BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 28 March 2014

மோடியை புகழ்ந்தும், ராகுல் காந்திக்கு வறுமை என்றாலே என்ன என தெரியாது எனக் கூறும் காங்கிரஸ் தலைவர்


ராஜஸ்தான் மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் ராமநாராயண மீனா இன்று நரேந்திர மோடியையும், ராகுல் காந்தியையும் பற்றி பேசியதாவது:

பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி அவரது திறமைகளால் அடிமட்டத்தில் இருந்து மிகவும் உயர்வான இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவருக்கு வறுமையின் வேதனை தெரியும்.

மேலும் பா.ஜ.க. நரேந்திர மோடியை மட்டுமே மையப்படுத்தி தேர்தலை சந்திக்கிறது. அவரது இடது பாக்கெட்டுக்குள் அம்பானி மற்றும் அடானி ஆகியோர் உள்ளனர். வலது பாக்கெட்டில் பா.ஜனதா உள்ளது. ஆர்.எஸ்.எஸ். அவருக்குப் பின்னால் நிற்கிறது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு வறுமையைப் பற்றி தெரியாது. வறுமையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு அவருக்கு சிறந்த குழு தேவை. மைனாரிட்டி பிரிவினர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சென்று கொண்டிருக்கின்றனர். இந்த விஷயம் கட்சிக்கு பெரும் கவலையை அளிக்கிறது.

இவ்வாறு ராமநாராயண மீனா பேசியிருந்தார்.

மதுரை விமான நிலையத்தில் மு.க.அழகிரி - ப.சிதம்பரம் சந்திப்பு


திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, நேற்று தனது தங்கை கனிமொழியை,  அவரது சி.ஐ.டி காலனி இல்லத்தில் சந்தித்து இருந்தார். அந்த‌ 40 நிமிட சந்திப்பின் போது, தாங்கள் இருவரும் பேசியதை, கனிமொழி அவரது தந்தை கருணாநிதியிடம் பிறகு தெரிவித்தார்.

இன்று மதுரை விமான நிலையத்தில் மு.க.அழகிரியும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் சந்தித்துக் கொண்டனர். சென்னையில் இருந்து மதுரை சென்ற விமானத்தில் அழகிரியும் - சிதம்பரமும் ஒன்றாகவும் பயணித்தனர். மதுரை விமான நிலையம் வந்தடைந்தவுடன், விமான நிலையத்தின் வரவேற்பு அறையில் இருவரும் சிறிது நேரம் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 9 ஆண்டுகள் அங்கம் வகித்திருக்கிறோம். அந்த வகையில் பொதுவான விஷயங்கள் குறித்து பேசினோம் என்று அவர் கூறினார்.

கருணாநிதி சுட்டிக்காட்டுபவரே பிரதமராக அமர வேண்டும்-ஸ்டாலின்


இன்று குன்னூர் பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் நின்ற படியே அத்தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து, தேர்தல் பிரச்சாரம் செய்தார் மு.க.ஸ்டாலின். அப்பொழுது அவர் பேசியதாவது:

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் குன்னூருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையைப்போக்க ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேட்டுப் பாளையம்–கக்கநல்லா சாலை ரூ.100 கோடியில் அமைக்கப்பட்டது.

இந்த தொகுதியின் எம்.பி.யாக உள்ள ஆ.ராசா மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்று உதவினார். தி.மு.க. ஆட்சியின் போது நீலகிரியில் மின்வெட்டு இல்லை. ஆனால் தற்போது நீலகிரியிலும் மின்தடை உள்ளது. இங்கு உள்ளதை விட சமவெளி பகுதிகளில் மின்தடை அதிகம் உள்ளது.

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மத்தியில் மதசார்பற்ற அரசு அமைய வேண்டும். அதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சுட்டிக்காட்டுபவரே பிரதமராக அமர வேண்டும். அதற்கு வாக்காளர்களாகிய நீங்கள் இங்கு தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் ஆ.ராசா மற்றும் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இருக்க வேண்டும்: சிதம்பரம்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் நீர்த்துப்போனது என்று பரவலாக கூறப்பட்டாலும், 23 நாடுகள் அந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளன. இந்நிலையில், இந்தியாவும் அந்த தீர்மானத்தை ஆதரித்திருக்க வேண்டும்" என்றார்.

ப.சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, "சிதம்பரம் தமிழகத்தைச் சேர்ந்தவர். எனவே அவர் கண்டிப்பாக அப்படித் தான் கூறுவார். ஆனால் தீர்மானத்தை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் ஒரு தேசிய கட்சியாக இருந்து காங்கிரஸ் முடிவு செய்யக்கூடிய விஷயம்" என்றார்.

மதச்சார்பற்ற அணி அமையும்போது காங்கிரசை திமுக ஆதரிக்கும் என கருணாநிதி கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ப.சிதம்பரம், "காங்கிரஸ் கட்சி நிச்சயமாக ஒரு மதச்சார்பற்ற கட்சி. கருணாநிதியின் அறிவிப்பை வரவேற்கிறேன்" என தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்த அவர், மக்களவை தேர்தல் நிறைய ஆச்சர்யமான முடிவுகளை அளிக்கும் என்றார்.

மோடி உடலை துண்டு, துண்டாக வெட்டி விடுவோம்: காங்கிரஸ் வேட்பாளர் ஆவேசம்


மக்களவை தேர்தலில், உத்தர பிரதேச மாநில சஹரன்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத், பாஜக பிரதம வேட்பாளர் மோடியை கொலை செய்வதாக கூறி பரபரப்பு மற்றும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இம்ரான் மசூத் கூறியுள்ளதாவது:

உத்தர பிரதேச மாநிலம் ஒன்றும் குஜராத் இல்லை. குஜராத்தில் 4 சதவிகித மக்கள் மட்டுமே இஸ்லாமியர்கள், உத்தர பிரதேசத்திலோ, 22 சதவிகித மக்கள் இஸ்லாமியர்கள். நரேந்திர மோடிக்கு சரியான பதிலடி கொடுக்க எனக்கு தெரியும். நாம் மோடியை துண்டு, துண்டாக வெட்டி விடுவோம்.

தேர்தல் ஆணையம், இம்ரான் மசூத் பேசியிருக்கும் வீடியோவை பார்த்த பிறகு, தகுந்த நடவடிக்கை எடுக்கும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நன்றி மறந்த காங்கிரஸ் என குற்றஞ்சாட்டிய கருணாநிதிக்கு, ஞானதேசிகனின் பதில்கள்

தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:

கைதூக்கி விட்ட திமுகவை நன்றி மறந்து விட்டு, எப்படி பழி வாங்கலாம் என்று காங்கிரஸ் கட்சி செயல்பட்டதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?

கடந்த 9 ஆண்டுகளாக திமுக எங்களோடு அமைச்சரவையில் இருந்தது. ஆட்சிக்கு வரும்போதே, முதலில் தங்களுக்கு என்னென்ன இலாகாக்கள் வேண்டுமென்று எழுதிக் கொடுத்து, அதைக் கேட்டு வாங்கினார்கள். 33 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஆந்திராவுக்கு கூட அமைச்சர வையில் இந்த உரிமை கிடைக்க வில்லை. ஆனால் திமுகவுக்கு 4 கேபினட் மற்றும் 3 இணை அமைச்சர் பதவிகள் வழங்கப் பட்டன. அதுவும் முக்கியமான துறைகள் வழங்கப்பட்டன.

ஆனால், ஒரு ஆண்டுக்கு முன்பு பதவி விலகிவிட்டு, குற்றஞ்சாட்டு கிறார்கள். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் கூட்டணியிலிருந்து விலகு வது திமுகவுக்கு வாடிக்கையா னது. பாஜகவுடன் கூட்டணிலிருந்த போதும் இதையேதான் செய்தார் கள். ஆட்சியிலிருந்தபோதே, இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறி விலகியிருக்கலாமே. ஆனால் இப்போது இவர்கள் சொல்லும் காரணங்களும் தத்துவங்களும் ஏற்புடையதல்ல.

பொது மன்னிப்பு என்ற முறையில் காங்கிரஸுக்கு ஆதரவு தருவதாக திமுக தலைவர் கூறியிருக்கிறார்?

மன்னிப்பு கேட்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி இல்லை. நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை. காங்கிரஸின் துரோகம் குறித்து பட்டியலிட்டால் அதற்கு காங்கிரஸ் பதிலளிக்கும்.

அவர்கள் சொல்வது 2ஜியாக இருந்தால், அதற்குப் பதில் இருக்கிறது. 2ஜி வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையில் யாருடைய தலையீடுமின்றி, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்புடன் நடந்தது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர்களாக யார் வாதாட வேண்டும் என்பதும், விசாரணை அறிக்கையும் கூட உச்ச நீதிமன்றத் தின் கண்காணிப்புடன் தான் நடந் தது. இதில் காங்கிரஸைக் குறை சொல்ல முடியாது. ஆனால் ராஜாவைப் பொறுத்தவரை, குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறும்வரை அவர் நிரபராதிதான்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் மீது, ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய ஊழல் வழக்கும், கல்மாடி மீது காமன்வெல்த் விளையாட்டு ஊழல் வழக்கும் பதிவானது. எனவே காங்கிரஸ் கட்சி யாரையும் பழிவாங்கவில்லை. கட்சி பேதமின்றி வெளிப்படையாக செயல்பட்டது.

மதச்சார்பற்ற நிலைக்கு காங்கிரஸ் வந்தால் ஆதரிப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?

இந்தத் தேர்தல் மதச்சார்புள்ள இயக்கத்துக்கும், மதச்சார்பற்ற இயக்கத்துக்கும் இடையிலான போராட்டமாகும். ஆனால், ஏற்கெனவே மதச்சார்பற்ற நிலையில் செயல்படும் காங்கிரஸை, மதச்சார்பற்ற நிலைக்கு வந்தால் என்று திமுக தலைவர் கூறுவதன் அர்த்தம் உண்மையிலேயே எங்களுக்கு புரியவில்லை. மற்ற குற்றச்சாட்டுகளெல்லாம் அவர் ஏற்கெனவே திமுக பொதுக்குழுவில் கூறியவைதான். ஆனால், தேர்தலுக்குப் பிறகு பாஜகவுக்கோ, மோடிக்கோ திமுக ஆதரவு தராது என்பதை திட்டவட்டமாக திமுக தலைவர் கருணாநிதி சொல்ல வேண்டுமென்று காங்கிரஸும், எங்கள் கட்சியின் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஆனால் அதற்கு அவர் இன்னும் பதில் அளிக்கவில்லை.

திமுகவின் ஆதரவைப் பெறும் நிலைக்கு காங்கிரஸ் வந்தால், திமுகவின் ஆதரவை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளுமா?
அரசியலில் அந்தந்த சூழலுக்கு ஏற்பதான் அரசியல் கட்சிகள் முடிவெடுக்கும். எனவே தேர்தல் முடிவுக்குப் பிறகு என்னவென்பதை இப்போது கூற முடியாது.

காங்கிரஸ் கட்சி அதல பாதாள நிலைக்கு சென்றுவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?

காங்கிரஸ் கட்சி பாதாள நிலைக்கு செல்லவில்லை. பாதாளம் யாருக்கு என்பதை தேர்தல் முடிவுக்குப் பின் தெரிந்து கொள்ளலாம்.

கனிமொழி எம்.பி.யாவதற்கு ஆதரவளித்தபோது நன்றியோடு இருந்த காங்கிரஸ், இப்போது மட்டும் கருணாநிதிக்கு நன்றி கெட்ட கட்சியாகிவிட்டதா?


திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை சத்திய மூர்த்தி பவனில் கட்சியின் மாநிலத் தலைவர் பி.எஸ்.ஞான தேசிகனுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:

சொன்ன வாக்குறுதிகளை கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது.

திமுகவுக்கு காங்கிரஸ் எந்த துரோகமும் செய்யவில்லை. மாநிலங்களவைத் தேர்தலில் கனிமொழி எம்.பி.யாவதற்கு காங்கிரஸ் ஆதரவளித்தது. அப்போதெல்லாம் நன்றியுள்ள கட்சியாக இருந்த காங்கிரஸ் இப்போது மட்டும் திமுகவுக்கு நன்றிகெட்ட கட்சியாகிவிட்டதா? தமிழகத்தில் மைனாரிட்டி யாக இருந்த திமுகவுக்கு 5 ஆண்டுக ளாக எந்தப் பதவியும் பெறாமல் முழுமையாக ஆதரவு கொடுத்து அவர்களது ஆட்சியைக் காப்பாற்றியதே காங்கிரஸ்தான்.

இப்போது நன்றி மறந்த காங்கிரஸ் என்று திமுக தலைவர் சொல்கிறார். நன்றி மறந்தவர்கள் யார் என்பதை தேர்தல் முடிவு சொல்லும் என்றார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media