BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 23 February 2014

குஷ்பூவை எல்லாம் பேச விட்டு கருணாநிதியும், மற்றவர்களும் கேட்பது ரொம்ப கேவலமா இருக்கு



திமுக சார்பாக மேடைகளில் பேச பல்வேறு திறமையான பேச்சாளர்கள் இருந்த நிலை மாறி, இப்போழுது குஷ்பூவை மேடையில் பேச வைத்து விட்டு, அதை உட்கார்ந்து கருணாநிதியும், மற்ற தலைவர்களும் உட்கார்ந்து ரசிப்பது, மிகவும் கேவலமாக இருக்கிறது என்று நடிகர் சிங்கமுத்து கூறியிருக்கிறார். மேலும் அவர், கருணாநிதி மகள் கனிமொழி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்து திகார் ஜெயிலில் இருந்து வந்தார். இந்த தொகையை கொண்டு தமிழகத்தின் 1 வருட பட்ஜெட்டையே தாக்கல் செய்து விடலாம் என்றும், கொள்ளை அடிப்பதில் திமுக வினர் மிகவும் கெட்டி காரர்கள் என்றும் கூறியுள்ளார்.

அம்பானி கொடுத்த பார்ட்டியில் அப்பட்டமாக தெரிந்த ஐஸ்வர்யா-ஜெயா இருவருக்கும் உள்ள‌ பிரச்சனை


அனில் அம்பானி தனது தாய் கோகிலாபென் அம்பானியின் 80வது பிறந்தநாளையொட்டி மும்பையில் உள்ள தனது வீட்டில் பார்ட்டி கொடுத்தார். அந்த பார்ட்டிக்கு தொழில் அதிபர்கள், திரை உலக பிரபலங்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் பார்ட்டிக்கு வந்திருந்தார்.

அம்பானி வீட்டு விசேஷங்கள் என்றால் பச்சன் குடும்பத்தினர் நிச்சயம் வந்து விடுவர். அன்று நடந்த பார்ட்டிக்கும்,  ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் வந்திருந்தனர். பார்ட்டி முழுவதும் ஐஸ்வர்யா ராய்,  மாமியார் ஜெயா பச்சன் இருக்கும் பக்கமே போகாமல் இருந்தார். அவர் பொது இடத்தில் மாமியாரை தவிர்த்ததை பலரும் கவனித்துவிட்டனர். ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மாமியாருக்கும் இடையே ஒத்துப் போகவில்லை என்று அண்மையில் செய்திகள் வெளியாகின.  திருமணம் ஆனதில் இருந்து ஐஸ்வர்யா தனது மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா பச்சனுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார். இந்நிலையில் மாமியாரின் செயல்கள் பிடிக்காததால் அவர் கணவர் மற்றும் மகள் ஆராத்யாவுடன் தனிக்குடித்தனம் செல்வார் என்று செய்திகள் வெளியாகின.

ஜெ. பிறந்தநாளுக்கு 66 கிலோவில் கேக்



நாளை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 66வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் 66 கிலோ எடை கொண்ட கேக் வெட்டப்படுகிறது. த‌மிழகம் முழுவதும் பிரம்மாண்ட அளவில், கொண்டாட்டங்களுக்கு அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.  ஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஜெயலலிதா எடுத்த முடிவினால், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றிருப்பதனால்,  அதிமுகவினர் மத்தியில் கூடுதல் உற்சாகம் காணப்படுகிறது.

மேலும், ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி இனிப்பும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர நலத்திட்ட உதவி வழங்கும் விழா, கோவில்களில் அன்னதானம், தேர் இழுத்தல், சிறப்புப் பூஜைகளுக்கும் அதிமுகவினர் மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்துள்ளனர். பாடியில் உள்ள பிரபல சிவன் கோவிலில் 6666 பேருக்கு சிறப்பு அறுசுவை விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தலைநகர் டெல்லியிலும், மும்பையிலும் மேலும் பல நகரங்களிலும் அதிமுக வின் பல்வேறு அணிகள் சார்பில் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எழுத்தாளர் ஜெயகாந்தன் மருத்துவமனையில் கவலைக்கிடம், தீவிர சிகிச்சை நடைபெறுகிறது


ஞான பீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல்நலக் குறைவு காரணமாக, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

80 வயதான இவர், கடந்த சில மாதங்களாகவே, நினைவாற்றல் இழந்து இருந்தார். மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்த அவரது நிலைமை தற்போது மோசமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
1950களில் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயகாந்தன், மத்திய அரசின் இலக்கியத்துக்கான மிக உயரிதாகக் கருதப்படும் ஞான பீட விருதைப் பெற்றவர். இவரது படைப்புகள் 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்' , 'சினிமாவுக்கு போன சித்தாளு'முதலான பல படைப்புகளால் கவனத்தை ஈர்த்தவர்.

தமிழ் இலக்கிய உலகில், ஜே.கே என்று அழைக்கப்படும் ஜெயகாந்தனுக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு.
தனது தைரியமான, வித்தியாசமான, ஆழமான‌ எழுத்துகளால் சமூகத்தைப் பிரதிபலித்த எழுத்துலகின் பீஷ்மராக கருதப்பட்ட ஜெயகாந்தன், இளம் எழுத்தாளர்கள் பலருக்கும் எழுத்துலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக தமிழன் தலை நிமிர்ந்து நிற்பதற்கான ஒரு முடிவை முதல்வர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார், கண்ணீரால் அவருக்கு நன்றி சொல்வோம்


தாய்மை உணர்வுடன் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர் உள்பட சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்ட ஜெயலலிதா அவர்களுக்கு, உலக தமிழர்கள் அத்தனைபேரும், கண்ணீரால் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா கூறியிருக்கிறார்.

ஜெயலலிதாவின் விடுதலை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகம் சார்பில், சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் பாரதிராஜா தலைமையில் நடந்த கூட்டத்தில், உலக நாடுகள் அனைத்தும் தூக்குத்தண்டனையை எதிர்க்கும் சூழ்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் மிக சரியான தீர்ப்பை சொல்லி இருக்கிறார் என்று அவர் கூறினார்.

அக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் பேசும் போது, தலைமை பதவியில் இருப்பவர்கள் வீரமும், விவேகமும் உள்ளவராக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வீரமும் விவேகமும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது என்று அவர் கூறினார்.

கத்தி குத்து காயங்களுடன் அழுகிய பிணமாக இருந்த டிசிஎஸ் பெண் ஊழியரை கொன்றது யார்?


கேளம்பாக்கம் அருகே உள்ள சிறுசேரி சிப்காட் வளாகத்தில், டிசிஎஸ் பெண் ஊழியர் உமா மகேஸ்வேரி கொலை செய்யப்பட்டு புதரில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13–ந் தேதி இரவு பணிமுடிந்து கேளம்பாக்கத்தில் தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு கிளம்பி சென்ற‌ அவர் காணாமல் போய் இருந்தார்.

இந்நிலையில், நேற்று காலையில் சிப்காட் வளாகத்திலேயே புதர் மண்டிக் கிடந்த ஒரு பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அருகில் கிடந்த அடையாள அட்டையை வைத்துதான் இறந்து கிடந்தது உமா மகேஸ்வரி என்பதை போலீசார் உறுதி செய்தனர். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது.

உமா மகேஸ்வரி தினமும், தனது நிறுவனத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தூரம் நடந்து சென்றே மெயின் வாசலுக்கு வந்து பின்னர் பஸ் பிடித்து, மேடவாக்கத்துக்கு சென்று வந்துள்ளார். கடந்த 13–ந் தேதி அன்று, இரவு 10 மணியளவில் வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அப்போதுதான் இவரை யாரோ புதருக்குள் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளனர். அவரது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் பலமான கத்திக்குத்து காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உமா மகேஸ்வரி கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெரும் மர்மாக‌ இருக்கும் இக்கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் முழுவீச்சில் களம் இறங்கியுள்ளனர்.

ஜெ. பேனர்களை எடுக்க கோரி, நடு ரோட்டில் படுத்து 'டிராபிக்'கை ஸ்தம்பிக்க வைத்த ராமசாமி


அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள், நேற்று கடற்கரை காமராஜர் சாலை முழுவதும் பெரிய பெரிய பேனர்களை , முறையான அனுமதி பெறாமல், முதல்வர் ஜெயலலிதாவிற்காக வைத்திருந்தனர். அங்கு வந்திருந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, சாலையில் திடீரென படுத்தார். உடனடியாக பேனர்களை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் இப்படியே படுத்திருப்பேன் என்று திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. போலீஸார் அவரை எவ்வளவோ சமாதானப்படுத்திப் பார்த்தனர். ஆனால் அவர் சமாதானமாகவில்லை. பேனர்களை அகற்றினால் தான் எழுந்திருப்பேன் என்று கூறிவிட்டார். வாகனங்கள் சாலையில் தேங்க ஆரம்பித்தன. இதைப் பார்த்த போலீஸார் வேறு வழியில்லாமல் பேனர்களை அகற்ற ஆட்களை வரவைத்தனர். அவர்கள் வந்து பேனர்களை அகற்றினர். அதன் பின்னரே ரோட்டிலிருந்து எழுந்து சென்றார் டிராபிக் ராமசாமி.

காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியைத் தழுவும்: அத்வானி

ஊழல் குற்றச்சாட்டுகளாலும், நிர்வாக சீர்கேட்டினாலும் காங்கிரஸ் கட்சி, வரும் நாடாளுமன்ற தேர்தலில், வரலாறு காணாத தோல்வியைத் தழுவ போகிறது என பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதல் இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் மிகவும் சொற்ப அளவிலேயே வாக்குகள் கிடைக்க போகிறது என்றார்.

மேலும், மக்களவைத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவில் பாஜக அதிக அளவில் ஓட்டுகள் பெற்று தனிப் பெரும்பான்மை பெறும் என்றும் அத்வானி நம்பிக்கை தெரிவித்தார். தேர்தலுக்குப் பின்னர் தொங்கு நாடாளுமன்றம் உருவாக வாய்ப்பில்லை எனவும் அவர் கூறினார். பாஜக விற்கு இப்போது எழுந்துள்ள அளவு ஆதரவு இதற்கு முன்பு மக்கள் மத்தியில் தான் கண்டது இல்லை என்றும் அத்வானி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை தழுவும் என நீங்கள் நினைத்தால், லைக் போடுங்கள்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media