திமுக தொண்டர்கள் மீது 2001ல் சென்னையில் காவல்துறையும், ரவுடிகளும் நடத்திய வன்முறை குறித்து திமுக எம்.எல்.ஏவின் நினைவலைகள்
குன்னம் தொகுதி எம்.எல்.ஏ திமுகவை சேர்ந்த சிவசங்கர் எஸ்.எஸ் அவர்கள் 2001ல் ஜெயலலிதா அரசால் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை நள்ளிரவில் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து ஆகஸ்ட் 12, 2001ம் ஆண்டு நடைபெற்ற பேரணியில் வெடித்த வன்முறை குறித்து நினைவுகளை ஃபேஸ்புக் பக்கத்தில் சுவையாக எழுதியிருந்தார், அவைகள் உங்கள் பார்வைக்கு.
---------------
ஊர்வலத்திற்கு வரும் போது வாகனத்தை கிண்டியிலேயே காவல்துறை மடக்கியது. அதற்கு மேல் வாகனத்தை அனுமதிக்க முடியாது என்றனர். அங்கேயே போலீஸார் வீடியோ கேமரா கொண்டு படமெடுக்க துவங்கினர். கெடுபிடி அதிகமாக இருந்தது.
ஊர்வலம் துவங்கியது. நாங்கள் பங்கேற்ற இடம் கிட்டத்தட்ட ஊர்வலத்தின் மய்யப்பகுதி. துவங்கிய சைதாப்பேட்டையிலிருந்தே சாலையின் இருபுறமும் போலீஸ் வெகுவாக குவிக்கப் பட்டிருந்தனர். சாதாரணமாக அல்ல, சுவர் வைத்தது போல.
2001 ஆம் ஆண்டு, ஜூன் 30-ம் நாள் தலைவர் கலைஞர் நள்ளிரவில் ஜெயலலிதா அரசால் அராஜகமாக கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்த ஊர்வலம் ஆகஸ்ட் 12 அன்று. மே மாதம் ஆட்சியை இழந்தக் கட்சியின் ஊர்வலமாகத் தெரியவில்லை.
கலைஞர் கைதை தொலைக்காட்சியில் பார்த்து தன்னையே இழுத்துப் போனதாக உணர்ந்த கலைஞரின் உடன்பிறப்புகள் வெள்ளமென திரண்டிருந்தனர். உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தனர். கைது செய்த முத்துக்கருப்பனையும் ஜெயலலிதாவையும் கண்டித்து முழக்கம் எழுப்பப் பட்டது.
காவலுக்கு நின்ற போலீஸார் தலைமையிடத்து உத்தரவின் பேரில் விறைப்பாய் நின்றனர். அதைப் பார்த்த கழகத் தோழர்களுக்கு இன்னும் கோபம் கூடி கோஷத்தின் டெஸிபல் உயர்ந்தது. போலீஸ் ஆளுயர லத்தியுடன் சற்று முறைக்க ஆரம்பித்தனர். "அஞ்ச மாட்டோம் அஞ்ச மாட்டோம் அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்" என்ற முழக்கம் ஒலிக்க ஆரம்பித்தது.
ஊர்வலம் ராதாகிருஷ்ணன் சாலையில் நுழையும் போது இருட்டத் துவங்கி இருந்தது. போலீஸினர் முகத்தில் வித்தியாசமான உணர்வு தெரிந்தது. சிலரின் கோஷம் கடுமையாக இருந்தது. சில இடங்களில் ஊர்வலத்தை போலீஸார் தடுப்பதாகவும் டைவர்ட் செய்வதாகவும் தகவல்கள் பரவ ஆரம்பித்தன.
சிட்டி செண்டர் சிக்னல் தாண்டும் போது போலீஸார் "சீக்கிரம் போங்க" என எங்களை நெருக்கத் துவங்கினர். எங்களுக்கு முன்பாக திருச்சி மாவட்டத்தினர் சென்று கொண்டிருந்தனர். அவ்வப்போது எங்கிருந்தோ கற்கள் வந்து விழ ஆரம்பித்தன. போலீஸாரிடம் சொன்னால் கண்டு கொள்ளவில்லை. அப்போதே நெருட ஆரம்பித்தது.
டி.ஜி.பி அலுவலகத்திற்கு முன்பாக பறக்கும் ரெயில் பாலம் ஒன்று இருக்கும், அதற்கு கீழாக நாங்கள் செல்லும் போது தொலைவில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. நிதானிப்பதற்குள் எங்கள் அருகிலேயே ஏதோ குண்டு போல் விழுந்தது. ஒரே புகை மயம். கண்ணீர் புகைக்குண்டு. கண்ணை கசக்கிக் கொண்டு சாலையின் ஓரத்திற்கு ஒதுங்கினோம்.
போலீஸார் எங்களை துரத்துவதிலேயே குறியாக இருந்தனர். அதற்குள் தொலைவில் கேட்ட சத்தம், டி.ஜி.பி அலுவலகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு என தெரிய வந்தது....
போலீஸார் லத்தியை சுழற்றத் துவங்கினர். சாலைக்கு திரும்ப சென்றவர்கள் மீது ரப்பர் குண்டுகள் வந்து தாக்கத் துவங்கின. தொடர்ந்து சுடும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. சாலையே போர்களமாக காட்சி அளித்தது. எங்கள் மாவட்டத்தினர் மட்டும் அந்த இடத்திலேயே மாட்டிக் கொண்டோம். எங்களில் சிலருக்கு கல்லடி, சிலருக்கு லத்தி அடி.
முன்னாள் சென்றவர்கள் கால்வாய்க்கு இடது புறம் உள்ள சாலையில் சென்றுவிட்டனர். அந்த நேரத்தில் ஒரு மாருதிவேன் ஆம்புலன்ஸ் ஒன்று கடற்கரையை நோக்கி வந்தது. நாங்கள் இருக்கும் பகுதியை கடக்கும் போது புகை மூட்டத்தால் வேகம் குறைந்தது. இருக்கும் சூழலை பார்த்து ஆம்புலன்ஸை திருப்ப முனைந்தது போல் இருந்தது.
அந்த நேரத்தில் பக்கத்தில் ஒரு கட்டிடத்தில் இருந்து வந்த இரண்டு பேர் அந்த ஆம்புலன்ஸை கட்டையால் தாக்கினர். கண்ணாடிகள் நொறுங்கின. டிரைவர் இறங்கி தப்பி ஒடினார். ஆம்புலன்ஸில் வேறு யாரும் இல்லை. தாக்கிய இருவரும் தள்ளி சென்று ஒரு பாட்டிலை ஆம்புலன்ஸ் மீது அடித்தனர்.
வேன் தீ பிடித்தது. சினிமாவில் நடப்பதை போல் காட்சிகள் நடந்தேறின. நிமிடங்களில் நடந்த இந்த சம்பவத்திற்கு போலீஸார் மௌனசாட்சியாக நின்றனர். இப்போது நாங்கள் 50 பேர் அளவிலே அந்த இடத்தில் இருந்தோம். மீதி பேர் கால்வாயின் இரு பக்கங்களிலும் சென்று கொண்டிருந்தனர். பின்னால் வெகு தொலைவிலே மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் போலீசாரால் மறிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.
நாங்கள் இருந்த இடத்திலிருந்து காந்தி சிலை வரை சாலை வெறிச்சோடி காணப்பட்டது. பிளாட்பார்மில் ஏறி நடந்தோம். சாலை முழுவதும் ஓடும் போது விட்டு சென்ற செருப்புகளும், கிழிந்த துண்டுகளும், வேட்டிகளும், முறிந்த லட்டிகள் என போர் முடிந்த களமாய் காட்சியளித்தது.
பொங்கி வழியும் வியர்வையும், கண் எரிச்சலுமாய், தாக்குதலின் வலியுமாய் கடற்கரை சாலையை அடைந்தோம். அங்கு இதை விட அலங்கோலம். போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டு கை, கால் முறிந்து, காயங்களோடு பலர் சாலை ஓரமாக அமர்ந்திருந்தனர். குண்டடிப்பட்டவரை தூக்கி செல்கிறார்கள் என்றனர். ஒருவருக்கு உயிர் பிரிந்துவிட்டது என்றனர்.
கழகத் தோழர்கள் வந்த வேன்கள் வந்து தாக்கப்பட்டவர்களை ஏற்றி செல்லும் முயற்சியில் இருந்தனர். நாங்கள் முன்னே செல்ல ஆரம்பித்தோம். விவேகானந்தர் இல்லத்திற்கு அந்தப்பக்கம் சாலை விளக்குகள் ஒளிரவில்லை, வாகன வெளிச்சம் மட்டுமே. பார்த்தால் வெட்டுக்காயங்களோடு இருந்த சிலரை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து காந்தி சிலை பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்திய அதே நேரத்தில், திருவல்லிக்கேணி அயோத்திக்குப்பம் பகுதியில் இருந்து வந்த ரவுடிக்கூட்டம் சிறுசிறு குழுக்களாக பிரிந்து கழகத் தோழர்களை வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களால் தாறுமாறாக வெட்டியிருக்கின்றனர். தலை, கை, கால் என ஏகப்பட்ட பேருக்கு வெட்டு. எங்கும் ரத்த மயம். மரண ஓலம்.
( போலிசுக்கு தலைமை முத்துக்கருப்பன், ரவுடிகளுக்கு தலைமை அயோத்திக்குப்பம் வீரமணி. அரசுக்கு தலைமை முதலமைச்சர் ஜெயலலிதா )
இதை எல்லாம் பார்த்து பதைபதைத்த நாங்கள் உடன் வந்தவர்களை தேடிப் பிடிக்கத் தொடங்கினோம். ஒரு குழு தப்பி ஓடி அயோத்திக்குப்பம் வழியாக வந்து, அங்கே சிலரால் துரத்தப்பட்டு வந்து சேர்ந்தனர். இன்னும் சிலர் நாங்கள் தாக்கப்பட்ட பகுதியிலேயே மொட்டை மாடிகளில் ஏறி ஒளிந்திருந்து வந்து சேர்ந்தனர். பலர் தப்பி பீச்க்கு ஓடி வந்து நாங்கள் வந்த வாகனங்களை கண்டு பிடித்து அமர்ந்திருந்தனர்.
பீச்சில் இருந்த வாகனங்களையும், தோழர்களையும் போலீஸ் கிளம்ப சொல்லி விரட்ட ஆரம்பித்தனர். அப்போது கடற்கரை சாலையிலிருந்து துப்பாக்கி ஏந்திய போலிசார் கடற்கரை மணலில் இறங்குவதும், சாலைக்கு திரும்ப போவதுமாக மிரட்டிக் கொண்டிருந்தனர். திரும்ப துப்பாக்கிச்சூடு நடக்கலாம், ரவுடிகள் தாக்க வரலாம் என்ற பீதி கிளம்பியது.
ஒவ்வொரு வாகனமாக கிளப்பி அனுப்பினோம். என்னிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டவர்களை திரட்டி கடைசி வாகனத்தை கிளப்பிய போது இரவு 11.00. நீங்காத திகிலோடு ஊர் திரும்பினோம், வாழ் நாளுக்கும் மறக்க மாட்டோம்.
பின்னாளில், எங்கள் ரத்தத்தை அம்மனுக்கு பூசை செய்த அயோத்திக்குப்பம் வீரமணி, அம்மனாலேயே அருள் பாலிக்கப்பட்டார்.
# இன்னும் ரத்தப் பூசை கேட்ட அம்மன் தான்....