BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 7 May 2014

மம்தா , மோடி வார்த்தைப் போர் உச்சகட்டத்தை எட்டியது !!

மம்தா பானர்ஜி பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியை கழுதை எனத் திட்டியுள்ளார் .மேலும் அவர் கூறும் போது ,
மோடியை மேற்குவங்களத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதித்தது எங்கள் பெருந்தன்மை . நாங்கள் நினைத்து இருந்தால் அவரை விமான நிலையத்திலே திரும்பி அனுப்பி இருக்கலாம் என்று கூறினார் .


ஏற்கனவே மோடி மற்றும் மம்தா பானர்ஜி மாறி மாறி குறைக் கூறி கொண்டு இருக்கும் இந்த வார்த்தை இந்த நேரத்தில் கடும் மோதலை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

திக் திக் திருமா, சிதம்பரத்தில் வெல்வாரா? அந்த மூன்று நாட்களில் நடந்தது என்ன?



சிதம்பரம் தொகுதியில் ஸ்டார் வேட்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார், திமுக கூட்டணியில் உள்ளதாலும், சிதம்பரம் தொகுதியில் தலித்களின் அதிகமாக உள்ளதாலும் சென்ற முறையை போன்றே இம்முறையும் எளிதாக வெல்லலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எண்ணியிருந்தனர்.

எப்போதும் திருமாவுக்கு கடும் போட்டியை கொடுக்கும் பாமகவோ ஆரம்பத்தில் இருந்தே சொதப்பியது, முதலில் ஒரு வேட்பாளரை அறிவித்தார்கள், பிறகு அவருக்கு பதிலாக கடைசி நேரத்தில் கட்சியில் இணைந்த மணிரத்தினம் என்பவருக்கு சீட்டு கொடுத்தார்கள், ஆனால் அவரின் வேட்புமனு தள்ளுபடி செய்ய அவரது மனைவி சுதா மணிரத்தினம் பாமக வேட்பாளர் ஆனார், மாம்பழத்திற்கு வாக்களிக்க சொல்லும் சுவர் விளம்பரங்களில் கோபி என்றும் மணிரத்தினம் என்றும் சுதா மணிரத்தினம் என்றும் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது, மேலும் மணிரத்தினம் கட்சிக்கு புதியவர் என்பதால் கட்சியை ஒருங்கிணைத்து தேர்தல் வேலைகள் செய்ய திணறினார்கள்.

அதிமுகவோ ஆரம்பத்திலிருந்தே அசட்டையாக இருந்தது, தேர்தல் ஸ்பெசலிஸ்ட் செங்கோட்டையன் சிதம்பரம் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் அவர் சிதம்பரத்தில் இண்டு இடுக்கெல்லாம் புகுந்து வந்தார், பாமகவின் ஆரம்ப சொதப்பல்கள், தொகுதியில் போட்டியே அதிமுக மற்றும் திருமாவுக்கு இடையில் இருந்தது.

தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன் பாமக வேட்பாளரின் கணவர் மணிரத்தினம் மணியை களத்தில் இறக்கினார், திருமாவை தோற்கடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் மணிரத்தினம் இறக்கிய பணம் களத்தை மாற்ற ஆரம்பித்தது, இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய மூன்று நாட்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திமுகவினருடன் மோதிக்கொண்டனர், திருமாவளவன் திமுக மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தை பொதுவில் பெயர் சொல்லி அழைத்தார் என்றும் அது தொடர்பாக திமுக மற்றும் விசிக தொண்டர்களிடையே மோதல் எழுந்தது என்றும் கூறப்படுகிறது, இதையடுத்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிர் விடுதலை சிறுத்தைகளை கட்சி அலுவலகத்துக்கே வரவேண்டாம் என்று கோபமாக கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு திமுக பொறுப்பாளர் ஒருவரின் மகள் தலித் ஒருவரை காதலித்து வீட்டைவிட்டு வெளியேறு திருமணம் செய்து கொண்டார் என்றும் அது தொடர்பாக நடைபெற்ற பிரச்சினைகளினாலும் திமுகவினர் திருமாவுக்கு வேலை செய்வதை பல இடங்களில் நிறுத்திவிட்டனர் என்றும் கூறப்பட்டது, சிதம்பரம் தொகுதியில் வடக்குமாங்குடி கிராமத்தில் தலித் குடியிருப்பு பகுதியில் பாமகவுக்கு ஓட்டு கேட்க சில திமுகவினர் சென்றதாகவும் அங்கே சிலர் பொண்ணு கொடுக்கின்றீர்களா ஓட்டு போடுகிறோம் என்று கேட்டதாகவும் அதை அடுத்து தேர்தல் முடிந்த பின் பலர் ஒன்று சேர்ந்து தலித் குடியிருப்பில் இருந்தவர்களை தாக்கியதாகவும் கூறப்பட்டது, ஆனால் இதை தலித் தரப்பினர் மறுக்கின்றனர், பாமகவுக்காக ஓட்டு கேட்டபோது நாங்கள் திருமாவுக்கு தான் வாக்களிப்போம் என்றதால் தான் எங்களை தாக்கினார்கள் என்று கூறுகின்றார்கள். தேர்தலுக்கு சில நாட்கள் முன் இந்த பகுதியில் நடந்த சச்சரவுகள் தொகுதி முழுக்க பரவியது.

பாமக வேட்பாளர் தேர்தலுக்கு முந்தைய மூன்று நாட்களிள் செய்த செலவும், கட்சி வித்தியாசமின்றி வன்னியர்கள் அனைவரும் பாமகவை ஆதரித்ததும் கடைசி மூன்று நாட்களில் திமுக விடுதலை சிறுத்தைகளிடையே ஏற்பட்ட  பிரிவும் அதனால் திமுகவினர் திருமாவுக்காக வேலை செய்யாமல் தவிர்த்ததும் திருமாவளவன் அவர்களை 16ம் தேதி என்ன மாதிரியான முடிவு வருமோ என்று திக் திக்கென்று காத்திருக்க வைத்துள்ளது.

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெல்வாரா உங்கள் கருத்து என்ன?

முல்லை பெரியாறு வழக்கு இழுத்தடிக்கப்பட்டதற்கு காரணம் கருணாநிதியின் திமுக அரசு-வைகோ

முல்லைப் பெரியாறு வழக்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை கடுமையாக சாடியும், உச்ச நீதிமன்றத்தில் சரியான அணுகுமுறையைக் கையாண்டதாக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தும் மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை வெளியிட்டு இருந்தார், அதில் அவர் கூறியிருப்பதாவது:

"தமிழகத்தின் முக்கிய வாழ்வாதாரங்களுள் ஒன்றான முல்லைப் பெரியாறு பிரச்சினையில், உச்ச நீதிமன்றம் இன்று தந்த மகத்தான தீர்ப்பால், கேரளத்தின் அராஜகப் போக்குக்கு மரண அடி கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் உரிமையும், நீதியும் பறிபோகாமல் பாதுகாக்கப்பட்டு உள்ளது.

2006 ஆம் ஆண்டு, பிப்ரவரி 27 ஆம் நாள், உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என்று தந்த தீர்ப்பைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டு, நீர்மட்டத்தை உயர்த்த முடியாது என்றும், அணையை உடைப்பதற்கும் உரிமை உண்டு என்றும், கேரள அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம், இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிராக விடப்பட்ட பகிரங்கமான சவால் ஆகும்.

கேரளத்தின் அராஜகப் போக்கைத் தடுக்கும் கடமையில், கேரள அதிகாரிகள் ஆட்டிப் படைத்து சோனியா காந்தி இயக்கிய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தவறியது; தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் இழைத்தது; இந்திய இறையாண்மைக்கும் கேடு செய்தது.

ஆனால், இன்று உச்சநீதிமன்றம், கேரளம் நிறைவேற்றிய சட்டத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்து இருப்பது, இந்திய இறையாண்மையைப் பாதுகாக்கும் நம்பிக்கையைத் தந்து உள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 33 வாய்தாக்கள் இழுத்தடிக்கப்பட்டதற்கு கருணாநிதியின் தி.மு.க. அரசே காரணம் ஆகும். உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தமிழகத்திற்கு நீதியை நிலைநாட்டித் தீர்ப்பு வர இருந்த வேளையில், வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றச் சொல்லிக் கேரள அரசு, சூழ்ச்சியாக முன்வைத்த கோரிக்கைக்கு கருணாநிதி அரசு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை; எழுத்து மூலமாக இசைவும் தந்தது. அதனால், தமிழ்நாட்டுக்குக் கிடைத்த நீதியை இழந்து விடுவோமோ என்ற கவலை ஏற்பட்டது.

கேரள அரசும், அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்கு முழுமூச்சாக முயன்றன. அதைத் தடுக்க நாம் கடுமையாகப் போராடினோம்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன், இடிமுழக்கம் சேகர், சின்னமனூர் இராமமூர்த்தி ஆகிய மூவரும் முலலைப்பெரியாறைக் காக்கத் தங்கள் உயிர்களைப் பலியிட்டனர். கேரளத்தின் அநீதியைத் தடுக்க அனைத்துச் சாலைகளையும் மறித்து முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். தமிழகம் ஒட்டுமொத்தமாகக் கொந்தளித்தது.

இன்றைய தீர்ப்பு மிகுந்த நிம்மதியைத் தந்து உள்ளது. கேரளத்தின் சதித்திட்டம் தகர்ந்தது. இதற்குப் பின்னரும், கேரளத்தில் முழு அடைப்புக்கு ஏற்பாடு செய்வதும், சட்டமன்றத்தைக் கூட்டச் சொல்லி, அச்சுதானந்தன் சகுனியாக ஆலோசனை சொல்வதும் சகிக்கிக் கூடியது அல்ல.

கேரளச் சட்டமன்றம் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுமானால், கேரள அரசை டிஸ்மிஸ் செய்து, சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும். அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவு பயன்படுத்தப்படுவதைக் கடுமையாக எதிர்ப்பவன் நான். ஆனால், ஒன்றுபட்ட இந்தியாவில் இன்னமும் எனக்கு நம்பிக்கை இருப்பதால், நாம் நேரடியாகக் கேரளத்தோடு எதிர் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்பதால், கேரள அரசைக் கலைக்க வேண்டுகிறேன்.

இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தில் சரியான அணுகுமுறையைக் கையாண்ட தமிழக அரசு, உடனடியாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்குப் போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்த நடவடிக்கைக்குத் தமிழக மக்கள் ஒன்றுபட்டுத் தோள் கொடுப்போம்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுத் தமிழக மக்கள் தைப்பொங்கல் விழாவை நடத்துவது போல் கொண்டாட வேண்டுகிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

கோச்சடையான் ரிலீஸ் மே 23-க்கு தள்ளிவைப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு


கோச்சடையான் திரைப்படம் முதலில் அறிவித்தபடி மே 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகாது என்றும், இதற்கு பதிலாக மே 23-ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், கோச்சடையான் படத்தின் ரிலீஸ் இம்மாதம் 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டதாக ஈராஸ் நிறுவனம் இன்று (புதன்கிழமை) அறிவித்தது. தொழில்நுட்ப காரணங்களால்தான் படத்தை குறித்த தேதியில் வெளியிட முடியாமல் போனதாக, செய்திக் குறிப்பில் ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீட்டிற்கான தேதியே பலமுறை ஒத்திவைக்கபப்ட்டு, பின்னர் மார்ச் 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

வரும் 9ம் தேதியன்று, நடிகர் சந்தானம் நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மற்றும் ஆர்.எஸ் இன்ஃபோடைன்மென்ட் தயாரிப்பில் யாமிருக்க பயமே ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன‌.

ஆசிரியை உமா மகேஸ்வரியை கொலை செய்த‌ மாணவனை 2 ஆண்டுகள் சிறுவர் இல்லத்தில் அடைக்க உத்தரவு


கடந்த 2012-ம் ஆண்டு சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த மாணவர் ஒருவர் தனது ஆசிரியை உமா மகேஸ்வரியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

ஆசிரியரை சக மாணவர்கள் முன்னால் கொலை செய்த அந்த மாணவனை போலீஸார் கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பின்னர் மாணவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.

போலீஸ் விசாரணையின் போது மாணவன் அளித்த வாக்குமூலத்தில், படிப்பில் கவனம் செலுத்துமாறு ஆசிரியை உமா மகேஸ்வரி அடிக்கடி தன்னிடம் கூறியதும். தனது படிப்பு தொடர்பாக பெற்றோரிடம் தெரிவிப்பேன் என கூறியதும் கோபத்தை ஏற்படுதியதாகவும்,அதனாலேயே அவரை கொலை செய்ததாகவும் கூறினார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சிறார் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவனை இரண்டு ஆண்டுகள் சிறுவர் இல்லத்தில் அடைக்குமாறு உத்தரவிட்டது.

ஒரு ஓட்டுக்கு 8000 ரூபாய், தேர்தலில் பொழிந்த பணமழை

ஒரு ஓட்டுக்கு 8000 ரூபாய், தேர்தலில் பொழிந்த பணமழை


2009 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரை திமுக கூட்டணி கட்சிகளால் வழங்கப்பட்ட்டது, 2011 சட்டமன்றத்தேர்தலில் ஓட்டுக்கு தரப்படும் பணம் குறைந்து தற்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுக்கு வெறும் 200 ரூபாய் தான் வழங்கப்பட்டதாகவும் அதுவும் அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்படாமல் பெண்கள் மற்றும் குறிப்பிட்ட வாக்காளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது, இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது, சீமாந்திராவில் சந்திரபாபு கட்சிக்கும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது, இரண்டு கட்சிகளுமே கொழுத்த பணக்காரர்களையே தேர்தலில் நிறுத்தியுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி கட்சியினர் பல இடங்களில் ஒரு ஓட்டுக்கு 8000 ரூபாய் வரை தந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பல இடங்களில் மக்கள் காசுக்கு பதிலாக செல்போன் கேட்ட கதைகளும் நடந்துள்ளன.

மற்ற மாநிலங்களில் ஓட்டின் விலை ஏறிக்கொண்டே போகிறது, ஆனால் விலைவாசி ஏறினாலும் தமிழ்நாட்டில் மட்டும் ஓட்டின் விலை மட்டும் குறைந்து கொண்டே போகிறது

ஜல்லிக்கட்டுக்கு தடை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


ஜல்லிக்கட்டுக்கு முழுமையாகத் தடை விதிக்கக் கோரி விலங்குகள் நல அமைப்பு சார்பில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, மத்திய ஜல்லிக்கட்டு பேரவை, விலங்குகள் நல வாரியம் ஆகியோர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்கவும் காளைகள் துன்புறுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும் விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமிக்கலாம் என மத்திய அரசு சார்பில் விவாதம் நடந்தது.

ஆனால், போட்டிகளின் போது கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படாததால், காளைகள் துன்புறுத்தப்படுவதாக ஜல்லிக்கட்டிற்கு தடைவிதிக்க வேண்டும் என விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் காளைகள் துன்புறுத்தப்படுவதாலும், அதனை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளவில்லை என்பதாலும் ஜல்லிக்கட்டு நடத்தக் தடை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது.

முல்லை பெரியாறு விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் நாளை முழு அடைப்பு


முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று கேரள அரசு பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்க்கும் விதமாக கேரளாவில் நாளை முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கியில் செய்தியாளர்களை சந்தித்த முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குழு, நாளை கேரளா முழுவதிலும் இந்த தீர்ப்புக்கு எதிராக முழு அடைப்பு நடத்தப்படும் என்று தெரிவித்தது.

பெரியாறு அணை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, அணையின் ஆபத்தான நிலையை தெளிவுபடுத்த கேரள அரசு தவறிவிட்டதாக கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் குற்றம்சாட்டியுள்ளார். .

சேலம், நாமக்கல் தொகுதிகளில் மறுவாக்கு பதிவை எதிர்த்து ஜெயலலிதா தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்


சேலம், நாமக்கல் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் நாளை  மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்தது. இந்நிலையில் 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "சேலம், நாமக்கல் தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதம் நடந்ததாக எந்த ஒரு அரசியல் கட்சியும் புகார் தெரிவிக்கவில்லை. ஆனால் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையான தேர்தல் பணியை தற்போதைய நடவடிக்கை சந்தேகத்துக்குள்ளாக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

ஆபாச இணைய தளங்களை முடக்குவது சாத்தியமில்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு 


 “இந்தியாவில் ஆபாச இணைய தளங்கள் பெருகிவிட்டன. அவற்றை முடக்க உத்தரவிட வேண்டும்” என்று கமலேஷ் வாஸ்வானி என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் பஞ்ச்வானி, “ஆபாச இணைய தளங்களை முடக்க இந்தியாவில் போதிய சட்டங்கள் இல்லாததால், இத்தகைய இணைய தளங்கள் பெருகி விட்டன. நாட்டில் 20 கோடி ஆபாச வீடியோக்கள், காட்சிகள் இலவசமாக கிடைக்கின்றன” என்று வாதிட்டார்.

அப்போது மத்திய அரசின் பதில் மனுவை, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.வி.விஸ்வநாதன் தாக்கல் செய்தார். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஆபாச இணைய தளங்கள் அனைத்தையும் முடக்குவது இயலாத காரியம். அப்படி செய்தால் அதே வார்த்தைகள் பயன்படுத் தப்பட்டுள்ள நல்ல இலக்கியங் களும் முடக்கப்பட்டு விடும். ஆபாச தளங் களை முடக்க வேண்டும் என்றால் அதற்கு நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கணினி தயாரிக்கும் நிறு வனங்கள் அதற்குரிய மென்பொருளுடன் அதை விற்பனை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக் கப்பட்டது.

ஆபாச இணைய தளங்கள் முடக்கப்பட வேண்டும் என்பது குறித்து உங்கள் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்!

முல்லை பெரியாறு வழக்கு - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .

முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என  கேரள அரசை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .

அந்த தீர்ப்பில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும் , அணை வலுவாக உள்ளதால் புதிய அணை தேவையில்லை  என்றும் குறிப்பிட்டது . அணையை பராமரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கும்படி கேட்டுள்ளனர் .இந்தக் குழுவில் கேரள மற்றும் தமிழக அரசின் அதிகாரிகள் இடம் பெறுவர் என்று தீர்ப்பு வழங்கியது .

மேலும் நீதிமன்ற அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்ட
கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


இந்த தீர்ப்பை தொடரந்து கேரளாவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது . மேலும் நாளைக் கடையடைப்பு நடக்க உள்ளதாகவும் தெரிகிறது .

டிவிட்டரிலும் தொடர்கிறது ரஜினியின் சாதனை! 24 மணி நேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் மேலானோர் பின் தொடர்ந்தனர்

நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டர் இணையத்தளத்தில் தன்னை இணைத்துக் கொண்ட சில மணி நேரங்களிலேயே அவருக்கு ஆயிரக்கணக்கான பின் தொடர்வோர் குவிந்தனர்.

'கோச்சடையான்' திரைப்படம் இந்த வாரம் வெளிவர இருக்கும் நிலையில் நேற்று ரஜினிகாந்த் தன்னை டிவிட்டரில் இணைத்து கொண்டது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இருப்பினும்,  அவர் டிவிட்டரில் சேர்ந்து 24 மணி நேரத்தில் அவர் டிவிட்டர் கணக்கில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாகவும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 100க்கும் மேற்பட்டோர் அவரை பின்தொடருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது முதல் டிவீட்டில் ‘இறைவனுக்கு வணக்கம். அனைவருக்கும் வணக்கம். என் ரசிகர்கள் எல்லோருக்கும் ஒரு மிக பெரிய நன்றி. இந்த டிஜிட்டல் பயணத்தை ஆரம்பிக்க உற்சாகமாக உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஒரு டுவீட் செய்தி இதுவரை 13ஆயிரத்திற்கும் அதிகமான முறை மீண்டும் மறு டுவீட் செய்யப்பட்டுள்ளது.

பாஜக தலைவர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல பிரபலங்களும், செய்தி ஊடகங்களும் ரஜினியை டுவிட்டரில் பின் தொடருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர் என பிரியங்கா கூறவில்லை; அவரது செயல்களே தரம் தாழ்ந்து இருப்பதாக விமர்சித்தார்- ராகுல் காந்தி


நரேந்திர மோடி தரம் தாழ்ந்த அரசியல் செய்வதாக பிரியங்கா காந்தி விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் உ.பி.யில் நேற்று (செவ்வாய்கிழமை) பேசிய மோடி: "நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதாலேயே எனது அரசியல் தரம் தாழ்ந்தது என பிரியங்கா விமர்சிக்கிறார்.பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறப்பது குற்றமா?" என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் அமேதியில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார் ராகுல் காந்தி.

அப்போது அவரிடம் மோடியின் கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல்: "நரேந்திர மோடியின் எண்ணமும், செயலும் தான் தரம் தாழ்ந்ததாக இருக்கின்றன. மோடியின் கொள்கைகளில் குரோதம் நிறைந்திருக்கிறது" என்றார்.

நடிகர் சிவக்குமார் மீது ஈரோடு ஆட்சியரிடம் புகார்


கொங்கு நாட்டு வேட்டுவ கவுண்டர் சமுதாயத்தையும், பொற்கொல்லர் சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் வகையில் ‘பொன்னி வள வீர சரித்திரம்’ என்ற தொலைக்காட்சி தொடர் ஒன்று ஒளிபரப்பு ஆகிறது என்றும் அதில் நடிகர் சிவக்குமார் இன உணர்வைத் தூண்டும்விதமாக பின்னணி வசனம் பேசியிருப்பதாகவும் ஈரோடு ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் சிவக்குமார் கூறியதாவது:

கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன் கரூர் பகுதிகளில் நடந்த வரலாற்று புதினம் இது. உடுக்கை பாடலாகவும், நாட்டுப்புறப் பாடல் வழியாகவும் பிரபலம் ஆனது. கனடாவைச் சார்ந்த பிருந்தா பெக் என்கிற பெண்மணி கரூர் பகுதிகளில் 1962 முதல் 1964 வரை தங்கியிருந்து தன்னுடைய சொந்தப் பணத்தை எல்லாம் இழந்து ஆராய்ச்சி செய்து 40 மணி நேர ஆடியோவாக பதிவு செய்திருக்கிறார். இப்படி நல்ல வரலாற்று விஷயங்களை சேகரித்து கொடுத்ததற்காக தமிழ்நாட்டில் உள்ள நாம் எல்லோரும் பிருந்தா பெக்கிற்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்க வேண்டும். அதேபோல ‘பொன்னழகர் என்னும் கல்லழகர் அம்மானை’, ‘வரகுண்ணா பெருங்குடி கூட்டம் பொன்னர் சங்கர் வரலாற்று நூல்’, ‘அண்ணன்மார் சுவாமி கதை’ ஆகிய வரலாற்று நூல்களை எல்லாம் ஆதாரமாக வைத்து 1988- ம் ஆண்டு 503 பக்கத்தில் வெளிவந்த ‘பொன்னர் சங்கர்’ வரலாற்று நூலை கருணாநிதி எழுதியிருக்கிறார். இதற்காக கொங்கு நாட்டு மக்களும் அவருக்கு நன்றி கூறினார்கள். சமீபத்தில் இதை பொன்னர் சங்கர் என்ற திரைப்படமாகவும் எடுத்தார். இவற்றை எல்லாம் ஆதாரமாகக் கொண்டு வரலாற்றுப் பதிவாக வந்ததைத்தான் தற்போது அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சில நிமிட குரல் பதிவாகக் கொடுத்திருக்கிறேன். தற்போது இந்த விஷயத்தை சாதிப் பிரச்சினையாக எடுத்துக்கொள்வது வெளிநாட்டிலிருந்து வந்திருந்து இங்கே தங்கி ஒரு வரலாற்று சிறப்புமிக்க விஷயத்தைப் பதிவு செய்த அந்த பெண்மணியைக் கொச்சைப்படுத்துவதாகவே தெரிகிறது. சாதி உணர்வுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன் நான். என் குழந்தைகளுக்கே வெவ்வேறு சாதிகளில் மணம் முடித்திருக்கிறேன். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரிகளைக் கடைபிடிப்பவன்.

இவ்வாறு சிவக்குமார் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகை ஒரு மணி நேரம் மூடப்பட்டது .

நேற்று மாலை அதிபர் ஒபாமாவின் மகளை பின் தொடர்ந்து ஒரு வாகனம் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தது . இதனால் உஷாரடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த காரை தடுத்து நிறுத்தினர் . பின்னர் வாகனம் வெடிகுண்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது . இதனால் வெள்ளை மாளிகை ஒரு மணி நேரம் மூடப்பட்டது . உள்ளே செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டன .

இன்று எட்டாம் கட்ட தேர்தல் !!

ஏழு மாநிலங்களில் உள்ள 64 தொகுதிகளில் இன்றைய எட்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது . இன்றைக்கு மட்டும் 897 வேட்பாளர்களின் விதி நிர்ணயிக்கப்படும்  . இந்த 64 தொகுதிகளில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் 31 இடங்களையும் , பாஜக 5 இடங்களையும் கைப்பற்றின .

இன்றைய நட்சத்திர வேட்பாளர்கள் :

ராகுல் காந்தி .
லாலுவின் மனைவி ரப்ரி தேவி
ராம் விலாஸ் பஸ்வான் ..


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media