BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 5 March 2014

ஆம் ஆத்மி-பாஜக கட்சியினர் இடையே கடும் மோதல்



ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இன்று குஜராத் சென்றிருந்தார். குஜராத் மாநில முழுவதும் 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்போவதாகவும், மோடி கூறுவது போல் அங்கு ராம ராஜ்ஜியம்தான் நடக்கிறதா என தான் ஆராயப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

குஜராத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் ஊர்வலமாக செல்ல முயன்றபோது, அவருக்கு எதிராக பாஜகவினர் கருப்புக் கொடிகளை காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது, அரவிந்த் கேஜ்ரிவாலை தடுத்து நிறுத்திய குஜராத் போலீஸார், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று, பின்னர் விடுவித்தனர். இதற்கு, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், நடத்தை விதிமுறைகள் குறித்து கேஜ்ரிவாலிடம் விவரித்ததாக குஜராத் போலீஸ் தரப்பு விளக்கம் அளித்தது.

 குஜராத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் தடுத்து நிறுத்தப்பட்ட தகவல் கிடைத்தவுடன், டெல்லியில் திரண்ட ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகை இட்டனர்.  அலுவலகத்தில் இருந்த பாஜகவினர் சாலைக்கு வந்து ஆம் ஆத்மியினருடன் மோதலில் ஈடுபடத் தொடங்கினர். சிலரது சட்டைகள் கிழித்தெறியப்பட்டன. சிலருக்கு காயம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
அதேவேளையில், லக்னோவில் ஆம் ஆத்மி கட்சியினர் துடைப்பங்களுடனும், பாஜகவினர் லத்திகளுடனும் மோதலில் ஈடுபட்டனர்.

உடனடியாக, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் இந்த மோதலைத் தடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சென்னையில் தேர்தல் நேரத்தில் பாதுகாப்பிற்காக 100 ரவுடிகள் வெளியேற்றம்


சென்னையில் தேர்தல் நேரத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடந்து விடக்கூடாது என்பதற்காக‌ போலீசார் எச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுத்து வருகிறார்கள். கடந்த வாரம் அ.தி.மு.க. பிரமுகர்களான ஆறுமுகம் (தேனாம்பேட்டை), மோசஸ் (ராயப்பேட்டை) ஆகியோர் மற்றும் திருவான்மியூரில் தி.மு.க. பிரமுகரான கந்தனும் கொலை செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் சமயத்தில் நடந்துள்ள இப்படுகொலை சம்பவங்களால் போலீசார் கூடுதல் விழிப்புடன் செயல்பட தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து சென்னையில் தலைமறைவாக இருக்கும் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் அதிரடியாக செயல்பட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும், தனிப்படை போலீசாருக்கும் 3 விதமான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சென்னையில் தறைமறைவாக இருக்கும் ரவுடிகளை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும், இல்லையென்றால் சரண் அடைய செய்ய வேண்டும், இந்த இரண்டும் நடக்க இயலாத நிலையில், ச‌ம்பந்தப்பட்ட ரவுடிகளை சென்னையை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளது. சுமார் 100 ரவுடிகளை சென்னையை விட்டு வெளியேற்ற போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

திருமாவளவன், காடுவெட்டி குரு மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்


புதுவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்பேத்கார் மற்றும் ராமசாமி படையாட்சி சிலைகள் மர்ம கும்பலால் சேதப்படுத்தப்பட்டன. சமீபத்தில் ராமசாமி படையாட்சி சிலை அவமதிப்பை கண்டித்து புதுவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. பேசினார். அதேபோல் அம்பேத்கார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து புதுவையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசினார்.

பொதுக்கூட்டத்தில் இவர்கள் 2 பேரும் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக எதிர்தரப்பினர் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டு, புதுவை போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் செய்தனர். இருதரப்பினர் புகார்களையும் போலீசார் பரிசீலனை செய்தனர். அதைத்தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக உள்பட 6 பிரிவுகளில் காடுவெட்டி குரு, திருமாவளவன் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மோடி உருவ ‘பென் - டிரைவ்’ சென்னையில் அறிமுகம்


சீனாவில் பொறியியல் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், மோடி உருவிலான பென்–ட்ரைவ் ஒன்றினை கண்டுபிடித்துள்ளார். 2ஜிபி, 4 ஜிபி, 8 ஜிபி அளவில் கிடைக்கும் இந்த பென் –ட்ரைவிற்கு ‘நமோ பென் –ட்ரைவ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மோடி ரன் என்ற ஆண்ட்ராய்ட் விளையாட்டு, நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், நமோ பென் –ட்ரைவின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. பாஜக தேசிய செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசிய போது, “மதுரவாயலை சேர்ந்த சண்முகநாதன் மோடி உருவம் பொறித்த பென் – ட்ரைவினை வடிவமைத்திருந்தார். அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு நமோ பென்–ட்ரைவ் என்ற பெயருடன் அறிமுகப்படுத்தியுள்ளோம்” என்றார்.

திமுக அணியின் பெயர் 'ஜனநாயக முற்போக்குக் கூட்டணி'- கருணாநிதி


திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் இன்று திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த போது, "கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் விரும்பியவாறு, இந்தக் கூட்டணிக்கு, ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. " என கருணாநிதி அறிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி, மூத்த தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி, எம்.ஜி.ஆர்.,கழகம் ஆர்.எம்.வீரப்பன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், திராவிடர் கழகம் கி.வீரமணி, இந்திய தேசிய லீக் திருப்பூர் அல்தாப், பேராயர் எஸ்ரா சற்குணம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் சந்தானம், உழவர் உழைப்பாளர் கட்சி செல்லமுத்து மற்றும் பொன் குமார் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில் கருணாநிதி பேசியதாவது:

கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் விரும்பியவாறு, இந்தக் கூட்டணிக்கு, ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  உங்களுடைய கருத்துகள் மதிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை நானே முன் நின்று செய்து கொடுப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிரியானாலும் அவர்களிடத்திலே அன்போடும், நட்புணர்வோடும் நடக்கக் கற்றவன். அந்தப் பாடத்தை எனக்குக் கற்பித்த பெரியவர்கள் பெரியாரும், அண்ணாவும் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வெற்றிக்கு இன்று நாம் கொடியேற்றுவோம். அந்தக் கொடி உயரப் பறக்கட்டும், அந்தக் கொடி நிழலில் தமிழ்நாட்டு மக்களை மாத்திரமல்ல. இந்திய நாட்டு மக்களை மதச்சார்பற்ற ஓரணியில் திரட்டுவோம்."

இவ்வாறு  திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டத்தில் கருணாநிதி கூறியிருந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க இயலாது: சுஷில் குமார் ஷிண்டே


இந்த ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்க முடியாது என்று மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே அறிவித்தார்.

நேற்று டெல்லியில் நிருபர்களுக்குப்பேட்டி அளித்த அவர், இந்த தகவலை கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்திடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.  பல்வேறு கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதிலும் ஏறத்தாழ 2 லட்சத்துக்கும் அதிகமான மத்திய போலீஸ் உள்ளிட்ட துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மாநிலங்களுக்கு பாதுகாப்பு படைகளை அனுப்பும் பணியை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று  உள்துறை மந்திரி ஷிண்டே அறிவித்து இருக்கிறார்.

சமூக ஆர்வலருக்கு தகவல் ஆணையம் தெரிவித்த தகவல்: முதல்வருக்கான 21 மாத கால‌ வாகன எரிப்பொருள் செலவு ரூ.14 கோடி


பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரி பர்காஷ் சிங் பாதல் மற்றும் அவரது மகனும் துணை முதல் மந்திரியுமான சுக்பிர் சிங் பாதல் ஆகியோர் பொறுப்பேற்ற 21 மாத காலத்தில் தங்களது வாகனங்களுக்கு மற்றும் பாதுகாப்பு வாகனங்களுக்கு எரிப்பொருள் நிரப்ப மட்டும் சுமார் 14 கோடி ரூபாயை செலவழித்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

32 பாதுகாப்பு வாகனங்களோடு ப‌யணிக்கும் பர்காஷ் சிங் பாதலின் வாகன பரிவாரத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் செலவினங்கள் மட்டும் 8.22 கோடி ரூபாய் என்றும் அவரது மகன் சுக்பிர் சிங்குக்கு பாதுகாப்பாக செல்லும் 19 வாகனங்கள் கொண்ட பரிவாரத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் செலவினங்கள் 5.9 கோடி ரூபாய் என்றும் ஒரு சமூக ஆர்வலரின் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ள தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மற்றும் இவர்கள் இருவரின் வாகனங்கள் குறிப்பிட்ட பாதை வழியாக செல்லும் போது அப்பகுதியை சோதனையிடுவதற்காக அனுப்பப்படும் குண்டுகளை செயலிழக்க வைக்கும் வாகனத்துக்கான எரிபொருள் செலவான 4.48 கோடி ரூபாய் இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை.

பஞ்சாப் மாநிலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கி தவிக்கின்ற போது, மந்திரிகளின் இந்த போக்கு கடும் அதிருப்தியை உருவாக்கும் வகையில் உள்ளது.

சென்னையில் பாஜகவின் 'ஒரு நோட்டு.. ஒரு ஓட்டு' பிரச்சாரம்


வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ‘மோடி ஃபார் பி.எம் ஃபண்ட்’ என்னும் வித்தியாசமான பிரச்சாரத்தை,  பாஜக மேற்கொண்டு வருகிறது. இதை தமிழக பாஜகவினர் ‘ஒரு நோட்டு ஒரு ஓட்டு’ என பெயரிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நேற்று தேனாம்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடந்த ‘ஒரு நோட்டு ஒரு ஓட்டு’ பிரச்சாரத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். இந்தத் திட்டத்தின்படி வாக்காளர்கள் ஏதாவது ஒரு ரூபாய் நோட்டை கொடுத்தால் அதற்கு பதிலாக பிரச்சாரக் குழு சார்பில் தாமரைச் சின்னம் பொறிக்கப்பட்ட கூப்பன் கொடுக்கப்படும். தேனாம்பேட்டையில் நடந்த ‘ஒரு நோட்டு ஒரு ஓட்டு’ பிரச்சாரத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

முன்னாள் டெல்லி முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் கேரள மாநில ஆளுநராக நியமனம்


கேரள மாநில ஆளுநர் நிகில் குமாரின் ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்கப்பட்டுள்ளதால், முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என குடியரசுத் தலைவர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஷீலா தீட்சித் ஆளுநராக பொறுப்பேற்கும் வரை கர்நாடக ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ், கேரள ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் மற்றும் பி.எல்.ஜோஷி, உத்தரப்பிரதேச மாநில ஆளுநராக இரண்டாவது முறை பதவி வகிப்பார் எனவும் குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்கும் முடிவு சரியானது தான்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு



ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவை எதிர்த்து மத்திய அரசு பிப்ரவரி 19-ம் தேதி மனு தாக்கல் செய்தது. இது தொடர்பாக தமிழக அரசு தனது பதில் மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது.

அதில் கூறியிருப்பதாவது:

மூவரையும் விடுவிப்பது தொடர்பான யோசனையை மத்திய அரசுக்கு தமிழக அரசு தெரிவித்து, ஆலோசனை நடத்த முயற்சித்தது. தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தமிழக அரசிடம் நேரடியாக தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், மாநில அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு சென்றுவிட்டது. அரசமைப்புச் சட்டப்பிரிவு 32-ன் படி மத்திய அரசால் நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்ய முடியாது. அடிப்படை உரிமைகள் என்பது குடிமக்களுக்குத்தானே தவிர, அரசுக்கு அல்ல.

அரசமைப்புச் சட்டப்பிரிவு 161 அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432, 433 ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவின் கீழ் குற்றவாளிகளை விடுவிக்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்து, அது தொடர்பாக உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கற்பனையான காரணத்தைக் கூறி மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 162, 73(1)(a) ஆகிய பிரிவுகளின்படி செயல்படுத்தும் அதிகாரம் மாநில அரசிடம்தான் உள்ளது.
குற்றவாளிகள் அனைவரும் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, சட்டப் பிரிவு 432-ன் படி அவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளது.

குற்றவாளிகள் அனைவரும் ஏற்கெனவே தடா சட்டப் பிரிவு தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆயுதத் தடைச் சட்டம், மத்திய அரசின் சட்டங்களின் கீழ் பெற்ற தண்டனை களை ஏற்கெனவே சிறையில் கழித்துவிட்டனர்.

எனவே, அவர்களை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு சரியானதுதான். மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை வரும் மார்ச் 6-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media