BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 29 November 2014

உணவே மருந்து : சக்கரைவள்ளி கிழங்கால் கிடைக்கும் நன்மைகள்


சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பொதுவாக கார்போஹைட்ரேட் அதிகஅளவில் இருப்பது அனைவரும் அறிந்தது. ஆனால் வேறு சில முக்கிய சத்துக்களும் உள்ளன. 

வெப்ப மண்டலப் பகுதிகளில் விளையும் கிழங்கு வகையை சேர்ந்தது சக்கரை வள்ளி. சிவப்பு, சாம்பல், கருஞ்சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் சக்கரை வள்ளி கிழங்கு காணப்படுகின்றன. சக்கரைவள்ளி கிழங்கில் அதிகளவில் மாவுச்சத்து மற்றும் நார்ச்சத்து இருப்பதால் உடலுக்கு உடனடியாக ஆற்றல் தரும். சக்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு சத்து குறைந்த அளவில் இருக்கிறது. மேலும், இதில் உள்ள பீட்டா கரோடின் என்ற இயற்கையான அமிலச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சர்க்கரை சத்து கொண்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கில், வைட்டமின் ஏ சத்து அதிகளவில் இருப்பதால் தோல் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு நன்மை தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆண்டுக்கு ஆண்டு சுருங்கும் வைகை அணை : தூர்வாரப்படாததால் வீணாகும் தண்ணீர்

வைகை அணையை தூர்வாரி முழுக் கொள்ளளவில் தண்ணீரைத் தேக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பாசன நிலங்கள் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது வைகை அணை. அணை கட்டப்பட்டு 56 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆதலால், அணைக்கு வரும் தண்ணீரால் அடித்து வரப்பட்ட மண்ணால் அணையின் நீர் கொள்ளளவு குறைந்து கொண்டே வருகிறது. அணையில் சுமார் 20 அடி வரை சேறும், சகதியுமாக உள்ளன. கடந்த 2000ஆம் ஆண்டில், பூண்டி நீரியல் ஆராய்ச்சி நிலையம், அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியை ஆய்வு செய்தது. அப்போது, அணையில் வண்டல் மண், மணல் மற்றும் சவுடு மண் அதிக அளவில் படிந்திருந்ததை கண்டறிந்தது. இதனால், அணையின் முழுக் கொள்ளளவான 6,879 மில்லியன் கன அடியில், 974 மில்லியன் கன அடி (14.16 சதவீத பரப்பளவு) தண்ணீர் தேக்கும் அளவு குறைந்துள்ளது தெரிய வந்தது.

அணை கட்டப்பட்ட 1958ஆம் ஆண்டுக்குப் பிறகு, 1960-இல் முதன்முறையாக அணை முழுக் கொள்ளளவை எட்டியது. அதன் பின்னர், 28 ஆவது முறையாக கடந்த 2011-ஆம் ஆண்டு முழுக் கொள்ளளவை அடைந்தது. இந்த காலக் கட்டங்களில் சுமார் 1.38 மில்லியன் கன அடி தண்ணீர் அணையில் இருந்து வீணாக வெளியேறியுள்ளது. ஒவ்வொரு முறையும் அணை முழுக் கொள்ளளவை எட்டும் போதும், 974 மில்லியன் கன அடி தண்ணீர் வீணாக வெளியேறியுள்ளது. அணையில் ஆய்வு செய்து 14 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இப்போது அணையில் அதிக அளவு வண்டல் மண் படிந்துள்ளது. எனவே, அணையை தூர்வாரி முழுக் கொள்ளளவான 6,879 மில்லியன் கன அடி நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீருக்காக கேரளத்துடனும், கர்நாடகத்துடனும் போராடும் தமிழக அரசு, வைகை அணையிலிருந்து வீணாகும் தண்ணீரை சேமித்து பயன்படுத்த, தூர்வாரும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

இது குறித்து, தேனி, மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் எம். பாண்டியன் கூறியது: கடந்த 15 ஆண்டுகளாக அணையைத் தூர்வாருவோம் என அரசு சார்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால் தூர்வாரப்படவில்லை. இதனால், விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர் என்றார்.

அரசுக்கு பல கோடி ரூபாய் கிடைக்கும் :
அணை முழு கொள்ளளவை அடைய அதில் படிந்துள்ள 27.579 மில்லியன் கன மீட்டர் அளவுக்கு மண்ணை தூர்வார வேண்டும். இதில் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கலாம். மணலை கட்டடப் பணிக்கு விற்பனை செய்யலாம். சவுடு மண்ணை செங்கல் காளவாசல்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யலாம். இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். புதிய அணை கட்ட வேண்டுமானால், ரூ. 1500 கோடி வரை செலவாகும். வைகை அணையை தூர் வார ரூ. 250 கோடி மட்டுமே செலவாகும் என பொறியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வீணாகியுள்ள தண்ணீர் (மில்லியன் கன அடி)
2007 9 நாள்கள் 1,741.13

2008 26 நாள்கள் 1,776.56

2009 3 நாள்கள் 405.48

2010 20 நாள்கள் 4,048.19

2011 17 நாள்கள் 3,035.75

மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் : ஜி.கே. வாசன் அறிவிப்பு


தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என தனது கட்சியின் பெயரை அறிவித்தார் ஜி.கே. வாசன். இதன் மூலம், தமிழகத்தில் மீண்டும் த.மா.கா. உதயமாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக இம்மாத தொடக்கத்தில், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ஜி.கே. வாசன், புதிய இயக்கம் தொடங்கவுள்ளதாக அறிவித்தார். ஜி.கே. வாசன் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்ததிலிருந்து, அவரது கட்சியின் பெயர் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நீடித்து வந்தது. ஏற்கெனவே, ஜி.கே. மூப்பனாரால் தொடங்கப்பட்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குக் காரணமாக இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்), காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டதால், மீண்டும் அதே பெயரை ஜி.கே. வாசன் தனது கட்சிக்குப் பயன்படுத்த முடியுமா அல்லது புதிய பெயரை அவர் தனது கட்சிக்கு சூட்டுவாரா என பல்வேறு யூகங்கள் வெளியாகி வந்தன. இதனிடையே, நவம்பர் 26-ஆம் தேதி சென்னையில், தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் பெயர் நவம்பர் 28-ஆம் தேதி திருச்சி பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் எனக் கூறி, எதிர்பார்ப்பை நீட்டிப்புச் செய்தார்.

இந்த நிலையில், திருச்சியில் வெள்ளிக்கிழமை மாலை ஜி.கே.வாசனின் புதிய இயக்கத்தின் பொதுக் கூட்டம் தொடங்கிய சில நிமிஷங்களில், ஜி.கே. வாசன் தனது கட்சியின் பெயர், தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என அறிவித்தார். இதன் மூலம், தமிழகத்தில் தமாகா மீண்டும் உதயமாகியுள்ளது. கலைக்கப்படாததால் கிடைத்த அதே பெயர்: காங்கிரஸில் இணைந்தபோது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை முறைப்படி கலைக்காததால் மீண்டும் அதே பெயர் ஜி.கே. வாசனுக்கு கிடைத்துள்ளது. ஜி.கே. மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு த.மா.கா. தலைவரான வாசன், 2002-இல் காங்கிரஸூடன் கட்சியை இணைத்தார். த.மா.கா.வில் இருந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துடன் கட்சியைக் கலைப்பதற்கான விண்ணப்பத்தை தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்தார்.

கட்சியைக் கலைக்க வேண்டுமானால் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்துடன் விண்ணப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. ஆனால், காங்கிரஸில் இணைந்து விட்டதால் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்துகளைப் பெற்று புதிய விண்ணப்பத்தை வாசன் அளிக்கவில்லை. புதுச்சேரியைச் சேர்ந்த குப்புசாமி என்பவர், தமாகா-வின் பதிவை தொடர்ந்து புதுப்பித்து வந்துள்ளார். தற்போது, ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டதன் பேரில், கட்சிப் பதிவு உரிமையை முழுமையாக அவர், ஜி.கே. வாசனுக்கு அளிப்பதாகக் கடிதம் அளித்துள்ளார்.

கட்சி முறைப்படி கலைக்கப்படாததால் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்ற பெயரில் 2002-இல் அக்கட்சியின் தலைவராக இருந்த வாசனுக்கு தேர்தல் ஆணையம் இப்போது மீண்டும் அதே பெயரை வழங்கியுள்ளது. திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் இதை அறிவித்த வாசன், மீண்டும் சைக்கிள் சின்னம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

ராஜபட்ச மீது போர்க் குற்ற விசாரணை நடைபெறாது


இலங்கை அதிபர் ராஜபட்ச மீது போர்க் குற்ற விசாரணை நடைபெறாது என்று எதிர்க்கட்சிகள் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் மைத்ரிபாலா ஸ்ரீசேனா கூறினார். இலங்கையில் அதிபர் தேர்தல் ஜனவரி மாதம் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், ராஜபட்சவின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மைத்ரிபாலா ஸ்ரீசேனா திடீரென ராஜிநாமா செய்தார். அதிபர் தேர்தலில், ராஜபட்சவுக்கு எதிராகப் போட்டியிட் போவதாக அறிவித்த அவர், எதிர்க்கட்சிகள் சார்பிலான பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தலைநகர் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது: விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள போர்ப் படிப்பினை - நல்லிணக்க ஆணையத்தின் முடிவுகள் ஏற்கப்படும். நான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், நாட்டின் அதிபராக இருந்த ராஜபட்சவை எந்த விதமான போர்க்குற்ற விசாரணைக்கும் உள்படுத்த மாட்டேன். அவரையோ, அவரது குடும்பத்தினரையோ, இலங்கையின் பாதுகாப்புத் துறை அதிகாரியையோ, சர்வதேச போர்க் குற்ற விசாரணைக் குழுவின் விசாரணைக்கு உள்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன் என்றார். போர்க் குற்ற புகார்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக்கு ராஜபட்ச எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

மக்களவையில் 20 தனிநபர் மசோதாக்கள்



வாக்களிப்பதைக் கட்டாயமாக்குவது உள்ளிட்ட 20 தனிநபர் மசோதாக்கள், மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன. வாக்களிப்பதைக் கட்டாயமாக்குவதை வலியுறுத்தும் இரு வேறு மசோதாக்களை பாஜக உறுப்பினர்கள் வருண் காந்தி, ஜனார்த்தன் சிங் ஆகியோர் அறிமுகம் செய்தனர். பசுக்களைப் பாதுகாப்பது தொடர்பான மசோதாவை, சிவசேனைக் கட்சியைச் சேர்ந்த சந்திரகாந்த் காய்ரே அறிமுகம் செய்தார். அமில விற்பனையை ஒழுங்குப்படுத்துதல், அமில வீச்சைத் தடுத்தல், பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வளித்தல் ஆகிய ஷரத்துகளை உள்ளடக்கிய மசோதாவை பிஜு தனதா தள உறுப்பினர் மஹதாப் அறிமுகம் செய்து வைத்தார். வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக மற்றொரு மசோதாவையும் அவர் அறிமுகம் செய்தார்.

உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவுக்கு வெற்றி : நிர்மலா சீதாராமன்

"ஜெனீவாவில், உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில், உணவுப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில் எவ்வித சமரசத்துக்கோ, நிபந்தனைகளுக்கோ இடம் கொடுக்காமல் இந்தியா இதனைச் சாதித்துள்ளது' என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஜெனீவாவில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) பொதுக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வர்த்தக இணக்க ஒப்பந்தத்தில் (டிஎஃப்ஏ), இந்தியாவின் வலியுறுத்தலை ஏற்று, வளரும் நாடுகளின் உணவுப் பாதுகாப்புக்குத் திட்டத்துக்கு நிரந்தர உத்தரவாதம் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மக்களவையில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ளிக்கிழமை தானே முன்வந்து அறிவித்ததாவது: ஜெனீவா கூட்டத்தில் இந்தியாவுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்று, வளரும் நாடுகளில் உணவுப் பாதுகாப்புப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்வரை, அந்நாடுகள் பொது விநியோகத்துக்காக எவ்வித வரம்புமின்றி தேவையான உணவு தானியங்களைத் தொடர்ந்து சேமித்துவைக்கவும், மானியம் வழங்கவும் ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியா போன்ற வளரும் நாடுகள் பொது விநியோகத்துக்காக தாராளமாக உணவு தானியங்களைச் சேமித்து வைப்பதோடு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையையும் தங்குதடையின்றி வழங்க முடியும். இதற்காக, வளரும் நாடுகள் மீது பிற நாடுகள் அபராதம் விதிக்க முடியாது. இந்த வெற்றியை, இந்தியா எதனையும் விட்டுக்கொடுக்காமல், வேறு நிபந்தனைகள் எதற்கும் உட்படாமல் சாதித்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் வாழும் லட்சக்கணக்கான ஏழை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது உயிர்நாடி போன்றது. ஆகையால்தான், இந்தப் பிரச்னையில் முரண்பட்ட அமெரிக்காவிடம், கடந்த மாதம் இந்தியா சரியாக எடுத்துக்கூறி தனது நிலைப்பாட்டுக்கு இசைய வைத்தது. இதன்மூலம் உலக வர்த்தக அமைப்பில் 20 ஆண்டு காலமாக நீடித்துவந்த பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. தன்னை பாதிக்கக்கூடிய பிரச்னையில் இந்தியா உறுதியாக நின்று இந்த வெற்றியைப் பெற்றுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தை, உலக வர்த்தக அமைப்பில் இடம் பெற்றுள்ள 160 நாடுகளில் மூன்றில் இரு பங்கு நாடுகள் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்கும்போது, இந்த ஒப்பந்தம் தானாகவே உலக அளவில் அமலுக்கு வரும் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஒப்பந்த விவரம்: உலக வர்த்தக அமைப்பின் பொதுக் குழுக் கூட்டத்தில் இசைவு தெரிவிக்கப்பட்ட வர்த்தக இணக்க ஒப்பந்தத்தில் (டிஎஃப்ஏ) உள்ள சமாதான ஷரத்து மிக முக்கியமானதாகும். வளரும் நாடுகளின் உணவுப் பாதுகாப்புப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்வரை, இந்த சமாதான ஷரத்து நீடிப்பதற்கு டபிள்யூடிஓ ஒப்புக்கொண்டுள்ளது. பொதுவாக, டபிள்யூடிஓ வர்த்தக நெறிமுறைப்படி எந்த ஒரு நாடும், அதன் உணவு தானிய உற்பத்தியில் 10 சதவீத அளவுக்கு மட்டுமே மானியம் வழங்க முடியும், பொது விநியோகத்துக்காகச் சேமித்து வைக்க முடியும். அதற்கு மேல் மானியம் வழங்கினாலோ, சேமித்து வைத்தாலோ, வர்த்தக உடன்பாட்டில் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகள் அதன் மீது அபராதம் விதிக்க முடியும். இவ்வாறு அபராதம் விதிக்கப்படாமல் இருக்க, சமாதான ஷரத்து வகை செய்கிறது. இதனைத்தான் காலக்கெடு இன்றி நீட்டிப்பதற்கு இந்தியா வலியுறுத்தி, அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி மதிப்புள்ள 6.20 கோடி டன் உணவுதானியங்களை பொது விநியோகத்துக்காகச் சேமித்து வைக்கும் இந்தியாவுக்கு, டபிள்யூடிஓ ஒப்பந்த விவகாரத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றி மிக முக்கியமானதாகும்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media