BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 3 December 2014

உணவே மருந்து : மஞ்சள், பால், மிளகின் ரகசியம் தெரியுமா ?



விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.
  • குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.
  • இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.
  • மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.
  • பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.
  • அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.
  • மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகிவிடும்.

அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜெப் புஷ் போட்டியிடுவாரா? விரைவில் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று ஜெப் புஷ் கூறியுள்ளார்.இவர் முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் புஷ்ஷின் இளைய மகனும், ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷின் இளைய சகோதரரும் ஆவார்.ஜெப் புஷ், ஃபுளோரிடா மாகாணத்தின் ஆளுநராக, 1999-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டுவரை பதவி வகித்தவர்.அதிபர் தேர்தலில் ஜெப் புஷ் போட்டியிடக் கூடுமென, அவரது மகன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.இந்நிலையில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளேட்டுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மிக விரைவில் அறிவிப்பேன் என்றார்.குழப்பச் சுழலில் சிக்கிக் கொள்ளாமல், மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்ப முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுமானால், தேர்தலில் போட்டியிடுவேன்.நான் நல்ல வேட்பாளரா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் எவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்று அவர் கூறினார்.

வெளியுறவுக் கொள்கையைப் பொருத்தவரையில், அமெரிக்க ராணுவத்தை மறு சீரமைத்து வலிமைப்படுத்துவது, உளவுத் தகவல் சேகரிப்பைத் தீவிரப்படுத்துவது மிக முக்கியமானதாகும். சர்வதேச விவகாரங்களில் நாம் ஈடுபடுவதிலிருந்து நாம் பின்வாங்கிவிட முடியாது என்று பலரும் உணரத் தொடங்கியுள்ளனர்.சீனாவோடு, நெருங்கிச் செயல்பட வேண்டும். சர்வதேச வல்லரசாக சீனா உருவெடுக்கும்போது, அமெரிக்கா அதைக் கண்டும் காணாமல் இருந்துவிட முடியாது. சர்வதேச பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் சீனா தலைமைப் பொறுப்பு ஏற்பதை அமெரிக்கா ஊக்குவிக்க வேண்டும் என்றார் ஜெப் புஷ்.

இவரது தந்தை ஜார்ஜ் புஷ், 1989-ஆம் ஆண்டு முதல் 1993 வரை அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தார். இவரது அண்ணன், ஜார்ஜ் டபிள்யு புஷ் 2001-ஆம் ஆண்டு முதல் 2009 வரை அதிபராக இருந்தார்.இந்த இரு புஷ்களையடுத்து, அவர்களது குடும்பத்தின் மற்றுமொரு உறுப்பினர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடும் என கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

குமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்தது: அணைகளில் நீர்மட்டத்தை முழுக்கொள்ளளவு உயர்த்த திட்டம்

குமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்துள்ள நிலையில், அணைகளின் நீர்மட்டத்தை படிப்படியாக உயர்த்தி முழுக் கொள்ளளவுக்கு கொண்டுவர பொதுப்பணித் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.வெள்ளப் பெருக்கை தடுத்த பொதுப்பணித் துறையினர்: குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாகத் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவைக் கடந்து நிற்கிறது. இதில், கடந்த ஆண்டுகளைப் போலில்லாமல் நிகழாண்டு பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் உள்வரத்தாக வந்த கூடுதல் தண்ணீரை, பாசனப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் பாசனக் கால்வாய்கள் வழியாக திறந்து விடப்பட்டது. இதன்மூலம் ஆறுகளில் கரையோரப் பகுதிகளில் ஏற்பட இருந்த குறைந்தபட்ச வெள்ளப் பெருக்கும் தடுக்கப்பட்டது.
75 அடியைக் கடந்து சென்ற பெருஞ்சாணி நீர்மட்டம்: தற்போது பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75 அடியைக் கடந்து, 75.32 என்ற அளவில் உள்ளது. அணையிலிருந்து பாசனக் கால்வாய் வழியாக, விநாடிக்கு 350 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.80 ஆக உயர்ந்துள்ளது : இதுபோல், சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் தலா 15.58 அடியாக உயர்ந்த நிலையில் உள்ளது. இந்த அணைகளில் இருந்து விநாடிக்கு 150 கனஅடி தண்ணீர் பாசனக் கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்துள்ளதால் இம்மாதம் இரண்டாவது வார இறுதியில் நீர்மட்டத்தை படிப்படியாக உயர்த்தி, அனைத்து அணைகளிலும் முழுக் கொள்ளளவு நீர்மட்டம் எட்டப்படும் என்றார்.

கே.ஞானதேசிகன் புதிய தலைமைச் செயலர்

தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், செவ்வாய்க்கிழமை திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய தலைமைச் செயலராக, மின்சார வாரியத் தலைவராக இருந்த கே.ஞானதேசிகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மோகன் வர்கீஸ் சுங்கத்துக்கு, அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் இயக்குநர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள ஞானதேசிகனிடம், கண்காணிப்பு, நிர்வாகச் சீர்திருத்தத் துறை ஆணையாளர் பொறுப்பு கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை தலைமைச் செயலராக இருந்த வர்கீஸ் சுங்கத், செவ்வாய்க்கிழமை காலை பிறப்பித்தார்.

43-ஆவது தலைமைச் செயலாளர்: தமிழகத்தின் 43-ஆவது தலைமைச் செயலராக ஞானதேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி தாலுகா திருவேங்கடநாதபுரத்தைச் சேர்ந்தவர். கடந்த 1959-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி பிறந்தார். ஆங்கிலம், ஹிந்தி, ஜெர்மனி உள்ளிட்ட மொழிகளில் நன்கு புலமை பெற்றவர். பி.இ., பட்டமும், பிரிட்டனில் எம்.பி.ஏ. பட்டத்தையும் பயின்றவர். 1982-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத் தேர்ச்சி பெற்றார்.1984-ஆம் ஆண்டு துணை ஆட்சியராகப் பணியைத் தொடங்கிய அவர், நிதித் துறையில் சார்புச் செயலாளராகவும், 1991 முதல் 1993 வரையிலான காலத்தில் விருதுநகர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றினார். கடந்த 2001-2003-ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராகவும், 2003-2005-ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறை செயலாளராகவும் பணியாற்றினார். 2005 முதல் 2010-ஆம் ஆண்டு வரை நிதித் துறைச் செயலாளராக இருந்தார்.அதன்பிறகு, 2010 முதல் 2011-ஆம் ஆண்டு வரை உள்துறைச் செயலாளராகப் பொறுப்பு வகித்த அவர், 2011-ஆம் ஆண்டில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன்பிறகு, 2012-ஆம் ஆண்டு செப்டம்பரில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளர் பொறுப்பை வகித்துள்ள ஞானதேசிகனுக்கு (55) தலைமைச் செயலர் பொறுப்பை வகிப்பதில் பெரியளவுக்கு சிரமம் ஏதும் இருக்காது என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம், கடந்த மார்ச் மாதம் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்ட மோகன் வர்கீஸ் சுங்கத் (58) சில ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.காலையில் உத்தரவு-மாலையில் பொறுப்பேற்பு: புதிய தலைமைச் செயலராக ஞானதேசிகனை நியமிப்பதற்கான உத்தரவு செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வெளியானது. இதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலை 4.35 மணியளவில் அவர் தலைமைச் செயலராகப் பொறுப்பேற்றார். அவரிடம் தனது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு மாலை 5 மணியளவில் தலைமைச் செயலகத்தில் இருந்து விடை பெற்றுச் சென்றார் மோகன் வர்கீஸ் சுங்கத்.தலைமைச் செயலராக நியமிக்கப்பட்ட ஞானதேசிகனுக்கு பல்வேறு துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதனால், தலைமைச் செயலர் அலுவலக வளாகம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அலுவலர்களால் நிரம்பி வழிந்தது.

அனைத்து காவல் நிலையங்களிலும் 33% பெண் காவலர்கள் : மேனகா வலியுறுத்தல்



பாலியல் தொடர்பான குற்ற வழக்குகளை விசாரிக்க ஏதுவாக அனைத்துக் காவல் நிலையங்களிலும் 33 சதவீதம் பெண் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்ற அவர் பேசியதாவது:பெண்களுக்கான பிரச்னைகளை விசாரிக்க, அனைத்து மகளிர் காவல் நிலையங்களை ஓரளவுக்கு மேல் அதிகரிக்க முடியாது. மாறாக, அனைத்து காவல்நிலையங்களிலும் 33 சதவீதம் பெண் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன். தற்போது நாட்டில் இயங்கி வரும் பெண்களுக்கான உதவி மையங்கள், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களை முழுமையாகத் தடுக்க வேண்டுமானால், ஒரே இடத்திலேயே அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் மையங்களாக அவைச் செயல்பட வேண்டும். அதற்கு, இந்த மையங்களில் செவிலியர்கள், மனதத்துவ நிபுணர்கள், சமூகப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோரை நியமிக்க வேண்டும்.

இதன்மூலமே அந்த மையங்களை பெண்களுக்கான ஒரு முழுமையான மையமாக செயல்படுத்த முடியும்.மேலும் அரசு-தனியார் பங்களிப்புடன் பெண்களுக்கென தொழில் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படவேண்டும். இதனால் பெண்கள் பொருளாதார ரீதியில் சுதந்திரம் அடைகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் மதிக்கப்பட இது ஒரு படிநிலையாக இருக்கிறது. இத்திட்டங்களுக்கு எனது அமைச்சரவை நிதியை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

வரம்பு மீறிப் பேசினால் நடவடிக்கை : மத்திய அமைச்சர்கள், பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை


"பொது இடங்களில் வரம்பு மீறிப் பேசினால் அதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது; அவ்வாறு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், அக்கட்சியின் எம்.பி.க்கள் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக எச்சரித்தார். மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media