BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 11 May 2014

ஆம் ஆத்மி மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிக்காது !!

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான கோபால் ராய் , ஆம் ஆத்மி சாதாரண மக்களின் இயக்கம் , எனவே தேர்தலுக்குப் பின் பாஜகவை ஆட்சியைப் பிடிப்பதைத் தடுக்க மூன்றாவது அணிக்கு நிபந்தனைக்குட்பட்ட ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார் . இதனால் பல கேள்விகள் எழுந்தன .

ஆனால் இதை மறுக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சி , இன்று வெளியிட்ட அறிக்கையில் ஆம் ஆத்மி தேர்தலுக்குப் பின் எந்த அணிக்கும் ஆதரவு அளிக்க முடியாது , ஆதரவும் அளிக்காது . ஆம் ஆத்மி எதிர் கட்சியாக அமருமே தவிர ஊழல்வாதிகளுடன் எந்த ஒரு ஒப்பந்தமும் செய்து கொள்ளாது . எனவே மூன்றாவது அணியுடன் கூட்டணி வைக்கும் என வரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே என கட்சி அறிக்கை வெளியானது .

மேலும் இதை ஆதரிக்கும் விதமாக கெஜ்ரிவால் டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில், மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை , இந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று தெரிவித்தார் .



கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் !!

ஆம் ஆத்மி ஒருகிணைப்பளார் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதால் தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியது .

தேர்தல் பிரச்சாரத்தின் போது கெஜ்ரிவால் , காங்கிரஸ் மற்றும் பாஜக விற்கு ஓட்டளித்தால் அது நாட்டுக்கும் கடவுளுக்கும் செய்யும் துரோகம் என்று கூறினார் . இவரின் இந்த பேச்சு மக்களின் மத நம்பிக்கையை தாக்குவதாக உள்ள்து என பாஜகவைச் சார்ந்த விவேக் கோயல் தேர்தல் ஆணையத்திடம் மனு வைத்தார் . இதனால் தேர்தல் ஆணையம் அவருக்கு மே 13 வரை நேரம் கொடுத்துள்ளது .

நைஜீரிய சிறுமிகள் 276 பேர் கடத்தல்: களமிறங்கியது அமெரிக்க ராணுவம்


கடந்த ஏப்ரல் 14-ம் தேதி நைஜீரியாவில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 276 சிறுமிகள் கடத்தப்பட்டனர். பின்னர், மே 5-ம் தேதி எட்டு சிறுமிகள் வராபே நகரத்தில் இருந்து ‘போகோ ஹராம்' தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட நைஜீரியப் பள்ளிச் சிறுமிகளை மீட்பதற்கு அமெரிக்கா களத்தில் இறங்கியுள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறுகையில்,  “இது ஒரு சவாலான விஷயம். குழந்தைகள் கடத்தப்பட்டு 25 நாட்கள் ஆகின்றன. எவ்வளவு விரைவாக அவர்களை மீட்க முடியும் என்பதை நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். இப்போதே எந்த ஒரு முன் முடிவையும் எங்களால் சொல்ல முடியாது” என்று  தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எட்டு பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஒன்று நைஜீரியத் தலைநகரான அபுஜாவில் வந்திறங்கியது. இவர்களில் ஏழு பேர் அமெரிக்க ஆப்பிரிக்க படைகளைச் சேர்ந்தவர்கள். ஒருவர் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஆவார். சனிக்கிழமை இன்னும் ஏழு பேர் கொண்ட குழு நைஜீரியாவில் களமிறங்க உள்ளது.

இவர்கள் துப்பறிதல், ராணுவ நடவடிக்கைகள், தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை போன்ற எல்லா தளங்களிலும் தொழில்நுட்ப ரீதியாக நைஜீரிய மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு உதவ இருக்கிறார்கள்.

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 3 ரயில்கள் நேரம் மாற்றம்


சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை புறப்படும் கிராண்ட் டிரங்க், தமிழ்நாடு விரைவு ரயில்கள் மற்றும் இன்று மாலை புறப்படும் ஜெய்ப்பூர் விரைவு ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

சென்ட்ரலில் இருந்து இரவு 7.15 மணிக்கு புறப்படும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு 1.30 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இரவு 10 மணிக்கு புறப்படும் தமிழ்நாடு விரைவு ரயில் நள்ளிரவு 2 மணிக்கு டெல்லிக்கு இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 5.40 மணிக்கு புறப்பட இருந்த ஜெய்ப்பூர் விரைவு ரயில் நாளை அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அசாம் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவி படுகொலை; வார்டு உதவியாளர் கைது


அசாம் மாநிலத்தில்,  மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவ மாணவி ஒருவரை அதே மருத்துவமனையைச் சேர்ந்த வார்டு உதவியாளர் கொலை செய்துள்ளார்.  இந்த கொடூர சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.

திப்ருகாரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் முதல் ஆண்டு படித்து வந்தவர் டாக்டர் சரிதா தஸ்னிவால். இவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வியாழக்கிழமை இரவுப்பணி பார்த்தார். ஆனால் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு டாக்டர்கள் ஓய்வறைக்கு சென்ற செவிலியர்கள், டாக்டர் சரிதா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சந்தேகத்தின் பேரில், வார்டு உதவியாளர் கிருமெக் மற்றும் 4 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் டாக்டர் சரிதாவை கத்தியால் குத்தி கொலை செய்ததை கிருமெக் ஒப்புக் கொண்டதையடுத்து கொலை வழக்கில் அவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி இளநிலை டாக்டர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவப் படிப்பில் அரசே மாணவர்களை சேர்க்க வேண்டும்- ராமதாஸ்


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவப் படிப்பில் அரசே மாணவர்களை சேர்க்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் அண்மையில் அரசுடைமையாக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி இடம் பெறவில்லை. மாறாக அது சுயநிதிக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டு அதற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை தனியாக வெளியிடப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழகம் அரசுடைமையாக்கப்பட்ட பிறகு முறைகேடுகள் ஓரளவு குறைந்திருந்தாலும், கல்விக் கட்டணக் கொள்ளை இன்னும் தொடர்கிறது என்பது தான் மிகவும் வேதனையளிக்கும் உண்மையாகும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டதன் மூலம் அப்பல்கலைக்கழகமும், அதனுடன் இணைந்த கல்லூரிகளும் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன.

அதன்பின்னர் தமிழக அரசு கல்லூரிகளில் நடத்தப்படுவதைப் போன்று தான் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் ஒற்றைச் சாளர முறையில் நடைபெறவிருக்கும் நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கையை மட்டும் பல்கலைக்கழக நிர்வாகம் மூலமாக நடத்துவது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்திவிடும்.

இதையே காரணம் காட்டி தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தனித்தனியாக மாணவர் சேர்க்கைகளை நடத்தத் தொடங்கினால், அதை தமிழக அரசு நினைத்தால் கூட சட்டப்பூர்வமாக தடுக்க முடியாமல் போய்விடும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனியாக மாணவர் சேர்க்கையை நடத்துவதன் மூலம் ஏழை மாணவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இன்னொரு பாதிப்பும் ஏற்படும். தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்விக்கட்டணமாக ஆண்டுக்கு சராசரியாக ரூ.10 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி சுயநிதிக் கல்லூரி என்ற அடிப்படையில் ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ. 5.70 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மற்ற கட்டணங்களையும் சேர்த்தால் ஆண்டுக் கட்டணம் சராசரியாக ரூ. 10 லட்சத்தைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக் கட்டணமாக ரூ.10 ஆயிரமும், இன்னொரு கல்லூரியில் ஆண்டுக்கட்டணமாக ரூ. 10 லட்சமும் வசூலிக்கப்பட்டால் அது முரண்பாடுகளின் உச்சமாக இருக்கும். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனியார் நிர்வாகத்தின் கீழ் இருந்தவரை அதன் மருத்துவக் கல்லூரி சுயநிதிக் கல்லூரியாக இருந்தது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகத்தை அரசே ஏற்றுக்கொண்ட பிறகும், தனியார் கல்லூரிகளை விட அதிகமாக பணம் பறிக்கும் நோக்குடன் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது சரியானதாக இருக்காது. கடந்த ஆண்டே அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகள் பலர் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் கல்லூரியில் சேரவில்லை. அப்போதே இந்த அணுகுமுறையை நான் கடுமையாக கண்டித்திருந்தேன்.

இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்ட போதிலும், மற்ற நடைமுறைகளும், கல்விக் கட்டணமும் மாற்றப்படாதது கண்டிக்கத்தக்கது. நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவக் கல்வி வாய்ப்பை பறித்து தகுதியில்லாத பணக்கார மாணவர்களுக்கு வழங்கவே இந்த நடைமுறை பயன்படும். பொறியியல், வேளாண் அறிவியல் (பி.எஸ்சி,அக்ரி), தோட்டக்கலை அறிவியல் (பி.எஸ்சி,ஹார்டிகல்ச்சர்) ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் இதே முறையில் நடப்பதால் இந்த படிப்புகளும் ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும்.

எனவே, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மாணவர் சேர்க்கை அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவப்படிப்புக்கு மருத்துவக் கல்வி இயக்ககத்தின் மூலமும், பொறியியல் படிப்புக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் படிப்புகளுக்கு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலமாகவும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். இந்த அனைத்துப் படிப்புகளுக்கும் அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.

இல்லாவிட்டால் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகி ஏழை மாணவர்களுக்கான நீதியை பெற பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை நடவடிக்கை எடுக்கும்". இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு உயர் சிகிச்சைக்காக முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி


கன்னியாகுமரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மனைவி சீதாலட்சுமி. தைராய்டு நோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு கடந்த 2.3.2014 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் பின் விளைவுகள் காரணமாக அம்மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், தொடர் சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவரது உடல்நிலையில் போதிய முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினாலும், இவரது கை, கால்கள் செயலிழந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் கோமாவில் இருக்கும் தனது மனைவி சீதாலட்சுமியை கருணை கொலை செய்ய அவரது கணவர் கோரினார்.  பின்னர் முதல்வர் உத்தரவின் பேரில் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் 1.5.2014 அன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் சீதாலட்சுமி அனுமதிக்கப்பட்டு இவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீத்தாலட்சுமியின் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தன்னை காண வந்த பார்வையற்ற இசைக்குழுவினரை கொட்டும் மழையில் வந்து சந்தித்த ரஜினி

பெங்களூரில் உள்ள கண் பார்வையற்றவர்களுக்கான ஐ.டி.எல் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பி.கே.பால் என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது. இவரின் விடுதியில் தங்கியிருக்கும் மாணவ‌ர்கள்,இசை கலைஞர்கள்,பாடகர்கள் என அனைவருமே பார்வையற்றவர்கள்.  கடந்த வியாழக்கிழமை கோடை விடுமுறைக்காக ஐ.டி.எல்.பார்வையற்றோர் இசைக்குழுவினர் பெங்களூரில் இருந்து மைசூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். மைசூர் அரண்மனையை சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த போது, ரஜினியின் புதிய படத்தின் ஷூட்டிங் பக்கத்தில் நடைபெறுவ‌தாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இந்த தகவலை அறிந்து ஒரு வழியாக, ரஜினியின்  'லிங்கா' பட ஷூட்டிங் நடைபெறும்  'மேல்கோட்டை' என்னும் இடத்திற்கு  சென்றனர்.

அங்கு இருந்த 'லிங்கா'படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்க‌டேசை சந்தித்து, 'ரஜினி சாரை பார்த்து பேசுவதற்காக ரொம்ப தூரத்தில இருந்து வர்றோம்.காலையில இருந்து மைசூர்,மண்டியா முழுக்க அலைஞ்சி திரிஞ்சி தேடினோம்.தயவு செஞ்சி அவரை சந்திக்க ஏற்பாடு பண்ணுங்க‌'என எல்லாரும் கேட்டிருக்கின்றனர்.

தகவல் அறிந்து, மழைக்காக கேரவனில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ரஜினி, அடுத்த நிமிடமே தானே குடையை பிடித்துக் கொண்டு,கட்டிய லுங்கியோடு அவர்களை சென்று சந்தித்து இருக்கிறார். 'என் முகத்தையே நீங்க பார்த்ததில்ல.வெறும் குரலை மட்டும் கேட்டு இப்ப‌டி பாசமாக இருக்கீங்களே? உங்களோட அன்புக்கெல்லாம் நான் என்ன பண்ண போறேன்? உங்களுக்காக நான் என்ன செய்யணும்.சொல்லுங்க' என அவர்களிடம் ரஜினி கேட்டிருக்கிறார்.  அதற்கு அவர்கள், "எங்களுக்கு எதுவும் வேணாம்.நீங்க நிறைய படத்துல நடிச்சால போதும்' என்று பதில் அளித்தனர்.

பிறகு ரஜினியை மகிழ்ச்சிவிக்க,  பார்வையற்ற இசைக் குழுவினர் அனைவரும் சேர்ந்து,'பொதுவாக என் மனசு தங்கம்..ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம்'என்ற பாட்டை பாடிக்காட்டியதும்,  மிகவும் மகிழ்ச்சி அடைந்த ரஜினி ,ஒரு கட்டத்தில் கண்கலங்கி, அவர்க‌ளை கட்டிபிடித்து ,முத்தம் கொடுத்தார். அதன் பிறகு அவர்களுக்கு டிபன் கொடுக்க சொல்லிவிட்டு, அவர்களுடன் இணைந்து சாப்பிட்டார். பிறகு, "பத்திரமா வீட்டுக்கு போங்க,பெங்களூருக்கு வந்து உங்களை ஒருநாள் கண்டிப்பா மீட் பண்றேன்"என்று கூறி அவர்களை வழி அனுப்பி வைத்தார் ரஜினிகாந்த்.

985 அடி பள்ளத்தாக்கில் தனியார் பேருந்து விழுந்ததில் 19 பேர் பலி


உத்தரகண்ட் மாநிலத்தில் சுமார் 1,000 அடி பள்ளத்தாக்கில் தனியார் பேருந்து நேற்று கவிழ்ந்ததில் 19 பேர் பலியாயினர். 3 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரிஷிகேஷிலிருந்து சமோலி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நந்த்பிரயாக் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து திடீரென 985 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட பேரிடர் நிர்வாகப் பிரிவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், சம்பவ இடத்திலேயே 15 பேர் பலியாயினர். 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.

மேலும் காயமடைந்த 3 பேர் சமோலி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார். விபத்தில் இறந்தவர்களுக்கு உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத், ஆளுநர் அஜிஸ் குரைஷி ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல் மனைவி இருக்கும்போது, குழந்தை இல்லாத காரணத்தால் கணவன் 2வது திருமணம் செய்வது மனிதத் தன்மையற்ற செயல்- உயர் நீதிமன்றம்


கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தர்மராஜ் பிள்ளைக்கும், சுவர்ணத்தம்மாளுக்கும் திருமணமாகி 26 ஆண்டுகளுக்கு பின்னும் அவர்களுக்கு குழந்தை இல்லை. ஆகவே, இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தர்மராஜ் முடிவெடுத்தார். இதற்கு சுவர்ணத்தம்மாளின் ஒப்புதலைப் பெறுவதற்காக தனது வீடு இருந்த இடத்தை, கடந்த 1965-ம் ஆண்டு அவருக்கு தர்மராஜ் வழங்கினார். அதன்பிறகு வேறொரு பெண்ணை அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.

தர்மராஜ் இறந்துவிட்டதால், அவர் தனக்கு வழங்கிய வீட்டு சொத்தை கலியபெருமாள் என்பவருக்கு சுவர்ணத்தம்மாள் விற்பனை செய்தார். இதை எதிர்த்து விருத்தாசலம் உரிமையியல் நீதிமன்றத்தில் இரண்டாவது மனைவி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது,  நீதிபதி எஸ்.விமலா தீர்ப்பில் கூறியதாவது, “தனது கணவர் வழங்கிய சொத்தில் முதல் மனைவியான சுவர்ணத்தம்மாளுக்கு முழு உரிமையும் உள்ளது. அவர் அந்த நிலத்தை விற்பனை செய்தது செல்லும்” என்று தீர்ப்பளித்தார். திருமணமான ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்காததற்கு பல காரணங்கள் உள்ளன. கணவனின் உடல் தகுதிகூட காரணமாக இருக்கலாம். ஆனால் குழந்தையின்மைக்கு மனைவி மட்டுமே காரணம் என்ற மிகவும் தவறான எண்ணம் இங்கு நிலவுகிறது.

முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது, குழந்தையின்மையை காரணம் காட்டி கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது என்பது மனிதத் தன்மையற்ற செயல். இந்த வழக்கில் 26 ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்த மனைவி இருக்கும்போது, குழந்தை இல்லாததை காரணம் காட்டி கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். மனைவி என்ற தனது ஸ்தானத்தை இன்னொரு பெண்ணுடன் பங்கிட்டுக் கொள்ளும்படி முதல் மனைவி கட்டாயப்படுத்தப் பட்டுள்ளார். அந்த நேரத்தில் கணவர் தனது முதல் மனைவிக்கு ஜீவனாம்சமாக சொத்தை வழங்கியுள்ளார்.

அவ்வாறு ஜீவனாம்சமாக வழங்கப்பட்ட சொத்தில் முதல் மனைவிக்கு முழு உரிமையும் உள்ளது. அதை அவர் விற்பனை செய்தது செல்லும். மாறாக அத்தகைய உரிமை எதுவும் முதல் மனைவிக்கு இல்லை என்றும் கூறும் நிலை ஏற்பட்டால், இந்த ஒட்டுமொத்த சமுதாயமும் மின்னணு காலத்திலிருந்து மீண்டும் கற்காலத்துக்கே செல்ல வேண்டியிருக்கும். "

இவ்வாறு நீதிபதி விமலா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

நான் 6ம் வகுப்பு, 8ம் வகுப்பு, பி.யு.சி., பி.எஸ்.சி., பி.எல். ஆகியவற்றில் தோல்வியடைந்துள்ளேன், ஆனால் மன உறுதியை இழந்ததில்லை- நீதிபதி கர்ணன்


பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியான நிலையில், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மனம் தளர்ந்து விட கூடாது என்றும், தற்கொலை போன்ற தீவிரமான முடிவை எடுத்து விடக் கூடாது என்றும்,  அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

“10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்கள் யாரும் மனமுடைந்து தற்கொலை என்ற தீவிரமான முடிவை எடுத்திடக் கூடாது. இந்த வாழ்வு நமக்கு கடவுள் கொடுத்த வாழ்வு.

நானும் தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, கல்வி கற்பதற்கான பயணத்தில் ஏராளமான கஷ்டங்களை அனுபவித்துள்ளேன். 6-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, பி.யு.சி., பி.எஸ்.சி., மற்றும் பி.எல். ஆகிய வகுப்புகளில் நானும் தோல்வியடைந்துள்ளேன். அப்போதெல்லாம் ஏராளமான ஏமாற்றங்கள், பல கசப்பான அனுபவங்களை நான் சந்தித்துள்ளேன். எனினும் அத்தகைய துயரங்களைக் கண்டு எனது மன உறுதியை நான் இழந்தது இல்லை. ஒருபோதும் எனது நம்பிக்கையை விட்டுக் கொடுத்தது இல்லை.

அதன் காரணமாகவே நீதித் துறையில் மிகவும் கவுரவமான ஒரு பதவிக்கு, அதாவது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்ற மிகவும் கம்பீரமான பதவிக்கு என்னால் உயர முடிந்தது.

உறுதியான நம்பிக்கை, பொறுமை மற்றும் விடாமுயற்சி ஆகிய மந்திரச் சொற்களை மனதில் கொண்டு மாணவர்கள் தொடர்ந்து உழைத்திட வேண்டும். வாழ்க்கை என்பது மிகவும் உன்னதமானது. நமது வாழ்வு எவ்வாறெல்லாம் அமையப் போகிறது என்பது நமக்கு முன்னரே தெரியாது. அத்தகைய சிறப்பான வாழ்வை முன்னதாகவே அழித்துக் கொள்வது என நாம் முடிவெடுப்பது சரியல்ல.

வாழ்க்கையில் ஏற்படும் கசப்பான நிகழ்வுகளுக்காக விலங்குகளோ, பறவைகளோ அல்லது பூச்சிகளோ தற்கொலை செய்து கொள்வதில்லை. ஒவ்வொரு சாதாரண மனிதனாலும் பெரும் சாதனைகளை நிகழ்த்த முடியும்” என்று நீதிபதி கர்ணன் குறிப்பிட்டுள்ளார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media