BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 28 November 2014

உணவே மருந்து : நோய்களை குணப்படுத்தும் வெங்காயம்


  • நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.
  • வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
  •  வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும்.
  • வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும்.
  • வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
  • படை, தேமல் மேல் வெங்காயம் சாற்றை தடவினால் மறைந்துவிடும்.
  • வெங்காய ரசத்தை நீர் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும்.
  • வெங்காயம் குறைவான கொழுப்பு சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம்.
  • மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
  • வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் டி.பி நோய் குணமாகும்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம்


மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 103.86 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நொடிக்கு .4,923 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனம், கிழக்கு, மேற்குக் கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 2,700 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 69.93 டி.எம்.சி.யாக இருந்தது.

இலங்கையில் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாட முயன்றவர் கைது



இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாட முயன்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். இதுகுறித்து இலங்கை காவல் துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹானா கூறியதாவது:

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து, பிரபாகரனின் பிறந்தநாள் வாழ்த்துகள் அடங்கிய சுவரொட்டிகள், மடிக்கணினி, தகவல் சேகரிப்பு கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன. தீவிரவாதத் தலைவரின் பிறந்த நாளை பொது இடங்களில் கொண்டாட அனுமதிக்கமாட்டோம் என்று அவர் கூறினார். உலகின் பல்வேறு பகுதிகளில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 60-வது பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் புதன்கிழமை கொண்டாடினர்.

மின் துறையில் ஒத்துழைப்பு : சார்க் நாடுகள் ஒப்பந்தம்

மின் துறையில் ஒத்துழைப்பது தொடர்பாக "சார்க்' அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது. நேபாளத் தலைநகர் காத்மாண்டில் புதன்கிழமை தொடங்கிய தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் ("சார்க்') 18-ஆவது உச்சி மாநாடு வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. நிறைவு நாளன்று, சார்க் நாடுகளுக்கு இடையே மின் துறையில் ஒத்துழைப்பது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேசமயம், சார்க் நாடுகளின் மக்களிடையே தொடர்புகளை அதிகரிப்பதற்காக மோட்டார் வாகனங்கள், ரயில் போக்குவரத்து தொடர்பாக கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை.

இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுவதன் மூலம், மாநாட்டை வெற்றியடையச் செய்வதற்கு நேபாளத் தலைவர்கள் பெரும் முயற்சி எடுத்து வந்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போல ஒப்பந்தம் கையெழுத்திடப்படாதது, நேபாளத் தலைவர்களிடையே சிறிது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து நேபாளப் பிரதமர் சுஷில் கொய்ராலா பேசுகையில், "மோட்டார் வாகனங்கள், ரயில் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தங்களுக்கு அனுமதி பெறுவதற்கு 3 மாத கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்றார். மோட்டார் வாகனங்கள், ரயில் போக்குவரத்து தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படாததற்கு பாகிஸ்தானின் எதிர்ப்பே காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதை அந்நாட்டு வெளியுறவு அமைச்சம் மறுத்துள்ளது. இஸ்லாமாபாதில் அடுத்த சார்க் மாநாடு: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் அடுத்த சார்க் மாநாடு அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை நேபாளப் பிரதமர் சுஷில் கொய்ராலா வெளியிட்டார்.

மோடி, ஷெரீஃப் நலம் விசாரித்தனர்
சார்க் மாநாட்டின் நிறைவு நாளன்று, பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பும் இரு முறை சிரித்துப் பேசி நலம் விசாரித்துக் கொண்டனர். மாநாட்டின் நிறைவு நாளான வியாழக்கிழமை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, மோடியும் நவாஸýம் பரஸ்பரம் கைகுலுக்கியபடி பேசினர். அதேபோன்று, மாநாடு முடிவடைந்த பிறகு, நவாஸ் ஷெரீஃப்பின் தோளில் தனது கைகளை வைத்து மோடி பேசினார். அதைத் தொடர்ந்து, கைகளை குலுக்கிக் கொண்டு சிறிது நேரம் சிரித்துப் பேசியபடி, செய்தியாளர்களிடம் கலந்துரையாடினர். சார்க் மாநாட்டின் தொடக்க நாளான புதன்கிழமை நிகழ்ச்சியின்போது, மோடியும், ஷெரீஃபும் அருகருகே இருந்தும் முகம் கொடுத்துப் பார்த்துக் கொள்ளவில்லை. இதனால், தலைவர்கள் இடையே இறுக்கமான நிலை காணப்பட்டது. இந்நிலையானது, சார்க் மாநாட்டின் நிறைவு நாளன்று, பரஸ்பரம் இருவரும் சிரித்து பேசிக் கொண்டதால், முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைப்பக்கத்தில், வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் வெளியிட்ட பதிவில், "இந்தப் புகைப்படத்துக்காகத்தான் அனைவரும் காத்திருந்தனர்' எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அடுத்த சார்க் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோது, பிரதமர் மோடி கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆல மரம் நட்ட மோடி: இதனிடையே, விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற துலிகலில் உள்ள விடுதியில், ஆல மரக் கன்றை பிரதமர் நரேந்திர மோடி நட்டார். அதைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்த மரக் கன்றுக்கு தண்ணீர் ஊற்றினார்.

15 ஆண்டுகள் பழைமையான வாகனங்களுக்கு தில்லியில் தடை


பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை தலைநகரின் சாலைகளில் இயக்க அனுமதி அளிக்கப்படாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தீர்ப்பாயத்தின் தலைவர், நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு கூறியதாவது: தலைநகரில் காற்று மாசுபாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை. இது, காற்று மாசுபாட்டுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெளிவாகக் காண்பிக்கிறது.

எனவே, 15 ஆண்டுகளாகவோ அல்லது அதற்கும் மேற்பட்டோ இயங்கி வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் சட்டத்துக்கு உள்பட்டு, நோட்டீஸ் அனுப்புதல், வாகனங்களை பறிமுதல் செய்தல் போன்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரில் ராணுவம் - பயங்கரவாதிகள் மோதல் : 10 பேர் பலி


ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் 3 வீரர்கள், 4 பயங்கரவாதிகள், 3 அப்பாவிகள் என மொத்தம் 10 பேர் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானில் இருந்து ராணுவச் சீருடை அணிந்த பயங்கரவாதிகள், ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள ஆர்னியா பகுதிக்குள் வியாழக்கிழமை காலை ஊடுருவினர். அவர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 வீரர்களும், அப்பாவி ஒருவரும் உயிரிழந்தனர். பதில் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை, மாநில போலீஸார் ஆகியோர் இணைந்து பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் கூட்டாக ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: ஆர்னியா பகுதியின் பிண்டி கட்டார் பகுதியில் உள்ள ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை பயங்கரவாதிகள் ஆக்கிரமத்துக் கொண்டனர். இவை ராணுவத்தின் 92ஆவது காலாட்படைக்குச் சொந்தமானவையாகும். அங்கிருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

அப்போது அவர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் 3 வீரர்கள், 4 பயங்கரவாதிகள், அப்பாவி ஒருவர் என மொத்தம் 10 பேர் இறந்தனர். 2 வீரர்கள் காயமடைந்தனர். அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை ராணுவ வீரர்கள் கைப்பற்றினர். அது பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: இதனிடையே, ரஜௌரி மாவட்டத்தின் லாம் படைப்பிரிவுப் பகுதியில் வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலர் சுற்றித் திரிவதை ராணுவ வீரர்கள் கண்டனர். அங்கு விரைந்து சென்ற வீரர்கள், பாகிஸ்தானில் இருந்து இந்தியப் பகுதிக்குள் சில பயங்கரவாதிகள் நுழைய முயன்றதை முறியடித்தனர். ராணுவத்தைக் கண்டதும் அந்த பயங்கரவாதிகள் தப்பியோடினர். அவர்களில் ஒருவரை ராணுவத்தினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கி, 30 தோட்டாக்கள், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, ரூ.8,100 மதிப்பிலான பாகிஸ்தான் ரூபாய் நோட்டு ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட அந்த பயங்கரவாதியின் பெயர் அதுல் கயூமி என்ற பஞ்சாபி என்று தெரிய வந்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக வெள்ளிக்கிழமை ஜம்மு செல்ல உள்ள நிலையில் பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலும், ஊடுருவல் முயற்சியும் நடைபெற்றுள்ளன.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media