BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 7 March 2014

நீதிமன்ற வளாகத்தில் சிறுமி கடத்தல்


மகாராஷ்டிர மாநிலம் தானே நீதிமன்றத்திற்கு சாந்தா மச்சிந்திர ஷிண்டே(40) என்பவர், தனது சகோதரர் பாலு பவார் சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, மாவட்ட நீதிமன்றத்திற்கு நேற்று வந்திருந்தார். அவர் தன்னுடன் தனது 11 வயது மகள் ரீபாவையும் அழைத்து வந்திருந்தார்.

விசாரணை தொடங்குவதற்கு முன்பாக, நீதிமன்றத்திற்கு வெளியில் சாந்தா தன் மகளை நிற்க வைத்து விட்டு தண்ணீர் குடிக்கச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது மகளைக் காணவில்லை. நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால்,
தன் மகளை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுவிட்டதாக அவர் தனது புகார் மனுவில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.

பிரதமராக ஆதரவு தெரிவித்த மமதாவிற்கு நன்றி தெரிவித்த ஜெ.


தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமராக விரும்பும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவளிப்பதில் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று குறிப்பிட்டார்.

மம்தா பானர்ஜி தனக்கு ஆதரவு தெரிவித்ததற்காக,  அவரை இன்று தொலைபேசியில் தொடர்புகொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அவருக்கு நன்றி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்தத் தொலைபேசி உரையாடலின்போது, மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கான சாத்தியங்கள் குறித்தும் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் ஆட்சியே பெண்களுக்கு அதிகமான பாதுகாப்பை அளித்தது, பெண் குலத்திற்கு பொற்காலம்- ஞானதேசிகன்


சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, பெண் குலத்திற்கே பொற்காலம் என்று சொல்ல கூடிய அளவில், பெண்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு பல திட்டங்களையும், சட்டங்களையும் வழிவகுத்துள்ளது என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்.

மகளிர் தினத்தை ஒட்டி வெளியிட்ட செய்தியில், அவர் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு குற்றவியல் சட்டங்களை திருத்தி பெண்களுக்கு பாதுகாப்பை அதிகரித்தும், பணியாற்றும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தியது. 

இந்திய வாரிசுரிமை சட்டத்தை திருத்தி, சொத்தில் பெண்களுக்கு சம பங்கு, இல்லங்களில் நடக்கின்ற வன்கொடுமை தடுப்புச் சட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, பிறந்த குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை, பெண்களுக்கு பேறு காலத்தில் சத்துணவு, ராணுவத்தில் பெண்களுக்கு இடம் இவையெல்லாம் வரலாற்றில் பெண் குலத்திற்கு பொற்காலம் என்று சொல்லத்தக்க வகையில் பெண்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு என பல திட்டங்களையும், சட்டங்களையும் கொண்டுவந்தது மத்திய அரசு.

இவ்வாறு கூறிய ஞான தேசிகன் , அனைத்து மகளிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியிருந்தார். 
 

சென்னையில் அதிகரித்து வரும் மாணவர்கள் வன்முறை, கண்காணிக்க 45 சிறப்பு பறக்கும் படைகள்




சென்னையில் நேற்று முன்தினம் 3 இடங்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுபோன்ற கலவரத்தை தடுக்க ஆணையர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் இணை ஆணையர் ஸ்ரீதர் (வடசென்னை) திருஞானம் (தென்சென்னை) சங்கர் (கிழக்கு சென்னை) சண்முகவேல் (மேற்கு சென்னை) ஆகியோர் தலைமையில் சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் பகுதியில் காலை 9 மணியில் இருந்து இரவு வரை மாணவர்கள் செல்லும் பஸ்களை கண்காணிப்பார்கள். குறிப்பாக கிழக்கு சென்னையில் 15 பறக்கும் படையும், மேற்கு சென்னையில் 10 பறக்கும் படையும், வடசென்னையில் 10 பறக்கும் படையும், தென்சென்னையில் 10 பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பறக்கும் படையில் ஒரு இன்ஸ்பெக்டர், 3 சப்-இன்ஸ்பெக்டர், 5 போலீசார் இருப்பார்கள். இவர்கள் அண்ணாசதுக்கம், எழும்பூர், பெரம்பூர், செம்பியம், ஆவடி, வண்ணாரப்பேட்டை, தங்கசாலை, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். காலை மற்றும் மாலை வேலைகளில், பஸ்களில் போலீசார் ஏறி கல்லூரி மாணவர்களின் செயல்களை கண்காணிப்பார்கள்.

சென்னையில் மாணவர்கள் அராஜகம் அதிகமாக தான் இருக்கிறது, போலீஸாரின் இந்த நடவடிக்கை தேவையான ஒன்றே என நினைப்போர் லைக் போடுங்கள்!

'லொள்ளு சபா' பாலாஜி இன்று காலை திடீர் மரணம்


விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த காமெடி நடிகர் பாலாஜி இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43.

இவர் நடிகர் சந்தானத்தை தொலைகாட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகப்படுத்தி இருக்கிறார் . சிலம்பாட்டம், திண்டுக்கல் சாராதி உள்பட ஐம்பதற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் அனகாபுத்தூரில் வசித்து வந்த பாலாஜிக்கு, மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவரது உடல் நிலை மோசமானதை ஒட்டி, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்று காலை 8 மணிக்கு மரணம் அடைந்தார்.

இந்திரா காந்தி காலத்தில் தனித்து போட்டியிட்ட திமுகவின் தற்போதைய நிலை? உதிரி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்து கொண்டிருக்கிறது

பூண்டியில் ஒரு விழாவில் கலந்து கொண்ட மு.க.அழகிரி, அன்னை இந்திரா காந்தி காலத்தில் தனித்து நின்று எதிர்த்து போராடிய தி.மு.க. தற்போது உதிரி கட்சிகளுடன் கூட்டணிக்காக பேச்சு நடத்தும் நிலைக்கு வந்துள்ளது என்று கூறினார்.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட விரும்பவில்லை என்பதை தன் ஆதரவாளர்களுக்கு தெரிவித்து கொள்வதாக கூறிய அழகிரி, "தி.மு.க. தலைவருக்கு தெரியாமல் கட்சியில் சில நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது. கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்து வரும் தொண்டர்களை விட்டு விட்டு, மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு தி.மு.க. முக்கியத்துவம் அளிக்கிறது. " என்றும் தெரிவித்தார்.

பூண்டியில் அழகிரி கலந்து கொண்ட விழாவில், ஆயிர கணக்கான ஆதரவாளர்களிடம் இருந்து பலத்த, உற்சாக‌ வரவேற்பு அவருக்கு கிடைத்தது.

10 மணி நேரத்தில் 55, 26,945 மரங்களை நட்டது மத்திய பிரதேசம்; உலக சாதனை சான்றிதழை அனுப்பியது கின்னஸ் நிறுவனம்!


‘வனங்களை காப்போம்’ என்ற இயக்கத்தின் மூலம் மத்திய பிரதேச மாநில வனத்துறையினர் கடந்த வருடம் ஜீலை மாதம் 22ம் தேதி அன்று மரம் நடும் விழாக்களை நடத்தினர். 86 ஆயிரத்துக்கும் அதிகமான கிராம மக்களின் உதவியுடன் நடைபெற்ற இந்த விழாவில் காலை 9 மணியிலிருந்து மாலை 7 மணி வரை மாநிலம் தழுவிய அளவில் 55 லட்சத்து 26 ஆயிரத்து 945 மரங்கள் நடப்பட்டன.

நடுவர்கள் எதிரில் நடத்தப்பட்ட இந்த மரம் நடும் விழாவை உலக சாதனைகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் கின்னஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கான சான்றிதழை லண்டனில் உள்ள கின்னஸ் நிறுவனம் மத்திய பிரதேச அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அம்மாநில அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியபிரதேச மாநில வனத்துறையின் இச்சாதனை  மிக‌ அபாரமானது என நினைப்போர், லைக் போடுங்கள்!

குஜராத் உண்மையிலேயே வளர்ச்சி அடைந்ததா? நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்- கேஜ்ரிவால்


குஜராத் மாநிலம் உண்மையிலேயே எல்லா துறைகளிலும் வளர்ச்சி அடைந்து இருக்கிறதா என ஆய்வு செய்ய அரவிந்த் கேஜ்ரிவால், குஜராத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். மோடியிடம் கேட்க வேண்டிய கேள்விகளின் பட்டியலோடு, மோடியை பார்க்க சென்ற கேஜ்ரிவாலை தடுத்து நிறுத்திய போலீஸார், குஜராத் முதல்வரை காண முன் கூட்டியே அப்பாயின்மென்ட் வாங்கியிருக்க வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர்.

மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அவருடன் நேருக்கு நேர் தான் கேட்கவிருந்த கேள்விகளை நிருபர்களை சந்தித்து கேஜ்ரிவால் பகிர்ந்து கொண்டார். அக்கேள்விகள் பின்வருமாறு:

நாட்டில் உள்ள பல மாநிலங்கள் சூரிய மின்சாரத்தை ஒரு யூனிட் 8 ரூபாய் விலைக்கு வாங்கும் போது, குஜராத் மட்டும் 15 ரூபாய்க்கு வாங்குவது ஏன்?

முகேஷ் அம்பானியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதால் தானே அவரது மருமகனுக்கு உங்கள் அமைச்சரவையில் மந்திரி பதவி தந்திருக்கிறீர்கள்?

சுரங்க மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஜாமினில் வெளியே வந்துள்ள பாபு பொக்காரியாவை மந்திரி பதவியில் அமர்த்தியிருக்கிறீர்கள். ஏன்?

சமையல் எரிவாயு விலையை 4 டாலரில் இருந்து 8 டாலராக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருந்த போது அதை 16 டாலராக உயர்த்த வேண்டும் என குஜராத் அரசு வற்புறுத்தியது ஏன்?

450 கோடி ரூபாய் அளவுக்கு மீன் வளத்துறையில் ஊழல் செய்த புருஷோத்தம் சோலாங்கிக்கு கூட உங்கள் அமைச்சரவையில் மந்திரி பதவி கொடுத்திருக்கிறீர்கள். குஜராத்தில் உள்ள 6 கோடி மக்களில் வேறு யாருமே இந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் இல்லையா?

சவுரப் பட்டேலை கனிமம், பெட்ரோல், எரிவாயு மற்றும் எரிசக்தி துறை மந்திரியாக நியமித்து குஜராத்தின் இயற்கை வளங்களை எல்லாம் அம்பானி கூட்டத்துக்கு தாரை வார்த்து தந்து விட்டீர்கள்.

மாநில அரசின் 1500 பணியிடங்களுக்கு 13 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பதை வைத்தே குஜராத்தில் வேலையில்லா திண்டாட்டம் எப்படி தலைவிரித்து ஆடுகிறது என தெரியவில்லையா?

அரசு துறைகளில் ஒப்பந்த பணியாளர்களை நியமித்து அவர்களுக்கு மாதம் 5 ஆயிரத்து 300 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. இந்த பணத்தை வைத்து ஒருவர் குடும்பம் நடத்த முடியுமா?

அரசு பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளன.

 சுகாதார துறையும் சரியாக இயங்கவில்லை.

அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கான சரியான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், குஜராத் மாநிலம் எல்லா துறைகளிலும் முன்னேறி விட்டது என மோடி திரும்பி திரும்பி பொய்களையே கூறிக் கொண்டிருக்கிறார் என கேஜ்ரிவால் குற்றம் சாட்டியிருக்கிறார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media