BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 3 April 2014

டி.ஆர்.பாலு 10 கப்பல்களுக்கு சொந்தகாரர், எவ்வளவு கொடுத்து சீட் வாங்கினார் என்று தெரியவில்லை-அழகிரி

தஞ்சாவூரில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார் மு.க.அழகிரி. அப்பொழுது அவர் டி.ஆர்.பாலுவை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

தந்தை ஷாஜகானை சிறை வைத்து அவரது மகன் அவுரங்கசீப் ஆட்சியை பிடித்தார். அது போல தி.மு.க. தலைவர் கருணாநிதியை சிறை வைத்து அவரது பதவியை பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்.

2009 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வில் நானும் பழனிமாணிக்கம் உள்பட பலரும் வெற்றி பெற்று எம்.பி. ஆனோம். மத்திய மந்திரிகளானோம். எங்களை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டு வெளியேற்றி விட்டனர். இதில் டி.ஆர்.பாலுவுக்கு பெரும் பங்கு உள்ளது.

டெல்லியில் சுமூக உறவை ஏற்படுத்த தயாநிதிமாறன் செயல்பட்டார். ஆனால் டி.ஆர்.பாலு பிரிக்கவே முயற்சி செய்தார். அவர் செய்த தவறுகளால் அவருக்கு மீண்டும் பதவி கொடுக்க முடியாது என்று பிரதமர் கூறிவிட்டார். தங்களுக்கு பதவி இல்லாததால் நேரம் பார்த்து மத்தியில் தி.மு.க. மந்திரிகளாக இருந்தவர்களின் பதவியை பறித்து விட்டனர்.

ஜெனீவா தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது குறித்து காங்கிரஸ் முடிவு தெரிவிப்பதற்குள் டி.ஆர்.பாலு போன்றவர்கள் தி.மு.க. தலைவரிடம் தவறான தகவல்களை தெரிவித்து தி.மு.க. மந்திரிகளை அவசர அவசரமாக ராஜினாமா செய்ய வைத்தனர். இந்த முடிவு மத்திய மந்திரியாக இருந்த எனக்கே தெரியாது.

தி.மு.க. உட்கட்சி தேர்தலில் மாவட்ட செயலாளர் ஆக முடியாமல் டி.ஆர்.பாலு தகிடுதத்தம் செய்தார். அவரால் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் எப்படி ஜெயிக்க முடியும்? டி.ஆர்.பாலு 10 கப்பல்களுக்கு சொந்தக்காரர்.

ஸ்ரீபெரும்புதூரை விட்டு தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் ஏன் போட்டியிடுகிறார். மன்னார்குடி சட்டசபை தொகுதியில் மகன் இருப்பதால் இங்கு ஜெயிக்கலாம் என டி.ஆர்.பாலு நினைக்கிறாரா? எவ்வளவு பணம் கொடுத்து சீட் வாங்கினாரோ தெரியவில்லை.

பழனிமாணிக்கத்துக்கு ‘சீட்’ கிடைக்காமல் செய்துவிட்டார். அவருக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. கட்சி வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் வேறு யாருமே இல்லையா? அவர்களுக்கு ‘சீட்’ கொடுத்திருக்கலாம்.

கட்சியில் இருந்து நாம் நீக்கப்பட்டு இருக்கோம். எனவே நாம் தலை நிமிர வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். இது குறித்து சிந்தித்து செயல்படவேண்டும்.

இவ்வாறு அழகிரி கூறியிருந்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராக விலக்கு அளித்த நீதிபதி

தமிழக முதலமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது வரும் 5-ம் தேதி (சனிக்கிழமை)  ஜெயலலிதா நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் ஜெயலலிதா ஆஜராகும்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது சிரமமாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து காலையில் தான் அளித்த தீர்ப்பை பிற்பகலில் மாற்றி, ஜெயலலிதாவின் பாதுகாப்பு கருதி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து அவருக்கு விலக்கு அளிப்பதாக உத்தரவிட்டார்.  அவர் எப்போது ஆஜராக வேண்டும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இவ்வழக்கில் தொடர்புடைய சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 5-ம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிபதி குன்ஹா உத்தரவிட்டுள்ளார்.

எங்களை திமுக கட்சியினர் பயன்படுத்திக் கொள்ளத் தவறுகின்றனர்- கடலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விரக்தி

கடலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளை அதிகமாக கண்டுகொள்ளாமல் இருப்பதால் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் விரக்தியில் உள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தாமரைச்செல்வனிடம் இது குறித்து கேட்டபோது, "எங்களை திமுக- வினர் பயன்படுத்திக் கொள்ளத் தவறுகின்றனர். இது ஏன் என்பது புரியவில்லை. கடலூரில் எங்கள் தலைவர் தொல். திருமாவளவன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். ஆனால், திமுக தரப்பிலிருந்து இதுவரை பிரச்சாரம் குறித்து ஆலோசனை நடத்தவில்லை. அதிமுக-வினர் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்கள். இவர்கள் இதுவரை எதிலும் ஆர்வம் காட்டவில்லை." என்று பதிலளித்தார்.

இதைப் பற்றி கேட்ட போது, திமுக வட்டாரங்களில் கூறப்படுவது என்னவென்றால், அவர்களை அழைத்துக் கொண்டு சென்றால் கிராமப்புறங்களில் கிடைக்கக் கூடிய கொஞ்ச நஞ்ச ஓட்டுகளும் கிடைக்காமல் போய்விடும். அக்கட்சியின் மாவட்ட முக்கியப் பிரமுகர் மீது மாவட்டம் முழுக்க அதிருப்தி நிலவுவதே இதற்குக் காரணம். மேலும், அவர்கள் எதையோ எதிர்பார்த்தே வருகிறார்களே தவிர, களப்பணிக்காக வருவதாகத் தெரியவில்லை. அதனால்தான், அவர்களாகவே வந்தால் வரட்டும் என்ற மனப்பான்மையில் நாங்களும் செயல்படுகிறோம்’’ என்று கூறுகின்றனர். 

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை எதிர்த்து வழக்கு தொடர்வதாக கூறிய ஜெயலலிதா


நாமக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் ஆணைய விதிமுறைகள் நியாயமற்றதாக இருக்கிறது என்றும், அதை எதிர்த்து வழக்கு தொடர போவதாகவும் கூறியிருக்கிறார்.

பிரச்சாரத்தின் போது தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து அவர் பேசியதாவது:

கட்சியின் தலைவர் அல்லது நட்சத்திரப் பேச்சாளர் பேசும் கூட்டத்தின் மேடையில் வேட்பாளர் இருந்தாலும் அல்லது அவரது பெயரோ புகைப்படமோ இருந்தாலும், அவரது பெயரை உச்சரித்தாலும், கூட்டத்திற்கு ஏற்பட்டதாக கருதப்படும் செலவு அனைத்தும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு நியாயமற்றது.

பொதுமக்கள் தாங்களாகவே தங்களது சொந்த செலவில் வாகனங்களில் வந்தாலும், அந்தச் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்பது எப்படி நியாயமாகும்? ஒரு மக்களவைத் தொகுதி என்பது கிட்டத்தட்ட ஒரு மாவட்டத்திற்கு இணையானது.

நான் ஒரு மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறேன் என்றால் அந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மக்கள் என்னைப் பார்க்க வேண்டும், என்னுடைய உரையினை கேட்க வேண்டும் என்று நான் பேசும் இடத்திற்கு தங்களுடைய சொந்தச் செலவில் பொதுமக்கள் வாகனங்களில் வருவது என்பது இயற்கையானதுதான். இதே போன்று, அரசியல் தலைவர்களின் பதாகைகளை வைப்பதும், கட்அவுட்களை வைப்பதும், வழக்கமான அரசியல் கலாச்சாரம் தான். இது தான் காலம் காலமாக நடந்து வருவது.

1952-ஆம் ஆண்டிலிருந்து அண்ணா காலத்திலும் சரி, எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, இதே நடைமுறை தான் கடைபிடிக்கப்பட்டது. கடந்த 32 ஆண்டுகளாக நான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காலத்திலும் சரி இது போன்ற நடைமுறை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், 2014-ல் நடைபெறுகின்ற இந்தத் தேர்தலில் திடீரென்று தேர்தல் ஆணையம் இது போன்ற கட்டுப்பாட்டினை விதிப்பதால் இந்தத் தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரே இங்கு வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

தேர்தல் என்று வந்துவிட்டாலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முற்றிலும் ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் பல்வேறு ஆணைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. எந்த ஒரு சிறிய உத்தரவு வெளியிட வேண்டுமென்றாலும், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இது ஜனநாயகத்திற்கு முற்றிலும் புறம்பானது ஆகும்.

'ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனையும் கடிப்பது' என்று சொல்வார்களே, அதைப் போல, இப்போது வேட்பாளரே தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நிற்க முடியாத சூழ்நிலையை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் வேட்பாளர் பெயரைக் கூட உச்சரிக்கக் கூடாதென்றும், இத்தொகுதி வேட்பாளர் என்று கூட சொல்லக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனநாயகத்தையே கேலிக்கூத்து ஆக்குவதாகும்.

எனவே, இது குறித்து நீதிமன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழக்கு தொடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவின் காரணமாக இந்தத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை நான் அறிமுகம் செய்ய முடியவில்லை"

இவ்வாறு ஜெயலலிதா கூறியிருந்தார். 

மகேந்திரசிங் தோனியின் புகழ் ஒன்றும், கிரிக்கெட் விளையாட்டின் புகழை விட பெரியது இல்லை- ஜீ டிவி


கடந்த மாதம், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனக்கும், தன் மனைவிக்கும் ஐ.பி.எல்  கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு இருக்கிறது என‌ தவறான செய்திகளை வெளியிட்டதற்காக, ஜீ டி.வி. செய்தி சேனல், நியூஸ் நேஷனல் நெட்ஓர்க் செய்தி நிறுவனம், தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி ஜி.சம்பத்குமார் ஆகியோர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னை பற்றி அவதூறான செய்திகள் வெளியிட்டதற்காக, அவர்களிடம் இருந்து 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடும்,  தன்னை பற்றி செய்தி வெளியிட அவர்களுக்கு தடை விதிக்க வேண்டுமென தோனி கேட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.தமிழ்வாணன், மகேந்திரசிங் தோனியை பற்றி செய்தியை வெளியிட ஜீ டி.வி. செய்தி சேனலுக்கும், நியூஸ் நேஷனல் செய்தி நிறுவனத்துக்கும் இடைக்கால தடை விதித்தார்.

இதை தொடர்ந்து,  ஜீ (டி.வி.) மீடியா நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

மேட்ச் பிக்சிங்' விவகாரம் தொடர்பாக பல்வேறு உண்மைகளை மறைத்து, இந்த வழக்கை தோனி தொடர்ந்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டு என்பது தற்போது ஒரு நாட்டின் பெருமைக்குரிய விளையாட்டாக மாறியுள்ளது.

இந்த சூழ்நிலையில், 'மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட்டதாக 4 கிரிக்கெட் வீரர்களை, டெல்லி போலீசார் கைது செய்தபோது, இந்தியா முழுவதும் ஒரு அதிர்ச்சி அலை வீசியது. இதுசம்பந்தமாக இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய விசாரணையில், அந்த 4 வீரர்களும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனால்தான், இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விசாரணை குழுவில் ஒரு உறுப்பினராக இருந்த நீலாய் தத்தா தாக்கல் செய்த தனி அறிக்கையில், கடந்த 2013-ம் ஆண்டு மே 12-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான ஆட்டத்தின் போது, தோனி 'பேட்டிங்' செய்த விதம் குறித்து சுதந்திரமான விசாரணை அமைப்பை கொண்டு விசாரிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த அறிக்கை விவரங்களை, தோனி இந்த கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. இந்த குழுவின் முன்பு தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலம் விவரம் அனைத்தும், இணைய தளங்களில் வெளியாகியுள்ளது. இதன்பின்னர், இந்த மோசடியின் தீவிரத்தை உணர்ந்து, மற்றவர்களை போல் நாங்களும் செய்திகளை வெளியிட தொடங்கினோம்.

ஆனால், எங்களது செய்தியில், 'மேட்ச் பிக்சிங்கில்' தோனி மற்றும் அவரது மனைவிக்கு நேரடியாக தொடர்பு உள்ளது என்றோ, சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற டோனி முயற்சி செய்தார் என்றோ நாங்கள் குறிப்பிடவில்லை.

எனவே, டோனியின் நற்பெயருக்கு குந்தகம் ஏற்படுத்தி விட்டதாக எங்கள் மீது குற்றம் சுமத்துவது ஏற்க முடியாது. பொதுமக்கள் மத்தியில், கிரிக்கெட் விளையாட்டுக்கு உள்ள புகழை விட, தோனியின் புகழ் பெரியது கிடையாது.

எனவே, தோனி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்யவேண்டும். அவரை பற்றி செய்தி வெளியிடுவதற்கு விதிக்கப்ட்ட இடைக்கால தடையை நீக்கவேண்டும்.

இவ்வாறு அந்த பதில் மனுவில் கூறப்பட்டு இருந்தது.  இதையடுத்து, இந்த வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தேர்தலில் வெற்றி பெற யாகத்தில் கலந்து கொண்ட சோனியா மற்றும் ராகுல்

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்து முடித்ததும்,  தகியாவுக்கு சென்ற அவர், அங்குள்ள அலி மியான் தர்காவில் பிரார்த்தனை செய்தார். ஒவ்வொரு தேர்தலின் போதும் வேட்பு மனு தாக்கல் செய்தபின் அலி மியான் தர்காவில் சோனியா பிரார்த்தனை செய்வது வழக்கமாகும். அதற்கு முன்னதாக,  பூஜை மற்றும் யாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்தல் வெற்றிக்காக நடைபெற்ற இந்த யாகத்தில் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரேபரேலி தொகுதியில் சோனியா வேட்புமனு தாக்கல் செய்யும் போது, அவரது மகள் பிரியங்கா மற்றும் மருமகன் ராபர்ட் வதேரா ஆகியோர் வருவது வழக்கம், ஆனால் இம்முறை அவர்கள் இருவரும் சோனியாவுடன் வரவில்லை. அதற்கான காரணங்கள் இன்னும் அறியபடவில்லை.

ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து பா.ஜனதா சார்பில் அஜய் அகர்வால் என்பவர் போட்டியிடுகிறார். இத்தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளராக மத்திய பிரதேச ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி பக்ருதின் போட்டியிடுகிறார். 

எம்.பி-க்கள் ரித்தீஷ், நெப்போலியன் ஆகியோரை ஏன் திமுகவில் இருந்து நீக்கவில்லை?

தஞ்சையிலிருந்து மதுரை செல்லும் வழியில் திருச்சியில் ஒரு ஓட்டலுக்கு உணவருந்த சென்றிருந்தார்,மு.க. அழகிரி. அதை பற்றி தகவல் அறிந்த, திருச்சி செய்தியாளர்கள் அழகிரியை சந்திக்க விரைந்தனர். உணவருந்திவிட்டு புறப்படத் தயாரான அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

திருச்சியில் திமுக வெற்றி பெறுமா என எனக்கு எப்படித் தெரியும்?. நான் தான் திமுக-விலேயே இல்லையே. என்னை திமுகவில் இருந்து நீக்கியது பற்றிய முறையான அறிவிப்பு இன்னும் எனக்கு வர வில்லை. வைகோ, எம்.ஜி.ஆர் ஆகி யோரைக் கட்சியிலிருந்து நீக்கிய போது முறைப்படி அவர்களுக்கு எழுத்துப் பூர்வமான கடிதம் அனுப்பினார்கள். எனக்கு இதுவரை அப்படியொரு கடிதம் வரவில்லை. கடிதம் வந்தால்தான் நான் அதை எதிர்த்து வழக்கு தொடருவது பற்றி முடிவு செய்ய முடியும்.

திமுக-விலிருந்து என்னை நீக்கியவர்கள் எம்.பி-க்கள் ரித்தீஷ், நெப் போலியன் ஆகியோரை ஏன் நீக்க வில்லை என திமுக-வினரிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும் என்றார்.

ஆ.ராசா வேட்புமனு தாக்கல்; சொத்து மதிப்பு ரூ.3.75 கோடி


நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது சொத்து மதிப்பு ரூ.3.75 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2009-ல் வேட்புமனு தாக்கல் செய்தபோது, இதன் மதிப்பு ரூ.70 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு விவரம்:

ஆ.ராசா பெயரில் அசையும் சொத்துக்கள் - ரூ.1,45,90,709

ஆ.ராசா பெயரில் அசையா சொத்துக்கள் - ரூ.14,87, 419

ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி பெயரில் அசையும் சொத்துக்கள் - ரூ.93,93,597

ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி பெயரில் அசையா சொத்துக்கள் = ரூ.14,12,975

மகள் பெயரில் அசையும் சொத்துக்கள் - ரூ.18,15,400.

பரம்பரை சொத்துக்களில் அசையும் சொத்து - ரூ.41,03,540

பரம்பரை சொத்துக்களில் அசையா சொத்துக்கள் - ரூ.14,53,875

மொத்த சொத்து மதிப்பு - ரூ.3,75,42,880

வேட்பு மனுவை தாக்கல் செய்த ஆ.ராசா, "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நஷ்டம் ஏற்படவில்லை. இதில், நேருக்கு நேர் ஜெயலலிதா விவாதிக்கத் தயாரா என சவால் விடுகிறேன்." என்று கூறினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media