BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 18 April 2014

9 ஆண்டு காலம் மத்திய அரசில் பதவி, ஆதாயம் அனுபவித்து விட்டு, தேர்தல் வந்ததும் மதச்சார்பின்மை குறித்து நமக்கே வகுப்பு எடுக்கிறது திமுக

 பெரம்பலூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.ராஜசேகரனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நேற்று பல்வேறு ஊர்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். பெரம்பலூரில் அவர் பேசியதாவது:

“தீர்க்க தரிசனத்தோடு தமிழ்நாட்டில் கிராமங்கள் தோறும் பள்ளிகளை கொண்டு வந்தது காங்கிரஸ். மாறாக திராவிடக் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அங்கெல்லாம் மதுபானக்கடைகளை கொண்டு வந்து ஏழைத் தாய்மார்களின் வயிற்றில் அடிக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் இந்த நிலைமையை உங்களால் மாற்ற முடியும்.

காங்கிரஸ் பேரியக்கத்தை எதிர்த்து 4 அணிகள் நிற்கின்றன. இதில் பாஜக மதவாதத்துக்கு பெயர் போன கட்சி. அதிமுக, மத்திய அரசு திட்டங்களை மக்களுக்கு சேராது தடுத்த கட்சி. இந்த தேர்தலில் மக்கள் அவர்களை மன்னிக்காது பாடம் புகட்டியாக வேண்டும். 9 ஆண்டு காலம் மத்திய அரசில் பதவி, ஆதாயம் அனுபவித்து விட்டு, தேர்தல் வந்ததும் மதச்சார்பின்மை குறித்து நமக்கே வகுப்பு எடுக்கிறது திமுக. கம்யூனிஸ்ட் கட்சிகளோ காங்கிரஸ் ஆதரவு நிலையிலிருந்து விலகியதிலிருந்தே தடுமாற்றத்தில் தவிக்கிறார்கள். அதிமுக, திமுக கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கான தேர்தல் அல்ல இது.

மத்தியில் நிலையான ஆட்சி வேண்டுவோருக்கு, மதச்சார்பற்ற ஆட்சி வேண்டுவோருக்கு, நிம்மதியான ஆட்சி வேண்டுவோருக்கான தேர்தல் இது. மத்திய அரசின் திட்டங்களை பெற்றுத் தர முடிந்த வேட்பாளரையும் தேர்ந்தெடுக்க வேண்டிய தேர்தல் இது” என்றார்.

இவ்வாறு பெரம்பலூரில் பிரச்சாரம் செய்தார் ஜி.கே.வாசன்.

ஆசிரியரை அவமானப் படுத்தி, தற்கொலைக்கு தூண்டிய கல்லூரி மாணவர்கள் கைது

சதீஷ் (24)என்பவர் திருநெல்வேலி அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதே கல்லூரியில் சுதாகர் (30) ஓட்டுநராகப் பணிபுரிகிறார்.

பாலிடெக்னிக் கல்லூரியில் சில மாணவர்கள் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதாக சதீஷிடம், ஓட்டுநர் சுதாகர் கூறியுள்ளார். அந்த மாணவர்களை சதீஷ் கண்டித்துள்ளார். ‘பெற்றோரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாகவும்’எச்சரித்தார். அப்போது அந்த மாணவர்கள் சதீஷை தாக்க முற்பட்டனர். அதை ஓட்டுநர் சுதாகர் தடுத்தார். புதன்கிழமை மாலை சதீஷ் தனது வீட்டில் இருந்தபோது, காரில் வந்த மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட் டாயமாக காரில் அழைத்துச்சென்றனர். பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் வைத்து அவரை கேலி, கிண்டல் செய்து தாக்கியுள்ளனர். வெகுநேரமாகியும் சதீஷ் வீடு திரும் பாததால், அவரைத் தேடி அவரது தம்பி அருண் அங்கு சென்றார். அப்போது, அவரையும் மாணவர்கள் தங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொல்லி அவமானப்படுத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரையும் எச்சரித்துவிட்டு, மாணவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

போலீஸில் புகார் செய்யலாம் என்று சதீஷ் வீட்டில் தெரிவித்தபோது, பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. வெறுப்படைந்த சதீஷ் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கு போட்டு தற் கொலை செய்துகொண்டார். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஆசிரியர் சதீஷை தாக்கிய மாணவர்கள் சிலர், கீழநத்தத்தில் உள்ள கல்லூரி வேன் ஓட்டுநர் சுதாகர் வீட்டுக்கு சென்று அவரையும், அவரது மனைவி செல்வியையும் தாக்கியுள்ளனர். இதில், காயம் அடைந்த இத்தம்பதி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சதீஷை தற்கொலைக்கு தூண்டிய தாகவும் அவரை கொலை செய்ய முயற்சித்ததாகவும் சுதாகர் மற்றும் செல்வியை கொலை செய்ய முயற் சித்தாகவும் செல்வியை மானபங்கம் செய்ததாகவும் மொத்தம் 20 மாண வர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள், ஆனால் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும்- அழகிரி

முன்னாள் மத்திய அமைச்சரும், தென்மண்டல திமுக முன்னாள் செயலாளர் மு.க.அழகிரி காரைக்குடியில் காதணி விழா ஒன்றில் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அழகிரி,  "திமுகவில் என்னை நீக்கியதற்கு இதுவரை காரணம் தெரிவிக்கவில்லை. அதற்கான கடிதம்கூட எனக்கு இதுவரை வரவில்லை. இந்தத் தேர்தலில் நமது பலத்தை நிரூபிக்க, திமுகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். திமுக வேட்பாளர்கள் மூன்றாவது இடத்திற்குக்கூட வரக்கூடாது.

சிவகங்கையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், எனது மகன் விபத்தில் சிக்கியபோது மூன்று முறை வந்து பார்த்தார். கார்த்தியின் தந்தை சிதம்பரம் அமைச்சராக இருந்த அதே அமைச்சரவையில் நானும் அமைச்சராக இருந்தேன். துறை ரீதியான சந்தேகங்களுக்கு அவரது வீட்டிற்கு எந்தவித முன் அனுமதி இன்றி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் கார்த்தி சிதம்பரமும் எனது நண்பர்தான். இதே தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எச்.ராஜா என்னிடம் நேரடியாக ஆதரவு கேட்டார். அவரும் எனது நண்பர் தான். நான் யாருக்கும் ஆதரவு தரவில்லை. எனக்கு அனைவரும் நண்பர்கள் தான். இருவரில் யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் ஓட்டுப் போடுங்கள். ஆனால், திமுக தோற்கடிக்கப்பட வேண்டும்.

என்னைச் சந்திக்கும் திமுக நிர்வாகிகள் உடனடியாக நீக்கப்படுகிறார்கள். எனவே, இவர்களுக்கு நாம் யார்? என்றும், நமது பலம் என்ன? என்றும் இந்தத் தேர்தலில் நிரூபிக்க வேண்டும்"

இவ்வாறு அழகிரி பேசினார்.

முதல்வர் ஜெயலலிதா இந்த ஆட்சியில் மக்களுக்காக என்ன செய்துள்ளார்? எதையுமே செய்ய இந்த அரசு மக்களுக்கு தேவையா?- கனிமொழி

திண்டுக்கல் தி.மு.க. வேட்பாளர் காந்திராஜனை ஆதரித்து நேற்று திண்டுக்கல்லில் திமுக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் செய்தார். அப்பொழுது அவர், முதல்வர் ஜெயலலிதா இந்த ஆட்சியில் மக்களுக்காக என்ன செய்துள்ளார். என்ன சாதனை செய்துள்ளார். எதையுமே செய்ய இந்த அரசு மக்களுக்கு தேவையா? அ.தி.மு.க. ஆட்சியை தூக்கியெறிய மக்கள் தயாராக வேண்டும் என்று அதிமுக அரசை கடுமையாக சாடி பேசியிருந்தார். மேலும் அவர் பேசியதாவது:

கடந்த 3 ஆண்டுகளில் மின்சாரம் இல்லாமல் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சிறு, குறுதொழில்கள் நலிவடைந்துள்ளன. விலைவாசி, முதல்வர் ஜெயலலிதா வரும் ஹெலிகாப்டரைபோல் உயர உயர பறக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு காத்து கிடப்பதே வேலையாகிவிட்டது. குடிநீருக்காக காத்து கிடக்கின்றனர். ரேஷன் பொருளுக்காக ரேஷன் கடைகளில் காத்து கிடக்கின்றனர். ரேஷன் கடை ஊழியர்கள் ஒரு மாதம் அரிசி, சீனி வழங்கினால், மறுமாதம் கொடுப்பதில்லை.

ரேஷன் பொருள்கள் அம்மா உணவகங் களுக்குச் செல்கின்றன. அதனால், எப்போது சென்றாலும் அடுத்த மாதம் வாங்கள் என ஒவ்வொரு மாதமும் ஏதாவது காரணம் கூறி பொருள்கள் வழங்காமல் ரேஷன் கடை ஊழியர்கள் பெண்களை அலைக்கழிக்கின்றனர்.

சேது சமுத்திரத் திட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை தமிழக அரசு நிறுத்திவைத்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த குடிநீர் திட்டங்களை அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்ததால் தற்போது தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மோடியுடன் ஒப்பிடும்போது ஜெயலலிதாவும் அவரது மதச்சார்பு கொள்கைகளை கடைப்பிடிப்பவர்தான். பிறகு எப்படி இவரால் மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சியை ஏற்படுத்த முடியும்?

இவ்வாறு கனிமொழி பேசியிருந்தார்.

குஜராத்தில் இருந்து வரும் குழந்தை கூட தமிழகம் வந்தால், இங்குள்ள மின் நிலையை பார்த்து ஆச்சரியப்படும்: மோடி

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஈரோட்டில் நேற்று நட‌ந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது:

தமிழக மக்கள் மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை நான் விரும்பவில்லை. குஜராத்தில் தற்போது மின் பற்றாக் குறை இல்லை. குஜராத்தில் இருந்து 12 வயதுள்ள ஒரு குழந்தை தமிழகத்துக்கு வந்தால், இங்குள்ள மின் நிலையை பார்த்து ஆச்சரியப்படும் நிலை உள்ளது.

தமிழகத்தின் பல கட்டமைப்புத் திட்டங்கள் தாமதமாவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்தான் பொறுப்பு என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த பெண் காங்கிரஸைச் சார்ந்தவர். அவர்தான் தமிழகத்துக்கும், நாட் டுக்கும் பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளார். அது தமிழகத்தின் தவறோ, தமிழக மக்களின் தவறோ அல்ல. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மாநிலங்களவைத் தேர்தல் மூலமாக வெற்றி பெற்றவர்.

பசுமை பாதுகாப்பு என்ற பெயரில் திட்டங்களை அவர் முடக்கிவிட் டார். பசுமை, சுற்றுச்சூழல் என்ற பெயரில், ‘ஜெயந்தி டேக்ஸ்' என்ற வரி மூலம் நாட்டை விற்றுவிட்டனர். பசுமையை காரணம் காட்டி முடங் கிய திட்டங்கள் அந்த அமைச்சரை மாற்றியவுடன் இரவுடன் இரவாக 250க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் தாமதமானதற்கு யார் பொறுப்பு ஏற்பது? இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை இழந்தனர்.

18 முதல் 28 வயது வரையுள்ள இளைஞர்களுக்கு இந்தத் தேர்தல் முக்கியமானது. உங்களது கனவு களை நிறைவேற்ற பல வாய்ப்புகள் இன்றைய உலகில் உள்ளன. அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media