BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 9 April 2014

40 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றினால், ஜெயலலிதா பிரதமராகும் நிலை உருவாகும் சாதகமான சாத்தியக்கூறுகள் உள்ளன.- சரத்குமார்

பெரம்பலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மருதைராஜாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பெரம்பலூர் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. எதிரும் புதிருமாக உள்ள ராமதாசும், விஜயகாந்தும் கூட்டணி அமைத்துள்ளனர். பா.ஜனதாவிற்கு பெரும்பான்மை கிடைக்காது என கருத்து கணிப்பு கூறுகிறது. நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுவதாக ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. அது நரேந்திர மோடி அலை அல்ல. அது மாய வலை. மோடி என்ற மாய அலைக்காக ஓட்டுகள் விழப்போவதில்லை.

தமிழ் நாடு, புதுச்சேரியில் 40 பாராளுமன்ற தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றினால் மத்தியில் நமது முதல் அமைச்சர், பிரதமராகும் நிலை உருவாகும் சாதகமான சாத்தியக்கூறுகள் உள்ளன.

மாபெரும் ஊழல் செய்த ஆ.ராசா மீதான வழக்கில் நீதிமன்றம் நிரபராதி என்று தீர்ப்பு கூறிய பின்னர் அவர் தேர்தலில் நிற்கலாம். ஆனால் அதற்கு முன்னரே அவருக்கு இந்த தேர்தலில் தி,மு.க. சீட்டு வழங்கி உள்ளது. 

பாரதீய ஜனதா கட்சி, சாதீய கட்சிகளுடன், கொள்கையே இல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. சாதிக்கட்சிகளை அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய விஜயகாந்த், பா.ம.க.வுடன் கைகோர்த்து செயல்படுகிறார். நரேந்திர மோடியை வைத்து நதிகளை இணைத்து தண்ணீர் கொடுக்கப்போகிறோம் என்கிறார். மோடி பிரதமரானால் ஈழம் பிறந்துவிடும் என்று வைகோ கூறுகிறார். இவர்கள் எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

திராவிட கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்துவந்த காங்கிரசை அனைத்து திராவிட கட்சிகளும் ஒதுக்கி வைத்துவிட்டன. தமிழ்நாட்டில் தனித்து விடப்பட்ட காங்கிரஸ் கட்சியில் தலைவர்களே அதிகம் உள்ளனர். தொண்டர்கள் இல்லாத காங்கிரஸ் கட்சி இனி தமிழகத்தில் தலைதூக்க முடியாது. மக்களே மூடுவிழா நடத்தி வைப்பார்கள்.

சட்டமன்ற உறுப்பினர் பணிகளையே இன்னும் 2 ஆண்டுகள் நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ளதால் சமத்துவ மக்கள் கட்சி இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.

நடிகை மனோரமா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

பிரபல மூத்த நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 30-ந் தேதி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள்.

ஆறு நாட்கள் அவர் தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டு இருந்த அவரின் உடல்நிலை சீரானதும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.  இரண்டு நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த அவர், பூரண குணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

ஸ்டாலின் தானாக கட்சி நிர்வாகிகளை நியமிக்க வேண்டுமென்றால், எதற்கு தேர்தல் நடத்த வேண்டும்?

திமுகவில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக திமுக பொருளாளர் ஸ்டாலினை குற்றஞ்சாட்டி, திமுக எம்.பி மற்றும் நடிகர் ஜே.கே. ரித்தீஷ் அவரை கடுமையாக சாடி பேசியுள்ளார். இது குறித்து சமீபத்தில் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறியதாவது:

தலைமையுடன் நெருக்கமாக இருப்பவர்கள் தவறு செய்துள்ளனர். தேர்தலில் அவர்கள் செய்த தவறுகளுக்கு நாங்கள் ஆதாரம் வைத்துள்ளோம். உள்கட்சித் தேர்தலை நடத்துவதாகக் கூறிவிட்டு, ஸ்டாலின் யாரை சுட்டிக்காட்டினாரோ, அவர்களுக்கு மட்டுமே பதவி கொடுத்தார்கள். ஸ்டாலின் தானாக கட்சி நிர்வாகிகளை நியமிக்க வேண்டுமென்றால், எதற்கு தேர்தல் நடத்த வேண்டும்? முதலிலேயே நியமனம் செய் திருக்கலாமே. உண்மையான கட்சிக்காரர்கள் தமிழகம் முழுவதும் கோபத்துடன் உள்ளனர்.

ராமநாதபுரத்தில் சுப.தங்க வேலனை மாவட்டப் பொறுப்புக்கு கொண்டு வந்தார்கள்.  என்னை கட்சிக்கு அழைத்து வந்தவர் ராமநாதபுரம் நகர செயலாளர் ஆர்.ஜி.ரத்தினம். அண்ணன் அழகிரியும், கனிமொழி அக்காவும் என்னை கட்சியில் வளர்ச்சிபெற வைத்தார்கள். தங்கவேலன் எனக்கு உறவுக்காரர்தான். அவருடன் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் எனக்கு இல்லை. ஆனால் தேர்தல் என்ற போர்வையில் அவரது ஆட்களுக்கு பதவி கொடுத்து, கட்சிக்கு உழைத்தவர்களை ஓரங்கட்டி விட்டார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் 90 ஆயிரம் புதிய உறுப்பினர்களை முறையாக சேர்த்துள்ளேன். எனக்கு தான் ஆதரவு அதிகமுள்ளது. அவர் நியாயமாக என்னுடன் போட்டி போட்டு பார்க்கட்டும்.

வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி நடந்துள்ளது. அழகிரிக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு உள்ளது. முதுகுளத்தூருக்கு அவர் அண்மையில் வந்திருந்தார். கட்சிக் காரர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி வரவேற்பு அளித்தனர். இந்த தகவல் கட்சித் தலைமைக்கும் தெரிந்திருக்கும். ஸ்டாலின் தலைமையை நிச்சய மாக கட்சிக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உள்கட்சித் தேர்தல் நடத்தியதில் அவரது அணுகுமுறை சரியில்லை. ஒரு கட்சியின் பொருளாளர், கட்சியில் இருக்கும் அனைவரையும் சமமாகப் பார்க்க வேண்டும். அவரே குறிப்பிட்ட ஆட்களை தனது ஆட்கள் என்று அணி சேர்த்தால், அவர் எப்படி தலைமைப் பொறுப்பில் அனைவரையும் அரவணைத்து செல்வார்?

கனிமொழி அக்காவுக்கும் கலைஞர் டிவிக்கும் எந்த சம்பந்த முமில்லை. ஆனால் தேவையில் லாமல் 2ஜி பழியை கட்சிக்காக சுமக்கிறார். அவரையும் சரியான உயர்ந்த நிலையில் கட்சித் தலைமை வைக்கவில்லை. தலை வரிடம் (கருணாநிதியிடம்) உள்ள பொறுமை அக்காவுக்கும் இருப்பதால், மிகுந்த பொறு மையுடன் கட்சி நடவடிக்கைகளை அனுசரித்து செல்கிறார்.

இவ்வாறு ஜே.கே.ரித்தீஷ் கூறியிருந்தார்.

நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து குஷ்பூ பிரச்சாரம்

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து மஞ்சூர், உதகை, கோத்த கிரி பகுதிகளில் நேற்று நடிகை குஷ்பூ பிரச்சாரம் செய்தார்.

மின்வெட்டு பிரச்சினைக்கு 3 மாதங்களில் தீர்வு காண்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 3 ஆண்டுகளாகியும் தீர்க்கவில்லை. தற்போது நாளொன்றுக்கு 14 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இல்லாத மின்சாரத்துக்கு மின் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இதனால் தொழில் துறை முடங்கியுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும், கொடநாடு எஸ்டேட் மக்கள் செல்லும் பாதையை திறக்காத ஜெயலலிதா, மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பாரா? வெற்றி பெற்றதும் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றுவதாகக் கூறினார். ஆனால் ஹெலிபேட் அமைத்ததில்தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அவரின் தேர்தல் பிரச்சாரத்துக்கு 40 ஹெலிபேட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவிடம் அரசியல் நாகரீகம் இல்லை. கடந்த தேர்தல்களில் வைகோ, விஜயகாந்த் ஆகியோரை தூக்கி எறிந்ததே இதற்கு உதாரணம். பிரதமர் கனவில் மிதக்கும் ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும். ஊழல் குறித்து பேசும் அவர் மீது 19 ஆண்டுகளாக சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது என்றார்.

கருணாநிதி கை காட்டுபவர்தான் அடுத்த பிரதமர். எனவே தி.மு.க.-வை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு பிரச்சாரத்தின் போது குஷ்பூ கூறியிருந்தார்.

கருணாநிதியைப் பொருத்தவரை திமுக எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ அது, மதச்சார்பற்ற கூட்டணி.

பாஜக தேர்தல் அறிக்கையை பொருளாதார, அரசியல் நிபுணர்கள் பாராட்டியுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய முயற்சியால் மாநில அரசுகளுக்கான முக்கியத்துவம், மரியாதை, உரிமைகள் கிடைக்கும்.

ராமர் சேது பாலம் நமது நாட்டின் கலாச்சார பாரம்பரிய சின்னமாகும். இப்பாலத்துக்கு குந்தகம் ஏற்படாமல் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த 4-வது பாதை வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே பரிந்துரைக்கப்பட்டது. ராமர் பாலத்துக்கு குந்தகம் ஏற்படாமல் சேது திட்டம் நிறைவேற்றுவதில் ஆட்சேபம் இல்லை.

பொது சிவில் சட்டம் பற்றி அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் அரசியலமைப்புச் சட்ட வரையறைக்கு உட்பட்டு ராமர் கோயில் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தீர்ப்பு வந்த பிறகு ராமர் கோயில் கட்ட சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். ராமர் கோயில் கட்டுவது எங்களது அடிப்படைக் கொள்கை.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்துள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவது குறித்து அனைத்து தரப்பினருடன் விவாதிக்கப்படும் என்றுதான் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவாதிப்பது எப்படி தவறாகும்?

அண்டை நாடுகள், அண்டை மாநிலம் குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழகத் தின் முக்கிய கோரிக்கைகளான இலங்கைத் தமிழர் நலன், தமிழக மீனவர்கள் நலன் குறித்த தகவல்கள் கொண்ட துணை தேர்தல் அறிக்கை வெளியாகும் என நினைக்கிறேன்.

நீலகிரி பாஜக வேட்பாளர் குருமூர்த்தி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. எங்கள் வேட்பாளர் விலைபோகவில்லை. அவர் தவறு செய்திருக்கலாம், துரோகம் செய்யமாட்டார். ஏ.பி. படிவத்தை எடுத்துச் செல்லும்போது விபத்து ஏற்பட்டதால் தாமதம் ஆகியிருக்கிறது. அதற்காக வேட்பு மனுவை நிராகரித்துள்ளனர். அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

பாஜக 272 இடங்களில் வெற்றி பெறும். கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும் இடங்களையும் சேர்த்தால் 300-ஐ தாண்டும். தேர்தலுக்குப் பிறகு யாரிடமும் ஆதரவு கேட்கும் நிலை நரேந்திர மோடிக்கு ஏற்படாது. தேர்தலுக்கு பிறகு அதிமுக பாஜகவோடு போய்ச்சேரும் என்று கூறுவது திசை திருப்பும் முயற்சியாகும். கருணாநிதியைப் பொருத்தவரை திமுக எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ அது, மதச்சார்பற்ற கூட்டணி. அக்கட்சி இல்லாத கூட்டணி, மதவாத கூட்டணி. அவர்கள் எங்களோடும் கூட்டணி வைத்துள்ளார்கள். மதவாத கூட்டணி கோஷம் மக்களிடம் எடுபடாது. பாஜகவுக்கு கோகுலம் மக்கள் கட்சியும், தமிழக மருத்துவ நாவிதர் பேரவையும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இவ்வாறு இல.கணேசன் கூறியிருந்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media