BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 29 May 2014

மோடி தர்பாரின் 14 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன‌

மோடி தர்பாரின் 14 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன‌

பாஜகவின் மோடி அமைச்சரவையில் உள்ள 14 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதிகபட்சமாக அமைச்சர் உமாபாரதி மீது 13 கிரிமினல் வழக்குகள் உள்ளன, அதில் இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உண்டு.

நிதின் கட்காரி மீது 4 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

டெல்லி விமான நிலையத்தில், சக பயணியுடன் சட்டையை பிடித்து சண்டை போட்ட பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ், சினேகா நடித்த ‘உன் சமையல் அறையில்’ படம் ஜூன் 6–ந்தேதி வெளிவர இருக்கிற‌து. பிரகாஷ் ராஜே இப்படத்தை இயக்கி தயாரிக்கிறார். பட வேலையாக டெல்லி சென்ற பிரகாஷ் ராஜ் சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு ஏர் இந்தியா கவுண்டரில் பயணிகள் கியூவில் நின்று கொண்டு இருந்தார்கள். பிரகாஷ்ராஜும் அவர்களுடன் நின்றார்.

அப்போது சக பயணி ஒருவர் பிரகாஷ்ராஜை தள்ளிவிட்டார். கீழே விழப்போன பிரகாஷ்ராஜ் சுதாரித்து நிமிர்ந்தார். இதனால் அந்த பயணியை கண்டித்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, ஒருவரை யொருவர் கடுமையாக திட்டினார்கள். கோபமான பிரகாஷ்ராஜ் அந்த பயணியின் சட்டை காலரை பிடித்து இழுத்தார். பதிலுக்கு அவரும் பிரகாஷ் ராஜ் சட்டையை பிடித்தார். இந்த சண்டையை பார்த்துக் கொண்டிருந்த சக பயணிகள் குறுக்கிட்டு இருவரையும் தனித்தனியாக இழுத்து பிரித்துவிட்டனர்.

முன்னாள் அமைச்சர்கள் அரசு வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டும்- வெங்கய்யா நாயுடு

மத்திய நகர்புற வளர்ச்சித் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "பதிவியிருந்து விலகிய அமைச்சர்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அந்த வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்கள், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டும். அப்போதுதான் புதிதாக பொறுப்பேற்றுள்ளவர்கள் அவற்றில் குடியேற முடியும்" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "அனைவருக்கும் வீடு என்ற இலக்கை எட்டுவதற்கு, வங்கிகளில் வீட்டுக் கடன் வட்டி குறைக்கப்படுவது அவசியம். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வீட்டு வசதி ஏற்படுத்தித் தருவதற்கு புதிய அரசு முன்னுரிமை அளிக்கும். வீட்டுக் கடன் வட்டி குறைப்பது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடன் ஆலோசிக்க உள்ளேன்" என்றார்.

முதல் 100 நாட்கள் ஆட்சியில் முன்னுரிமை அளிக்கவேண்டிய, மோடி அறிவித்த 10 முன்னுரிமைகள்


முதல் 100 நாட்கள் ஆட்சியில் முன்னுரிமை அளிக்கவேண்டிய 10 முக்கிய விஷயங்களை அமைச்சர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அந்த 10 முன்னுரிமைகளாவன:

1.மக்களிடையே அதிகாரிகள் பற்றிய நம்பிக்கையை வளர்த்தெடுத்தல்.

2. புதிதான கருத்துக்கள் மற்றும் சுதந்திரமாக பணியாற்றுதலை வரவேற்பது.

3. கல்வி, சுகாதாரம், நீராதாரம், எரிசக்தி, சாலைகள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்தல்.

4. அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் மின் ஏலத்தை வளர்த்தெடுத்தல்.

5. அமைச்சகங்களுக்கு இடையிலான விவகாரங்களைக் கவனிக்க சிறப்பு ஏற்பாடு.6. அரசு எந்திரத்தில் மக்கள் நலனுக்கான அமைப்பை ஏற்படுத்துதல்.

7. பொருளாதார விவகாரங்களுக்கு உடனுக்குடன் முன்னுரிமை அளித்தல்.

8. உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுச் சீர்திருத்தங்கள்.

9.அரசின் கொள்கையை குறித்த காலத்தில் செய்து முடித்தல்.

10. அரசுக் கொள்கைகளில் நிலையான போக்கைக் கடைபிடித்தல் மற்றும் திறமையாக செயல்படுதல்

இந்த 10 முன்னுரிமைகளை பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாஸ்போர்ட்டை தன் குழந்தையிடம் கொடுத்து விட்டு ஏர்போர்ட்டில் பரிதவிக்கும் தந்தை


சீனாவில் இருந்து  தென் கொரியா கிளம்பிய தந்தை ஒருவர், தன் 4-வயது மகனிடம் பாஸ்போர்ட்டை கொடுத்திருக்கிறார். அச்சிறுவன்  தன் ஒவிய திறமையை பாஸ்போர்ட்டில் பயன்படுத்தி, படங்கள் வரைந்திருக்கிறார். பாஸ்போர்ட்டில் இருக்கும் விவரங்கள் யாவும் சிறுவன் வரைந்த படங்களினால் தெரியாமல் போக, இருவரும் தென் கொரியா ஏர்போர்ட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவனை அழைத்து வந்த தந்தை, சிக்கலில் இருந்து வெளிவர, சீனா தூதரகத்தை உதவிக்கு நாடியிருக்கிறார்.

அடுத்த முறை நீங்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் போது குழந்தைகளை அழைத்து சென்றால், உங்கள் பாஸ்போர்ட்டை எச்சரிக்கையுடன் வைத்திருங்கள்!

தமிழகத்தின் நலன்,வளர்ச்சிக்கு எந்த பிரச்னையும் இருக்காது. மோடி அதனை பார்த்துக்கொள்வார். -இல.கணேசன்


"மத்திய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இது எந்த வகையிலும் தமிழகத்தை பாதிக்காது.", என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட‌ பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், செவ்வாய்க் கிழமை இரவு சென்னை திரும்பினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பாஜக கூட்டணி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே இதை கணக் கில் கொண்டு விகிதாச்சார அடிப் படையில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.  இதனால் தமிழகத்தின் நலன் மற்றும் வளர்ச்சிக்கு எந்த பிரச்னையும் இருக்காது. பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி அதனை பார்த் துக்கொள்வார்.

வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற் றுள்ள சுஷ்மா சுவராஜ், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக அந்த நாட்டுக்கே சென்று வந்தவர். தமிழக மீனவர்களின் நலனிலும் அவருக்கு அதிக அக்கறையுண்டு. எனவே அவரால் இலங்கையுடனான பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காணமுடியும்.

நரேந்திர மோடியின் பதவி யேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்காதது மத்திய மாநில உறவுகளை எந்த வகையிலும் பாதிக்காது. விழாக்களில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும்.

இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

என் செயல்திறனை பார்த்துவிட்டு என்னை விமர்சியுங்கள்: ஸ்மிருதி இரானி


காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை எதிர்த்துப் அமேதி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஸ்மிருதி இரானிக்கு மத்திய மனிதவளம் மற்றும் கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

பட்டப்படிப்பு கூட முடிக்காத ஸ்மிருதி இரானிக்கு கல்வித்துறை ஒதுக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கேள்வியெழுப்பியது. காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான அஜய் மாக்கன், “மோடியின் அமைச்சரவையில் ஸ்மிருதி இரானிக்கு கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பட்டப்படிப்பு கூட படிக்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தனக்கு எதிராக எழுந்துள்ள சர்ச்சை குறித்து விளக்கமளித்த ஸ்மிருதி; "எனது கட்சி, என் திறமை மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த பொறுப்பை அளித்துள்ளது. என் செயல்திறனை பார்த்துவிட்டு என்னை விமர்சியுங்கள். எனக்கு அளிக்கப்பட்டுள்ள பணியில் கவனத்தைச் செலுத்த முடியாமல் என்னை திசை திருப்பும் வகையில் சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன" என்றார்.

கல்வித்துறையை நிர்வகிக்க பட்டப்படிப்பு அவசியமா அல்லது செயல்திறன் இருந்தால் போதுமா என்பது குறித்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்!

சென்னையில் குடி போதையில் வாகனம் ஓட்டியதாக 5 மாதத்தில் 22,914 வழக்குகள் பதிவு, விபத்து ஏற்படுத்திய 374 பேரின் லைசென்ஸ் ரத்து


சென்னையில் தினமும் இரவில் 54 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுகிறது. கடந்த 5 மாதங்களில் மட்டும் சென்னை நகரில் நடத்தப்பட்ட சோதனையில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 22,914 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை போதையை அளவிடும் கருவியான ‘பிரீத் அனலைசர்' மூலம் கண்டுபிடித்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இவர்களில் 6,221 பேர் காரில் வந்தவர்கள்.

அதிக போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 374 பேரின் ஓட்டுநர் உரிமம் நீதிமன்றம் மூலம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், போதையில் வாகனம் ஓட்டியதாக 2,396 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்ய அந்தந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் உயிரிழப்பு விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 27 சதவீதம் குறைந்துள்ளது.

தெலங்கானாவில் இன்று பந்த்: 136 கிராமங்களை சீமாந்திரா பகுதியில் சேர்பதற்கு எதிர்ப்பு


தெலங்கானா, சீமாந்திரா என இரு மாநிலங்கள் வரும் ஜூன் 2-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக செயல்பட தொடங்க உள்ளதால், கம்மம் மாவட்டத்தில், போலாவரம் அணைக்கட்டின் கீழ் உள்ள 7 மண்டலங்களை சீமாந்திரா பகுதியில் சேர்க்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரும், விரைவில் தெலங்கானா முதல்வராக பதவி ஏற்க உள்ளவருமான கே.சந்திரசேகர் ராவ், புதன்கிழமை ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து கூறியதாவது:

"போலாவரம் அணைக்கட்டின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் இருக்கும் 136 கிராமங்கள் தெலங்கானாவிற்கு சொந்தமானது. இப்போது மத்திய அரசு, தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக இந்த மண்டலங்களை சீமாந்திரா பகுதியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை தெலங்கானா பந்த் நடத்தப்படும், போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும்."

இவ்வாறு சந்திரசேகர் ராவ் கூறினார்.

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார்

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிந்து, வரும் ஜூன் 2-ம் தேதி தெலங்கானா மாநிலம் நாட்டின் 29வது மாநிலமாக உருவாக உள்ளது. அன்றைய நாளே, தெலங்கானாவின் முதல்வராக, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் கே. சந்திர சேகர் ராவ் பதவியேற்கிறார்.

சீமாந்திராவின் முதல் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் மாதம் 8-ம் தேதி, குண்டூர்-விஜயவாடா இடையே உள்ள ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் பதவி ஏற்க உள்ளார். இவ்விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள இருப்பதாக தெலுங்கு தேசம் கட்சி வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர். ஜூன் 8-ம் தேதி  சந்திரபாபு நாயுடு பதவி பொறுப்பேற்கும் வரையில், சீமாந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருக்கும் மற்றும் ஜூன் 2-ம் தேதி தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் பதவியேற்கும் வரை அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media