BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 17 May 2014

அதிமுகவின் மாபெரும் வெற்றி வெறும் 200 ரூபாய் தான் காரணமா?



நாடு முழுதும் வீசிய மோடி அலையை தமிழ்நாட்டில் மட்டும் வீசாமல் அதிமுக அலை வீசியுள்ளது, அதிமுக தனித்து தேர்தலை சந்தித்தாலும் 37 தொகுதிகளில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளது, இதற்கு அதிமுகவினர் தேர்தலுக்கு கடைசி நான்கு நாட்களில் ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுத்தது தான் காரணமா என்று அலசினால் அது மட்டும் காரணமல்ல என்று தெரிகிறது.

1) அதிமுகவினர் கச்சிதமாக ஓராண்டுகளுக்கும் மேலாக தேர்தல் பணி செய்தனர், ஓராண்டுக்கு முன்பே 40 தொகுதிகளிலும் நிற்கிறோம் வேலையை ஆரம்பியுங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

2) அதிமுக தலைமை மீது அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுக்கு மரியாதை கலந்த பயம் உண்டு, தேர்தலில் தோற்றால் பதவி தப்பாது என்பதும் அரசியல் வாழ்க்கை இறங்கு முகம் என்பதும் தெரிந்ததால் துடிப்பாக வேலை செய்தனர், ஆனால் திமுகவில் மாவட்ட பெரும் தலைகள் பலரும் வேட்பாளர் தேர்வில் அதிருப்தியில்  இருந்ததால் தேர்தல் வேலை செய்யவில்லை

3) மின்வெட்டு விலைவாசி ஏற்றம் என்றெல்லாம் சிக்கல்கள் இருந்தாலும் மக்களுக்கு இன்னும் திமுக மீதான கோபம் மாறவில்லை

4) அதிமுக வேட்பாளார்கள் தேர்வில் பெரும்பாலானோர் புதுமுகங்களாகவும் இளைஞர்களாகவும் இருந்தனர், திமுகவிலோ மாவட்ட செயலாளார்கள் விருப்பத்தினால் தேர்வு செய்யப்பட்டவர்கள் வயதானவர்களாகவும் கட்சியில் செல்வாக்கில்லாதவர்களாகவும் இருந்தனர், திமுக மாவட்ட செயலாளர்கள் மாவட்டத்தில் கட்சியில் தங்கள் பிடியை தளரவிடாமல் இருக்க இப்படி சொத்தை வேட்பாளர்களை தேர்வு செய்தனர்

5) பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக இணைந்து உருவாக்கிய மூன்றாம் அணியில் கூட்டனிகட்சியின் தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் எந்த ஒருங்கிணைப்பும் இல்லாத நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் மீது வெறுப்பில் இருந்த மக்களுக்கு அதிமுக மட்டுமே மாற்றாக தெரிந்தது.

6) ஆரம்பித்தில் இருந்தே ஊடகங்கள் அதிமுகவே அனைத்து இடங்களிலும் வெல்லும் என்று கணிப்புகளை வெளியிட்டபடி இருந்தனர், அதிமுகவினரும் முதல்வர் ஜெயலலிதாவும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் நாற்பதும் நமதே என்று வலம் வந்தனர், இந்த நம்பிக்கை அப்படியே வாக்காளர்களுக்கும் சென்று சேர்ந்தது எனவே ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்று அதிமுகவினருக்கு வாக்களித்துவிட்டனர்

7) மோடிக்காக ஓட்டு போடலாம் என்றிருந்தவர்கள் கூட பாஜக போட்டியிட்ட இடங்கள் தவிர்த்து பிற இடங்களில் அதிமுகவிற்கே அதிக அளவில் வாக்களித்திருப்பதை 7 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட பாஜக வாங்கியுள்ள 5.2% வாக்குகள் தெரிவிக்கின்றன.

8) புதிய வாக்காளர்களை திமுக எந்தவிதத்திலும் கவரவில்லை, திமுகவின் மீது புதிய வாக்காளர்களுக்கும் மத்திய வர்கத்திற்கும் இருக்கும் கோபம் குறையவில்லை.

9) அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு கட்சிக்காரர்களால் எந்த தொந்தரவும் இல்லாதது அந்த கட்சியின் மீது பொதுமக்களுக்கு எந்த அதிருப்தியையும் ஏற்படுத்தவில்லை.

தமிழகத்தில் பாஜக அமோக‌ வெற்றி பெறாததற்கு, விஜய்காந்த், ராமதாஸ் அணுகுமுறையே காரணம்- தமிழருவி மணியன்

தமிழகத்தில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு விஜயகாந்த், ராமதாஸ் இருவரின் அணுகுமுறையே அடிப்படைக் காரணம் என காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

" மோடி ஆதரவலையும், காங்கிரசுக்கு எதிரான சூறாவளியும் சேர்ந்துதான் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

மதச்சார்பின்மையும் சாதிய அழிவுச்சக்திகளும் இத்தேர்தலில் பரிதாபகரமான முடிவைச் சந்தித்துள்ளன. மாயாவதி, முலாயம்சிங், லாலு பிரசாத் போன்றோரின் வீழ்ச்சியும், காங்கிரஸின் வரலாறு காணாத தோல்வியும் சாதி மதங்களைப் பயன்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தும் இழிந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல் முயற்சியாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக தேசிய ஜனநாயக் கூட்டணி அமைக்கப்பட்டது. காங்கிரசை வீழ்த்தவும், திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்கவும் உருவாக்கப்பட்ட இக்கூட்டணியின் நோக்கங்கள் ஓரளவு நிறைவேறியுள்ளன.

காங்கிரஸ் அனைத்துத் தொகுதிகளிலும் மோசமான தோல்வியைத் தழுவி மீண்டும் எழ முடியாமல் விழுந்து விட்டது. தி. மு. க. ஒரு தொகுதியில் கூட வெற்றியைப் பெற முடியாமல் மக்களவைப் பிரதிநிதித்துவத்தை முற்றாக இழந்துவிட்டது.

இச்சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி, சட்ட மன்றத் தேர்தலுக்கான வியூகம் வகுப்பதில் ஈடுபட வேண்டும்.

தமிழகத்தில் 75 லட்சம் வாக்காளர்கள் இக்கூட்டணிக்கு வாக்களித்ததன் மூலம் மாற்று அரசியல் மலர தங்கள் ஆதரவைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.

விஜயகாந்தின் ஆரம்பகால அரசியல் ஊசலாட்டங்களும், மருத்துவர் ராமதாசின் பிடிவாதமான புறக்கணிப்பும், மாதக்கணக்கில் தொகுதி உடன்பாடு காண்பதில் கடைப்பிடித்த கேலிக்கூத்துகளும், கூட்டணித் தலைவர்கள் ஒருங்கிணைந்து ஒரு மேடையில் கூட வாக்காளர்களைச் சந்திக்காமல் தவிர்த்ததும் மோடியை மையமாகக் கொண்டு மக்களிடம் மலர்ந்த எதிர்பார்ப்பை முறியடித்துவிட்டன.

இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு விஜயகாந்த், ராமதாஸ் இருவரின் அணுகுமுறையே அடிப்படைக் காரணம்.

இதில் வாக்காளர்களைக் குறைசொல்வதற்கு ஒன்றுமில்லை. தவறுகளிலிருந்து பாடம் பெறுவதுதான்அரசியல் பண்புடைமை. ஆனால், ராமதாசும் விஜயகாந்தும் சட்டமன்றத் தேர்தலை நோக்கி சேர்ந்து களத்தில் நிற்பார்கள் என்பது சந்தேகத்திற்குரியது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த இருவர் மூலம் வலுப்பெறுவதற்கு வாய்ப்பில்லை. மாற்று அரசியல் மலர்வதற்குத் தன்னை முற்றாக அர்ப்பணித்துக் கொண்ட வைகோவின் தோல்வியை தமிழினத்தின் ஒட்டு மொத்தத் தோல்வியாக காந்திய மக்கள் கட்சி (கா.ம.க.) கருதுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்றுள்ள சாதகமான சூழல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. மாற்று அரசியல் வளர்த்தெடுக்கப்படுவதற்கு ஏற்ற வியூகத்தை இனி காலம் தான் நமக்கு காட்ட வேண்டும்".

இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

47 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாட்டில் பாஜகவும் பாமகவும் நாடாளுமன்ற தேர்தலில் செய்துள்ள சாதனை

நாடாளுமன்ற தேர்தலில் 47 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாட்டில் பாஜகவும் பாமகவும் செய்துள்ள ஒரு சாதனை


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 37 இடங்களையும் பாஜக ஒரு இடத்திலும் பாமக ஒரு இடத்திலும் வென்றுள்ளன, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு இடம் கூட வெல்லவில்லை. 47 ஆண்டுகால நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் திமுக, அதிமுக கூட்டணியோ ஆதரவோ இல்லாமல் இதுவரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. 47 ஆண்டுகாலத்திற்கு பின் முதல் முறையாக தமிழகத்தில் திமுக ஆதரவின்றியும், அதிமுக ஆதரவின்றியும் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனும், பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாசும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் திமுக இல்லையென்றால் அதிமுக என்ற நிலை தான் இருந்தது, திமுக ஒரு தொகுதி கூட வெல்ல முடியாத நிலையில் பாஜக, பாமக, தேமுதிக, மதிமுக அணிகள் இணைந்த மூன்றாவது அணி தோல்வி அடைந்திருந்தாலும் இரண்டு இடங்களை வென்றுள்ளது, மேலும் பல இடங்களில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சில இடங்களில் மூன்றாவது இடத்தையும் கன்னியாகுமரியில் திமுக நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது.


சட்டமன்ற தேர்தலுக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் மக்கள் வாக்களிக்கும் மனநிலையில் சில வேறுபாடுகள் உள்ளதால் மூன்றாவது அணியாக இருந்த பாஜக, பாமக, தேமுதிக, மதிமுக அணிகள் இணைந்து மீண்டும் 2016 சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு தொகுதிகளை வென்று தமிழக தேர்தல் களத்தை மும்முனைப்போட்டியாக மாற்றலாம்.

தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை நோட்டா பெற்றது

இந்தியாவில் முதன்முறையாக 'நோட்டா' பொத்தான், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் அறிமுகமானது.

வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசி பொத்தானாக, ’மேலே உள்ள யாரும் இல்லை’ (None Of The Above) என்பதே நோட்டாவாகும். 

பல தொகுதிகளில், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளை விட நோட்டா அதிக வாக்குகள் பெற்றுள்ளது. 

மாநில அளவில் தமிழகத்தின் மொத்த 39 தொகுதிகளில் 31 தொகுதிகளின் மக்கள் நோட்டாவை பயன்படுத்தி உள்ளனர். 26 தொகுதிகள் கொண்ட குஜராத்தில், 23 தொகுதிகளில் நோட்டா பதிவாகி உள்ளது. 42 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 32 தொகுதிகளின் நோட்டா பதிவானது. 

நீலகிரி தொகுதியில், வாக்காளர்கள் கட்சிகளை ஒதுக்கிவிட்டு நோட்டாவுக்கு வாக்குகளை பெரிய அளவில் பதிவு செய்துள்ளனர்.இந்த தொகுதியில் 46,559 பேர் நோட்டாவில் வாக்களித்துள்ளனர்.

இதேபோல, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி போட்டியிட்ட குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் 18,053 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

மேலும், தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை நோட்டா பெற்றது. இதற்கு அடுத்த இடத்தை தான் காங்கிரஸ் கட்சி பெற்றது. 

மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அளவில், நாடெங்கும் உள்ள தொகுதிகளில் புதுச்சேரியில் நோட்டாவுக்கு அதிகபட்சமாக 3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த சதவீத அளவில் நோட்டா, கம்யூனிஸ்ட் கட்சிகளை மிஞ்சியுள்ளது.

200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய அமைப்பை சேர்ந்த 200 தீவிரவாதிகளை நைஜீரியாவில் வெட்டிக்கொன்ற கிராம மக்கள்

நைஜீரியாவில் ‘போகோ ஹராம்’ தீவிரவாதிகள் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிராமங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி மக்களை கொன்று குவிக்கின்றனர். கடந்த மாதம் பள்ளி மாணவிகள் 200க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்று சிறை வைத்துள்ளனர். அவர்களை இன்னும் விடுவிக்கவில்லை. அவர்களை ‘செக்ஸ்’ அடிமைகளாக விற்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இது உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகள் அப்பெண்களை மீட்க உதவுவதாக தெரிவித்தனர். பின்னர், அப்பெண்களை தேடி, மீட்கும் பணியில் அமெரிக்க ராணுவம் களமிறங்கியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள‌ 3 கிராமங்களுக்குள் ஆயுதங்களுடன் போகோ ஹராம் தீவிரவாதிகள் புகுந்தனர். அங்குள்ள வீடுகளில் புகுந்து மக்களை தாக்க முயன்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் கொதித்து எழுந்தனர். வீட்டில் இருந்து அரிவாள், கத்தி, தடி, கற்கள் போன்ற ஆயுதங்களால் தீவிரவாதிகளை எதிர்த்து தாக்கினர். அவர்களை அடித்தும், வெட்டியும் கொன்றனர். கிராம மக்களின் தாக்குதலில் 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மக்கள் துணிந்து களம் இறங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த தீவிரவாதிகள் எஞ்சியவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என தப்பி ஓடி விட்டனர்.

இதற்கிடையே மாணவிகள் கடத்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆறுதல் கூற நைஜீரியா அதிபர் குட்லக் ஜோனாதன் முடிவு செய்திருந்தார். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருதி அவர் தனது பயணத்தை ரத்து செய்து விட்டார்.

நாடாளுமன்ற விதிகளின்படி காங்கிரஸ் எதிர்கட்சியாக இருக்கும் தகுதியை இழந்தது


மக்களவையில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை 543. இதில், நாடாளுமன்ற விதிகளின்படி, 10 சதவீத இடங்களைப் பெறும் கட்சி மட்டுமே எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியும். அதாவது, 54 இடங்களில் வெற்றிபெற வேண் டும். ஆனால், தேவையான 54 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாததால் அக்கட்சி எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்பட வாய்ப்பில்லை. எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுபவர் கேபினட் அமைச்சருக்கு இணை யான சம்பளம், படி உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும்.

நாடு குடியரசாக அறிவிக்கப் பட்ட பின், தொடர்ந்து காங்கிரஸ் வெற்றி பெற்றதால், 52-ஆம் ஆண்டு முதல் 77-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஐந்து நாடாளு மன்றங்களில் எதிர்க்கட்சி அந்தஸ்து எந்தக் கட்சிக்கும் வழங்கப்படவில்லை. தற்போது 16-வது நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் கட்சி டெபாசிட் தக்க வைத்துள்ள‌து


நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. இதில், கன்னியாகுமரியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் சுமார் இரண்டரை லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார். இதன்மூலம், தமது டெபாசிட் தொகையை அவர் தக்கவைத்தார். மற்ற 38 வேட்பாளர்களும் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். ஒரு வேட்பாளர் தாம் செலுத்திய டெபாசிட் தொகையை திரும்ப பெற வேண்டுமெனில், மொத்தம் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்குக்கு அதிகமான வாக்குகள் பெற வேண்டும். தமிகத்தில் சுமார் 4.4 சதவிகித வாக்குகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது.

மக்களுக்கு விழிப்புணர்வு போதவில்லை; மோடியின் சூழ்ச்சிக்கு அவர்கள் இரையாகிவிட்டனர்: சி.மகேந்திரன்


 தேர்தல் முடிவுகளைப் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் கூறியதாவது:

“மக்களுக்கு விழிப்புணர்வு போதவில்லை. ஆனால், அது அவர்களின் தவறு அல்ல. அவர்களுக்கு கிடைத்த அனுபவம் என்பது உண்மையானது அல்ல. அது மோடியின் கார்ப்பரேட் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட போலித் திரையாகும். மோடியின் சூழ்ச்சிக்கு மக்கள் இரையாகிவிட்டனர்.

அனைத்து அதிகாரங்களும் நரேந்திர மோடியின் கைகளுக்குச் சென்றதின் பின்னணியில் கார்ப்பரேட் ஊடகங்களின் பங்கு நிறையவே இருக்கிறது. . பன்னாட்டு நிறுவனங்களின் நலன் மற்றும் அவற்றின் வளர்ச்சிகளை விரிவுபடுத்துதல், மக்கள் உழைப்பை, வாழ்வாதாரங்களை சுரண்டுதல், நாட்டின் வளங்களை கொள்ளை அடித்தல் இவற்றுக்கே இந்த தேர்தல் முடிவுகள் வழிவகுக்கும்.

ஒருபக்கம் இந்துத்துவா மறுபக்கம் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் இப்படியான மோசமான சூழலை மோடி கொண்டுவருவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் அரசியல், பொருளாதார வளர்ச்சிகளுக்காகப் போராட வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.”

இவ்வாறு சி.மகேந்திரன் கூறினார்.

இந்தியாவின் மிகப்பெரிய சக்திகள் நரேந்திர மோடி மற்றும் ஜெயலலிதா: நடிகர் விஜய்


கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் இந்த தேர்தலில் பாஜக செலவழித்திருப்பதாக சொல்லப் படுகிறது. பாஜக.வின் வெற்றி இந்தியாவுக்கு ஆபத்து: மணிசங்கர் அய்யர்.


மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் மையத்திற்கு தனது மனைவி மற்றும் மகளுடன் நேற்று வந்திருந்த மணிசங்கர் அய்யர் முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டவுடன் அவருக்கும், அதிமுக வேட்பாளர் பாரதிமோகனுக்கும் 22,500 வாக்குகள் வித்தியாசம் ஏற்பட்ட நிலையில் நிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளி யேறினார். அப்பொழுது பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

 “தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம்தான். வாஜ்பாய் காலத்தில் காங்கிரஸ் தோற்றபோது கூட வருத்தம் இல்லை. ஆனால், இந்த நேரத்தில் இப்படிப்பட்ட தோல்வி கிடைத்திருப்பதுதான் வருத்தம். 1885-ல் இருந்து காங்கிரஸ் கட்சி காப்பாற்றி வந்த அமைதிக்கு ஆபத்து, நாட்டின் சித்தாந்தத்துக்கு ஆபத்து.

இந்தியாவில் உள்ள பெரும் தொழிலதிபர்கள் மோடிக்கு பணத்தை அள்ளி இறைத்து இந்த வெற்றியைப் பெற்றுத் தந் துள்ளனர். கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் இந்த தேர்தலில் பாஜக செலவழித்திருப்பதாக சொல்லப் படுகிறது. அந்த பணம் என்ன வெள்ளையா? ஊழல் பணத்தை வைத்துக்கொண்டு வெற்றி பெற்ற வர்கள் நாட்டில் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்?. எனது கணக்குப் படி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மோடிக்கு வாக்களிக்கவில்லை. அத்தனை பேர் ஏற்றுக் கொள்ளாத மோடி எப்படி நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க முடியும்? சிறிய பிரச்சினைகளைகூட ஊதிப் பெரி தாக்குபவர்களால் நாட்டில் எப்படி அமைதி நிலவச்செய்ய முடியும். பேராபத்தாகத்தான் எதுவும் முடியும்.

தற்போது வெற்றிபெற்றுள்ள பாரதி மோகன் டெல்லிக்குப் போவ தால் ஒன்றுமே பலன் கிடைக்கப் போவதில்லை. என் கணக்குப்படி சட்டமன்ற தேர்தலுடனே சேர்த்து மக்களவைக்கும் தேர்தல் நடக்க லாம்” என்றார் மணிசங்கர் அய்யர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media