்றனர். அந்தக் கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பத்திரப்படுத்தி விட்டனர். கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டு வருவதற்கான சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கா ததற்காக, மத்திய அரசை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கண்டித்துள்ளது. மத்திய அரசு மக்களிடமிருந்து எதையோ மறைக்கிறது.

இவ்வாறு நரேந்திர மோடி பேசியிருந்தார்.

ரூ.113 கோடி லஞ்சம் பெற்ற‌தாக கூறி காங்கிரஸ் எம்.பி.யை கைது செய்ய அமெரிக்கா வேண்டுகோள்

ஆந்திர மாநிலத்தில் டைட்டானியம் தாதுவை பிரித்தெடுப்பதற்கான உரிமம் பெறுவதற்காக அதிகாரிகளுக்கு ரூ. 113 கோடியே 17 லட்சம் லஞ்சம் அளித்த காங்கிரஸ் எம்.பி. கே.வி.பி.ராமச்சந்திரராவை கைது செய்யுமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இத்தொகையை அமெரிக்க நிறுவனம் ஒன்றிடமிருந்து பெற்று மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு அவர் வழங்கிய தாகக் கூறப்படுகிறது. இப்பணியை முடித்துக் கொடுக்க அவரும் லஞ்சம் பெற்றார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பு, சி.பி.ஐ.க்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், “ராமச்சந்திர ராவ் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்களை இந்திய தூதரகம் மூலம் முறைப்படி விரைவில் அனுப்பிவைப்போம். அதற்கு முன்னதாக அவரை தற்காலிகமாக கைது செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த கடிதத்தை ஆந்திர மாநில போலீஸாருக்கு சிபிஐ அனுப்பியுள்ளது. ராமச்சந்திர ராவை உடனடியாக கைது செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. ஆந்திர மாநிலம், மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நெருங்கிய நண்பராக இருந்தவர் கே.வி.பி.ராமச்சந்திர ராவ். தற்போது மாநிலங்களவை உறப்பினராக உள்ளார்.

ராகுல் காந்தி, நரேந்திர மோடிக்கு கூறும் புத்தர் கதை

நரேந்திர மோடி பங்கேற்று பேசும் தேர்தல் பிரச்சாரங்களில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை 'இளவரசர்' என்றே குறிப்பிட்டு வந்தார். அவர் அவ்வாறு அழைத்தது பற்றி கோபம் வரவில்லையா, உணர்ச்சி வசப்படவில்லையா என ராகுல் காந்தியிடம் பிரபல செய்தித்தாளின் பத்திரிக்கை நிருபர் ஒருவர் கேட்டபோது, அவர் அளித்த பதிலாவது:

மற்றொருவரின் கோபமூட்டும் பேச்சை நான் கேட்கவோ, உணர்ச்சிவசப்படவோ தேவையில்லை. ஒருவருக்குக் கோபம் ஏற்படுகிறது என்றால் அதற்குக் காரணம் இருக்கும். அவர் கோபத்தையும் வெறுப்பையும் சுமந்து திரிகிறார். அது என்னை ஒன்றும் செய்யாது. அது அவரைத்தான் தாக்கும். மோடி என்னை எப்படி அழைக்க விரும்புகிறார், எந்த விதமான வசைச்சொற்களை என்மீது வீச விரும்புகிறார் என்பதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அது அவரோடு சம்பந்தப்பட்டது.

ஒரு சின்ன கதை சொல்கிறேன். ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் உட்கார்ந்திருந்தபோது, வேகமாக வந்தார் ஒருவர். புத்தரைப் பார்த்து அவர் வசைமாரி பொழிந்தார். சிறிது நேரம் கழித்து சீடர்கள் அவரைப் பார்த்துக் கேட்டனர்: “அவர் உங்களை வசைபாடினார், அவமதித்தார், நீங்கள் ஏன் எதுவும் பேசவில்லை, எதுவும் செய்யவில்லை?” என்று கேட்டனர். புத்தர் அவர்களுக்குப் பதில் சொன்னார்: “அவர் கோபத்தைப் பரிசாகக் கொண்டுவந்தார். அந்தப் பரிசுடன் அவர் சிறிது நேரம் இங்கே நின்றுகொண்டிருந்தார். அந்தப் பரிசை நான் ஏற்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அந்தப் பரிசுடன் அவர் திரும்பிவிட்டார்.

அப்படித்தான். மோடி கொண்டுவரும் இதுபோன்ற பரிசுகளை நான் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. அதை அவரே அவருடன் வைத்துக்கொள்ளட்டும். மோடி கொண்டுவரும் பரிசான இந்தக் கோபமே அவரை வீழ்த்திவிடும்.

இவ்வாறு ராகுல் காந்தி பதிலளித்தார்.

கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு

திமுக தலைவர் மு.கருணாநிதி, பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தொடரப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பி.வி.செல்வகுமார், திருமாறன், திவாகர் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரில் நடந்து வரும் சொத்துக்குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராகாததால் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, சட்டம் வளைக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து அறிக்கைகள் அளித்துள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 25ம் தேதிக்குள் வெளிவரும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறியதை விமர்சித்துள்ளார். இதன்மூலம் நீதித்துறையை கருணாநிதி களங்கப்படுத்தி உள்ளார். நீதிபதியை அரசியலுக்கு இழுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். திமுக-வை தடை செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் ஓட்டு போட்டது நோட்டாவுக்கா?



 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media