BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 16 February 2014

அஜீத் தான் அடுத்த 'சூப்பர் ஸ்டார்': சிம்பு


ரஜினிகாந்திற்கு பிறகு, அடுத்த‌ சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு அடிக்கடி எழுவதுண்டு. சிலர் விஜய் என்பார்கள், சிலர் அஜீத் என்பார்கள், சிலர் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று யாருமே கிடையாது; ரஜினி இடத்தை யாரும் பிடிக்க முடியாது என்பார்கள். இதைப் பற்றி நடிகர் சிம்புவை கேட்ட போது, "நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். என் முதல் படமான மோனிஷா என் மோனாலிஷா ரிலீஸானபோது கூட நான் என் நண்பர்களுடன் ரஜினி சார் படமான படையப்பாவை பார்க்க சென்றுவிட்டேன். ரஜினிக்கு பிறகு, அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்றால், அது அஜீத் தான் என்றார்." என்று கூறினார். 

அஜீத்தின் தீவிர ரசிகர் என்று தன்னை அடிக்கடி கூறிக்கொள்ளும் அவர், "அஜீத்தில் நான் என்னை பார்க்கிறேன். படங்களிலும் சரி, நிஜத்திலும் சரி, அஜீத் ஒரு ஹீரோ.", என்று பெருமையாக கூறியிருக்கிறார்.

சிம்புவின் வாலு படம், அஜீத்தின் பிறந்தநாளான மே மாதம் 1ம் தேதி வெளிவர இருக்கிறது என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது.

திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபர் கைது

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பஷீர் அகமது என்ற வாலிபர், அதே பகுதியை சேர்ந்த நதீம் என்பவரின் 19 வயது மகளை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால், பஷீரை திருமணம் செய்து கொள்ள அப்பெண் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பஷீர், அப்பெண்ணின் அழகை சிதைக்க முடிவு செய்துள்ளார். அதன்படி, அப்பெண்ணை கடத்தி அவரது மூக்கை அறுத்து துண்டாக்கியுள்ளார். வலியில் துடித்த அப்பெண் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பஷீரை போலீசார் கைதுள்ளனர்.



ரூ. 3300 கோடி 'கட்டிங்' அடித்து விட்டார் ஜெ., என காரசாரமாக பேசிய தயாநிதி



திருச்சி திமுக மாநாட்டில் இன்று தயாநிதி மாறன் பேசினார். தனது பேச்சின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தாக்கி, கடுமையாக பேசியது, அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது. ஜெயலலிதாவை அவர் ஒருமையிலேயே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

"ஜெயலலிதாவே உன் கனவு பலிக்குமா? நீ பிரதமராக வேண்டும் என்ற கனவு பலிக்குமா? இந்தக் கூட்டத்தை பார்த்த பிறகாவது திருத்திக்கொள். உனது கனவு பலிக்காது." என்று தயாநிதி மாறன் ஆவேசமாக கூறினார்.

மேலும் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் அவர் பேசியதவாது:

இன்று பகல் கனவு காணும் ஜெயலலிதா செய்த பெரிய சாதனை, டாஸ்மாக் தான். டாஸ்மாக்கில் பிரபலமான பிராண்ட் வேண்டும் என்றால் கேப்டன் பிராந்தி, கேப்டன் ரம், ஜெட் பிராந்தி, ஜெட் விஸ்கி என சுமார் 32 ஐட்டங்கள் ஒரே ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. அந்த நிறுவனம் மிடாஸ். அதற்கு சொந்தக்காரர்கள் யார் என்றால் ஜெயலலிதாவும், சசிகலாவும். அந்த நிறுவனத்தில் இருந்து டாஸ்மாக்கிற்கு மாதத்திற்கு 11 லட்சம் பெட்டிகள் சப்ளை செய்கிறார்கள். மற்ற நிறுவனங்களிலும் இருந்து மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று லட்சம் பெட்டிகள் வாங்குகிறார்கள். இந்த மூன்று ஆண்டுகளில் ஜெயலலிதாவின் மிடாஸ் நிறுவனம் உங்கள் பணத்திலிருந்து ரூபாய் 3,300 கோடி கட்டிங் அடித்து நேராக வங்கியில் வைத்துக்கொண்டிருக்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராகவேண்டுமாம். சற்றே நினைத்து பாருங்கள். ஜெயலலிதா பிரதமரானால் என்ன ஆகும்? காலையில் ரெட் போர்ட்டில் கொடி ஏற்றுவார். மாலையில் பெங்களூர் கோர்ட்டில் சாட்சி சொல்லுவார். இதுதான் நடக்கும்.

தயாநிதி மாறமன் இன்று வழக்கத்திற்கு மாறாக, காரசாரமாக, கடுமையாக பேசியிருப்பது திமுக வினரை திகில் அடைய வைத்து, கவனிக்க வைக்கும் வகையில் இருந்தது.

அதிமுக கட்சியை விரட்ட மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்- ஸ்டாலின்



திருச்சியில் இன்று நடந்த திமுக 2வது நாள் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு சட்டமன்றத் தேர்தல் வராதா, மத்தியில் ஒரு நல்ல ஆட்சி வருவதற்கு முன்பு, தமிழகத்தில் ஒரு ஜனநாயகத்தை கொன்று கொண்டிருக்கும் இந்த அதிமுக ஆட்சியை அகற்றிட முடியாதா என்கிற நிலையில் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

மேலும் மாநாட்டில் பேசிய அவர், ஊடகத்துறையை சேர்ந்தவர்கள், அவர்களது விருப்பதற்கு ஏற்ப கூட்டணியை குழப்பிக்கொண்டு, அவர்களாக ஒரு கூட்டணியை அமைத்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்று கலைஞர் ஆற்றவிருக்கிற உரையின் போது, நமக்கு நாடாளுமன்ற தேர்தலின் வியூகத்தை அமைத்து தரவிருக்கிறார் என்று கூறியிருந்தார்.

+1 மாணவனை கார் ஓட்டவிட்டு அழகு பார்த்ததால், விபத்தில் குடும்பமே பலி

திருப்பூரில் வசித்து வரும் துரைசாமி-சிவகாமி என்ற தம்பதியினரின் ஒரே மகன் செல்வவேல், வயது 16. செல்வவேல் தாராபுரத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். விடுதியில் தங்கிப் படித்த மகனை, வார இறுதி நாட்களை வீட்டில் கழிக்க, அவரை அழைத்து வர துரைசாமி தனது மனைவியுடன் காரில் சென்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை அவர்கள் தாராபுரத்திற்கு சென்று மகனை அழைத்துக் கொண்டு திருப்பூர் திரும்பும் போது, போக்குவரத்து குறைவாக உள்ள சாலை வந்தபோது, செல்வவேல் காரை ஓட்டி இருக்கிறார். அப்போது எதிரில் தாராபுரம் நோக்கி வந்த பேருந்தை பார்த்த செல்வவேல் நிலைதடுமாறி காரை பேருந்து மீது மோதினார். இதில் செல்வவேல் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் 12 வயது மகளை பலாத்காரம் செய்த 53 வயது தந்தை கைது

பொள்ளாச்சியை சேர்ந்த 53 வயதான பாலசுப்ரமணி, தன் மனைவியை இழந்தவர். தன் மகள், மற்றும் மகன்களை திருப்பூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்து இருந்தார். காப்பகத்திற்கு அடிக்கடி சென்று அவர் குழந்தைகளை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பகத்திற்கு சென்ற அவர், மேலாளரிடம் தன் 12 வயது மகளுக்கு மொட்டை போட வேண்டி இருப்பதால் சிறுமியை பழனிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து மகளை காப்பகத்தில் இருந்து அழைத்துச் சென்ற பாலசுப்ரமணி, பழனிக்கு செல்லும் முன்பு புத்தாடை வாங்கித் தருகிறேன் என்று கூறி,  சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தந்தையிடம் இருந்து தப்பித்து காப்பகத்திற்கு வந்துவிட்டார்.

காப்பகத்திற்கு வந்தபோதிலும் அவர் யாருடனும் பேசாமல் அழுது கொண்டே இருந்தவரை பார்த்து,  காப்பகத்தின் மேலாளர் விசாரித்த‌போது, சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் பாலசுப்ரமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நான் ரத்தத்தில் எழுதித்தருகிறேன். வெற்றி திமுகவுக்குத்தான்- ஜெ.வை எதிர்த்து குஷ்பூ ஆவேசம்


நேற்று திருச்சியில் நடந்த திமுக மாநாட்டின் போது, குஷ்பூ உணர்ச்சிகரமாக, ஆவேசத்துடன் பேசினார். முதல்வர் ஜெயலலிதாவை பற்றி பேசும் போது, அவரை கடுமையாக சாடியும், சவால்விடும் படியாகவும் பேசினார்.

"அம்மையார் ஜெயலலிதா வெற்றி அவர்களுக்கு தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், நான் ரத்தத்தில் எழுதித்தருகிறேன். வெற்றி திமுகவுக்குத்தான். அம்மையார் ஆதிக்கம் செலுத்துகிறார்.  நம்மை உற்சாகப்படுத்துவதற்கு தளபதி இருக்கிறார். யாருக்கும் எதுக்கும் நாம் பயப்படவேண்டாம். எத்தனை குற்றச்சாட்டுகள் வைக்கிறீர்கள் எங்கள் மீது வைக்கப்பட்டாலும், அத்தனையும் பொய் என்று நிரூபிப்போம்." என்று கோபத்துடனும், கொதிப்புடனும் பேசினார் குஷ்பு.

இப்படி ஒரு கோலாகலமான மாநாட்டை என் வாழ்நாளில் பார்த்ததில்லை- அன்பழகன்


திருச்சியில் நேற்று கோலாகலமாக தொடங்கிய திமுக மாநில மாநாட்டில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலர் நேற்று பேசினர். அப்பொழுது இறுதியாக பேசிய பேராசிரியர் அன்பழகன், "1943-ம் ஆண்டிலிருந்து திராவிடர் கழகம் தொடங்கி 40-க்கும் மேற்பட்ட மாநாடுகளில் நான் பங்கேற்றுள்ளேன். இதுவரையில் இதுபோன்ற மாநாட்டை என் வாழ்நாளில் பார்க்கவில்லை." என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும் பேசிய அவர், திருக்குறள், தொல் காப்பியம் தந்தது தமிழ் மொழி. தமிழ்மொழிக்கு ஏராளமான சிறப்புகள் உள்ளன. தமிழ் மொழியை நாம் தாய்மொழியாகக் கொண்டிருக்கிறோம் என்பதே நமக்குப் பெருமை என்பதை உணர வேண்டும். உலகத்தவர்கள் பாராட்டத்தக்கதாக இருந்தது தமிழினம். நம் கலாச்சாரம் சிறப்பானது. அதை சிலர் திட்டமிட்டு அழிக்கப் பார்க்கிறார்கள். பெரியார் இல்லையெனில் நம் இனம் இந்த முன்னேற்றத்தைக் கூட அடைந்திருக்காது என்று அவர் கூறினார்.

வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40-ம் நமக்கு என்பது அரசியல் வெற்றிக்காக மட்டுமல்ல; தமிழ் இனத்தைக் காப்பாற்றவும்தான் என்று பேராசிரியர் தன் பேச்சின் போது கூறினார்.

கோயம்பேடு- அசோக்நகர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம், மக்கள் ஆரவாரம்

 

கோயம்பேடு - அசோக்நகர் இடையே நேற்று 2-வது நாளாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. 4 பெட்டிகளை கொண்ட இந்த மெட்ரோ ரெயில் மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு 12.15 மணிக்கு அசோக்நகரை அடைந்தது.  சோதனை ஓட்டத்தின் போது, வீடுகளில் உள்ள மக்கள் மாடியில் நின்று ரயிலை பார்த்து கையசைத்து மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

மொத்தம் 42 மெட்ரோ ரெயில்கள் சென்னையில் உலா வர இருக்கின்றன. இதில் 9 ரெயில்கள் பிரேசில் நாட்டில் இருந்தும், மற்ற ரயில்கள் ஆந்திராவில் தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இந்த ரயில்கள் அனைத்தும் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படும். ஒரு மெட்ரோ ரயிலில் (4 பெட்டி) மொத்தம் 1276 பேர் பயணம் செய்ய முடியும். 176 இருக்கைகள் உள்ளன. 1100 பேர் நின்று கொண்டு பயணம் செய்யலாம். இந்த ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக 16 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் இருக்கும்.

கடந்து சென்ற ரயில் நிலையம், வரஇருக்கும் நிலையங்கள் உள்பட பல்வேறு விவரங்களை அறியும் வகையில் எல்.இ.டி. திரை ரயிலில் இருக்கும்.  பயணிகளின் அவசர உதவிக்கு ரயில் டிரைவரை அழைக்கும் வகையில் பட்டன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதை அழுத்தி அவரிடம் தகவல் தெரிவிக்கலாம்.

லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றதால், மகிழ்ச்சியில் திமுக தலைவர்கள்

தி.மு.க.வின் 10வது மாநில மாநாடு நடைபெற்றதை ஒட்டி திருச்சியே திருவிழாக்கோலம் அடைந்தது. 250 ஏக்கர் திடலில் நடைபெற்ற‌ மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். மாநாட்டிற்கு வருகை தந்த தொண்டர்களுக்கு நுழைவுக் கட்டணமாக ஆண்களுக்கு ரூ.50, பெண்களுக்கு ரூ.30 வசூலிக்கப்பட்டது. தொண்டர்கள் வசதிக்காக, 78 கடைகள் அமைக்கப்பட்டது. 550க்கும் மேற்பட்ட கழிவறைகளும் குளியலறைகளும், திறக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்குவதற்கு கோபாலபரத்தில் உள்ள கருணாநிதியின் இல்ல வடிவில் தனித் தனியே 2,500 சதுர அடியில் ஏ.சி., சோபா, நவீன கழிவறை கொண்ட ஹைட்டெக் குடில்களும் அமைக்கப்பட்டன.

ஸ்டாலின், மாநாடு வரவேற்பு குழு தலைவர் முன்னாள் அமைச்சர் நேருவுடன் வந்து கருணாநிதிக்காக மாநாட்டு திடலில் காத்திருந்தபோது, கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கவே, அவர் கொடிக்கம்ப பீடத்தின் மீது ஏறி தொண்டர்களை கட்டுப்படுத்தினார். லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்துதான் வர முடிந்தது. மாநாட்டுத் திடலுக்கு வந்த தலைவர் கருணாநிதியும், பேராசிரியர் அன்பழகனும் காரில் இருந்தபடியே 91 அடி உயரம் கொண்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் நினைவு கொடிமேடையில் அமைக்கப்பட்ட கம்பத்தில், கட்சி கொடியை ஏற்றி மாநாட்டை துவங்கி வைத்தார். அதன் பிறகு மாநாட்டு திடலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திமுக மாநாட்டில் திரண்டதால் கட்சி தலைவர்கள் உற்சாகமடைந்தனர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media