BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 30 November 2014

உணவே மருந்து : ஆரோக்கியத்துக்கு அவகேடோ



ஆரோக்கியமான உணவு பட்டியலில் அவகேடோவும் ஒன்று. 25க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அவகேடோவில் அடங்கியுள்ளன. இதில் உள்ள சத்துக்கள் நோயின் பிடியிலிருந்து நம்மைக் காக்கின்றன.

ஆரோக்கியமான இதயம் : வைட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட் மற்றும் ஒலியிக் அமிலம் (oleic acid) ஆகியவை இதயத் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன. மேலும், இந்தச் சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

குறையும் கொழுப்பின் அளவு : பீட்டா சிடோஸ்டெரால் (beta sitosterol) அதிகளவில் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை இந்தப் பழம் வெகுவாகக் குறைக்கும். ஹைபர்கொலஸ்ட்ரொலெமியா (Hypercholesterolemia) என்ற நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஒருவர், 7 நாட்கள் தொடர்ந்து அவகேடோவை சாப்பிட்டு வந்தால், அந்த நோயின் தாக்கம் 17 சதவிகிதம் வரை குறையும். 22 சதவிகிதம் கெட்டக் கொழுப்பு குறைந்து, 11 சதவிகிதம் நல்ல கொழுப்பு உடலில் சேரும். நல்ல கொழுப்பு நிறைந்திருப்பதால் இன்சுலின் குறைப்பாடும் சரியாகும்.

ரத்தக் கொதிப்பை தடுக்கும் : வாழைப் பழத்தில் இருக்கும் பொட்டாஷியத்தை விட அவகேடோவில் 35 சதவிகிதம் அதிகமாகவே உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். மேலும், வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளதால் செரிமானத்துக்கு ஏற்றது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையைச் சமன் செய்கிறது.

அதிகரிக்கும் பார்வை திறன் : லுடீன் (lutein) என்ற ஆண்டி ஆக்சிடன்ட், வயதாகிய பிறகும், பார்வை திறன் குறையாமல் தடுக்கிறது. மேலும், கண்களில் ஏற்படும் புரையை வளர விடாமல் தடுக்கும் ஆற்றல் அவகேடோவில் உள்ளது.

கர்ப்பிணிகளுக்கு அருமருந்து : ஃபோலேட், வைட்டமின் பி6 ஆகிய ஃபோலிக் அமிலங்கள் அவகேடோ பழத்தில் 23 சதவிகிதம் உள்ளது. கர்ப்பிணிகள் இதைச் சாப்பிட்டு வந்தால், பிறக்க போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். வயதானவர்களுக்குப் பக்கவாதம் வராமல் தடுக்கும்.

புற்றுநோயை தடுக்கும் : ஆன்டிஆக்சிடன்ட் இதில் நிறைந்திருப்பதால் ஆண்களுக்கு வரும் ப்ராஸ்டேட் புற்றுநோயையும், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயையும் தடுக்கிறது. மூப்படைதலை தடுத்து இளமையைத் தக்க வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். செல்களைச் சேதமடையாமல் பாதுகாக்கும்.

வாயை சுத்தம் செய்யும் : இயற்கையான முறையில் வாயை சுத்தம் செய்வதால் இதனை ‘நேசர் மவுத் வாஷ்’ எனச் சொல்லலாம். குடலை சுத்தம் செய்யும் அதோடு நாக்கின் மேல் உள்ள கிருமிகளை நீக்கி, வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

உடல் எடையைக் கூட்டும் : 100 கிராம் பழத்தில் 200 கலோரிகள் உள்ளன. இதனால், உடல் எடையைக் கூட்ட வேண்டும் என நினைப்போருக்கு அவகேடோ ஒரு சிறந்த உணவு. நல்ல கொழுப்பும், சர்க்கரையும் இதில் அதிக அளவில் உள்ளன.

அழகுக்கும் அவகேடோ : தொடர்ந்து அவகேடோ சாப்பிட்டு வர, சருமம் பளபளப்பாகும். கூந்தலின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும். முடி உதிர்தல் நிற்கும். கூந்தல் வறட்சி நீங்கும். எரிச்சல், சிவந்து போகுதல், சோரியாசிஸ் போன்ற சரும நோய்கள் குணமாகும்.

அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி


வெனிசூலா சிறைக் கலவர விவகாரம் : 35 கைதிகள் சாவு



வெனிசூலாவின் பார்க்கிஸிமிடோ நகரில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற்ற கலவரத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. பார்க்கிஸிமிடோ நகரின் சிறையில் அளவுக்கு மீறி கைதிகளின் எண்ணிக்கை உள்ளதை எதிர்த்து, கைதிகள் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். பின்னர் அங்கு திடீரென கலவரம் வெடித்தது. இதையடுத்து, சிறை மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்த ஏராளமான கைதிகள், அங்கிருந்த மருந்துகளை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதில் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இருபது பேர் நிலை கவலைக்கிடமளிப்பதாக உள்ளது. அவர்கள் எந்த விதமான மருந்துகளை உட்கொண்டனர் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக, சிறை வார்டன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறை விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுத் தலைவர் கூறினார். "டேவிட் விலோரியா' எனும் பெயர் கொண்ட சிறைச்சாலையில் 850 கைதிகளை சிறைவைக்கலாம். ஆனால் தற்போது சுமார் 3,700 பேர் இந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே சிறையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் 58 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஆளில்லா விண்கலத்தை செலுத்துகிறது இஸ்ரோ



மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் முதல் படியாக, ஆளில்லா விண்கலத்தைச் செலுத்தவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் இயக்குநர் எம்.வி.எஸ்.பிரசாத் தெரிவித்தார். ஆந்திரம் மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் பேசியது: இந்த ஆளில்லா விண்கலத்தை ஜிஎஸ்எல்வி எம்.கே.3 ராக்கெட் தாங்கி செல்கிறது. இதுவரை விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டுகளில் இது அதிக எடைகொண்டதாகும். இதன் எடை 613 டன். மேலும் ராக்கெட் தாங்கிச் செல்லும் ஆளில்லா விண்கலம் 3735 கிலோ எடை கொண்டதாகும். இதன் உயரம் 2.7 மீட்டர், வட்டம் 3.1 மீட்டர் சுற்றளவில் தயாரிக்கப்பட்டது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முதல்படி இதுவாகும். இந்த ஆளில்லா விண்கலம் டிசம்பர் மாதம் 15 தேதியில் இருந்து 20 ஆம் தேதிக்குள் விண்வெளிக்கு அனுப்பி சோதிக்கப்படும்.

இந்தச் சோதனையின் வெற்றியைப் பொருத்தே விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும். எனினும், இன்னும் இரண்டு ஆண்டுகளில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை இந்தியா நிறைவேற்றும் எப்படி செல்லும்?: ஆளில்லா விண்கலத்தை ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏந்திக்கொண்டு விண்வெளிக்குச் செல்லும். தரையிலிருந்து 126 கிலோ மீட்டர் சென்ற பிறகு, விண்வெளியில் விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரியும். பின்பு அங்கிருந்து 3 ஆயிரம் திசை வேகத்தில் (ஸ்ங்ப்ர்ஸ்ரீண்ற்ஹ்) பூமிக்குத் திரும்பும். பூமியை நெருங்க நெருங்க திசையின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு 15 வது கிலோ மீட்டரில் பாரசூட் திறக்க ஆரம்பிக்கும். பின்பு 8 ஆவது கிலோ மீட்டரில் பாரசூட் 2-ஆவது கட்டமாக திறக்கும். கடைசியில் பூமியின் அருகே 4 கிலோ மீட்டர் நெருங்கும்போது பாரசூட் 3 ஆவது கட்டமாக திறக்கும். இறுதியாக ஆளில்லா விண்கலம் கடலில் விழும். பின்பு, கடலோரக் காவல் படையினரின் உதவியோடு விண்கலம் மீட்கப்படும் என்றார் எம்.எஸ்.வி.பிரசாத்.

வெப்பம் தாங்கும் சக்தி: ஆளில்லா விண்கலம் விண்வெளியின் வெப்பத்தை தாங்கும் சக்தி கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இத்திட்டத்தின் இயக்குநர் சோம்நாத் கூறினார். அவர் மேலும் கூறியது. பூமியில் இருந்து 80 கிலோ மீட்டர் மேலே சென்றுவிட்டாலே அவை விண்வெளி என அழைக்கப்படும். நாம் கிரயோஜினிக் எஞ்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் ஆளில்லா விண்கலத்தை பூமியில் இருந்து 126 கிலோ மீட்டருக்கு கொண்டு செல்ல முடியும். அங்கு கிட்டத்தட்ட ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். மேலும் அந்த இடத்தில் காற்றோட்டமும் இருக்காது. எனவே இந்த ஆளில்லா விண்கலத்தின் மேல்பாகம் சிலிகான் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மனிதனை வைத்து விண்கலத்தைச் செலுத்தும்போது, விண்வெளியின் வெப்பம் பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, மனிதனை விண்வெளிக்கு அனுப்பவுதற்கு முன்பாக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஒத்திகை என்று கூட கூறலாம். இந்த ஆளில்லா விண்கலம் மூன்று பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைக்கு ரூ.40 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றார் சோம்நாத்.

சில முக்கிய அம்சங்கள் :
  • ஆளில்லா விண்கலத்தின் செயல்பாடு சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இயக்கப்படும்.
  • 1,10,000 கிலோ திரவ எரிபொருள் மூலம் ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படும்.
  • சி25 கிரயோஜனிக் எஞ்ஜின் பயன்படுத்தப்படுகிறது.
  • மிகப்பெரிய பாரசூட் முதல் முறையாக ஆளில்லா விண்கலத்தைத் தரையிறக்கப் பயன்படுத்தப்படுகிறது.

அபாயம் : 126 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து, அதாவது விண்வெளியில் ஆளில்லா விண்கலம் அதன் ஈர்ப்பு விசை மாறாமல் இருப்பதற்காகவே அதன் செயல்பாடுகள் சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. அப்போதுதான் ஆளில்லா விண்கலத்தின் கோணம் மாறாமல் இருக்கும். அப்படி அந்தக் கோணம் மாறினால், விண்வெளியின் வெப்பம் விண்கலத்தைப் பொசுக்கிவிடும். ஆனால், அது போன்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்தச் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால்தான், மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் அடுத்தக் கட்டத்துக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

உடன்குடி அனல் மின் நிலையம் : கட்டுமானப் பணி விரைவில் தொடக்கம்

உடன்குடி அனல் மின் திட்டத்தின் ஒன்றாம் நிலைக்கான பணிகளுக்கு டிசம்பர் இறுதியில் உத்தரவு வழங்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார். மின்சாரத் துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக, துறையின் அதிகாரிகளுடன் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: எண்ணூர் அனல் மின் திட்ட விரிவாக்கம் ரூ.4,956 கோடியிலும், எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின் திட்டம் ரூ.7,920 கோடியிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உடன்குடி அனல் மின் திட்டத்தின் ஒன்றாம் நிலைக்கான பணிகள் ரூ.10,121 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் கட்டுமானப் பணிக்கான உத்தரவு வரும் டிசம்பர் இறுதிக்குள் வழங்கப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்படும். அனுமதி பெற வேண்டிய பணிகள்: ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் 1,600 மெகாவாட் திறனும், வடசென்னை மூன்றாம் நிலை மின் திட்டம், எண்ணூர் மாற்று அனல் மின் திட்டம், உடன்குடி இரண்டாம், மூன்றாம் நிலை அனல் மின் திட்டம் ஆகியவற்றுக்கான அனுமதிகளைப் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிகழ் நிதியாண்டில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மூலம் 230 மெகாவாட் மின்சாரமும், தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் மூலம் 387 மெகாவாட்டும், வல்லூரில் அனல் மின் நிலையத் திட்டத்தின் மூன்றாவது அலகின் மூலம் 500 மெகாவாட் மின்சாரமும் விரைவில் கிடைக்கும்.

கூடங்குளம் திட்டம்: கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அலகு ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனை கடந்த ஜூலை மாதம் எட்டியுள்ளது. இதில், தமிழகத்தின் பங்கு 562 மெகாவாட்டாகும். எனவே, இந்த நிதியாண்டிலேயே ஆயிரத்து 529 மெகாவாட் கூடுதல் மின் நிறுவு திறன் உருவாக்கப்படும் என அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரிய ஆய்வுக் கூட்டத்தில் அதன் தலைவர்-மேலாண் இயக்குநர் ஞானதேசிகன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேகாலயத்துக்கு முதல்முறையாக ரயில் சேவை : மோடி தொடக்கி வைத்தார்



நாடு சுதந்திரம் பெற்றதற்கு பிறகு, வடகிழக்கு மாநிலமான மேகாலயத்துக்கு முதல்முறையாக விடப்பட்டுள்ள ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டி அருகே உள்ள மாலிகாவ்னில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மேகாலய மாநிலம் மெண்டிபதார் -குவாஹாட்டி இடையேயான ரயில் சேவையை கொடி அசைத்து பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். மேலும், மேகாலய மாநிலம் பைரபி-சாய்ராங் இடையே அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு அமைப்புகள் சதி : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு



பாகிஸ்தான் அரசு சார்ந்த அமைப்புகளே இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார். அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல்துறைத் தலைவர்களின் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. உளவுத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்துப் பேசியதாவது: பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பில்லாத சில இயக்கங்களே இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடுவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தானின் அங்கீகரிக்கப்பட்ட உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மூலமாகவே இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்கள் அரங்கேறி வருகின்றன. அப்படியானால், "ஐ.எஸ்.ஐ. அமைப்பு' பாகிஸ்தானின் அரசு சாராத இயக்கமா? ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் தாராளமாக உதவிகளைச் செய்து வருகிறது.

அல்-காய்தா அமைப்பு ஒரு சவால்தான்: இந்திய துணைக் கண்டத்தில் தனது கிளையைத் தொடங்கவுள்ளதாக அல்காய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் அஸ்ஸாம், குஜராத், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளையும், வங்கதேசத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு நடக்க அனுமதிக்க மாட்டோம். சிரியா, இராக் நாடுகளில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு தோன்றியிருந்தாலும் கூட, இந்திய துணைக் கண்டத்தில் அதன் தாக்கம் இருக்காது என்று நாம் உறுதியாகக் கூற முடியாது. எனவே, அல்-காய்தா அமைப்பை ஓர் சவாலாகவே ஏற்று அதனை ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திய முஸ்லிம்கள் தேசபக்தர்கள்: இந்தியாவில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் உள்ளதால் அவர்களை தங்கள் ஆதரவாளர்களாக மாற்றி, இஸ்லாமிய தேசத்தை உருவாக்க பயங்கரவாதிகள் திட்டமிடுகின்றனர். எனவே, இந்தியாதான் அவர்களின் முதல் குறியாக உள்ளது. ஆனால், இந்திய முஸ்லிம்கள் தேசபக்தி நிறைந்தவர்கள். நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் எழுந்தால் அதனை எதிர்த்துப் போராட அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். இதனால் பயங்கரவாதிகளின் எண்ணம் இந்தியாவில் என்றுமே ஈடேறாது. பாடம் புகட்டிய ஜம்மு-காஷ்மீர் மக்கள்: ஜம்மு-காஷ்மீரில் முன்பைவிட தற்போது வன்முறைச் செயல்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. அங்குள்ள பயங்கரவாத அமைப்புகளால் உள்ளூர் இளைஞர்களைத் தங்களுக்கு ஆதரவாக செயல்பட வைக்க அவர்களால் முடியவில்லை. பயங்கரவாதிகளின் எதிர்ப்பையும் மீறி ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற முதல்கட்ட பேரவைத் தேர்தலில் ஏராளமானோர் வாக்களித்ததன் மூலம் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டிவிட்டனர். பயங்கரவாத அமைப்புகள் மீதான அச்சம் குறைந்துள்ளதையே இது உணர்த்துகிறது. பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: நாட்டில் தற்போது 10 மாநிலங்களில் மட்டுமே மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் காணப்படுகிறது. மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. அதற்கு முதலில் அவர்கள் வன்முறையைக் கைவிட வேண்டும். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் திறமையான அதிகாரிகளை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும்.

வடகிழக்குப் பிராந்திய பிரச்னைகள்: போதிய வளர்ச்சி, உள்கட்டமைப்பு, பொருளாதார வசதிகள் ஆகியவை இல்லாததால் வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன. அங்கு வாழும் மக்களின் நலனுக்காக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதியளிக்கிறேன். காவல்துறை இன்றியமையாதது: நாட்டின் பாதுகாப்பில் காவல்துறையும், உளவுத்துறையுமே முக்கியப் பங்கு வகிக்கின்றன. மக்கள் அச்சமின்றி இருப்பதற்கு காவல்துறையின் பங்கு இன்றியமையதாதது ஆகும். எதிர்காலத்தில் காவல்துறையை நவீனமயமாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார் ராஜ்நாத் சிங். இந்த மாநாட்டின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.



"ஐ.எஸ். அமைப்பால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவது கவலையளிக்கிறது'
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு வருவது கவலையளிப்பதாக உள்ளது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது: மேற்குவங்கத்தில் பர்த்வான் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஜமாத்-அல்-முஜாகிதீன் அமைப்பே காரணம் எனக் கூறப்படுகிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த பயங்கரவாத சக்திகள், தங்களின் செயல்களை அரங்கேற்ற இந்திய மண்ணைப் பயன்படுத்த முனைகின்றன. இது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் இந்திய இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு வருவது மிகுந்த கவலை தரும் விஷயமாக உள்ளது. இந்த விவகாரத்தை சவாலாகக் கருதி மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்காக போரிட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட மும்பையைச் சேர்ந்த ஆரிஃப் மஜீத் என்ற இளைஞரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே தவிர, அந்த இளைஞரை துன்புறுத்துவதற்காக அல்ல என்றார் அவர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media