BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 14 May 2014

மன்மோகன் சிங் பிரிவு உபசார விழா , ராகுல் காந்தி மிஸ்ஸிங் ??

நமது நாட்டிற்கு கடந்த பத்தாண்டுகளாக பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்கள் வருகின்ற சனிக்கிழமையுடன் தன் பணியை முடித்துக் கொள்கிறார் .  இதனால்இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சார்பாக பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு பிரிவு உபசார விழா நடந்தது .

இந்த விழாவில் மன்மோகன் சிங் மற்றும் அவரது துணைவியார் மற்றும் பல காங்கிரசின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர் . ஆனால் காங்கிரசின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை .

இந்த விழாவின் போது மன்மோகன் அவர்களுக்கு பல அமைச்சர்கள் கையெழுத்திட்ட நினைவுப் பரிசு வழங்கப்பட்டது



கூடங்குளம் விபத்து, எங்களுடைய நீண்ட நாள் முறையீட்டை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது-எஸ்.பி.உதயகுமார்


கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த  கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கும் போராட்டக் குழுவினரின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் கூறியதாவது:

"கூடங்குளம் அணு உலையில் உயர் அழுத்த வெப்பக் குழாய் வெடித்து வெடித்து 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விஜய்நகரியத்தில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு, பின்னர் நாகர்கோவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இது பற்றி கூடங்குளம் அணு உலை நிர்வாகிகளோ, அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை

கூடங்குளம் அணு உலை விபத்தில் ராஜன், பால்ராஜ், செந்தில்குமார் ஆகிய ஊழியர்களும், வினோ, ராஜேஷ், மகேஷ் ஆகிய ஒப்பந்த தொழிலாளர்களும் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை அளிக்க வேண்டும்.

இந்த விபத்து, எங்களுடைய நீண்ட நாள் முறையீட்டை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. கூடங்குளம் அணு உலைகளில் தரமற்ற உதிரிப்பாகங்களும், உபகரணங்களும் பயன்படுத்தப்படுகிறது என்று தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால், இதை மத்திய, மாநில அரசுகள் மற்றும் அணுசக்தி துறை கண்டுகொள்ளவில்லை.

கூடங்குளம் அண மின் நிலையம் பாதுகாப்பு மிக்கது, உலகத் தரம் வாய்ந்தது என்று மத்திய அரசு, அதிகாரிகளும் இந்த விபத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதைக் கேட்க தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.

இந்தச் சூழலில், கூடங்குளம் அணு மின் நிலையப் பாதுகாப்பு தொடர்பாக சார்பற்ற அறிவியல் குழு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், புதிய அரசு பொறுப்பேற்கும் தருணத்தில் இத்தகைய விபத்து நிகழ்ந்திருப்பதும், அதுபற்றி கூடங்குளம் அதிகாரிகள் தகவல் அளித்து பேச முன்வந்திருப்பதும் எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதுவரை 700, 800, 900 மெகாவாட் உற்பத்தி என்று எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றி, வாய்மொழியாக மட்டுமே கூடங்குளம் அதிகாரிகள் பேசி வந்திருக்கிறார்கள். ஆனால், கூடங்குளம் அணு உலைகள் இயங்கவே இல்லை என்பதுதான் உண்மை.

கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி என்பதே வெறும் கதைதான். இதுவரை உற்பத்தியான மின்சாரம் எங்கே போனது, எந்த மின் இணைப்பில் சேர்க்கப்பட்டது என்ற தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த விவகாரத்தில் புதிய அரசுக்கு பயந்தே இப்படியான நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதோ என சந்தேகம் எழுகிறது. அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் இருந்து தப்பிக்கும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறோம்.

2011-ல் முதல்வர் ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்தியபோது, கூடங்குளம் அணு உலைகள் 1 மற்றும் 2 ஆகியவற்றின் முடியும் தருவாயில் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னார். இப்போது, மூன்றாவது மற்றும் நான்காவது அலகுகள் தொடக்க நிலையில்தான் உள்ளன. இப்போது முதல்வர் தனது நிலைப்பாட்டைச் சொல்ல வேண்டும். அதேபோல், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் கூடங்குளம் விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை கூறவேண்டும்.

கூடங்குளம் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம்."

இவ்வாறு உதயகுமார் கூறினார்.

இந்தியாவில் அமையும் புதிய நிர்வாக அரசுடன் அமெரிக்கா நெருக்கமாகவும் இணக்கமாகவும் செயல்படும்- ஒபாமா


இந்தியாவில் அமையவுள்ள புதிய அரசுடன் இணைந்து இணக்கத்துடன் செயல்பட விரும்புவதாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவு அறிவிக்கப்பட்டபின், இந்தியாவில் புதிய அரசை அமைவது குறித்து நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம்.

அவ்வாறு அமையும் அந்த புதிய நிர்வாக அரசுடன் அமெரிக்கா நெருக்கமாகவும் இணக்கமாகவும் செயல்படும். நடந்து முடிந்த நாடளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் சிறப்பாக தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றியதற்காக அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, இந்தத் தேர்தலில் பன்முகத்தன்மை மற்றும் துடிப்பான செயல்பாடுகள் மூலம் தனது ஜனநாயகத் தன்மையை நிலைநிறுத்தியுள்ளது" என்று ஒபாமா கூறியுள்ளார்.

2015 உலக கோப்பை தொடரிலும், யுவராஜ் சிங் மேட்ச்-வின்னராக திகழ்வார்- முத்தையா முரளிதரன்


06.04.2014 அன்று நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த யுவராஜ் சிங் மீது நாடு முழுவதும் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில் அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தனது அதிரடியான‌ ஆட்டத்திற்குத் திரும்பியுள்ளார். இது குறித்து ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு விளையாடி வரும் இலங்கை சுழற்பந்து வீச்சு உலகச் சாதனை நாயகன் முத்தையா முரளிதரன், சக வீரரான யுவராஜ் சிங், 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் மேட்ச்-வின்னராகத் திகழ்வார் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

நான் யுவராஜிடம் நிறைய பேசி வருகிறேன். அவர் குறைந்த ஓவர்கள் கொண்ட கிரிக்கெட்டில் வல்லுனர் ஆவார். ஆனால் அவரது தன்னம்பிக்கை சற்று தளர்ச்சியடைந்திருந்தது. உலகக் கோப்பை இருபது ஓவர் இறுதிப்போட்டிக்கு பிறகே இந்திய ரசிகர்கள் அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். நான் 20 ஆண்டுகளாக உயர்மட்டத்தில் கிரிக்கெட் ஆடியுள்ளதால் யுவராஜ் சிங்கின் மனநிலை எனக்கு நன்றாக புரியவே செய்தது.

அவரது தன்னம்பிக்கையை மீட்டு விட்டால் அவர் வித்தியாசமான ஒரு வீரர் என்பதை அனைவரும் அறிவர். கடைசி 2 போட்டிகளில் அவர் ஆடிய ஆட்டம் நான் அவரைப்பற்றி நினைத்தது சரி என்பதை நிரூபித்தது. எனவே 2015 உலகக் கோப்பையில் அவர் இந்திய அணிக்காக பெரிய பங்காற்றுவார் என்று கருதுகிறேன், அவர் அந்தத் தொடரிலும் மேட்ச் வின்னராகத் திகழ்வார்.

இவ்வாறு கூறியுள்ளார் முத்தையா முரளிதரன்.

அதிமுக கவுன்சிலர் மீனாட்சி சுந்தரம் கொலை: விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் 4 பேர் கைது


ராஜபாளையம் அதிமுக கவுன்சிலர் மீனாட்சி சுந்தரம் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 4 பேரை விருதுநகர் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். டாஸ்மாக் மதுபான விடுதி பார் நடத்துவதையொட்டி மீனாட்சி சுந்தரத்திற்கும், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் சீனிவாசன் (37) என்பவருக்கும் மோதல் இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதிமுக கவுன்சிலர் கொலை தொடர்பாக சீனிவாசன், பி.நாதன், எம்.நீரதுலிங்கம் மற்றும் வி.ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் 5-வது நபர் தமிழ்வளவன் என்பவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தக் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட 3 ஆயுதங்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் மதக் கலவரம்; 10 வாகனங்கள், 2 வீடுகள் எரிப்பு; போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் நடத்தியதில் 3 பேர் பலி;


ஆந்திரப் பிரதேச தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பஹதூர்புரா என்ற பகுதியில் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த கொடியை எரித்ததால் இந்தக் கலவரம் நடந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. விவரம் அறிந்த போலீசார் அங்கு விரைந்து கலவரத்தை கட்டுப்படுத்த முயன்றனர். இரு தரப்பினரும் சரமாரி தாக்குதலில் ஈடுப்பட்டனர். கலவரத்தை அடக்க கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

இதையடுத்து, கலவரக்காரர்கள் கற்களை வீசி தாக்குதலை நடத்தியதால், போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பதற்றம் காரணமாக போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கலவரத்தின்போது 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள், 2 வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தை அடுத்து ராஜேந்திர நகர் போலீஸ் நிலைய பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமலானது. கலவரம் நடந்த பகுதிக்கு சைபராபாத் காவல் துறை ஆணையர் சி.வி.ஆனந்த் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்தனர்.

கூடங்குளம் விபத்து: மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி இந்திய அரசு வழங்கவில்லை


கூடங்குளம் அணு உலையில் ஏற்பட்ட விபத்துக்கு மத்திய அரசின் மெத்தனப்போக்கே காரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

"கூடங்குளம் அணு உலையில் இன்று திடீர் விபத்து ஏற்பட்டு மூன்று பொறியாளர்கள் உட்பட மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

அணு உலையிலிருந்து செல்லும் அதிஉயர் வெப்பநிலையிலுள்ள சுடுநீர்க் குழாய் வெடித்ததனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தரமற்ற பொருள்களால் பயன்படுத்தப்பட்ட கருவிகள் மற்றும் கட்டமைப்புகளால் அணு உலை இயங்கி வருகின்றது என்கிற புகார் பொதுமக்களிடையே எழுந்தது. அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த விபத்து அமைந்துள்ளது.

அயல்நாடுகளில் பயன்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட தரமற்ற பொருட்களைக் கொண்டு இந்த அணுஉலை கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற புகாரை இந்திய அரசு ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

மேலும் அப்பகுதிவாழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி இந்திய அரசு வழங்கவில்லை என்பதையும் இந்த விபத்திலிருந்து அறிய முடிகிறது. இந்திய அரசின் இந்த அக்கறையற்ற போக்கை, அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் மெத்தனப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

கடுமையாகக் காயமுற்றுள்ள பொறியாளர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு உரிய சிகிச்சை அளித்திட தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டையும் உடனடியாக வழங்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின்படி உரிய பாதுகாப்பை வழங்குவதற்கு இந்திய அரசு உடனடியாக பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக் குழுவை நியமிக்க வேண்டும். பொதுமக்களிடயே எழுந்துள்ள அச்சத்தைப் போக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

சுடுநீர்க் குழாய் வெடிப்பு மூலம் கதிர்வீச்சுக் கசிவு ஏற்பட்டிருக்குமோ என்கிற அச்சம் மக்களிடையே எழலாம். கதிர்வீச்சு நிகழவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும், இத்தகைய விபத்துகள் எதிர்காலத்தில் நிகழாத வண்ணம் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் இந்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது" என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

துருக்கி நிலக்கரிச் சுரங்கம் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு !!!

மேற்கு துருக்கியில் உள்ள சோமா நகரில் உள்ள நிலக்கரிக் சுரங்கத்தில் செவ்வாய் கிழமை அன்று மினசார சப்ளை செய்யும் பிரிவில்  திடீரென தீப் பிடித்து  வெடி விபத்து ஏற்பட்டது . இந்த விபத்தல் அங்கு பணி செய்தவர்கள் அங்கும் இங்கும் ஓடினர் . தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து 450 அடி ஆழத்தில் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்  . இதுவரை 300 க்கும் மேற்பட்டொர் மீட்கப்பட்டுள்ளனர் . அதில் 80 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் .

இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் இறந்து இருக்கலாம் என செய்திகள் வருகின்றனர் . விபத்து நடக்கும் போது 800க்கும் மேற்பட்டோர் சுரங்கத்தில் இருந்ததால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது .

இந்த விபத்து மொத்த துருக்கி நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . அந்நாட்டின் பிரதமர் ரீசெப் தய்யிப் எர்டோகன் இந்த நிகழ்விற்கு பின் தன் அல்பானியா நாட்டுப் பயணத்தை தள்ளிவைத்தார் .

பாஜக கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கும் எண்ணம் இல்லை - நவீன் பட்நாயக்

பிஜூ ஜனதா தளக் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான பிரவத் திரிபாதி அளித்த பேட்டியில் பாஜ கூட்டணிக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் நாட்டின் நலன் கருதி அந்தக் கூட்டணிக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவித்தார். 

இதையடுத்து ஒடிசாவின் முதல்வர் மற்றும் அக்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் இதனை திட்டவட்டமாக மறுத்தார் . அவர் அளித்த பேட்டியில் , இதுவரை பாஜகவிற்கு ஆதரவு அளிக்கும் எந்த எண்ணமும் இல்லை என்றார் . 

பிஜூ ஜனதா தளக் கட்சி ஒரிசாவில் 16 - 17 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து !!

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் பல லட்சக்கணக்கான ரூபாய் செலவளித்து ரஷ்யா உதவியுடன் அணுமின் நிலையத்தை இந்திய அரசு நிறுவியுள்ளது . 

கூடங்குளம் அணுமின் நிலையம் முதலாவது உலையில் பாய்லர் வெப்பநீர் செல்லும் குழாய் வெடித்ததில்  கசிவு பகுதியில் வெடிப்பு ஏற்பட்டது . இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர் . அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இதனையடுத்து மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . 


இதையடுத்து வளாக அதிகாரி அளித்த பேட்டியில் , இது சிறிய வெடிப்பு தான் என்று கூறினார் .


நரேந்திர மோடியை பிரதமராக நினைத்துப் பார்ப்பது கூட கடினமானது-ஜெயராம் ரமேஷ்


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று பலத்தரப்பட்ட தேர்தலுக்கு பிந்தய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இவையெல்லாம் பொய் என நிராகரித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் கூறியதாவது:

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றி அடையும். தேர்தலுக்கு பிந்தய கருத்துக் கணிப்புகள் என்பது எப்போதுமே நிரைவேறாத ஒன்றாகத் தான் இருக்கிறது. 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தய கருத்துக்கணிப்புகள் போலவே இம்முறையும் . பாஜக வெற்றியடையும் என்ற கருத்துக்கணிப்புகளும் பொய்யாகும். நரேந்திர மோடியை பிரதமராக நினைத்துப் பார்ப்பது கூட கடினமானது.

மேலும் தெலங்கானாவில், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது உறுதியான ஒன்று. அங்கும் பாஜக வெற்றி பெறும் என்பது நிச்சயம் உண்மைக்கு புரம்பானது.

இவ்வாறு ஜெயராம் ரமேஷ் கூறியிருந்தார்.

2000 கிலோ லட்டு, கேக் விநியோகிக்க திட்டம்: தேர்தல் வெற்றியை கொண்டாட பாஜக ஏற்பாடு


நாடாளுமன்ற தேர்தல் கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைப்பது உறுதி என தெரிவித்துள்ளதால் தேர்தல் முடிவு வெளி யானதும் அதை ஆரவாரமாக கொண்டாடும் முயற்சியில் அக்கட்சியினர் இறங்கியுள்ளனர்.

"மும்பையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிபி டேங்க் சந்திப்பில் பொதுமக்களுக்கும் கட்சி ஆதரவாளர்களுக்கும் 2000 கிலோ லட்டு, மற்றும் கேக் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளோம். வாக்கு எண்ணிக்கை முடிவுகளை பொது மக்கள் காண வசதியாக பிரம்மாண்ட எல்சிடி திரை நிறுவப் பட்டுள்ளது. நரேந்திர மோடி பெரும்பான்மை பெற்றதாக முடிவுகள் உறுதி யானதும் உடனடியாக லட்டு விநியோகித்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடுவோம்" என்று கூறினார் பாஜக மும்பை பிரிவு செய்தித்தொடர்பாளர் அடுல் ஷா.

அவர் மேலும் கூறியதாவது: லட்டு தயாரிக்க மிட்டாய் தயாரிப் பாளர்களிடம் ஆர்டர் தரப்பட்டுள் ளது. மோடியின் வெற்றிக்கு உழைத்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள். இந்தியாவில் ஏதாவது கொண் டாட்டம் என்றால் லட்டு வழங்கு வதுதான் வழக்கம். இந்த லட்டு களை ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற அமைப்புகள் மூலமாக ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் செய் வார்கள். எனவே லட்டு செய்ய ஆர்டர் கொடுத்துள்ளோம். லட்டு வழங்குவது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். கொண்டாட்டத்தில் அவசரம் காட்டவில்லை. நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என எல்லோரும் நம்புகிறார்கள். எங்களுக்கும் அதில் நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அடுல் ஷா தெரிவித்தார்.

ராகுல் காந்தி தான் எங்கள் எதிர்கால தலைவர் எனக் கூறும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாகவும், காங்கிரஸுக்கு பாதகமாகவும் இருக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்க‌ப்பட்டுள்ளன. இந்நிலையில், ராகுல் காந்திதான் எங்களது எதிர் காலத் தலைவர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சல்மான் குர்ஷித்:

ராகுல் காந்தி குறித்து விமர்சிப்பது தேவையற்றது. அவர்தான் கட்சியின் எதிர்காலத் தலைவர். அவர் மீது நாங்கள் மிகுந்த நம் பிக்கை வைத்துள்ளோம். எந்தச் சூழ்நிலையிலும் முன்வரிசையில் நின்று அவர் கட்சியை வழி நடத்துவார்.

பாஜகவை போன்று தேர்தலை கருத்திற் கொண்டு நாங்கள் தலைவரைத் தேர்ந்தெடுப்பது இல்லை. கொள்கைகளின் அடிப் படையில் தலைவரைத் தேர்ந் தெடுக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

காங்கிரஸை பொறுத்தவரை வேட்பாளர்கள், மாவட்ட குழுக்கள், மாநிலக் குழுக்கள், தேசிய தலைமை என 4 நிலைகளை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டோம்.

ஜெய்ராம் ரமேஷ்:

ராகுல் காந்தி மிகச் சிறந்த பிரச்சாரகர். நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று 125-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்றுள்ளார். கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கும் காரணியாக அவர் விளங்கினார். அவரது பிரச்சாரத்தால் மக்களி டையே காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

கமல்நாத்:

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் ராகுல் காந்தி எந்தப் பொறுப்பும் வகிக்கவில்லை. அவர் மீது எந்தக் குறையும் கூற முடியாது.

காங்கிரஸ் ஆட்சியில் நிறை வேற்றப்பட்ட பல்வேறு நலத் திட்டங்களை மக்களிடம் முறை யாக எடுத்துரைக்கவில்லை என்றே கருதுகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் எதுவுமே செய்யவில்லை என்று கூறுவது அபத்தமானது.

காதலித்தபோது செய்த செலவை திருப்பித் தரவேண்டும் என ஏமாற்றிய காதலி மீது காதலன் போலீஸில் புகார்

தன்னை காதலிப்பதாக கூறிய காதலி, திடீரென பெற்றோர் சொல்படி திருமணம் செய்துகொண்டதால், ஆத்திரமடைந்த காதலன், காதலிக்கும் போது தான் செலவு செய்த சுமார் ரூ. 2லட்சத்தை திருப்பித் தரவேண்டும் என போலீஸில் புகார் அளித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அந்த இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் என பல இடங்களுக்கு சென்ற போது, காதலன் தன் அன்பின் அடையாளமாக காதலிக்கு பல்வேறு பரிசுப் பொருட்களையும் வழங்கினாராம்.

இந்நிலையில் அப்பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயித்தனர். இந்த விஷயம் தெரிந்த காதலன், அந்த திருமணத்தை நிறுத்த பல்வேறு வழிகளை கையாண்டுள்ளார். ஆனால் பலனில்லை. காதலியும் ‘என்னை மறந்து விடு’ என் ஒரு வரியில் கூறிவிட்டாராம்.

இந்நிலையில் அப்பெண்ணுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தான் செலவு செய்த சுமார் ரூ. 2 லட்சத்தை தனக்கு வாங்கித் தரவேண்டும் என்று காவல் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு அந்த இளைஞர் புகார் செய்தார்.
இந்த புகாரை பார்த்து திகைத்த போலீஸார், செய்வதறியாது அந்த இளைஞரிடம், புகார் அளிக்கு வேண்டாமென அறிவுரை கூறினர். ஆனாலும் புகாரை திரும்பப் பெற அவர் ஒப்புக்கொள்ளவில்லை. “இதுவே ஒரு பெண்ணுக்கு நடந்திருந்தால், என்னை சும்மா விட்டிருப்பீர்களா? இந்தப் புகாரை பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுங்கள். இதுபோன்று மற்ற பெண்கள் நடந்துகொள்ளக் கூடாது” என போலீஸாருக்கே அறிவுரை வழங்கியுள்ளார் அந்த இளைஞர். இதனால் ஹைதராபாத் போலீஸார் என்ன வழக்குப் பதிவு செய்வது என்று குழம்பிப்போய் உள்ளனர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media