திமுக வேட்பாளர் பட்டியலில், 90 சதவிகிதமான வேட்பாளர்கள் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்று சமீபத்தில், அழகிரி தனது பேட்டியின் போது கூறியிருந்தார். கருணாநிதி, கனிமொழி, இருவருமே தாங்கள் பரிந்துரைத்த நபர்கள் வேட்பாளர் பட்டியலில் இருப்பார்கள் என எதிர்ப்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். கனிமொழி தனது ஆதரவாளர்கள் ஐந்து பேருக்காக சீட் கேட்டிருந்தார், ஆனால் ஸ்டாலின் அவரின் கோரிக்கையை நிராகரித்து ஒரு சீட் கூட தரவில்லை என்றும், கனிமொழி பரிந்துரைக்காத நபர்களில்கூட ‘கனிமொழி ஆதரவாளர்’ என்கிற லேசான சந்தேகம் ஏற்பட்டாலே அவர்களும் பரிசீலனைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.
டி.ஆர்.பாலு-வுக்கு திருச்சி தொகுதியை ஒதுக்கிவிட்டு, பழநிமாணிக்கத்தை தஞ்சாவூர் தொகுதிக்கு அறிவிப்பதே கருணாநிதியின் திட்டம். இவர் கனிமொழி வட்டத்தில் இருக்கிறார் என்பதாலேயே ஓரங்கட்டப் பட்டதாக பேசப்படுகிறது.
தென்சென்னைக்கு அறிவிக்கப்பட்ட டி.கே.எஸ். இளங்கோவன் கருணாநிதியின் தேர்வு என பரவலாக நம்ப படுகிறது. அங்கு ஸ்டாலினின் ஆதரவாளரான முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன்தான் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், சில உட்கட்சி பிரச்சினைகளால் சுப்ரமணியனே ஒதுங்கிக்கொண்டாராம். விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை என்றாலும் கூட குஷ்புக்கு அந்தத் தொகுதியை அளிக்க விரும்பினார் கருணாநிதி. இதற்கு துர்கா ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, டி.கே.எஸ். இளங்கோவனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது என்கிறார்கள்.
வேட்பாளர் தேர்வு குறித்து திமுக-வின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “ ஒருவர் பிடியிலேயே மொத்த அதிகாரமும் இருப்பது 2016 சட்டசபை தேர்தலில் திமுக-வுக்கு சாதகமாக அமையாது. கருணாநிதி பின்பற்றிய உட்கட்சி ஜனநாயக அணுகுமுறையால் மட்டுமே கட்சியில் உள்ளவர்களை சமாளிக்க முடிந்தது. ஸ்டாலினால் அது சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை” என்றார்.