BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 1 April 2014

யாருக்கு வாக்களித்தோம் என பிரின்ட் அவுட்டில் பார்க்கும் வசதி: மத்திய சென்னையில் மட்டும் அறிமுகம்

யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய ஒரு புதிய வசதி, மத்திய சென்னை தொகுதியில் மட்டும் அறிமுகம் செய்யப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவதுயாருக்கு வாக்களித்தோம் என்பதை அந்தந்த வாக்காளரே ‘பிரின்ட் அவுட்’டில் பார்த்து உறுதி செய்துகொள்ளும் புதிய வசதியை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மட்டும் மத்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் இந்த புதிய வசதி மத்திய சென்னை தொகுதியில் (எண்: 4) மட்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த தொகுதியில் உள்ள 1153 வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.

இதன்படி, ஒரு வாக்காளர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தானை அழுத்தி ஓட்டு போட்டதும், அவர் வாக்களித்த வேட்பாளரின் சின்னம் பிரின்ட் அவுட்டில் வரும். அதை கண்ணாடி திரை வழியாகப் பார்த்து வாக்காளர் உறுதி செய்து கொள்ளலாம். பின்னர் அந்த பிரின்ட் அவுட் சீட்டு, மின்னணுவாக்குப்பதிவு இயந்திரத்திலேயே பத்திரமாக பாதுகாக்கப்படும். இந்த புதிய முறையை கையாள்வது குறித்து முதன்மைப் பயிற்சியாளர் களுக்கு டெல்லியில் தேர்தல் ஆணையம் பயிற்சி அளிக்கவுள்ளது. அவர்கள், மத்திய சென்னை வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பார்கள்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெறும் எம்.பி.க்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?


எம்.பி.க்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு வழங்கும் சலுகைகள், வசதிகள் குறித்து திண்டுக்கல் ஆம் ஆத்மி வேட்பாளர் எஸ்.இளஞ்செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப் பகுதியில் ஒரு பங்களா உள்பட மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை பல்வேறு வகையான சலுகைகளை அரசு வழங்குகிறது.

மக்களவை உறுப்பினருக்கு மாதச் சம்பளம் ரூ.16,000, மாதத் தொகுதிப்படி ரூ.20,000, மாத அலுவலகப்படி ரூ.4,000, மாத கடிதச் செலவுக்கு ரூ.2,000, உதவியாளர் ஊதியம் ரூ.14,000, ஒரு நாளைக்கு அவையில் பங்கேற்பதற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதுமட்டுமில்லாது டெல்லியில் உள்ள வீட்டுக்கு இலவசமாக 50,000 யூனிட் மின்சாரமும், 4,000 கிலோ லிட்டர் தண்ணீரும் ஒரு ஆண்டுக்கு இலவசமாக இரண்டு தொலைபேசிகளில் ஒரு லட்சம் இலவச அழைப்புகள், இண்டர்நெட்டில் பொருத்தப்பட்ட தொலைபேசிக்கு 50,000 இலவச அழைப்புகள், மொபைல் இன்டர்நெட்டில் இந்தியா முழுவதும் ரோமிங், வாடகை மற்றும் இணைப்புக் கட்டணம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தியாவில் எங்கும் செல்லக்கூடிய அளவில் பயணச் சீட்டுகள், 34 முறை இலவச விமானப் பயணங்கள் வழங்கப்படுகிறது. தொகுதியில் இருந்து மக்களவையில் கலந்துகொண்டு விவாதங்களைப் பார்வையிட 8 பேருக்கு பயணச் சீட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் வகுப்பு ஏ.சி. ரயிலில் தன் குடும்பத்தினருடன் செல்ல இலவச அனுமதியும், சோஃபா, மேஜை போன்றவை வாங்க ஆண்டுக்கு ரூ.75,000 வழங்கப்படுகிறது. வீட்டில் உள்ள இருக்கைகள் மேஜைகள், திரைச்சீலைகள் பழுதுபார்த்தும் தரப்படுகின்றன. இந்தச் சலுகைகளை அனுபவிக்கும் எம்.பி. நமக்குத் தேவையான வசதிகளை செய்து தருவதில்லை.

இவ்வாறு இளஞ்செழியன் தெரிவித்தார்.

வாஜ்பாய் சிறந்த நிர்வாகி; பிரதமராக இன்னொரு வாய்ப்பு அவருக்கு கிடைத்திருந்தால், நதிநீர் இணைப்பை செயல்படுத்தியிருப்பார்- அத்வானி

பாஜக மூத்த தலைவர் அத்வானி மக்களவை தேர்தலுக்கான தனது முதல் பிரச்சாரத்தை மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் நேற்று துவக்கினார். அப்பொழுது அவர், "தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் வெற்றி கண்டவர் நரேந்திர மோடி மட்டுமல்ல. சத்தீஸ்கரின் ராமன் சிங்கும், மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகானும் தொடர்ந்து மும்முறை வெற்றி பெற்றுள்ளனர். எனவே மோடி மூவரில் ஒருவர் தான். " என்று கூறிய அவர், 1990-களில் தான் மேற்கொண்ட ரதயாத்திரையில் மோடி தன்னுடன் இணைந்து செயல்பட்டதாக நினைவு கூர்ந்தார்.

வாஜ்பாயின் நிர்வாகத் திறனை புகழ்ந்து பேசிய அத்வானி, பிரதமராக இருக்க இன்னொரு வாய்ப்பு வாஜ்பாய்க்கு கிடைத்திருக்குமானால், அவர் நிச்சயம் நதிநீர் இணைப்பை செயல்படுத்தியிருப்பார் என்று கூறினார் அத்வானி.

பாஜக ஆட்சியில் மூன்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அத்வானி, தெலங்கானா அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள், குளறுபடிகள் போல் ஏதும் ஏற்படவில்லை என்றார். மேலும் பாஜக ஆட்சியில் பணவீக்கம் எப்போதும் கட்டுக்குள் இருந்தது என்றார்.

மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமையும் என்று கூறியதோடு, அவரது ஆட்சி இந்தியாவை மாற்றி அமைக்கும் என்று அத்வானி தெரிவித்து இருந்தார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனை ரத்துக்கு எதிரான மத்திய அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி

முருகன், சாந்தன், பேரறிவாளனின் தூக்கு தண்டனை ரத்துக்கு எதிரான மத்திய அரசின் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் கால தாமதம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மூவரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்களை, உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி விடுவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்து நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது.  அந்த மனுவில், "கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து உத்தரவு பிறப்பித்த நிலையில் அதில் தலையிட அதிகாரம் இல்லாத போதும் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 72-வது பிரிவு கொடுத்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் நிராகரித்து பிறப்பித்த உத்தரவில் உச்ச நீதி மன்றம் தலையிட்டது அதன் அதிகாரத் துக்கு அப்பாற்பட்டதாகும். " என்பது உட்பட பல வாதங்களை மத்திய அரசு முன் வைத்திருந்தது.

இதனை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசின் மறு ஆய்வு மனுவை மிகவும் கவனமாக பரிசீலித்ததாகவும், அந்த மனுவில் சரியான காரணங்கள் ஏதும் இல்லதால் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

பொம்மை ஹெலிகாப்டர்கள், பொம்மை விமானங்கள் பயன்படுத்தி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்

உத்தர பிரதேச மாநிலத்தில் பிரச்சாரம் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. அங்கு முக்கிய தலைவர்கள் போட்டியிடுவதால் அவர்களுடைய பிரச்சார கூட்டங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது போலீசார் மிக தீவிரமாக செய்து வருகின்றனர்.  இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தில் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்று புலனாய்வு துறையினருக்கு ஏற்கனவே தகவல் கிடைத்து உள்ளது.

உத்தரபிரதேசத்தில் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில், குழந்தைகள் 'ரிமோட்' மூலம் பறக்க விடும் பொம்மை ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அந்த மாநில போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுபற்றி அந்த மாநில மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இதுபற்றி அந்த மாநில மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தீவிரவாதிகள் வான் வழியாக தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. 'ரிமோட் கண்ட்ரோல்' மூலம் செயல்படும் பொம்மை ஹெலிகாப்டர்கள், பொம்மை விமானங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக எங்களுக்கு எச்சரிக்கை தகவல் வந்து உள்ளது. இவற்றின் மூலம் கூட்டத்தில் தாக்குதல் நடத்துவது மிகவும் எளிது ஆகும்.

உத்தரபிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள பொம்மை கடைகளிலும் சோதனை நடத்துமாறு எங்களுக்கு உத்தரவு வந்து உள்ளது. அதன்படி, பொம்மை ஹெலிகாப்டர்கள், பொம்மை விமானங்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் அடையாள அட்டை மற்றும் அவர்களை பற்றிய விவரங்களை கேட்டு பெறுமாறு கடைக்காரர்களை கேட்டுக் கொள்ள இருக்கிறோம். காசியாபாத்திலும் டெல்லியிலும் உள்ள பொம்மை விற்பனை கடைகளில் தற்போது நாங்கள் சோதனை நடத்தி வருகிறோம், டெல்லியிலும் சோதனை நடத்த இருக்கிறோம்.

மேலும் உத்தரபிரதேச மாநிலத்திற்குள் பொம்மை ஹெலிகாப்டர்கள், விமானங்கள் கொண்டு வரப்படுகின்றதா? என்பதை கண்டறிய எல்லைகளை தீவிர சோதனை நடத்த இருக்கிறோம்.

இவ்வாறு உத்தர பிரதேச மாநில போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் மீது கற்கள், செருப்பு வீச்சு

பீகார் மாநிலம் நலந்தா மாவட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த அம்மாநில முதல் அமைச்சர்  நிதிஷ்குமார் கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நிதிஷ் குமார் பிரச்சாரத்தில் பேசி கொண்டிருந்த போது, மாநில அரசு மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்று கூறி அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்கள் சிலர் நிதிஷ்குமார் மீது கற்களை சரமாரியாக வீசினார்கள். ஆனால் கற்கள் எதுவும் முதல் அமைச்சர் மீது படவில்லை.

பின்னர் குஷ்ருபுர் என்ற இடத்தில் ஹெலிகாப்டரில் ஏறச் சென்றபோது, நிதிஷ் குமார் மீது செருப்பு வீசப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கட்சி தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்து கடிதம்


கட்சி தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகொள் விடுத்து எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு:

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியினரையும், வாக்காளர்களையும் சந்தித்து உரையாற்றி வருகிறேன். இடையறாத பணி களுக்கு இடையே, இந்த கடிதம் வழியாக ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரிடமும் என் உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எம்.ஜி.ஆர் 1972-ம் ஆண்டு அதிமுகவை தொடங்கிய நாளிலி ருந்து இந்த இயக்கம் எத்தனையோ நாடாளுமன்றத் தேர்தல்களை சந்தித்திருக்கிறது. நம் இயக்க வரலாற்றில் முதல்முறையாக 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடும் வாய்ப்பை இந்தத் தேர்தலில்தான் பெற்றிருக்கிறோம். 2004ல் இருந்து மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கூட்டணி அரசு, நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலுமாக சீர்குலைத்துவிட்டது.

இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாகச் சரிந்துவிட்டது. அனைத்துத் துறைகளிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது. இவற்றின் காரணமாக, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, குஜராத்தில் இருந்து அசாம் வரை விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

நாட்டைக் காப்பாற்றவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒரு கருவியாக நமக்கு வாய்த்திருக் கிறது. இந்தச் செய்தியை தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் கொண்டு செல்லுமாறு கட்சியினர் ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்கிறேன். வாக்காளர்களை நீங்கள் ஒவ்வொருவரும் தினமும் சந்திக்க வேண்டும். அதிமுக அரசின் சாதனைகள், முன்னோடித் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும்.

வஞ்சக நெஞ்சத்தோடு காங்கி ரஸும், தன் குடும்ப நலத்துக்காக திமுகவும் தமிழர்களுக்கு எதிராக இழைத்திட்ட பல்வேறு அநீதிகளையும் கொடுமை களையும் வாக்காளர்கள் உணரும் வகையில் திண்ணைப் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டம், நேரடி சந்திப்பு மூலம் விளக்கிச் சொல்ல வேண்டும்.

நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, இளம் வாக்காளர்களைக் கவர வேண்டும். 40 தொகுதிகளிலும் நானே போட்டியிடுவதாக நினைத்து நீங்கள் அனைவரும் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில், வியாபாரத்தின் அனைத்துப் பிரிவுகளும் சிறப்பாக இருக்கிறது- சிதம்பரம்

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியது:

"மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில், வியாபாரத்தின் அனைத்துப் பிரிவுகளும் சிறப்பாக இருக்கிறது. ஆனால், நரேந்திர மோடியோ வியாபாரத்தின் சில பிரிவினர்களுக்குத்தான் உகந்தவர். ஏனெனில், அவர் பெருமுதலாளித்துவத்தின் மற்றொரு முகமாகவே செயல்படுபவர்.

நாட்டின் பொருளாதாரம் 20 மாதங்களுக்கு முன்பு இருந்த நிலையைவிட, தற்போது நிலையாகவும் பலமாகவும் இருக்கிறது. எதிர்பார்த்ததை போல நாட்டின் நிதிப் பற்றாக்குறை ஜி.டி.பி.யில் 4.6 சதவீதத்துக்குள் இருக்கும்.
இப்போது தர குறைப்பு பற்றி யாரும் பேசவில்லை. அதேபோல பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் மத்திய அரசு வெற்றி அடைந்திருக்கிறது. 

மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் கீழ் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த எரிவாயு விலை உயர்வு சரியானதே. இந்த விலை உயர்வால் ஏற்படும் பல சாதக பாதகங்களை ஆராய்ந்து, கலந்து பேசிதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகள்தான் பங்குச்சந்தைகளின் ஏற்றத்துக்கு காரணமே தவிர, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையால் அல்ல" 

இவ்வாறு ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறினார்.  
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media