BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 19 May 2014

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்


காளைகள் கொடுமைப்படுத்தப்படுவதாக கூறி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டுமென விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து கடந்த 7-ம் தேதி ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை மறுஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் அதில், ஜல்லிக்கட்டு விளையாட்டு மட்டுமல்ல என்றும், தமிழர்களின் கலாச்சரத்துடன் தொடர்புடையது என்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கட்டுப்பாடுகளுடன் நடத்தவும் தமிழக அரசு தயாராக இருப்பதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

ஸ்டாலின் ஆதரவாளர்கள் பத்திரிகையாளர்களை தாக்கியது கண்டிக்கதக்கது: பொன்.ராதாகிருஷ்ணன்

நேற்று ஸ்டாலின் இல்லத்தின் முன்பு குவிந்திருந்த பத்திரிக்கையாளர்கள் மீது ஸ்டாலின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருப்பது கண்டிக்கதக்கது என பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். டெல்லி செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் சென்றிருந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பத்திரிகையாளர்களை யார் தாக்கினாலும் ஏற்று கொள்ள இயலாது. எந்த கட்சியாக இருந்தாலும் சரி. கலைஞர் கருணாநிதி பத்திரிகை, ஊடகங்கள் சுதந்திரத்தை மதிக்க கூடியவர். இத்தகைய சம்பவத்தை ஏற்க முடியாது.

மத்திய மந்திரி பொறுப்பு யார், யாருக்கு என்பதெல்லாம் பிரதமர் மோடிதான் முடிவு செய்வார். ஒரு பிரதமர் முழுமையான அதிகாரமும், சுதந்திரமும் பெற்று செயல்பட்டால் தான் முறையாக இருக்கும்.

கூட்டணி கட்சிகள் யாரையும் விட்டு கொடுக்கவில்லை. அவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதை ஏற்றுக் கொண்டோம்.

இந்த தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடர வேண்டும் என்பது தான் என் ஆசை. பா.ம.க.வை சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு மத்திய மந்திரி பதவி பற்றி நான் எதுவும் கூற இயலாது. அதை மோடிதான் முடிவு செய்வார்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பிரதமர் பதவி ஏற்க போகும் நரேந்திர மோடிக்கு சோனியா, ராகுல் வாழ்த்து தெரிவிக்காதது ஆச்சரியம் அளிக்கிறது: வெங்கையா


தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று, நாட்டின் பிரதமராக பதவியேற்க போகும் நரேந்திர மோடிக்கு சோனியா மற்றும் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவிக்காதது ஆச்சரியம் அளிக்கிறது என  பாஜக‌ தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக‌ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 330-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா தனித்து 282 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. வருகிற 21-ந்தேதி பிரதமராக பதவி ஏற்க இருக்கும் மோடிக்கு அமெரிக்க தலைவர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் மற்றும் பாகிஸ்தான், வங்காளதேசம், ஸ்ரீலங்கா உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் ஆகியோர் இந்தியாவின் அடிப்படை கலாச்சாரத்தை பின்பற்றி ஒரு வாழ்த்துக்கூட சொல்லாதது ஆச்சர்யம் அளிக்கிறது என்று வெங்கையா நாயுடு கூறினார்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதா காட்டினார் அக்கறை. அதற்கு மக்கள் அளித்துள்ளனர் வெற்றி எனும் சர்க்கரை.

இலட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தி.மு.க. படுதோல்வி அடைந்துள்ளது. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். அதை இந்த கட்சிகள் தடுக்க தவறி விட்டன. கொலையுண்ட ஈழத்தமிழர்களின் ஆத்மாக்கள் காங்கிரசையும் தி.மு.க.வையும் தேர்தலில் தண்டித்து விட்டன.

காங்கிரஸ் கட்சியில் விலைவாசி உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலையை ஏற்றினார்கள். வரிகள் விதித்தும் கஷ்டப்படுத்தினார்கள். அதனால் மக்கள் பலத்த சவுக்கடி கொடுத்துள்ளனர்.

மோடி அலை என்பது இறையருளால் பூத்த புதியரசவாதம். தனி பெரும்பான்மை வெற்றி பாரதீய ஜனதாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மோடிக்கும், பாரதீய ஜனதாவுக்கும் என் வாழ்த்துக்கள். குமரியில் வென்ற பொன்.ராதாகிருஷ்ணன், தர்மபுரியில் வென்ற அன்புமணிக்கும் வாழ்த்துக்கள்.

அ.தி.மு.க. பெற்று இருப்பது மாபெரும் வெற்றி. அது தன்னம்பிக்கையோடு போராடிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி. ஈழத்தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதா காட்டினார் அக்கறை. அதற்கு மக்கள் அளித்துள்ளனர் வெற்றி எனும் சர்க்கரை.

தி.மு.க.வுக்கு ஏற்பட்ட பூஜ்ஜிய நிலையை எண்ணி வேதனைப்படுகிறேன். ஏற்கனவே தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்துகளை அக்கட்சி இழந்து விட்டது. அடுக்கடுக்கான தோல்விகளை தி.மு.க. சந்திக்கிறது. கருணாநிதி கட்சிக்குள்ளே செய்ய வேண்டும் சில மாற்றங்கள். இல்லையேல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் ஏமாற்றங்கள்.

இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.

தேர்தலில் அதிமுக வெற்றி பெறாத தருமபுரி, குமரி மாவட்ட தொகுதிகளின் அதிமுக செயலர்கள் அதிரடி நீக்கம்


தரும்புரி, கன்னியாகுமரி, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி மாவட்ட அதிமுக செயலர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிவிப்பு:

"தருமபுரி மாவட்டச் செயலாளர் கே.பி.அன்பழகனும் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். புதிய செயலாளர் நியமிக்கப்படும் வரை அந்தப் பணிகளை அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பி.பழனியப்பன் கூடுதலாக கவனிப்பார்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலர் பொறுப்பில் இருக்கும் ஏ.செல்வராஜ், கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலர் பொறுப்பில் இருக்கும் டி.ஜாண் தங்கம் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு ஆகிய மாவட்ட கழகங்களுக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் நியமனம் செய்யப்படும் வரை, மாவட்டக் கழகப் பணிகளை அ.தமிழ்மகன் உசேன் கவனித்துக் கொள்வார்.

திருவள்ளூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலர் பொறுப்பில் இருக்கும் பி.வி.ரமணா, இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். வேறொருவர் நியமிக்கப்படும் வரை, மாவட்டக் கழகப் பணிகளை மாதவரம் வி.மூர்த்தி கவனித்துக் கொள்வார்.

அதேபோல் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஏ.அன்பழகன், மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஓம்சக்தி சேகர் எம்எல்ஏ ஆகியோர் அவர்கள் வகிக்கும் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படும் வரை, அந்தப் பணிகளை புதுச்சேரி மாநில துணைச் செயலாளரும், எம்எல்ஏவுமான பி.புருஷோத்தமன் மேற்கொள்வார்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

திமுக படு தோல்வியால், விரக்தியில் மொட்டை போட்டு கொண்ட தொண்டர்கள்


திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில், திமுக வேட்பாளர் எஸ். காந்திராஜன் 1,25,845 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.   இதனால் விரக்தி அடைந்த சீவல்சரகு ஊராட்சியின் திமுக செயலர் கிட்டு, கட்சித் தொண்டர்கள் மோகன், சரவணன், ராசப்பன், முருகேசன் ஆகிய 5 பேர் பழைய செம்பட்டியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலர் குலோத்துங்கன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மொட்டை போட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து சீவல்சரகு ஊராட்சி திமுக செயலர் கிட்டு கூறியது:

‘தேர்தலில் திமுகவின் படு தோல்வி எங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது. எங்கள் சோகத்தை வெளிக்காட்டுவதற் காக மொட்டை போட்டுள்ளோம். அதிமுகவைப்போல எளியவர்களும் பதவிக்கு வர திமுகவில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். திமுகவைப் பலப்படுத்த கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை மாற்றம் செய்ய வேண்டும்’ என்றார்.

முதல்வர் அறிவித்த சிறப்பு மருத்துவக் குழுவினரின் தீவிர சிகிச்சை பலனாக கோமாவில் இருந்து வெளியேறிய சீதாலட்சுமி

கன்னக்கோடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(35). இவரது மனைவி சீதாலட்சுமி (31). தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சீதாலட்சுமி அதற்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்றார். அங்கு செய்யப்பட்ட தவறான அறுவைச் சிகிச்சையால், சீதாலட்சுமி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். அவரை வேறு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்தும் பலனில்லை. இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற‌ உத்தரவுப்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் சீதாலட்சுமி சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருடைய உடல்நிலை யில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால் மனம் வெறுத்த சுப்பிர மணியம், மனைவியை கருணைக் கொலை செய்யக்கோரி முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்தார்.

சீதாலட்சுமிக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்ததுடன், அவரது குடும்பத் துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கியும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

முதல்வர் அறிவித்த சிறப்பு மருத்துவக் குழுவினர் சீதா லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதன் பலனாக அவர் தற்போது கோமாவில் இருந்து வெளியே வந்துவிட்டார்.  அவரது உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரை மீண்டும் இயல்பான நிலைக்கு மாற்ற டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திமுகவில் நடக்கும் நாடகங்களை பொறுமையாக இருந்து பார்ப்பேன்- மு.க.அழகிரி

பாராளுமன்ற தேர்தலில் திமுக, தமிழகத்தில் ஒரு தொகுதி கூட வெல்லாமல் போனதற்கு பொறுப்பேற்று, கட்சியில் தான் வகித்த பதவிகளை நேற்று ராஜினாமா செய்த மு.க.ஸ்டாலின், ஒரு சில மணி நேரங்களில் அதனை வாபஸ் பெற்றார்.  இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இது தொடர்பாக பதிலளிக்கையில் மு.க.ஸ்டாலின் ராஜினாமா கடிதம் கொடுத்திருப்பதாக கூறப்படுவது பொய் என்றும், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக மட்டும் என்னிடம் வந்து சொன்னார். ஆனால் பின்னர் தனது முடிவை ஸ்டாலின் மாற்றிக் கொண்டார் என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மதுரையில் மு.க.அழகிரி கருத்து தெரிவிக்கையில், தி.மு.க. தலைமையை கைப்பற்ற மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம் ஆடுகிறார் என்றும், இந்த நாடகம் காலையில் ஒத்திகை நடத்தி மாலையில் அரங்கேற்றுவது போன்றது. கட்சி தலைமையை கைப்பற்ற அவரது ஆலோசகர்கள் இப்படி ஒரு திட்டத்தை கூறியிருக்கலாம். அதன் அடிப்படையில் ஸ்டாலின் செயல்படுகிறார். எனவே கட்சி தலைவர் கருணாநிதி சீர்படுத்திட முன்வர வேண்டும் என்று கூறியிருந்தார்.

மு.க.அழகிரி தெரிவித்த கருத்து தொடர்பாக கருணாநிதியிடம் கேட்டபோது, மு.க.அழகிரியை நானும், தி.மு.க.வும் மறந்து பல நாட்கள் ஆகின்றன. அவர் தி.மு.க.வில் இருக்கும்போதே இரண்டு, மூன்று முறை தி.மு.க. படுதோல்வி அடைந்திருக்கிறது. எனவே அவரை பற்றி இனியும் பேச விரும்பவில்லை. நான் முன்பே கூறியதுபோல் அவரை நான் மறந்து நீண்ட நாட்களாக ஆகிறது என்று தெரிவித்திருந்தார்.

கருணாநிதியின் கருத்து தொடர்பாக மு.க.அழகிரி கூறியதாவது:

நான் ஏற்கனவே கூறியது போல ஒரு நாடகத்தை தி.மு.க. தலைமை நடத்தி முடித்துள்ளது. ஸ்டாலினுக்கு ஆதரவாக முன்னுக்குப்பின் முரணான முடிவுகளை எடுப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்கள். கருணாநிதியும், துரைமுருகனும் தான் நாடகத்தை முடித்து வைத்துள்ளனர். கட்சியில் நடக்கும் நாடகங்களை பொறுமையாக இருந்து பார்ப்பேன்.

இவ்வாறு அழகிரி கூறினார்.

டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க முயலும் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ், பாஜக எதிர்ப்பு

பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, டெல்லியில் மீண்டும் ஆட்சியமைப்பது குறித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கு பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது குறித்து மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் முகேஷ் சர்மா கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அரசியல் லாபம் பெறுவதற்காகத்தான், முதல் அமைச்சர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். சட்டசபையை கலைக்கக்கோரி நீதிமன்றத்திற்கு சென்ற அவர், டெல்லி மக்களை திக்கற்றவர்களாக விட்டுவிட்டார்.

தற்போது பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறாததால், டெல்லியில் மீண்டும் ஆட்சியமைப்பது குறித்து அவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் மீண்டும் ஆதரவளிக்காது. ஆம் ஆத்மிக்கு ஆதரவை நீட்டிப்பது என்ற கேள்வியே எழவில்லை.

ஆம் ஆத்மியின் முடிவை பா.ஜனதாவும் குறை கூறியுள்ளது. 'மக்களால் முழுவதுமாக நிராகரிக்கப்பட்ட அக்கட்சியை எவ்வாறு மீண்டும் ஆட்சியமைக்க அழைக்க முடியும்?' என்று பா.ஜனதா தலைவர் ஹர்சவர்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறும்போது, ‘காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை மக்கள் முழுவதுமாக நிராகரித்து விட்டனர். இதற்கு பின்னரும் அவர்கள் இணைந்து டெல்லியில் சட்டவிரோதமாக ஆட்சியமைக்க முற்பட்டால், தேர்தலில் அவர்களுக்கு மக்கள் தகுந்த தண்டனை வழங்குவர்’ என்றார்.

அதிமுக வெற்றிக்கு “அம்மா”வைத் தவிர வேறு யாருக்கும் கடுகளவுகூட பங்கு கிடையாது -பொன். ராதாகிருஷ்ணன்

அதிமுக பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றிக்கு முழு காரணம் தமிழக முதல்வர்தான்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் பாஜக கூட்டணி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாதது, மன வேதனையை அளித்துள்ளது எனக் கூறினார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:

நாடு முழுவதும் உள்ள மக்கள் மத்திய அரசில் மாற்றம் வேண்டும் என விரும்பினர். எனவே நரேந்திர மோடியின் நிர்வாகத்திறன், நேர்மை, தேசபக்தி, மக்களை நேசித்த தன்மை ஆகியவற்றைப் புரிந்துகொண்டு அவரை ஆட்சியில் அமர்த்தி உள்ளனர்.

நாடு முழுவதும் வீசிய மோடி அலை தமிழகத்திலும் வீசியதால்தான் கன்னியாகுமரி யிலும், தருமபுரியிலும் வெற்றி பெற்றுள்ளோம். தமிழகத்தில் ஆளுங்கட்சி எடுத்த சில நடவடிக்கைகள், யுக்திகள்தான் பாஜகவின் வெற்றியைத் தடுத்தது என்பதை மறுக்க முடியாது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற முடியாததை நினைத்து, அந்த கூட்டணியை உருவாக்கியவர்களில் ஒருவன் என்ற முறையில் தலைகுனிந்து நிற்கிறேன். அந்த வேதனை மனதிலே உள்ளது.

அதிமுக பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றிக்கு முழு காரணம் முதல்வர்தான். “அம்மா”வைத் தவிர வேறு யாருக்கும் கடுகளவுகூட பங்கு கிடையாது. தேர்தல் நேரத்தில் செய்த யுக்திகள், எந்த நேரத்தில், எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யும் பக்குவம் ஆகியவைதான் அவரை வெற்றி பெறச் செய்துள்ளது.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணனி கூறியுள்ளார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media