BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 20 March 2014

மார்ச் 28ம் தேதி தயாளு அம்மாள் விசாரணைக்கு ஆஜராக சம்மன்



 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி முறைகேடாக வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ.,  பண மோசடி பிரிவின் கீழ் அமலாக்கப்பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், தயாளு அம்மாளுக்கு அமலாக்கப்பிரிவு புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

மார்ச் 28-ம் தேதி தயாளு அம்மாள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். ஒருவேளை அவர் ஆஜராக முடியாவிட்டால், அங்கீகரிக்கப்பட்ட சட்ட பிரதிநிதிகள் மூலம் விசாரணை அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடுவானில் ஹோலி கொண்டாடிய ஸ்பைஸ்ஜெட் பைலட்டுகள் பணியிடை நீக்கம்


ஹோலி பண்டிகையை வானில் கொண்டாடுவதற்காக எட்டு சிறப்பு விமானங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. அத்தகைய சிறப்பு விமானம் ஒன்று,  நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் இருந்த  பயணிகள் ஹோலி பண்டிகையை  கொண்டாடினர், மற்றும் அவர்களுடன் சேர்ந்து விமான பணிப்பெண்கள் நடனமாடினர். ஹோலி கொண்டாட்டம் போய் கொண்டிருக்கும் போது பைலட்  தனது கேபினை விட்டு வெளியே வந்து அதில் பங்குகொண்டதாகவும், அது புகைப்படம எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த கொண்டாட்டங்களை வீடியோ எடுத்த ஒருவர் அதை யூ டியூப்பில் பதிவேற்றம் செய்ததால் தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த விமானத்தை ஓட்டிய இரு பைலட்டுகளையும் பணியிடை நீக்கம் செய்ய‌ உத்தரவிட்டது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்.

இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஸ்பைஸ்ஜெட்டிற்கு நோட்டீசும் அனுப்ப பட்டுள்ளது.

இந்திய, தமிழக அரசையும், தமிழக மீனவர்களையும் இலங்கை அரசு ஏமாற்றுகிறதோ?


தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து, இலங்கை அரசு ஏமாற்றுவதாக தான் சந்தேகிப்பதாக கூறியிருக்கும் கருணாநிதி, இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"தமிழக மீனவர்களின் பிரச்சினையை முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்த்து வைத்து விட்டதாகவும், முதல் கட்டப் பேச்சுவார்த்தை சென்னையில் சுமூகமாக நடைபெற்றதாகவும், இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு முதல்வர் வேண்டுகோள்படி இலங்கை சிறையிலே உள்ள மீனவர்கள் எல்லாம் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும் அ.தி.மு.க. அரசிலே உள்ளவர்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, இந்திய - இலங்கை மீனவர்களிடையே பேச்சு வார்த்தைகள் ஆக்கப்பூர்வமான முறையில் நடைபெற்று இரு தரப்பினரும் மனமொத்து ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு ஏற்பட்டு பிரச்சினை முடிவுக்கு வந்தால் போதும் என்ற நம்பிக்கையோடு நாமெல்லாம் காத்திருந்தோம்.

ஆனால் 25ஆம் தேதியன்று இந்திய - இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு முன்பே, அதனை திசைதிருப்பி குழப்புவதைப் போல அதிர்ச்சியூட்டக் கூடிய நிகழ்வு ஒன்று இலங்கைக் கடற்படையினரால் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது.

இன்றையதினம் வந்துள்ள செய்திப்படி ராமேஸ்வரம் மண்டபம் பகுதிகளில் இருந்து நேற்றைய தினம் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது, இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து முதலில் அங்கிருந்து சென்று விடுமாறு எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.

தொடர்ந்து கடலில் வீசப்பட்ட வலைகள் மற்றும் மீன்களுடன் புறப்படத் தயாரான போது, ரோந்து கப்பல்களில் இருந்த இலங்கைக் கடற்படையினர் திடீரென்று தமிழக மீனவர்களின் படகுகளில் இறங்கி, படகுகளில் இருந்த வலைகளை அறுத்தெறிந் திருக்கிறார்கள். ஐந்து படகுகளை சிறை பிடித்திருக்கிறார்கள். அவற்றில் இருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்துச் சென்றிருக்கிறார்கள்.

மேலும் புதுக்கோட்டை, காரைக்கால் மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் நேற்றையதினம் சிறை பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பகுதிகளில் 12 படகுகளுடன் 50 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிகழ்வுகள் இலங்கை அரசின் ஒப்புதலின்றி நடந்திருக்க முடியாது. உண்மையில் இலங்கை அரசு இந்தப் பிரச்சினையில் ஒரு தீர்வு ஏற்பட வேண்டுமென்று கருதுமேயானால் இப்படிப்பட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதில் அர்த்தமே இல்லை.

எனவே இந்திய அரசையும், தமிழக அரசையும், தமிழக மீனவர்களையும் ஏமாற்றுகின்ற முயற்சியிலே இலங்கை அரசு ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் தான் ஏற்படுகிறது. பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இப்படிப்பட்ட செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபடுவதும், அதுகுறித்து இந்திய அரசு எவ்விதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பதும் மிகுந்த கண்டனத்திற்கு உரியதாகும்."

இவ்வாறு கருணாநிதி தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

ஜெ. மற்றும் சசிகலா ஆஜராக கோர்ட் உத்தரவு


ஜெயலலிதாவும் சசிகலாவும் 1991-1994 கால கட்டத்தில் மூன்று ஆண்டுகள் வருமானம் குறித்த கணக்கை வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கவில்லை என்ற வழக்கு, சென்னை பொருளாதாரக் குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் வருமான வரித் துறையால் தொடரப்பட்டது. இந்த வழக்கை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீடுகள் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது குற்றம் என்று கூறி, இந்த வழக்கை நான்கு மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி தீர்ப்பை வழங்க ஜனவரியில் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் ஏப்ரல் 3-ம் தேதி ஆஜராக, சென்னை - எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேமுதிக - 14, பாஜக - 8, பாமக - 8, மதிமுக – 7, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1, இந்திய ஜனநாயகக் கட்சி - 1


தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளின் பட்டியலை, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அறிமுகக் கூட்டம் சென்னையில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் தொடங்கியது. இக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ண, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரி வேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தின் போது, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

அதன்படி, தமிழகத்தில் தேமுதிக - 14, பாஜக - 8, பாமக - 8, மதிமுக – 7, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1, இந்திய ஜனநாயகக் கட்சி - 1 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கான தொகுதிகளின் விவரங்கள் பின்வருமாறு:



தேமுதிக: திருவள்ளூர் (தனி), வடசென்னை, மத்திய சென்னை, விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, திண்டுக்கல், கரூர், திருப்பூர், நாமக்கல், கடலூர், மதுரை மற்றும் நெல்லை.

பாஜக: தென்சென்னை, வேலூர், கோவை, தஞ்சாவூர், சிவகங்கை, நீலகிரி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி.

பாமக: அரக்கோணம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஆரணி, சிதம்பரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை.

மதிமுக: காஞ்சிபுரம், ஈரோடு, தேனி, விருதுநகர். ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, தென்காசி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி: பொள்ளாச்சி

இந்திய ஜனநாயக கட்சி: பெரம்பலூர்

5வது நாளாக, 40 அடி உயரத்திற்கு திருப்பதி வனப்பகுதியில் கொழுந்து விட்டு எறியும் தீ


திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிடித்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத நிலையில்,  இன்று 5–வது நாளாக 40 அடி உயரத்துக்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது. தீணை அணைக்கும் பணியில் கோவில் ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் என 300–க்கும் மேற்பட்டவர்கள் முயற்சி செய்தனர். ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

காட்டு தீயை கட்டுப்படுத்த முடியாததால் நேற்று கவர்னர் நரசிம்மன் மத்திய அரசுடன் பேசி ராணுவ உதவியை கோரினார். ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் விமானம் வந்தால்தான் தீயை அணைக்க முடியும் என்று கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்ற மத்திய அரசு உடனடியாக அரக்கோணம் விமானப்படை தளத்தில் இருந்து எம்.ஜ.17 என்ற ஹெலிகாப்டரை திருமலைக்கு அனுப்பியது. அது வனப்பகுதியில் வட்டமிட்டு எங்கெங்கு தீ எரிகிறது. அதை அணைக்க என்ன வழி என்று ஆராய்ந்தது.

இதையடுத்து மேலும் 4 ஹெலிகாப்டர் மற்றும் ஒரு மீட்பு விமானத்தில் ராணுவ வீரர்கள் வருகிறார்கள். ஏழுமலையான் கோவில் மேல் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பறக்க கூடாது என்பது ஆகம வீதியாக உள்ளது. அதனை மீறாமல் தீயை அணைக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

110 டிகிரி வெயிலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட நான் திரும்ப மறுஜென்மம் எடுத்து தான் வந்துள்ளேன்.

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் வேலுவுக்கு வாக்கு சேகரிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

134 பா.ம.க. நிர்வாகிகளை, ஜெயலலிதா குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார். தேர்தலை மனதில் வைத்து நிறுத்தி கொண்டார். இல்லையேல் ஆயிரம் பேரை கைது செய்திருப்பார். இதற்காக வழக்கு தொடர்ந்துள்ளோம். குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 134 பேரை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்று வெளிக்கொண்டு வந்தோம். இதற்கு ஜெயலலிதா சட்டத்தை மதித்திருந்தால், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, வேட்பாளர் வேலுவை பிரசாரத்திற்கு செல்ல கூடாது என கூறியுள்ளார். இதற்கு எந்த சட்டத்தில் இடம் உள்ளது?

110 டிகிரி வெயிலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட நான் திரும்ப மறுஜென்மம் எடுத்து தான் வந்துள்ளேன். மறுபடியும் உயிருடன் வருவேன் என எண்ணிப்பார்க்க வில்லை. இதே போல் உடல் நிலை சரியில்லாத குருவையும் அலைக்கழித்தனர். எனவே தான் மக்களிடம் நியாயம் கேட்கிறோம்.

சாராயத்தை தடை செய்ய வேண்டும் என குடிகாரர்களே நினைக்கின்றனர். தமிழ்நாட்டில் 5 கோடியே 37 லட்சம் வாக்காளர்களில் பாதிக்கு மேல் பெண்கள்தான் உள்ளனர். பெண்கள் நினைத்தால் அடுத்தது, பா.மா.க. ஆட்சி தான்.

இந்தியாவிலேயே முதல் முறையாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசேரியன் அறுவை சிகிக்சை வசதியை இந்த தொகுதிக்குட்பட்ட பாணாவரத்தில்தான் அன்புமனி தொடங்கி வைத்தார்.

வேலு பா.ம.க. வேட்பாளர் அல்ல. பொது வேட்பாளர் எனவே அனைத்து சமுதாயத்தினரும் வேலுவை ஆதரித்து வெற்றி பெறச்செய்யுங்கள்.

இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட முதல்வர்கள் மோடி, ஜெயலலிதா


கூகுள் நிறுவனம், அவ்வபோது தமது தளத்தில் அதிகம் தேடப்பட்ட நபர்களைப் பற்றிய விவரங்களை வெளியிட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதியிலிருந்து மார்ச் 13-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி,  இந்தியாவில் அதிகம் தேடப்பட்டுள்ள முதல்வர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெயர் முதலிடத்தில் உள்ளது.

மோடியைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, உத்திரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மேலும், இந்தப் பட்டியலில் சிவராஜ் சிங் சவுகான் (மத்தியப் பிரதேசம்), வசுந்தரா ராஜே (ராஜஸ்தான்), தருண் கோகாய் (அஸ்ஸாம்), உமர் அப்துல்லா (ஜம்மு-காஷ்மீர்) மற்றும் உம்மன் சாண்டி (கேரளா) இருப்பதாக கூகுள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுப் பற்றி கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

"நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நாட்டின் பல்வேறு மாநில முதல்வர்களைப் பற்றி அலசப்படுகிறது. அவர்களால் அவர்களது கட்சிக்கு எந்த அளவு வெற்றி கிடைக்கும் என்பதும் கணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கூகுள் தேடல் நிலவரத்தில் இந்த முதல்வர்களின் நிலை இணையத்தில் எப்படி உள்ளது என்பதைப் பார்க்கவே இந்த கணக்கு எடுக்கப்பட்டுள்ளது."

என்னுடைய ஆதரவாளர்கள் பனங்காட்டு நரி.இந்தப் பூச்சாண்டி காட்டும் வேலைக்கெல்லாம் பயப்பட மாட்டார்கள்



திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரியுடன் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று கட்சியனருக்கு திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதை மீறி அழகிரியுடன் தொடர்பில் இருந்தால், கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அவர் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, மதுரையில் தனது இல்லத்தின் முன்பு குவிந்திருந்த செய்தியாளர்களிடம் அழகிரி கூறியது:

"என்னுடைய ஆதரவாளர்கள் பனங்காட்டு நரி. எதற்கும் அஞ்சமாட்டார்கள். இந்தப் பூச்சாண்டி காட்டும் வேலைக்கெல்லாம் பயப்பட மாட்டார்கள். கட்சிப் பதவிக்கும், காசு, பணத்துக்கும் ஆசைப்பட்டவர்கள்தான் அங்கே இருக்கின்றனர்" என்று அதிரடியாக கூறினார் அழகிரி.

இந்தியா முழுவதுமே ஊழலற்ற ஆட்சி வர வேண்டும் என்றால், அது மோடி பிரதமரானால்தான் முடியும்.



தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குகள் சேகரிக்க‌ திண்டுக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று பேசியதாவது:

"தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதுமே ஊழலற்ற ஆட்சி வர வேண்டும் என்றால், அது மோடி பிரதமரானால்தான் முடியும்.

தமிழகத்தில் டாஸ்மாக்குக்கு டார்கெட் நிர்ணயிக்கிறார்கள். குஜராத் முதல்வர் அதுபோல் டார்கெட்டால் நிர்ணயித்ததே இல்லை. எனவே, நீங்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

திமுக, அதிமுக பிரச்சாரங்களைப் பாருங்கள். இருவரும் மாறி மாறி குற்றம்சுமத்திக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு இரண்டு கட்சிகளுமே கொள்ளை அடித்திருக்கிறார்கள்.

மதவாதம் என்று சொல்கிறீர்களே. உங்கள் கொள்கை என்ன? கூட்டணி வைப்போம்; கொள்ளை அடிப்போம்; பங்கு பிரிப்போம் என்பதுதானே.

பாஜகவை மதவாதக் கட்சி, மதவாதக் கட்சி என்கிறீர்களே... அவர்கள் ஆட்சியில் தான் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தார்.

தமிழகம் முழுவதும் ஆறுகளில் மணல் சுரண்டப்படுகிறது. அப்புறம் எப்படி மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும்? ஆனால், இலவசமாக கிடைக்க வேண்டிய குடிநீர், பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மக்கள் விரோத சக்திக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஜெயலலிதா சொல்கிறார். அவர் ஆட்சிக்குதான் முடிவு கொண்டுவர வேண்டும். அதற்காக, மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

கூட்டணி கட்சிகளுக்கு தேமுதிக எப்போது மரியாதை கொடுக்கும். ஆனால், ஜெயலலிதாவோ கம்யூனிஸ்ட் கட்சிகளை எப்படி அணுகினார் என்பது அனைவருக்கும் தெரியும்."

இவ்வாறு விஜயகாந்த் பிரச்சாரத்தில் பேசியிருந்தார். 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media