BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 28 April 2014

மேஜர் முகுந்த் உடலை கொண்டு வந்த ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன் எழுதிய உருக்கமான கடிதம்

கடந்த வாரம் காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்தவரான மேஜர் முகுந்த் வரதராஜன் கொல்லப்பட்டார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை கொண்டு வந்த ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன் சீனிவாசன், முகுந்தின் தாய்-தந்தையருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த க‌டிதத்தில் கேப்டன் கூறியதாவது:

பாசத்திற்குரிய தந்தை மற்றும் தாய் அவர்களுக்கு, உங்கள் வீரமகனின் உடலை கொண்டு வரும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. உங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

முகுந்தின் ஆன்மாவை இறைவன் சாந்தியடையவைப்பதுடன் உங்களுக்கு மிகுந்த வலிமையும் தருவார் என்று நம்புகிறேன். தயவு செய்து என்னையும் உங்கள் மகன்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

மின்வெட்டினால் மக்கள் அவதியுறுகிறார்கள்; அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கொடநாட்டில் ஓய்வெடுக்கிறார் ஜெ. -ராமதாஸ்

மக்கள் மின்வெட்டினால் அவதியில் இருக்கும் போது, அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், முந்தைய ஆட்சியையும், மத்திய அரசையும் குறை கூறிக் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக செயற்கையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் வெட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின் வெட்டு செயல்படுத்தப்படுகிறது.

மின்வெட்டிலிருந்து தற்காலிகமாக விலக்களிக்கப்பட்டிருந்த சென்னை நகரிலும் கடந்த இரு நாட்களாக 3 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குவதாகக் கூறி 2011 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அடுத்த 3 மாதங்களில் மின்வெட்டு சரி செய்யப்படும் என உறுதி அளித்தார். அதன்பின் 3 மாதங்களுக்கு ஒருமுறை வீதம் இதுவரை 11 முறை மின்வெட்டு விரைவில் சரி செய்யப்பட்டுவிடும் என கூறி வந்தார். ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அவர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் எழுதிய எழுத்துக்களாக கலைந்து போக, மின்வெட்டு மட்டும் நிரந்தரமாக நீடிக்கிறது.

தமிழ்நாட்டில் 110 டிகிரி கோடை வெயில் சுட்டெரிக்கும் வேளையில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பதால் மக்கள் புழுக்கத்தில் வெந்து கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, விசைத்தறியில் தொடங்கி பெரும் தொழிற்சாலைகள் வரை அனைத்து மட்டங்களிலும் கடுமையான உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து தவிக்கின்றனர்.

ஆனால், ஜெயலலிதா மின்வெட்டை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், முந்தைய ஆட்சியையும், மத்திய அரசையும் குறை கூறிக் கொண்டு கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

மின்வெட்டை போக்குவதற்கான யோசனைகளை பட்டியலிட்டு கடந்த 3 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ளேன்; பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். ஆனால், மக்கள் நலனில் அக்கறை இல்லாத அ.தி.மு.க. அரசு இவற்றில் எந்த யோசனையையும் செயல்படுத்தவில்லை.

திட்டமிட்டு செயல்படுத்தினால் எந்த ஒரு மின்திட்டத்தையும் 30 மாதங்களில் நிறைவேற்ற முடியும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது 12,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான மின் திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. அவற்றை அரசு முழுவீச்சில் செயல்படுத்தியிருந்தால் தமிழகம் இன்று உண்மையாகவே மின்மிகை மாநிலமாகியிருக்கும். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக ஒரே ஒரு மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான கட்டுமான பணிகள் கூட தொடங்கப்படவில்லை.

எண்ணூரில் 660 மெகாவாட் மின்திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டு, ஓராண்டுக்கு பிறகு தான் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. 2640 மெகாவாட் திறன்கொண்ட மேலும் இரு திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு 9 மாதங்களாகியும் இதுவரை ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. இதனால், அடுத்த 3 ஆண்டுகளில் கூடுதலாக ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்ய முடியாது என்பது தான் உண்மை நிலை. ஆனால், முதல்வரோ 99% மின்வெட்டு சரி செய்யப்பட்டு விட்டதாகவும், விரைவில் தமிழகம் மின்மிகை மாநிலமாகும் என்றும் கூறி ஏமாற்றி வருகிறார்.

இவையெல்லாம் மக்களவைத் தேர்தலில் வாக்குகளைப் பெற திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகங்கள் என்பதை வாக்குப்பதிவு முடிந்ததற்கு அடுத்த நாளே மின்வெட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப் பட்டதிலிருந்தே மக்கள் புரிந்து கொண்டிருப்பர்.

மின்வெட்டைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத ஜெயலலிதா, 2 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்த ஆயத்தமாகிவிட்டார். தமிழ்நாடு மின் வாரியத்தின் இழப்பு ரூ.75,000 கோடியாக அதிகரித்து விட்டது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது மின்வாரியத்தின் இழப்பு ரூ.40,375 கோடியாக இருந்தது. இதை ஈடுகட்டுவதற்காகத் தான் ரூ.7874 கோடிக்கு மின்கட்டண உயர்வை ஜெயலலிதா அறிவித்தார். இதற்குப் பிறகும் 3 ஆண்டுகளில் மின்வாரியத்தின் இழப்பு இப்போது ரூ.75,000 கோடியாக உயர்ந்திருக்கிறது என்றால் ஜெயலலிதா ஆட்சியின் நிர்வாகத்திறன் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தமிழகத்திற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தவறியது, தட்டுப்பாட்டைப் போக்க தனியாரிடமிருந்து அதிக விலையில் மின்சாரத்தை வாங்குவது, மின்சாரக் கொள்முதலில் ஊழல் தலைவிரித்தாடுவது ஆகியவையே மின்வாரியத்தின் இழப்பு அதிகரித்ததற்கு காரணமாகும். இதையெல்லாம் புரிந்து கொள்ளாத ஜெயலலிதா, மின்பற்றாக்குறைக்குத் தீர்வு மின்வெட்டு, இழப்பை ஈடுசெய்ய கட்டண உயர்வு என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்.

அதிலும், தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறும் வரை காத்திருந்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு இவற்றை செய்ய முயலுவதன் மூலம் ஜெயலலிதா அவரது உண்மை முகத்தை காட்டி விட்டார். இவ்வாறு செய்வதை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்.

எனவே, மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிட்டு, மின்வெட்டை போக்குவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும். மாறாக மக்களிடம் வாக்குகளை பெற்றாகிவிட்டது என்ற எண்ணத்தில் அவர் செயல்பட்டால், அவருக்கு மக்கள் சரியான பதிலடி தரத் தயங்க மாட்டார்கள்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

குஜராத் குறித்து அரைகுறையாகத் தெரிந்துகொண்டு, ராகுல் வேலைவாய்ப்பு பற்றியும், லோக்ஆயுக்தா பற்றியும் பேசுவது சரியல்ல.- மோடி

ராகுல் கணக்குபடி குஜராத்தில் 27,000 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு இல்லையாம், ஆனால் அங்கு இருப்பதே 6கோடி பேர் தான், இது போன்ற ஆட்களை வைத்து கொண்டு எப்படி நாட்டை முன்னேற்றுவது? -மோடி

குஜராத்தின் படான் மக்களவைத் தொகுதியில் இன்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது இறுதிக் கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, "உங்களுக்கு மிகவும் சோர்வாக இருந்தால், அதைப் போக்குவதற்கு ராகுல் காந்தியின் பேச்சை கேட்கலாம். அவரது கணக்குப்படி, குஜராத்தில் 27,000 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையாம். ஆனால், குஜராத்தின் மொத்த மக்கள் தொகையே 6 கோடிதானே? இந்த மாதிரியான ஆட்களை வைத்துக்கொண்டு நாட்டை எப்படி முன்னேற்றுவது? குஜராத் குறித்து அரைகுறையாகத் தெரிந்துகொண்டு, ராகுல் வேலைவாய்ப்பு பற்றியும், லோக்ஆயுக்தா பற்றியும் பேசுவது சரியல்ல.

அரசியல் ஆதாயத்திற்காக நர்மதை அணை விவகாரத்தில், சோனியா அரசு குஜராத்திற்கு துரோகம் இழைத்துவிட்டது. குஜராத் மாநிலம், தண்ணீர் இன்றி தவிப்பதாக கூறுகிறார். சோனியா சவுராஷ்ட்ராவுக்கு ரயிலில் தண்ணீர் அனுப்பினார். ஆனால், தற்போது பெரிய குழாய்கள் மூலமாக மக்களுக்கு தண்ணீர் பாய்கிறது.

ரயிலில் தண்ணீர் விநியோகம் செய்யும் மோசமான யோசனையை, சோனியாவின் ஆலோசகர் (அகமது படேல் பெயரை குறிப்பிடாமல்) தான் தந்துள்ளார். அம்மா - மகனின் அரசு மற்றும் அவர்களின் ஆலோசகர் மேற்கொண்டுள்ள திட்டம் நாட்டையே சீரழித்துவிட்டது.

நர்மதையை சுற்றி வேலி அமைக்க நாங்கள் திட்டமிட்டபோது, எதற்காக அதனை தடுத்தீர்கள்? அப்படி செய்திருந்தால், எங்களுக்கு 4 மடங்கு தண்ணீர் கிடைத்திருக்கும். அப்படி நாங்கள் செய்தால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு குஜராத்தில் காங்கிரஸ் இல்லாமல் போய்விடும் என்று உங்கள் ஆலோசகர் கூறினாரா?

காங்கிரஸ் என் மீது பழி சுமத்த ஏதேனும் விவகாரம் சிக்காதா? என்று பார்த்துக்கொண்டிருக்கிறது. நான் டீ விற்றேனா? இல்லையா? என்று ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக வத்நகருக்கு (மோடியின் சொந்த ஊர்) 100 நபர் கொண்ட குழுவை, காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளது" என்றார் மோடி.

செங்கோட்டை குண்டு வெடிப்பு நிகழ்த்திய தீவிரவாதி தற்பொழுது தூக்கிலிடப்பட மாட்டார் - உச்ச நீதிமன்றம்

2011 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் லக்‌ஷர் இ-தொய்பா அமைப்பச் சார்ந்த மொகமது ஆரிப் என்பவரை 2000 ஆம் ஆண்டு டில்லியில்  செங்கோட்டையில் குண்டு வைத்ததற்காக தூக்கு தண்டனை விதித்தது .

தூக்கு தண்டனையை எதிர்த்து ஆரிப் சார்பாக வழங்கப்பட்ட கருணை மனுவை இன்று எடுத்தது நீதிமன்றம் . தற்போது  ஆரிப் தூக்கிலிடப்பட மாட்டார் என கூறி வழக்கை அரசியல்  சாசன அமர்வுக்கு மாற்றியது .

குஜராத்தில் வரும் 30ம் தேதி நடக்கும் தேர்தலையொட்டி 1,80,000 பேர் முன்னெச்சரிக்கையாக கைது


குஜராத்தில் 26 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 30 ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் அங்கு அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 1, 80,000 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களில், 19 ஆயிரம் பேர் ஆபத்தானவர்கள் மற்றும் கிரிமினல் பின்னனி உடையவர்கள் என்று அறிக்கை கூறுகிறது. இந்நிலையில் பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி இன்று நான்கு இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும் குஜராத்தில் சுதந்திரமான நேர்மையான தேர்தலை நடத்தும் நோக்கிலும் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது, மேலும் மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நரேந்திர மோடியிடமிருந்து எந்த சலுகையையும் பெறவில்லை- அதானி


குஜராத்தில் ஏழை விவசாயிகளுக்கு சொந்தமான 45 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒரு சதுர மீட்டர் ரூ.1 என்ற விலையில், அதாவது ஒரு மிட்டாயின் விலையில் தொழிலதிபர் அதானிக்கு நரேந்திர மோடி வழங்கியுள்ளார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மேலும் பிரதிபலனை எதிர்பார்த்து மோடியின் பிரச்சார செலவை அதானி ஏற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் பி.டி.ஐ. செய்தியாளரிடம் பேசிய கௌதம் அதானி நேற்று கூறுகையில், “குஜராத்தின் கட்ச் பகுதியில் கடலோர முந்த்ரா நகருக்கு அருகில் 1993-ல் எங்கள் தொழில் நிறுவனங்களுக்காக நிலம் வாங்கினோம். இது நரேந்திர மோடி ஆட்சியில் நில வங்கிக்காக திரட்டிய 15,946 ஏக்கரில் 3-ல் 1 பகுதியாகும். எந்த விவசாயிடம் இருந்தும் ஒரு ஏக்கர் நிலத்தை கூட நாங்கள் வாங்கவில்லை. ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில், சாகுபடி செய்ய முடியாத பாலைவனம் போன்ற தரிசு நிலங்களையே நாங்கள் வாங்கினோம்” என்று கூறினார்.

நாட்டுக்காக என் மகன் உயிர் தியாகம் செய்தது பெருமையாக இருக்கிறது- மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜன்

காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளைத் தேடும் பணியில் மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இரு ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்களும் 3 தீவிரவாதிகளும் இறந்தனர்.

இதில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரும், சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் (31) ஆகியோர் உயிரிழந்தனர். இது குறித்து மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜன் கூறியதாவது:

'முகுந்த் எப்போதும் வாழ்க்கையில் குறிக்கோளுடன் இருந்தவன். சின்ன வயதில் இருந்தே தாய், தந்தைக்கு மரியாதை கொடுக்கும் பிள்ளை. என் மகனுக்குத் தாம்பரத்தில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று ஆசை. சில நாள் முன்புதான் வீட்டுக்கான முதல் தவணைத் தொகையை கொடுத்துவிட்டு வந்தோம். வீடு பார்க்கும்போது, ‘அப்பா வீடு 3 படுக்கை அறைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். நீங்களும் அம்மாவும் எப்பவும் எங்ககூடத்தான் இருக்க வேண்டும்’ என்று கூறுவான். ஆனா இப்ப அவனுடைய ஆசையை நிறை வேற்ற முடியாமல் போய்விட்டது.

சமீபத்தில் நண்பர்களுடன் ஸ்கூட்டர்ல போகும்போது விபத்தில் அவனுடைய நண்பருக்கு அடிபட்டுவிட்டது. ஆனால், நாங்கள் பயந்துவிடுவோம் என்று நினைத்து அதனை எங்களிடம் கூறவில்லை. என்னையும் அவங்க அம்மாவையும் முகுந்த் குழந்தை போல் பார்த்துக் கொள்வான். நாட்டுக்காக என் மகன் உயிர்த் தியாகம் செய்து இருப்பது பெருமையாக இருக்கிறது'' என்று கூறினார்.

சிறந்த வீரத்திருமகனை தமிழகம் இழந்திருக்கிறது. துணிவுமிக்க ஒரு போர்வீரரை நாடு இழந்துள்ளது. -ஜெயலலிதா

காஷ்மீர் மாநிலம் சோபியனில் தீவிரவாதிகளுடன் சனிக்கிழமை நடந்த மோதலில் சென்னையைச் சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் இறந்தார். அவரது மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸுக்கு முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய இரங்கல் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தங்கள் கணவர் மேஜர் முகுந்த் வரதராஜன் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனையும், பேரதிர்ச்சியும் அடைந்தேன். இது, உங்களது வாழ்விலேயே மிகவும் துக்ககரமான, மோசமான நாள் என்பதை நன்கு அறிவேன். அன்புமிக்க கணவரை இழந்து நீங்களும், பாசமிகு தந்தையை இழந்து உங்கள் மகளும், போற்றி வளர்த்த அன்பு மகனை இழந்து அவரது பெற்றோரும் தவித்து வருகிறீர்கள்.

எனினும், தாய்நாட்டைக் காக்கும் பெரும் பணியை செய்து வரும் இந்திய ராணுவத்தின் தரப்பில் போரிட்டு பெரும் தியாகத்தை அவர் செய்திருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். சிறந்த வீரத்திருமகனை தமிழகம் இழந்திருக்கிறது. துணிவுமிக்க ஒரு போர்வீரரை நாடு இழந்துள்ளது.

அவரது மறைவுக்கு தமிழக அரசின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பை தாங்கும் வலிமையை உங்கள் அனைவருக்கும் தருவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். உங்களது கணவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெயலலிதா கோடநாடு செல்வது புதிதல்ல- ஹாங்காங் சுற்றுபயணம் செல்லும் போது விமான நிலையத்தில் கூறிய‌ மு.க.ஸ்டாலின்


முதல்வர் ஜெயலலிதா கோடநாடு செல்வது புதிதல்ல; இதில் அதிருப்தி அடைய ஒன்றுமில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், சென்னையிலிருந்து விமானத்தில் ஹாங்காங் புறப்பட்டு சென்றார். அதற்கு முன்னர், விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாளு அம்மாளை சேர்த்திருக்கிறார்களே?

அதை நீங்கள் நீதிபதியிடம்தான் கேட்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும்.

தேர்தல் அமைதியாக நடந்ததாக போலீஸ் டி.ஜி.பி.க்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாரே?

தேர்தல் அமைதியாக நடந்ததா என்பதை நாட்டு மக்கள்தான் சொல்ல வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா கோட நாடு பயணம் செல்கிறாரே?

இது வழக்கமான ஒன்றுதான். புதிதல்ல. இதில் அதிருப்தி அடைவதற்கு ஒன்றுமில்லை.

இவ்வாறு பேட்டி அளித்து விட்டு, அவர் விமானத்தில் ஹாங்காங் புறப்பட்டார். அங்கு சுமார் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு, தமிழகம் திரும்பவுள்ளார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media