BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 12 February 2014

மின்கட்டணம் செலுத்தாதவர்களுக்கு டெல்லி அரசு 50 சதவீத மானிய உதவி


டெல்லியில் அக்டோபர் 2012 முதல் ஏப்ரல் 2013 வரையிலான காலத்தில், மின்கட்டண உயர்வைக் கண்டித்து, மின் கட்டணம் செலுத்தாமல் இருந்தவர்களுக்கு, அவர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தில் பாதியை மானியமாக டெல்லி அரசே அளிப்பதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லி அரசு ரூ.6 கோடியை செலவிட உள்ளது. இந்த தகவலை ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

ஆனால், மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில், மின் கட்டணம் செலுத்தியவர்களுக்கு பணம் திருப்பித் தர மாட்டாது என்றும் சிசோடியா தெரிவித்தார்.

அகமதாபாத் டீக்கடையிலிருந்து மோடி பிரச்சாரம் - 1000 டீக்கடைகளில் நேரடி ஒளிபரப்பு

மோடி பிரதமராக முடியாது, வேண்டுமென்றால் காங்கிரஸ் கூட்டத்தில் தேநீர் விற்கட்டும் என்று ஜனவரி மாதம் மணி சங்கர் அய்யர் கூறியது சர்ச்சைக்குள்ளானது. தன் மீது எரியப்படும் கற்களை வைத்து, கட்டிடம் கட்ட தெரிந்தவர் போல் இருக்கிறார், மோடி. இன்று அவர் மேற்கு அகமதாபாத்தில் உள்ள இஸ்கான் காதியா டீக்கடையிலிருந்து தனது பிரச்சாரத்தை அதிரடியாக மேற்கொண்டார்.

தேநீர் பருகியபடி ஒரு விவாதம் என்ற இந்த நிகழ்ச்சியை நாடு முழுவதும் 1000 டீக்கடைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்தனர். வீடியோ கான்பரன்சிங் மூலம் டீக்கடைகளிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் மோடி பதிலளித்தார். அப்போது ஊழல், நல்லாட்சி உள்ளிட்டவை குறித்து அவர் பேசினார்.

# மோடி, காங்கிரஸாரின் கிண்டலுக்கு பதிலடி கொடுத்து நடத்திய பிரச்சாரம், பாராட்டுக்குரியது என்று நினைத்தால், 'லைக்' போடுங்கள்!

வாரிசாக இருப்பதற்காக நாங்கள் வெட்கப்படவில்லை - மு.க.ஸ்டாலின்

வாரிசாக இருப்பதற்காக நாங்கள் வெட்கப்படவில்லை -  மு.க.ஸ்டாலின்

சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் பெற்ற வீரர்கள் மற்றும் அவர்களது விலைகள்

இன்று நடந்த ஏழாவது ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆசிஷ் நெஹ்ராவை 2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்ப‌து, பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பல முக்கிய போட்டிகளின் தோல்விகளுக்கு காரணமாக இருந்த பந்து வீச்சாளர் நெஹ்ரா, ரன்களை வாரி வழங்குபவர். இவரை சென்னை அணி ஏலத்தில் பெற்று இருப்பதன் காரணம் விளங்கவில்லை. இவருக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபாய் அடிப்படை விலையை கொடுத்தே சென்னை சூப்பர் கிங்ஸ் இவரை வாங்கியுள்ளது. மேலும், சென்னை வாங்கியுள்ள வீரர்கள், மற்றும் அவர்களது விலைகள் பின்வருமாறு:


தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பாப் பிளஸ்ஸிஸ், ரூ.4.50 கோடி

மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த‌ வேயன் ஸ்மித் ரூ. 4.50 கோடி

நியூசிலாந்தின் பிரன்டன் மெக்கல்லம், ரூ. 3.25 கோடி

மோஹித் சர்மா, ரூ. 2 கோடி

ஆஸ்திரேலியாவின் பெல் ஹில்பென்ஹாஸ், ரூ. 1 கோடி

மேற்கு இந்தியத் தீவுகளின் சாமுவேல் பத்ரி, ரூ. 30 லட்சம்

எல்லையை காக்க போகும் பெண் பாதுகாப்பு படையினர்


இந்தியா-வங்கதேச எல்லையில் கடத்தல் பொருட்களை எடுத்து வருபவர்களில் பெரும்பாலானோர் பெண்களே என்ற காரணத்தாலும், எல்லையில் ஆண் வீரர்கள் இருப்பதால் அவர்களால் சந்தேகத்திற்கிடமாக வரும் பெண்களை சோதனை செய்ய முடியவில்லை என்பதாலும், இந்தியாவின் வடகிழக்கு எல்லைப் பகுதியில் பெண்களை சோதனை செய்ய விரைவில் பெண் எல்லை பாதுகாப்பு படையினர் நியமிக்க பட இருக்கின்றனர்.

இதையடுத்து, வங்கதேசத்துடனான திரிபுரா எல்லையில் முப்பது பெண் பாதுகாப்பு படையினரும், அஸ்ஸாம் எல்லை பகுதிக்கு மற்றுமொரு முப்பது பேரும் விரைவில் பணியில் அமர்த்தப் படயிருக்கின்றனர். அவர்கள் எல்லை வழியாக வரும் சந்தேகப்படும்படியான பெண்களிடம் சோதனை செய்வதுடன் விசாரணை நடத்துவார்கள்.

ஏற்கனவே மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் எல்லையில் பெண் எல்லை பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

காதலர்தினம் அன்று, காதல் ஜோடிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்- மாணவர்கள் மனு

 
நாளை மறுநாள் (பிப்ரவரி 14) கொண்டாடப்படும் காதலர் தினம் அன்று, பொது இடங்களில் சந்தித்துக் கொள்ளும் காதலர்களுக்கு காவல் துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் மற்றும் காதல் ஜோடிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று, அனைத்து மாணவர்கள் பொதுநல சங்க பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், 30–க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் இன்று ஒரு மனு கொடுத்தனர்.

மேலும், அந்த மனுவில், காதலர் தினமான பிப்ரவரி 14–ந்தேதி திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு, போலீஸ் நிலையத்துக்கு வந்தால், அவர்களுடைய புகார் மனுக்களை ஏற்று பாதுகாப்பு வழங்க வேண்டும். எல்லை பிரச்சினையை காரணம் காட்டி திருப்பி அனுப்பக்கூடாது என்றும் மாணவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

பெண், தன் மீது புகார் கொடுத்ததை அடுத்து, தற்கொலைக்கு முயன்ற அமைச்சர்

பெங்களூரில், முன்னாள் பாஜக அமைச்சர் எஸ்.ஏ. ராமதாஸ் திருமணம் ஆகாதவர். ஆனால் சமீபத்தில் ஒரு பெண், ராமதாஸ் தனது கணவர் என்றும், தன்னை பல ஆண்டுகளாக அவர் கொடுமைப்படுத்துவதாகவும் புகார் கொடுத்து இருக்கிறார். இதையடுத்து, ராமதாஸ் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.

தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், கடந்த 5 ஆண்டுகளாக தன்னை ராமதாஸ் கொடுமைப்படுத்துவதாகவும், தன் வாழ்க்கையை அவர் நாசம் செய்ததாகவும், அந்த பெண் அளித்த புகாரினால், மைசூரில் தான் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் உள்ள அறையில் ராமதாஸ் தூக்கில் தொங்கினார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதைப் பற்றி புகார் கொடுத்த பெண் பேசுகையில், "எனக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் கேட்க தான் செய்தியாளர்களை சந்தித்தேன். நான் செய்தியாளர் சந்திப்பில் இருந்தபோதே அமைச்சர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு இந்த பேட்டியை உடனே முடித்துக் கொள்ளாவிட்டால், விஷம் குடித்துவிடுவேன் என்று மிரட்டினார். அவர் என்னை பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தினார்." என்று கூறினார்.

அர்விந்த் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு, அதிர்ச்சி அடைந்த‌ ரிலையன்ஸ்


இயற்கை எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, முன்னாள் அமைச்சர் முரளி தியோரா, ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் மீது கூறப்படும் புகார்கள் ஆதரமற்றவை என்றும் மறுப்பு கூறியுள்ளது. டெல்லி முதல் அமைச்சர்அர்விந்த் கெஜ்ரிவாலின் நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு வீரப்ப மொய்லி கண்டனம் தெரிவித்ததோடு கெஜ்ரிவாலுக்கு நிர்வாகம் குறித்து தெரியாது என்றும் கூறியிருக்கிறார்.

எரிவாயு தட்டுப்பாட்டை செயற்கையாக ஏற்படுத்தி, ரிலையன்ஸ் நிறுவனம் ஆதாயம் பெறும் வகையில் விலை ஏற்றம் செய்யப்பட்டிருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையிலேயே, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மூளை சாவு அடைந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது


ராபின் என்ற 32 வயது பெண், கடந்த டிசம்பர் மாதம் மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தார். இவரின் மூளை இனிமேல் இயங்காது என்று தெரிந்தும், அவரின் கணவர், கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை குழந்தை பிறக்கும் வரையிலாவது, 'லைப் ச்ப்போர்ட்'டில் வைக்கும் படி கேட்டு கொண்டார். இதையடுத்து, ஆறு வாரங்கள் கழித்து, மூளை சாவு அடைந்தும், லைப் சப்போர்ட்டில் வைக்கப் பட்டிருந்த ராபினுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு, லைப் சப்போர்ட் எடுக்கப் பட்டதால், ராபின் மரணம் அடைந்தார்.

குறை பிரசவத்தில் பிறந்தாலும், குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக, அதன் தந்தை பென்சன் தெரிவித்தார். இவர் மனைவிக்கு ஆன மருத்துவ செலவுகள் மற்றும் குழந்தையை பார்த்து கொள்ள ஆகும் செலவுகளை பார்த்து கொள்ள, இதுவரை அவருக்கு 84 லட்ச ரூபாய்க்கு மேல் நன்கொடை மக்களிடம் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நுழைவு வாயிலில் உள்ள கோவிலை இன்று மதியத்துக்குள் இடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு


சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில், நீதிமன்ற நுழைவு வாயிலில், ஸ்ரீ நீதி கருமாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக உள்ள இந்த கோவிலை அகற்றுவதற்கு, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி அளித்த உத்தரவில், ‘‘பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என்பதுதான் இந்த உயர்நீதிமன்றத்தின் நிலை. அது கோவிலாக இருந்தாலும், மசூதி அல்லது தேவலாயமாக இருந்தாலும், அதுபற்றி இந்த நீதிமன்றத்திற்கு கவலை இல்லை. கோவில், மசூதி, தேவாலயம் ஆகியவற்றை கட்ட விரும்புபவர்கள் தனியார் நிலத்தில் அவற்றை கட்டிக் கொள்ளலாம். மத ரீதியான கட்டிடங்களை பொது இடத்தில் கட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. எனவே உயர் நீதிமன்ற நுழைவு வாயிலில் உள்ள ஸ்ரீ நீதி கருமாரியம்மன் கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்கவேண்டும்." என்று கூறியிருந்தனர்.

உத்தரவு வந்த‌ பிறகும் மாநகராட்சி அதிகாரிகள் கோவிலை இடிக்க முன்வரவில்லை. அதனால், சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி நீதிமன்ற‌அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை இன்று மதியம் 2.15 மணிக்கு அமல்படுத்தி, அது சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media