BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 13 February 2014

டீக்கடையில் எனக்கு கிடைத்த அனுபவங்கள் எத்தனை! அவமானங்கள் எத்தனை!


நேற்று அகமதாபாத்தில் டீக்கடையில் அமர்ந்த படி மக்களுடன் கலந்துரையாடிய‌ மோடி, சாதாராண மக்கள் நினைப்பதைப் புரிந்து கொள்ள, அறிந்து கொள்ள டீக்கடைகள்தான் சரியான வழி என்றும், டீக்கடைகள்தான் நாட்டின் நாடாளுமன்றம் என்றும் உரைத்தார். அவர் டீ விற்ற நாட்களில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் மற்றும் அவமானங்கள் ஏராளம் என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர், "தொழில்நுட்பம் மூலம் இன்று நாடு முழுவதும் மக்களுடன் நான் டீ சாப்பிட்டபடி உரையாட முடிந்திருக்கிறது. இனிமேல் இதேபோல வீடியோ கான்பரன்சிங் மூலம் 2 கோடிப் பேருடன் பேசப் போகிறேன்",  என்று கூறினார்.

டீக்கடையில் தனக்கு வேலை பார்க்க கிடைத்த வாய்ப்பு, மிக சிறந்தது என்றும், அதற்காக, தான் தேநீருக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார்.

தேநீர் விற்ற வாய்ப்பை பயன் படுத்தி கொண்டு, நாட்டின் பிரதமர் வேட்பாளர் அளவுக்கு வந்த மோடி, உங்களை கவர்ந்து இருந்தால், லைக் போடுங்கள்!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இது தானோ!

பாலு மகேந்திரா மரணம்: இரங்கல் தெரிவித்த வைகோ, கதறி அழுத இயக்குநர்கள்

இன்று மாரடைப்பால் காலமான இயக்குநர் பாலு மகேந்திராவை பற்றி, வைகோ இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

"இயற்கை அழகை அப்படியே படம் பிடித்துக் காட்டி பிரமிக்க வைக்கும் கலைத்திறன் கொண்டவர் பாலுமகேந்திரா ஆவார். இதுவரை பார்த்திராத கோணங்களில் காட்சிகளைத் தந்து கண்களுக்கு விருந்தளித்தார். இயக்குநராக‌வும், ஒளிப்பதிவாளராகவும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி, இந்தியிலும் பல படங்களை இயக்கியவர் பாலுமகேந்திரா. பாலுமகேந்திரா 5 தேசிய விருதுகளையும், 3 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், 2 நந்தி விருதுகளையும் பெற்றவர் ஆவார். சினிமா மட்டுமல்லாமல், இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவரான‌ பாலுமகேந்திராவின்  மறைவு சினிமா உலகுக்கு பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சினிமா கலை உலகுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்."

இயக்குநர் பாரதிராஜா, தனது நண்பரான பாலு மகேந்திராவின் மரணத்தை நம்ப முடியாமலும் தாங்க இயலாமலும் கதறி அழுதார். பாலு மகேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே வந்துவிட்ட பாலா, அவரது உடலருகே கலங்கிய கண்களுடன் கலக்கத்துடன் அமர்ந்திருந்தார். இயக்குநர் மகேந்திரனும், பாலு மகேந்திராவின் உடலை பார்த்து அழுதார். மகேந்திரனின் முதல் திரைகாவியமான 'முள்ளும் மலரும்' படத்தின் ஒளிப்பதிவாளர், பாலு மகேந்திராவே ஆவார்.

டி.ராஜேந்தர், குடும்பத்தோடு மதம் மாறினார்



டி ராஜேந்தர் தன் குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது மனைவி உஷாவின் விருப்பத்துக்கேற்ப இந்த மத மாற்றம் நிகழ்ந்துள்ளது. உஷா நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே மனதளவில் கிறிஸ்தவராகிவிட்டவர். டி ராஜேந்தரின் சொந்தப் பட நிறுவனத்தின் லோகோவிலேயே கூட சிலுவைக் குறியீடு தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

அவரின் மகன்கள் சிலம்பரசன், குறளரசன் மற்றும் மகள் இலக்கியாவும் பெற்றோர் வழியில் மதம் மாறிவிட்டார்கள். சமீபத்தில் நடந்த டி.ராஜேந்தரின் மகள் இலக்கியாவின் திருமணம் கூட,  கிறிஸ்தவ முறைப்படிதான் நிகழ்ந்தது.

நாடாளுமன்றத்தில் மிளகு பொடி, கத்தி? எம்.பிக்களின் இன்னொரு முகம்


இன்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, தெலங்கானா மசோதாவை தாக்கல் செய்வதாகக் கூறிய உடனே, அவையில் வன்முறை தலைதூக்கியது. நாடாளுமன்றத்தில் இன்று ஆந்திர மாநிலத்தைப் பிரிக்கக் கூடாது என்று ஒரு தரப்பும், தெலங்கானா தனிமாநிலம் அமைய வேண்டும் என்று ஒரு தரப்புமாக கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்தைப் பிரிக்கக் கூடாது என்ற அணியில் உள்ள காங்கிரஸ் எம்.பி.,  எல்.ராஜகோபால்  மிளகு ஸ்ப்ரே அடித்து அவையில் இருந்தோருக்கு எரிச்சலை தூண்டிவிட்டார்.

மிளகுப் பொடி தூவிய வேகத்தில், கே.நாராயண ராவ் என்பவரின் கண்களில் மிளகுப் பொடி விழுந்து, பெரும் கண் எரிச்சலை அவருக்கு ஏற்படுத்தியது. இதை அடுத்து அவர் உள்ளிட்ட மூன்று எம்.பி.க்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் நாராயண ராவுக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து கூச்சல் குழப்பத்தை  ஏற்படுத்தி, அமளியில் ஈடுபட்ட 18 எம்.பி.க்களை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய‌ அவைத்தலைவர் மீராகுமார் உத்தரவிட்டார். மேலும், நாடாளுமன்ற வரலாற்றில் இது மிகவும் மோசமான சம்பவம் என்று அவர் கூறினார். இதற்கிடையே, வன்முறை சம்பவங்கள் ஏற்பட்ட போது, உடனே, காற்று அடைத்த முகமூடிகள் நாடாளுமன்ற அரங்குக்குள் கொண்டுவரப்பட்டன.

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வேணுகோபால் ரெட்டி கத்தி வைத்திருந்தார் என்ற அதிர்ச்சியான தகவலும் வெளியாகியது. ஆனால், அது கத்தி அல்ல, வெறும் மைக் தான் என்று அவர் கூறியுள்ளார். இன்று நடந்த அமளியில், ஒரு கணினி சேதம் அடைந்தது.

நேற்று தான், பிரதமர் மன்மோகன் சிங், தெலுங்கானா விவகாரத்தில், எம்.பி.க்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் போது, இதயத்தில் ரத்தம் வடிகிறது என்று கூறியிருந்தார். ஆனால், நேற்றை விட, இன்று நடந்த அமளி மிக மோசமானது, நாடாளுமன்ற வரலாற்றிலேயே, இப்படி ஒரு துர்பாக்கிய தினம் வந்ததில்லை.

இயக்குனர் பாலு மகேந்திரா மரணம்



தமிழ்சினிமாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாலுமகேந்திரா, உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார். உடல்நிலை சரியில்லாமல் இன்று (13.2.2014) அதிகாலையில் சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிறிது நேரத்திற்கு முன் சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்தார்.

மூடுபனி, மூன்றாம் பிறை, வீடு, சந்தியா ராகம் போன்ற சிறந்த படங்களை இயக்கிய இவர், ஒரு மிகச் சிறந்த ஒளிப்பதிவாளரும் ஆவார். புகழ் பெற்ற இயக்குநர்கள் பாலா, ராம், வெற்றிமாறன் மற்றும் பலர் இவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்து இருக்கின்றனர்.

ஐந்து முறை தேசிய விருது வென்றவரான பாலு மகேந்திரா, ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் சிவன், ரவி கே. சந்திரன், கே.வி.ஆனந்த் போன்றோருக்கு தூண்டுகோலாக இருந்திருக்கிறார்.

தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க பட முடியாத பாலு மகேந்திராவிற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்.

"விஜயகாந்த் நடிக்காதது பெரிய இழப்பு"

மறுமுகம் என்ற க்ரைம் திரில்லர் படத்தினை இயக்கி இருக்கும் புதுமுக இயக்குநர் கமல் சுப்பிரமணியம், படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடந்த போது, ""இந்தப் படம் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படம் என்று பெருமையாகச் சொல்வேன். நண்பர்கள் இணைந்து நட்புடன் இதை உருவாக்கியிருக்கிறோம்." என்று கூறினார்.

மேலும், விஜயகாந்த் சினிமாவில் இல்லாததால் பெரிதாக திரைப்பட கல்லூரி மாணவர்கள் பாதிக்க பட்டிருக்கிறார்கள் என்று வருத்தம் தெரிவித்தார். இதை பற்றி பேசிய அவர், "திரைப்படக்கல்லூரி மாணவர்கள் நாங்கள் முதலில் கதை சொல்ல செல்வது கேப்டன் விஜயகாந்த் அவர்களிடம்தான். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எல்லாரது முதல் கனவும் அதுவாகவே இருக்கும். கல்லூரியிலிருந்து வெளியே வந்ததும் செல்லும் இடம் ராஜாபாதர் தெருவாகத்தான் இருக்கும். அவர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநர் ஆக்கியவர்.  அவர் இப்போது நடிக்காதது எங்களுக்கு இழப்புதான்" என்று தெரிவித்தார்.

திட்டிய ரசிகர்கள், டிவிட்டரை விட்டு வெளியேறிய யுவன்


டிவிட்டர் தளத்தில் தொடர்ச்சியாக‌ இயங்கி கொண்டிருந்த இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தற்போது தன் டிவிட்டர் கணக்கை முடக்கி விட்டு வெளியேறி விட்டார். தான் இசையமைக்கும் படங்கள் பற்றிய செய்திகள், பாடல்கள் பற்றிய குறிப்புகள் அனைத்தையும் தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டு வந்தவர், தற்போது இஸ்லாம் மதத்தினைத் தழுவி இருப்பதையும், தனது டிவிட்டர் தளம் மூலமே உறுதி செய்தார்.

யுவனின் மதம் மாறும் முடிவு குறித்து, ரசிகர்கள் பலர் அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர். இதனை தொடர்ந்து, தனது டிவிட்டர் கணக்கை முடக்கிவிட்டார், யுவன் சங்கர் ராஜா. முடக்குவதற்கு முன்பு, இதுநாள் வரை எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி என்று இறுதியாக ஒரு செய்தியை டிவிட்டரில் பதிவு செய்து இருந்தார்.

த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்க கமல் ஹாசனின் சம்பளம்?


மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் த்ரிஷ்யம். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் என்பவரே அதை தமிழில் ரீமேக் செய்கிறார். தமிழில் மோகன்லால் கதாபாத்திரத்தில் கமல் ஹாஸன் நடிக்கிறார். இதற்காக இவருக்கு ரூ. 20 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் துவங்குகிறது. படத்தில் கமலுக்கு ஜோடியாக, நதியா நடிக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது. படத்தின் திரைக்கதையில், ஜீத்துவும், கமலும் இணைந்து சில மாற்றங்களை செய்து வருகின்றனர்.

தெலுங்கானா மசோதா இன்று தாக்கல்- எம்.பி.க்கள் தற்கொலை மிரட்டல், ஆந்திர முதல்வர் ராஜினாமா


இன்று  தெலுங்கானா தனி மாநில மசோதா திட்டமிட்டபடி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால் சீமாந்திரா பகுதி எம்.பிக்களோ தற்கொலை செய்தேனும் மசோதாவை நிறைவேற்றவிடமாட்டோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் நாடாளுமன்றத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்க மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இம்மசோதாவை உள்துறை அமைச்சரான சுஷில்குமார் ஷிண்டே தாக்கல் செய்யும்போது அவரை சீமாந்திரா எம்.பி.க்கள் தாக்க முற்படலாம் என சந்தேகிப்பதால் அவரை சுற்றி பாதுகாப்பு அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள் என தெரிகிறது.

தெலுங்கானா தனி மாநில மசோதாவை ஆந்திர சட்டசபை நிராகரித்தும் கூட, மாநில சட்டசபையின் ஒப்புதல் இல்லாமலேயே,  மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தமது பதவியை இன்றே ராஜினாமா செய்ய ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி முடிவு செய்துள்ளார். அவருடன் சீமாந்திரா எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய உள்ளனர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media