BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 27 May 2014

ஆம் ஆத்மி கவுண்டவுன் ஸ்டார்ட் - மோடி அரசுக்கு ஆம் ஆத்மி வைத்துள்ள 150 நாள் கெடு

ஆம் ஆத்மி கவுண்டவுன் ஸ்டார்ட் - ஆம் ஆத்மி வைத்துள்ள 150 நாள் கெடு

கருப்பு பணத்தை கண்டுபிடித்து 150 நாட்களில் இந்தியாவிற்கு கொண்டு வருவதாக பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதி கொடுத்துள்ளது வரவேற்கத்தக்க விஷயம். இதற்கான கவுண்டவுண் இன்றிலிருந்து ஆரம்பிக்கிறது. ஆம் ஆத்மி கட்சி இதை தொடர்ந்து கவனிக்கும். உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பாக விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது தமிழக ஆம் ஆத்மி கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி தர்பாரில் மதிப்பிழந்து போன தமிழகம் - 18 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் பிடியை இழந்தது


1996ல் ஆரம்பித்து தற்போது சில மாதங்கள் முன்பு வரை டில்லியில் தமிழ்நாட்டை சேர்ந்த பலர் கேபினேட் மற்றும் இணையமைச்சர்களாக இருந்தனர், குறைந்தது 6 அமைச்சர்கள் அதிகபட்சமாக 12 அமைச்சர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர்

தற்போது 2014ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக 37 இடங்களை வென்றது, பாஜகவும் பாமகவும் தலா ஒரு இடத்தில் வென்றது, 1996ல் இருந்து 2014 வரை கடந்த 18 ஆண்டுகளாக பல கேபினேட் அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களை கொண்டிருந்த தமிழகம் தற்போது மீண்டும் பழைய கதையாக ஒரே ஒரு இணை அமைச்சரை பெற்று டெல்லியின் தன் பிடியை இழந்துள்ளது.

எப்போதெல்லாம் தேசிய கட்சிகள் வலுவாக இந்தியாவில் உள்ளதோ அப்போதெல்லாம் தமிழகம் புறக்கணிக்கப்படுவது வழக்கம், முன்பு காங்கிரஸ் கட்சி வலுவாக தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி செய்யும் போது தமிழகத்திற்கு ஒரு இணை அமைச்சர் பதவி தான் கிடைக்கும், தற்போது பாஜக தனிப்பெரும்பாண்மை பெற்றுள்ள நிலையிலும் ஒரே ஒரு இணை அமைச்சர் பதவி தான் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

கடந்த 18 ஆண்டுகளாக தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் 2ஜி போன்ற மெகா ஊழல்களில் சிக்கியிருந்தாலும் பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர், ஆனால் தற்போது தமிழகத்தின் ஒரே ஒரு இணை அமைச்சரால் என்ன செய்ய இயலும் என்ற கேள்வி எழுந்துள்ளது? தமிழகம் பழைய மாதிரியே புறக்கணிப்புக்குள்ளாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் மோடி அரசால் புறக்கணிக்கப்படுமா என்ற கேள்விதான் தற்போது அனைவர் மனதிலும் மேலோங்கியுள்ளது.

பிணைப் பத்திரம் தாக்கல் செய்தார் கேஜ்ரிவால், அவரை விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால், பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில், ஜாமீன் பெற ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பிணைப் பத்திரம் அளிக்க மறுத்தார். இதனால கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தை அவர் நாடினார்.

இந்நிலையில், ஜாமீன் பெறுவதற்கு பிணைப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியது.

இதனை ஏற்றுக் கொண்ட கேஜ்ரிவால் தரப்பு, பிணைப் பத்திரம் தாக்கல் செய்ய ஒப்புக்கொண்டது. இதையடுத்து, அரவிந்த் கேஜ்ரிவால் சார்பில் அவரது வழக்கறிஞர் பிணைப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார்.அதனால், அவரை திஹார் சிறையில் இருந்து விடுதலை செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கைக்கு வர வேண்டுமென மோடிக்கு அழைப்பு விடுத்த‌ ராஜபக்சே


பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சார்க் தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்தை பயனுள்ளதாக இருந்தது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடனான பேச்சுவார்த்தையில் தீவிரவாதம் குறித்து விவாதிக்கப்பட்டது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கக்கூடாது என நவாஸிடம் மோடி வலியுறுத்தினார். இந்தியாவுடனான உறவுவையும், வர்த்தக தொடர்பையும் வலுப்படுத்த நவாஸ் உறுதி கூறியுள்ளார்.

மேலும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுடனான பேச்சுவார்த்தையின் போது தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. 13-வது அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த ராஜபக்சேவிடம் மோடி வலியுறுத்தினார். அதிகார பகிர்வுக்கு 13-வது அரசியல் சட்டம் அமலாவது அவசியம் என்றும் விளக்கிக் கூறினார். அனைத்து துறைகளிலும் இலங்கையுடன் ஒத்துழைப்பு தொடரும் என உறுதி கூறினார். இதையடுத்து இலங்கைக்கு வரவேண்டும் என்று ராஜபக்சே விடுத்த அழைப்பை ஏற்று மோடி இலங்கைக்கு வருவதாக சம்மதம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சுஜாதா சிங் கூறினார்.

மும்பை 26 / 11 பயங்கரவாத தாக்குதல் வழக்கு விசாரணை குறித்து நவாஸ் ஷெரீப்பிடம் விசாரித்த‌ மோடி


பிரதமர் நரேந்திர மோடியை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்பின் போது, பிரதமர் மோடியுடன், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும், மும்பை 26 / 11 பயங்கரவாத தாக்குதல் வழக்கு விசாரணை குறித்து நரேந்திர மோடி, நவாஸ் ஷெரீப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தவிர, இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக மேம்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவுக்கு சமாதான செய்தியுடன் வந்திருப்பதாகவும், 1999-ல் வாஜ்பாயும் - தானும் விட்டுச் சென்ற அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர விரும்புவதாகவும் நேற்று நவாஸ் கூறியிருந்தார்.

ஜூன் 1 முதல் மின்வெட்டு அறவே இருக்காது: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் ஜூன் 1 முதல் அறவே நீக்க, தான் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 "தமிழ்நாட்டின் மின் நிலைமை குறித்து எனது தலைமையில் இன்று (27.5.2014) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் துறை வளர்சிக்கும் இன்றியமையாததாக விளங்குவது மின்சாரமே ஆகும். 2011 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாவது முறையாக நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தின் மின் தேவை 12,000 மெகாவாட் என்ற அளவில் இருந்தது. ஆனால், கிடைத்த மின்சாரமோ வெறும் 8,000 மெகவாட் தான். அதாவது கிடைத்த மின்சாரத்திற்கும், தேவைப்பட்ட மின்சாரத்திற்குமான இடைவெளி 4,000 மெகாவாட்டாக இருந்தது.

மேலும், தமிழ்நாடு மின்சார வாரியமும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது. இவற்றையெல்லாம் சீர் செய்வதற்கான பகீரத முயற்சிகளை எனது தலைமையிலான அரசு எடுத்ததன் விளைவாக, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2,500 மெகாவாட் அளவுக்கு புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, 500 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய நடுத்தர கால ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அந்த மின்சாரம் பெறப்பட்டு வருகிறது.

இது தவிர, 3,300 மெகாவாட் மின்சாரத்தை நீண்ட கால அடிப்படையில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த மின்சாரம் வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து படிப்படியாக பெறப்படும்.

புதிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலமும், கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் மூலமும் நமக்குத் தேவையான மின்சாரம் தற்போது கிடைக்கப் பெற்று வருகிறது. எனவே, கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்தில் மின் தடை என்பதே இல்லாத நிலை உருவாகியுள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் காற்றாலை மூலம் அதிக அளவில் மின்சாரம் கிடைக்கும். காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 2 முழுவதையும் பயன்படுத்திட வேண்டும் என்று நான் தமிழ்நாடு மின்சார வாரியத்தை அறிவுறுத்தியுள்ளேன்.

ஜூன் மாதம் முதல் கிடைக்கப் பெறும் காற்றாலை மின்சாரத்தையும் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் 1.6.2014 முதல் அறவே நீக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதன்படி, தற்போது உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைமுறையில் உள்ள 90 விழுக்காடு மின் கட்டுப்பாடு 1.6.2014 முதல் நீக்கப்படும்.

இதே போன்று, உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மற்ற நேரங்களில் தற்போது நடைமுறையில் உள்ள 20 விழுக்காடு மின் கட்டுப்பாடும் 1.6.2014 முதல் நீக்கப்படும். இதன் மூலம் 1.11.2008 முதல் தமிழ்நாட்டில் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியினரால் அமல்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நடவடிக்கையின் காரணமாக தமிழ்நாட்டில் தொழில் வளம் மேலும் பெருகவும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் வழிவகை ஏற்படும். நான் ஏற்கெனவே உறுதி அளித்தபடி மின் வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை மூன்றே ஆண்டுகளில் கொண்டு வந்ததில் நான் பெருமிதம் அடைகிறேன்"

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மீனவர்கள் வலையை வீச சிக்னல் கொடுக்கும் டால்பின்கள் - பிரேசிலில் தலைமுறைகளாக நடக்கும் அதிசயம்

மீனவர்கள் வலையை வீச சிக்னல் கொடுக்கும் டால்பின்கள் - பிரேசிலில் தலைமுறைகளாக நடக்கும் அதிசயம்

பிரேசில் நாட்டில் லகுனா என்ற பகுதியில்(Laguna, Brazil)  மீனவர்களுக்கு டால்பின்கள் மீன் பிடிக்க உதவும் அதிசயம் நடக்கின்றது. 150க்கும் மேற்பட்ட டால்பின்களில் 50 டால்பின்கள் உள்ளூரில் உள்ள 200 மீனவர்களுக்கு உதவுகிறது.

மீன்பிடி படகுகள் ஒரு பக்கம் நிற்க, டால்பின்கள் வரிசையாக ஒரு பக்கம் தண்ணீரில் அணைபோல நிற்கின்றன, இவை இரண்டுக்கும் இடையில் மீன்கள் வரும் போது தங்கள் தலையாலோ, வாலாலோ டப டப வென்று தண்ணீருக்கு மேலே தட்டுகின்றன, உடனே மீனவர்கள் வலையை வீச கொத்து கொத்தாக மீன்கள் சிக்குகின்றன.

இவைகள் இன்று நேற்று நடப்பதல்ல, பல தலைமுறைகளாக 1847ம் ஆண்டிலிருந்து நடைபெறுகின்றன, கரையில் வசிக்கும் மீனவர்கள் அடுத்த தலைமுறைக்கு இந்த உத்தியை சொல்லி தருகிறார்கள், ஆனால் அடுத்தடுத்த தலைமுறை டால்பின்கள் எப்படி மீனவர்களுக்கு உதவுவதை கற்றுக்கொள்கின்றன என்று தான் புரியவில்லை.

இப்படி உதவுவதால் டால்பின்களுக்கு என்ன நன்மைகள் என்று தான் புரியவில்லை, இதன் மூலம் டால்பின்களுக்கும் மீன்கள் கிடைக்கின்றன என்கிறார்கள் ஆனாலும் இதை உறுதி படுத்த முடியவில்லை மேலும் அந்த பகுதியில் இருக்கும் 150 டால்பின்களில்  இந்த 50 டால்பின்கள் மட்டுமே இதை செய்கின்றன, பிற டால்பின்கள் மீனவர்களுக்கு உதவுவதில் பங்கேற்பதில்லை.

உள்ளூர் மீனவர்களுக்கு டால்பின்களுக்குமான இந்த உறவு காலம் காலமாக தொடருகிறது

இது குறித்த வீடியோவை இந்த லிங்கில் பார்க்கலாம்


பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை அதிபர் ராஜபக்சே சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் ராஜபக்சே சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இலங்கைத் தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என நம்ப படுகிறது.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகள் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு,  தமிழக கட்சிகள், தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், ஈழத்தமிழர் நலன் கருதியே இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக பாஜக தொடர்ந்து வலியுறுத்து வந்தது. இந்நிலையில், எதிர்ப்புகளுக்கு இடையே இந்தியா வந்துள்ள ராஜபக்சே பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ராஜபக்சே, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்திக்கிறார்.

ஆளில்லா குட்டி விமானம் மூலம் பீட்சா விநியோகித்த நிறுவனம் மீது மும்பை போலீஸ் வழக்கு

கடந்த 11-ம் தேதி மும்பையைச் சேர்ந்த ‘பிரான்ஸெஸ்கோ பிஸ்ஸேரியா’ எனும் பீட்சா நிறுவனம் ஆளில்லா குட்டி விமானம் மூலம், கடையிலி ருந்து 1.5 கி.மீ. தொலைவில் லோயர் பரேல் என்ற இடத்திலுள்ள வாடிக்கையாளரின் வீட்டில் நேரடி யாக பீட்சாவை விநியோகம் செய்தது. முதன்முறையாக இம் முயற்சியைச் செய்த அந்நிறு வனம், இதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக இணைய தளங்களில் வெளியிட்டது.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் என்பதால், முன் அனுமதி பெறாமல் குட்டி விமானத்தைப் பறக்க விட்டது தொடர்பாக மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக அந்நிறுவனம் இதுபோன்ற ஆளில்லா விமானத் தைப் பறக்கவிடுவதற்கு அனுமதி கோரியதா என, மும்பை விமான நிலையத்திலுள்ள வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கும் மும்பை காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

மத்திய அமைச்சர்கள் இலாகா விபரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து 45 அமைச்சர் களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இந்நிலையில், இன்று அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேபினட் அமைச்சர்கள்:

1.ராஜ்நாத் சிங்- உள்துறை அமைச்சகம்.

2.அருண் ஜேட்லி- நிதி, பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை

3.சுஷ்மா ஸ்வராஜ்- வெளியுறவு அமைச்சகம்.

4.வெங்கய்ய நாயுடு- நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை.

5.கோபிநாத் முண்டே- பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகங்கள்

6.ராம் விலாஸ் பாஸ்வான்- நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் உணவு, வழங்கல் துறை.

7.நிதின் கட்கரி- போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை.

8.மேனகா காந்தி- பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத் துறை.

9.கல்ராஜ் மிஸ்ரா- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை.

10.நஜ்மா ஹெப்துல்லா- சிறுபான்மை விவகாரத்துறை.

11.ஆனந்த் குமார்- ரசாயனம் மற்றும் உரத்துறை.

12.ரவிசங்கர் பிரசாத்- தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம், நீதித் துறை.

13.ஆனந்த கீதே- கனரக தொழில்துறை மற்றும் பொதுத் துறை.

14.உமா பாரதி- நீர் வள மேலான்மை.

15.அசோக் கஜபதி ராஜூ- விமான போக்குவரத்துத் துறை.

16.ஹர்சிம்ரத் கவுர் பாதல்- உணவு பதப்படுத்துதல் துறை.

17.நரேந்திர சிங் தோமர்- சுரங்கம் மற்றும் இரும்புத் துறை; தொழில் மற்றும் வேலைவாய்ப்புத் துறை.

18.ஜூவல் ஓரம் - பழங்குடியின் விவகாரத்துறை

19.ஹர்ஷ வர்த்தன்- சுகாதாரத் துறை

20.ஸ்மிருதி இராணி- மனித வள மேம்பாடு

21.ராதா மோகன் சிங்- விவசாயம்

22.தாவர்சந்த் கெலாட்- சமூக நீதி

23. சதானந்த கவுடா- ரயில்வே அமைச்சர்

இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)

1. ஜெனரல் வி.கே.சிங்- வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, வெளியுறவு விவகாரம், வெளிநாடு வாழ் இந்தியர் விவகார துறை.

2. இந்திரஜித் சிங் ராவ்- திட்டமிடுதல், புள்ளியல், திட்ட அமலாக்கம், பாதுகாப்பு அமைச்சகம்

3. சந்தோஷ் கங்க்வார்- ஜவுளித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை, நீர் வளம், நதிகள் மேம்பாடு, கங்கை நதி புனரமைத்தல்

4. ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக்- கலாச்சாரம் மற்றும் சுற்றுலா

5. தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியம், இயற்கை எரிவாயு

6. சர்வானந்த சோனோவல்- விளையாட்டு, தொழில்முனைவோர் மேம்பாடு, திறன்சார் மேம்பாடு

7. பிரகாஷ் ஜவடேகர்- தகவல் ஒலிபரப்பு, சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், நாடாளுமன்ற விவகாரத்துறை.

8. பியுஷ் கோயல்- மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை

9. ஜிதேந்திர சிங்- அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை

10. நிர்மலா சீதாராமன்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் நாடாளுமன்றத் துறை.

இணை அமைச்சர்கள்:

1. ஜி.எம்.சித்தேஸ்வரா- விமான போக்குவரத்துத் துறை

2. மனோஜ் சின்ஹா- ரயில்வே துறை

3. நிஹால் சந்த்- ரசாயனம் மற்றும் உரத் துறை.

4. உபேந்திர குஷ்வாஹா- ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர், சுகாதாரம், பஞ்சாயத்து ராஜ் துறை.

5. பொன்.ராதாகிருஷ்ணன்- கனரக தொழில்துறை.

6. கிரண் ரிஜிஜு- உள்துறை.

7. கிரிஷன் பால் குர்ஜார்- சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து துறை.

8. சஞ்சீவ் குமார் பாலியான்- விவசாயம், உணவு பதுப்படுத்துதல் துறை.

9. மன்சுக்பாய் வாசவா- பழங்குடியின விவகாரத் துறை.

10. ராவ் சாஹிப் தான்வே- நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் வழங்கல் துறை.

11. விஷ்ணுதேவ் சாய்- சுரங்கம், இரும்பு, தொழில், வேலைவாய்ப்புத் துறை.

12. சுதர்சன் பகத்- சமூக நீதித் துறை.

‘வாட்ஸ் அப்’-பில் மோடிக்கு எதிரான செய்தி பரப்பிய மாணவர் பெங்களூரில் கைது

கர்நாடக மாநிலத்தில், பட்டத்தக்கலை பகுதியைச் சேர்ந்த‌ சையித் வக்காஸ் பர்மாவர் (24) என்பவர் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

கடந்த மே 16-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானபோது வக்காஸ் தனது நண்பர்களுக்கு ‘வாட்ஸ் அப்’பில் குறுஞ்செய்தி அனுப்பி யுள்ளார். பாஜகவின் பிரச்சார ஸ்லோகனான “இதுதான் சிறந்த தருணம்… மோடியை தேர்ந்தெடுங்கள்” என்பதை, “இது தான் சிறந்த தருணம்… மோடிக்கு இறுதி அஞ்சலி செலுத்துங்கள்” என்று அவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இந்த குறுஞ்செய்தி ஒவ்வொருவராகக் கடந்து பாஜக தொண்டர் ஜெயந்த் தினேகர் என்பவருக்கும் சென்றுள்ளது. இதை தொடர்ந்து அவர் சைபர் கிரைம் போலீஸாரிடம் கடந்த 22-ம் தேதி புகார் அளித்துள்ளார். இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் வக்காஸின் தொலைபேசியை கண்காணித்தபோது அவர் பெங்களூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வக்காஸ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். விசாரணையில், வக்காஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர் மீது ஐ.டி. சட்டத்தின் கீழ் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

பல்வேறு மாணவர் மற்றும் அரசியல் அமைப்புகள் வக்காஸின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

நரேந்திரமோடி பதவியேற்ற விழாவில் ஏன் ரஜினி, விஜய் கலந்து கொள்ளவில்லை?


தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னை வந்திருந்த போது,  நரேந்திர மோடி  ரஜினிகாந்தை வீட்டுக்கே சென்று சந்தித்தார். அதேபோல கோவையில் மோடியை விஜய் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், மோடி பதவியேற்கும் விழாவுக்கு ரஜினி, விஜய் இருவருக்கும் அழைப்பு வந்தது. அவர்கள் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் தங்களது முடிவை மாற்றிக் கொண்டனர்.

மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்ததைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்தன. ராஜபக்சே பங்கேற்கும் விழாவுக்கு ரஜினி போகக்கூடாது என வலியுறுத்தி, ‘பாலச்சந்திரன் மாணவர்கள் இயக்கம்’ சார்பில் ரஜினி வீடு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்த நிலையில், மோடி பதவியேற்பு விழாவில் ரஜினியும் விஜய்யும் கலந்துகொள்ளவில்லை.

பதவியேற்பு விழா நேற்று நடந்த போது, நடிகர் ரஜினி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது அடுத்தபடமான ‘லிங்கா’ படப்பிடிப்பு சம்மந்தமான வேலைகளுக்காக ஹைதராபாத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தனது அடுத்தபடமான ‘கத்தி’ படத்தின் வேலைகளுக்காக நடிகர் விஜய் சென்னையில் இருந்தார் என தகவல்கள் தெரிவித்தன.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media