BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 12 April 2014

ஸ்பைடர்மேன் உடை அணிந்து, வீட்டு சுவர்களில் சரசரவென ஏறி வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்

பாராளுமன்ற தேர்தலில் தெற்கு மும்பை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் கவுரவ் ஷர்மா, ஸ்பைடர்மேன் உடை அணிந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஸ்பைடர்மேன் போல் சிகப்பு கலர் டி–சர்ட், தொப்பி, புளுகலர் ஜீன்ஸ் அணிந்து, மோட்டார் சைக்கிளில் தொகுதி முழுவதும் சுற்றி வருகிறார். மக்களை கூட்டமாக பார்த்ததும் பைக்கை நிறுத்தி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வாக்கு சேகரிக்கிறார். தனது தொகுதிக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஸ்பைடர் மேன் உடையில் செல்கிறார். வாசல் வழியாக சென்று ஓட்டு கேட்காமல் காவலாளியிடம் அனுமதி பெற்று, வீட்டின் சுவர்களில் சரசரவென்று தொற்றி ஏறுகிறார். அவருக்கு ஜன்னல் சின்னம் ஒதுக்கப்பட்டதால்,  ஜன்னல் வழியாகவே மக்களிடம் பேசி ஓட்டு கேட்கிறார்.

கவுரவ் ஷர்மா, முக்கிய பிரமுகர்கள் நடிகர்கள், நடிகைகளுக்கு உடல் திறன் ஆலோசகராகவும்  இருந்து பயிற்சி அளித்து வருகிறார். 31 வயதாகும் இவர் மும்பையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் 90 நிமிடங்களில் ஏறி சாதனை படைத்தவர். சாதனைகளின் போது அவர் ஸ்பைடர்மேன் உடை அணிந்து கலந்து கொள்வார். இதனால் இவர் இந்தியன் ஸ்பைடர்மேன் என்று அழைக்கப்படுகிறார்.

இது குறித்து கவுரவ் ஷர்மா கூறுகையில், "டி.வி. தொடர்களில் நான் ஜன்னல் வழியாக வந்து ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதை பார்த்து இருப்பார்கள். இப்போது மக்கள் பிரச்சினைகளை உண்மையிலேயே தீர்த்து வைக்கவும் மக்களை காப்பாற்றவும் நேரில் வந்து இருக்கிறேன்." என்று தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து கொண்டுவரப்படும் ஏழு அனகோன்டா பாம்புகள் விரைவில் விலங்கியல் பூங்காவில் வைக்கப்படும்

திருவனந்தபுரம் விலங்கியல் பூங்காவில் விரைவில் அனகோண்டா பாம்புகள், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. இதற்காக இலங்கையில் இருந்து 7 அனகோண்டா பாம்புகள் (6 பெண் பாம்பு, ஒரு ஆண் பாம்பு) கொண்டு வரப்பட்டுள்ளன. அவை இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தயாரான பிறகு வுரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று விலங்கியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம், பாம்பு இனங்களில் மிகவும் நீளமான, அதிக எடைகொண்ட பாம்பு அனகோண்டா பாம்புகள் கொண்ட 4-வது விலங்கியல் பூங்கா என்ற பெருமையை திருவனந்தபுரம் பூங்கா பெறுகிறது. இதுவரை மைசூர், ஐதராபாத் விலங்கிய பூங்காக்கள் மற்றும் சென்னையில் உள்ள முதலைப் பண்ணையில் இத்தகைய பாம்பு உள்ளது.

மதச்சார்பற்ற ஒவ்வொரு இந்தியனுக்கும் பாஜக அல்லாத அரசு அமைய வேண்டும் என்பதே விருப்பம்- மணி சங்கர் அய்யர்

 மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. மணி சங்கர் அய்யர், "மோடி அரசுக்கு அனைவரும் அஞ்சுகின்றனர். மதச்சார்பற்ற ஒவ்வொரு இந்தியனுக்கும் பாஜக அல்லாத அரசு அமைய வேண்டும் என்பதே விருப்பம். தமிழகத்தில் அமைந்திருப்பது பாஜக தலைமையிலான கூட்டணி இல்லை, தேமுதிக தலைமையிலான கூட்டணியாகும். " என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. அப்படியே ஏதாவது வெற்றி பெற்றாலும் அது கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் பெறும் வெற்றியாகவே இருக்கும். இந்த வெற்றி கூட பொன்.ராதாகிருஷ்ணனின் தந்தை காமராஜரின் வலது கரமாக செயல்பட்டவர் என்பதற்காக விழும் வாக்குகளாகவே இருக்கும். எனவே, அது காங்கிரசுக்கு கிடைக்கும் மறைமுக வெற்றியாகும். " என்று கூறியுள்ளார்.

மயிலாடுதுறையில் இருந்து மூன்று முறை எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்று, தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள மணிசங்கர் அய்யர், கடந்த 2009 மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தார்.

ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நாளை சந்திக்கிறார் மோடி

நாளை சென்னை வரும் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பாஜக செய்திக்குறிப்பில், "நாளை பாஜக தென்சென்னை வேட்பாளர் இல.கணேசனை மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நரேந்திர மோடி பிரச்சாரம் செய்கிறார். ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்திற்கு சென்று சந்திக்கிறார்" என‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் செய்தித்தாள் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ரஜினிகாந்தை பற்றி கூறும் போது, "திரைத்துறையைத் தாண்டி ரஜினிகாந்த் உன்னதமான மனிதர். அவர் ஒரு தேசியவாதி. நாட்டு நலனில் மிகவும் அக்கறையுள்ள அவர் சரியான நேரத்தில் தனது கருத்தைத் தெரிவிப்பார்." என்று கூறியிருந்தார்.

மோடி, ரஜினிகாந்தை சந்திக்க இருப்பதாக வெளியாகி உள்ள செய்தி, அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தெனாலிராமன் படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

வடிவேலு நடித்திருக்கும் ‘தெனாலிராமன்' படத்தில் கிருஷ்ணதேவராயரை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதால், அப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ஆர்.பாலகுருசாமி தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஏ.ஜி.எஸ். எண்டெர்டைன் மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘தெனாலிராமன்’ என்ற திரைப்படத்தை வரும் 18-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். அந்தப் படத்தில் கிருஷ்ணதேவ ராயரை அவமதிக்கும் வகையில் காட்சிகள் அமைத்துள்ளதாக தெரிகிறது. உண்மையான வரலாற்றைத் திரித்து, வியாபார நோக்கில் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். ஆகவே, கிருஷ்ணதேவராயரை அவமதிக்கும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ள ‘தெனாலிராமன்’ படத்தை திரையிட நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். தெலுங்கு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு ‘தெனாலிராமன்’ படத்தை திரை யிட்டு காண்பிக்கும்படி படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பிற்கு ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதா, அதிமுக போட்டியிடும் 40 தொகுதிகளில் ஒருவர் மட்டுமே முஸ்லிம்- ஸ்டாலின்

ஆரணி தொகுதிக்குட்பட்ட செஞ்சியில் திமுக வேட்பாளர் சிவாநந்தத்தை ஆதரித்து நேற்று மாலை திமுக பொருளாளர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, அதற்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தவர் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா என அவரை கடுமையாக சாடி பேசினார். மேலும் அவர் பிரச்சாரத்தில் பேசியதாவது:

400 ஆண்டுகால பழமைவாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் இந்தியாவில் இதை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் கருணாநிதி. ஆனால் ஆதரித்து குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. திமுக 35 இடங்களில் போட்டியிடுகிறது. அதில் 2 இடம் முஸ்லிம்களுக்கு. மேலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி என 4 வேட்பாளர்கள் முஸ்லிம்கள். ஆனால் 40 இடங்களில் போட்டியிடும் அதிமுகவில் ஒருவர் மட்டுமே முஸ்லிம். பாஜக கூட்டணியில் அதுவும் இல்லை என்பதை நீங்கள் எண்ணி பார்க்கவேண்டும்.

ஏதோ ஒரு திடலில் மாலை 5 மணிக்கு ஜெயலலிதா பேச வருகிறார் என்றால் பக்கத்து மாவட்டத்திலிருந்து காலை 10 மணிக்கே இந்த வெயிலில் மக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து அழைத்து வருகிறார்கள். செஞ்சியில் பேசினாலும், கன்னியாகுமரியில் பேசினாலும் மாலை 6 மணிக்குள் சென்னைக்கு செல்லவேண்டும். ஏனெனில் இரவில் ஹெலிகாப்டர் பறக்காது.

முதுமலை காட்டில் உள்ள யானைக் குட்டிக்கு வாழைப்பழம் கொடுக்கும்போது குட்டியானை முட்டிதள்ளியது. தமிழக மக்களை பார்க்காமல் எங்களை ஏன் பார்க்க வருகிறீகள் என யானை முட்டியது போலும். ஐந்தறிவு உள்ள யானைக்கே இவ்வளவு என்றால் ஆறு அறிவு கொண்ட நாம் ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட வந்துள்ள தேர்தல்தான் இது.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

கடமையை நிறைவேற்றாவிட்டால் அவனுக்கு பெயர் கருணாநிதி அல்ல- கருணாநிதி

திமுக கூட்டணியின் சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஹைதர் அலியை ஆதரித்து நேற்று மாலை மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசியது:

மனிதநேய மக்கள் கட்சியும் திமுகவும் கொண்டிருக்கிற உடன்பாடு சாதாரண உடன்பாடு அல்ல. சமுதாய நலனில் அக்கறை கொண்டதால் ஏற்பட்ட உடன்பாடு. அதனால் தான் உடல்நலம் சரியில்லாத நிலையிலும் இன்று மயிலாடுதுறைக்கு போக முடியுமா என்று துணைவியாரும் நண்பர்களும் கேட்டபொழுது கூட ஏற்றுக்கொண்ட கடமையை நிறைவேற்றாவிட்டால் அவனுக்கு பெயர் கருணாநிதி அல்ல என்று இங்கே வந்திருக்கிறேன்.

என்னுடைய நண்பர் ஹைதர் அலிக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிற சின்னம் தன்னையே உருக்கிக்கொண்டு உலகத்திற்கு ஒளி தருகிற மெழுகுவர்த்தி சின்னம். உதயசூரியன் இல்லாத இடத்தில் ஒளிதருவது இந்த இரட்டை மெழுகுவர்த்தி சின்னம். ஹைதர் அலிக்கு வாக்கு கேட்டு உங்களை சந்திக்கிற மகிழ்ச்சி இன்னமும் உறுதிசெய்யப்பட ஹைதர் அலியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

திமுக அதன் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து உருவாக்கியிருக்கிற கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி தமிழகத்தையோ இந்தியாவையோ ஆளுவதற்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டணி அல்ல. மத வேறுபாடு இல்லாமல் உறுதியான கொள்கைக்காகவும் கோட்பாடுகளுக்காவும் உருவான கூட்டணி. இது நாட்டின், இனத்தின் நல்வாழ்வுக்குப் பாடுபடும் கூட்டணி.

இந்த கூட்டணி சார்பாக ஜெயலலிதாவைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பெங்களூரு வழக்கில் இருந்துகூட தப்பலாம். ஆனால், எங்களின் இந்த உறுதியை, இஸ்லாமியர்களோடு ஏற்பட்டிருக்கிற உடன்பாட்டை உங்களால் பிரித்துவிட முடியாது.”

இவ்வாறு கருணாநிதி பேசியிருந்தார்.

"சிலர் மோடியை நீக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதுவே எனது எண்ணமும் கூட" என வாஜ்பாய் கூறியதாக தெரிவித்திருக்கிறது காங்கிரஸ்

பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயை புகழ்ந்து மற்றும் பாஜக பிரதம வேட்பாளார் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தும், காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ இணையதள வலைப்பதிவில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

பாஜகவை சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஒரு மிக சிறந்த நபர். அவரை போன்ற ஒரு தலைவர் தற்போது பாஜகவில் இல்லை. 2002-ல் நடைபெற்ற குஜராத் கலவரத்திற்கு பிறகு கட்சி மிக பெரிய பின்னைடைவை சந்திக்கும் என்றும், மோடியின் செயல்பாடுகளை நினைத்தும் வாஜ்பாய் கவலைப்பட்டார்.

கட்சியின் மூத்த தலைவரை நிராகரித்து, குற்றப் பின்னணியில் உள்ள ஒரு முதல்வரை பாரதிய ஜனதா கட்சி எப்படி பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டது? குஜராத் கலவரத்திற்கு பின், வாஜ்பாய், "சிலர் மோடியை நீக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதுவே எனது எண்ணமும் கூட' என்றார். கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோடி எந்த உதவிகளை செய்யவில்லை. மோடியை வெளியேற்ற வேண்டும் என நினைத்த வாஜ்பாயையே தற்போது பாஜக மறந்து விட்டது. அவர் பின்பற்றிய கட்சி மரபுகளையும் கட்சி மறந்து விட்டது' என்று அந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸின் இந்தக் கட்டுரைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, இது ஆளும் கட்சியின் விரக்தியையே காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த 4 தேர்தல்களில், திருமணம் ஆனதை மறைத்த மோடி மீது வழக்கு பதிவு செய்ய கோரி காங்கிரஸ் மனு தாக்கல்

பாஜக பிரதம வேட்பாளார் நரேந்திர மோடி, வதோதரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட கடந்த 9-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தபோது தனக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும் மனைவி பெயர் யசோதா பென் என்றும் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து நாடு முழுவதும் பல சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.

தனக்கு திருமணம் நடந்த தகவலை தெரிவிக்காமல் மறைத்து,  கடந்த நான்கு தேர்தல்களில் தவறான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார் மோடி என்றுஅவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என கோரி தேர்தல் ஆணையத்திடம் கபில் சிபல் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று மனு கொடுத்தனர்.

மனு கொடுத்துவிட்டு திரும்பியதும் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் நிருபர்களிடம் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

2002க்கும் 2012-க்கும் இடைப்பட்ட காலத்தில் குஜராத் சட்டப் பேரவைக்கான தேர்தல்களில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் தனக்கு திருமணமான தகவலை நாட்டு மக்களுக்கு தெரிவிக்காமல் மோடி மறைத்துள்ளார். இது தொடர்பாக இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம் இந்த மனு தொடர்பாக ஆய்வு செய்வதாக தேர்தல் ஆணையம் உறுதி கொடுத்துள்ளது என க‌பில் சிபல் கூறினார்.

ஜெ . எந்த நாட்டிற்கு பிரதமர் ஆவார் ?? -வைகோ கேள்வி .

தென்காசி (தனி ) தொகுதியில் மதிமுக வேட்பாளர் சதன் திருமலை குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் .

அப்போது அவர் சிலர் ஜெ. பிரதமர் ஆவார் என்று கூறுகின்றனர் . அவர் எந்த நாட்டிற்கு பிரதமர் ஆவார் . கொள்ளையடித்த பணத்தில் வாங்கி வைத்துள்ள தீவிற்கு பிரதமர் ஆவாரா அல்லது போயஸ் தோட்டத்தில் செட் வைத்து பிரதமர் நாற்காலி என எழுதி வைத்து ஆவாரா ? பொது சிவில் சட்டத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை . கூட்டணி தான் என்றாலும் முக்கிய பிரச்சினைகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று கூறினார் .

பிரச்சாரத்திற்கு முன் பாஜக தேசிய செயலர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலிங்கப்பட்டியில் உள்ள வைகோ வீட்டிற்கு வந்தார் . ஏற்கனவே தேமுதிக தலைவர்  வைகோ வீட்டிற்கு வருகை தந்துள்ளதையடுத்து , அடுத்து பாமக தலைவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

மோடி மீது திமுகவின் திடீர் தாக்குதல் காரணம் என்ன? எதிர்பாராத தகவல்கள்.

மோடி மற்றும் பாஜக மீது திமுகவின் திடீர் தாக்குதல் காரணம் என்ன? எதிர்பாராத தகவல்கள்.

திமுக வின் வெற்றியை பாஜக அணி பாதிப்பதால் ஏற்பட்ட விளைவா?

கடந்த சில நாட்களாக திமுகவின் தேர்தல் பிரச்சார தாக்குதல் பாஜகவை குறிப்பாக மோடியை நோக்கி உள்ளது, மோடியை நல்ல உழைப்பாளி திறமைசாலி என்றெல்லாம் சில நாட்களுக்கு முன் குறிப்பிட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதியும், இந்த தேர்தலின் தொடக்கத்தில் இருந்தே பாஜகவையும் மோடியையும் தாக்கி பேசாமல் இருந்த மு.க.ஸ்டாலினும் கடந்த சில நாட்களாக பாஜகவையும், மோடியையும் தாக்க ஆரம்பித்து பிரச்சாரம் செய்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக திமுகவினரிடம் அதிகம் வருபடுவது ஜெயலலிதாவோ, அதிமுகவோ அல்ல, மாறாக பாஜக மற்றும் மோடிதான். இது குறித்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

தமிழகத்தில் தேர்தல் களம் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது, ஆரம்பத்தில் அதிமுக எந்த சிக்கலும் இல்லாமல் பெரும்பாண்மை தொகுதிகளை வெல்லும் என்ற நிலை இருந்தது, பிரச்சாரம் ஆரம்பித்த சில நாட்களில் கள நிலவரம் மாற்றமடைந்து திமுக-அதிமுக ஆளுக்கு பாதி தொகுதிகள் வெல்லும் என்று கணிக்கப்பட்டது, பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக கூட்டணி உருவாகிய பின் தமிழக தேர்தல் கள நிலவரம் மாற்றமடைய தொடங்கிவிட்டது.  குறிப்பாக பாஜக அணி வடமாவட்டங்களில் உள்ள 19 தொகுதிகளில் கடுமையான மும்முனைப்போட்டியை உருவாக்கியுள்ளது, ஆரம்பத்தில் பாஜக அணி ஒரு இடம் கூட வெல்லமுடியாது என்று இருந்த நிலை மாறி தற்போது 10 இடங்கள் வரை வெல்லும் வாய்ப்புள்ளதாக அதிமுக மற்றும் திமுக தலைமைகளுக்கு தெரியவந்தது, இதிலும் குறிப்பாக பாஜக கூட்டணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் பல தொகுதிகள் திமுகவுக்கு சாதகமான தொகுதிகள் என்று தெரியவந்த திமுக தலைமை இனியும் சும்மா இருக்கலாகாது என்று பாஜகவுக்கு எதிராக கடும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.

தேமுதிக, பாமக வாக்குகளுடன் மோடிக்காகவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்கும் மனநிலையில் பலரும் உள்ளதால் மோடியை குறிவைத்து தாக்க ஆரம்பித்துள்ளார்கள் திமுகவினர். மோடி திருமணம் ஆனவர் என்ற தகவல் வெளியானதை அடுத்து மூன்று திருமணம் செய்த‌  கருணாநிதி கூட மோடியின் திருமணம் குறித்து விமர்ச்சிப்பதும், 1999ல் பாஜக வுடன் கூட்டணி வைத்திருந்த திமுக திடீரென பாஜக மதவாத கட்சி என்று விமர்சிப்பதற்கும் இது தான் காரணம் என தெரிய வந்துள்ளது.

தேர்தல் நெருங்க நெருங்க பாஜக கூட்டணி மீது திமுக மட்டுமல்லாமல், அதிமுகவும் தாக்குதலை ஆரம்பிக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media