BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 24 May 2014

பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டால், நிச்சயம் செல்வேன்- மோடியின் மனைவி யசோதா பென்


குஜராத்தைச் சேர்ந்த தனியார் செய்தி சேனலுக்கு நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

எனது வாழ்நாளில் நான் இப்போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவர் தொடர்ந்து முன்னேற வேண்டும், வாழ்வில் பல்வேறு வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.

முதல்முறையாக அவர் என்னை தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொண்டுள்ளார். மிக நீண்ட நாள்களுக்குப் பின்னரும் அவர் என்னை மறக்கவில்லை. நினைவில் வைத்திருக்கிறார்.

வடோதராவில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது என்னை அவரது மனைவி என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முந்தைய தேர்தல்களில் அவர் எனது பெயரை குறிப்பிடவில்லை.

எனினும் அவர் எங்களது திருமணத்தை ஒருபோதும் மறுத்தது இல்லை. அவர் என்னைக் குறித்து ஒருபோதும் அவதூறாகப் பேசியது இல்லை. நாங்கள் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. நாட்டுக்குச் சேவை செய்வதற்காக அவர் குடும்பத்தைப் பிரிந்து சென்றார்.

அந்தவகையில்தான் நாங்கள் பிரிந்தோம். நான் அவரை மிகவும் மதிக்கிறேன். அவரது மனைவி என்று சொல்லிக் கொள்வதில் மிகுந்த பெருமை அடைகிறேன்.

இவ்வாறு யசோதா பென்  தெரிவித்தார்.

மோடியின் பதவியேற்பு விழாவுக்குச் செல்வீர்களா என்று கேட்க பட்டபோது, என்னை அழைத்தால் நிச்சயம் செல்வேன் என்று பதிலளித்தார்.

மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சே வருவதை தவிர்க்க முடியாது: வெளியுறவு முன்னாள் செயலாளர்


புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதை தவிர்க்க முடியாது என மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் ரோனன் சென் கூறியுள்ளார். இது குறித்து, பிரபல செய்தித்தாள் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

ராஜபக்சே, சார்க் நாடுகளின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டு விட்டதால், அவருக்கு அழைப்பு விடுக்காமல் இருக்கவே முடியாது. அவரது வரவை புதிய பிரதமர் பதவி ஏற்பு விழாவில் தவிர்க்க முடியாது. ஒருவேளை நம் அண்டை நாடுகளுக்கு மட்டுமான அழைப்பு என்றாலும் ராஜபக்சேவை தவிர்க்க முடியாது. இதில் அவரை தவிர்த்தால், சீனா போன்ற நாடுகளுடன் இலங்கை தன் நெருக் கத்தை வளர்த்துக் கொள்ளும்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் தமிழகத்து மக்களின் உணர்வுகள் கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆனால் இந்த விஷயத்தில் அதைச் செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஏனெனில், சார்க் நாடுகளின் அதிபர்களுக்கு அழைப்பு விடுப்பது என்பது அடுத்து ஆட்சி அமைக்கவிருக்கும் கட்சியான பாஜகவின் கொள்கை முடிவாக உள்ளது. இதில் நம் எதிரிநாடாகக் கருதப்படும் பாகிஸ்தான், ஊடுருவல் உட்பட பல பிரச்சினைகளுக்காக பாஜகவின் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதில் இலங்கையை மட்டும் புறக்கணிப்பது என்பது சாத்தியமாகாது.

இவ்வாறு ரோனன் சென் கூறினார்.

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுத்திருப்பது குறித்து சிவசேனா அதிருப்தி


நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க‌ இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு அனுப்ப பட்டிருப்பது, தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகத் தமிழர்களின் மத்தியில் அதிருப்தியையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ், பா.ஜ.க. தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் இந்த முடிவை மோடி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று புதுடெல்லியில் பா.ஜ.க.தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் மோடியை தனித்தனியாக சந்தித்து தமிழக மக்களின் உள்ளக் குமுறல்களை பதிவு செய்தார்.

இந்நிலையில், பால் தாக்கரே காலத்தில் இருந்தே பாகிஸ்தானின் நடவடிக்கைகளில் அதிருப்தி வெளியிட்டுவந்த சிவசேனா கட்சி ‘பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்பை அழைப்பதா..?’ என்று குரல் எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக கருத்து கூறிய அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், ‘நமது நாட்டின் மீது கடந்த 20 ஆண்டுகளாக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஏவி விடும் ஒரு நாட்டின் தலைவருக்கு, நமது நாட்டின் புதிய சகாப்தத்தின் துவக்கமான மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு அனுப்புவதா?

இதில் பங்கேற்குமாறு நாம் அழைப்பு விடுத்தால், அவர்களுடன் நட்புறவு பாராட்ட நாம் மிகவும் வளைந்துக் கொடுப்பதாக கருதி விடுவார்கள். பாகிஸ்தானுடனான அணுகுமுறையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான முந்தைய மத்திய அரசின் நிலைப்பாட்டை மோடி அரசும் பின்பற்ற வேண்டாம் என்றே நாங்கள் விரும்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டுள்ள ராஜபக்சே, பெருமைமிக்க பதவியேற்பு விழாவுக்கு வருவதா?- ராமதாஸ்


மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைக்கும் முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பாஜகவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவியேற்பு விழா டெல்லியில் வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவில் பங்கேற்க சார்க் அமைப்பின் தலைவர்களை அழைப்பது என்ற கொள்கை முடிவின் அடிப்படையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதையேற்று அவரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐ.நா. மனித உரிமை ஆணையரின் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டுள்ள ராஜபக்சேவை பெருமைமிக்க இந்த விழாவுக்கு அழைப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஜபக்சேவை அழைக்கும் முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media