BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 1 June 2014

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பஞ்சாப்பை வீழ்த்தி ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் கோப்பையை வென்றது



இன்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணிக்கு எதிராக  3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது. இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் வென்றுள்ளது.

முதலில் ஆடிய பஞ்சாப் அணி 200 ரன்களை கொல்கத்தா அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. பஞ்சாப்பில் சாஹா செஞ்சுரி அடித்திருந்தார், கொல்கத்தா அணியில் பாண்டே பேயாட்டம் ஆடினார் வெறும் 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து கொல்கத்தா வெற்றி பெற காரணமானார்.

இந்தி நடிகர் ஷாருக்கான் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்.

தேசிய கொடியை அணிந்து கவர்ச்சி போஸ், நடிகை மல்லிகா ஷெராவத்தை கைது செய்ய கோரி போராட்டம்

தேசிய கொடியை அணிந்து கவர்ச்சி போஸ், நடிகை மல்லிகா ஷெராவத்தை கைது செய்ய கோரி போராட்டம்

மல்லிகா ஷெராவத் இந்தி சினிமாவின் கவர்ச்சி நடன மங்கை, இவர் தமிழில் தசாவதாரம், ஒஸ்தி போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்து கலக்கியுள்ளார். கே.சி.பொகாடியா இயக்கியுள்ள "டர்ட்டி பாலிடிக்ஸ்" என்ற படத்தில் தேசிய கொடி நிறத்தில் உள்ள ஆடையை ஆபாசமாக அணிந்து கார் மேல் உட்கார்ந்திருப்பது போன்ற படம் வெளியாகியுள்ளது, இதனால் போஸ் கொடுத்த மல்லிகா ஷெராவத்தை கைது செய்யவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் இயக்கம் போராட்டத்தில் இறங்கியுள்ளது.

டர்ட்டி பாலிடிக்ஸ் என்ற படம்  ராஜஸ்தான் அரசியல்வாதிகளிடம் பாலியல் தொடர்பு கொண்டு அவர்களுடன் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோக்கள் எடுத்து மிரட்டி வந்த பன்வாரிதேவி என்ற நர்ஸின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மல்லிகா ஷெராவத்தின் அந்த கவர்ச்சி படத்தில் தேசிய கொடி நிறத்தில் உடை அணிந்து  காரில் செக்சியாக போஸ் தருகிறார், அந்த படத்தின் பின்புலத்தில் ராஜஸ்தான் சட்டமன்ற கட்டிடம் உள்ளது, எனவே ராஜஸ்தான் சட்டமன்றத்தையும் அவமானப்படுத்தும் வகையில் மல்லிகா நடந்துகொண்டுள்ளார் என்று  பாஜகவினரும், ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் மல்லிகா ஷெராவத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்துகின்றனர்

பட்டப்பகலில், துப்பாக்கி முனையில் ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்ற பெண் கற்பழிப்பு


மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்திற்குட்பட்ட பயாந்தர் ரெயில் நிலையம் அருகே பட்டப்பகலில் இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மே 30ந் தேதி மதியம் 2 மணியளவில் பயாந்தர் ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் வைத்து அப்பெண்ணை தீபக் என்பவர் கற்பழித்துள்ளார். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அப்பெண்ணின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்ட தீபக் அவரை கற்பழித்தாக காவல் நிலைய துணை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அப்பெண் புகார் தெரிவித்ததையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகள் இருவரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

விமான நிலையங்களில் எங்கள் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் சலுகையை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்- பிரியங்கா

விமான நிலையங்களில் பயணிகளிடம் நடத்தப்படும் பரிசோதனைகளில் இருந்து விலக்கு பெறும், மிக மிக முக்கியப் பிரமுகர்கள் பட்டியலில் ராபர்ட் வதேரா பெயர் இடம்பெற்றுள்ளது. மத்தியில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், பட்டியலில் இருந்து வதேராவின் பெயர் நீக்கப்படவிருப்பதாக செய்தி வெளியானது.

இந்நிலையில் சிறப்பு பாதுகாப்பு படையின் (எஸ்.பி.ஜி) தலைவருக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், “இந்த சிறப்பு சலுகையை நானோ, எனது குடும்பத்தினரோ கேட்டுப் பெறவில்லை. நாங்கள் குடும்பத்து டன் பயணம் செய்யும்போது, விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில், இந்த சலுகை வெளிப் படையாக வழங்கப்பட்டது. இந்தப் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்கும்படி என் கணவர் என்னிடம் பலமுறை கூறியுள்ளார். மேலும் அவரது தனிப் பட்ட விமானப் பயணங்களில் அவர் இந்தச் சலுகையை பயன்படுத்தியதில்லை. தற்போது இந்தப் பட்டியலில் இருந்து எனது கணவரின் பெயரை நீக்குவது குறித்து புதிய அரசு பரிசீலிப்பதாகத் தெரிகி றது. இந்நிலையில் நாங்கள் குடும்பத் துடன் பயணம் செய்யும்போது எனக்கும், எனது குழந்தைகளுக்கு மட்டும் சலுகை வழங்கப்படுவது சரியல்ல என்று நான் கருதுகிறேன். எனவே எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த சலுகையை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

புதிய அட்டர்னி ஜெனரல் 2ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடியவர்

மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரல் 2ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடியவர்

ஊடக உலகம் மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வி தகுதி குறித்து சர்ச்சையை கிளப்பி டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக்கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரல் ஆக  முகுல் ரோத்கி நியமிக்கப்பட்டுள்ளார்,

இவர் யார் தெரியுமா? இந்த முகுல் ரோத்கி தான் ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் சார்பாக வாதிடும் வழக்கறிஞர்களில் ஒருவர். அது மட்டுமல்ல, இத்தாலி மாலுமிகளால் கேரள மீனவர்கள் சுடப்பட்ட வழக்கில் இத்தாலித் தூதரகத்தின் சார்பில் வாதாடியவரும்கூட இப்படி பட்டவரை தான் மத்திய அரசின் புதிய அட்டர்ன ஜெனரலாக நியமித்து அழகு பார்த்திருக்கிறார் பிரதமர் மோடி.

தமிழகம் முழுவதும் புதிதாக 360 அம்மா உணவகங்களை திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

 'குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசினை நானிலமே போற்றும்' என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, தமிழகத்தின் தேவைகளையும், தமிழ்நாட்டு மக்களின் நாடித் துடிப்பையும் தெளிவாக உணர்ந்து, அதற்கேற்றபடி திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துகின்ற அரசாக எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு விளங்கிக் கொண்டு இருக்கின்றது.

அந்த வகையில், விலைவாசி உயர்வு என்னும் கொடூரத் தாக்குதலிலிருந்து தமிழக மக்கள், குறிப்பாக ஏழை, எளிய மக்கள், உழைக்கும் வர்க்கத்தினர் விடுபட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, மலிவு விலையில் தரமான உணவினை ஏழை எளிய மக்கள் வயிறார உண்ணும் வகையில், 15 அம்மா உணவகங்களை சென்னை மாநகராட்சி பகுதிகளில் 19.2.2013 அன்று நான் திறந்து வைத்தேன். பின்னர், இந்தத் திட்டம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் விரிவாக்கப்பட்டது.

மக்களின் விருப்பத்தினைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள பிற மாநகராட்சிப் பகுதிகளிலும், சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையிலும் 'அம்மா உணவகங்களை' காணொலிக் காட்சி மூலம் நான் திறந்து வைத்தேன்.

தற்போது சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 203 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை, கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகங்கள் அமைப்பதற்கான கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை மாநகராட்சியில் 11 அம்மா உணவகங்களும், இதர மாநகராட்சிகளில் தலா 10 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆக மொத்தம் தற்போது 294 அம்மா உணவகங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.

இந்த அம்மா உணவகங்களில், காலை 7 மணி முதல் 10 வரை இட்லி, சாம்பார் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில், காலை சிற்றுண்டியின் போது, இட்லி தவிர, பொங்கல், சாம்பார் ஐந்து ரூபாய்க்கும்; மதிய உணவின் போது, எலுமிச்சை சாதம் அல்லது கறிவேப்பிலை சாதம் 5 ரூபாய்க்கும்; மாலை வேளைகளில் இரண்டு சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலை புரிபவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

விலைவாசி உயர்விலிருந்து ஏழை, எளிய மக்களைப் பாதுகாக்கும் இந்த அம்மா உணவகங்கள் குறித்து அகில உலக அளவில் பேசப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஏழை, எளிய மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் அம்மா உணவகங்களின் பயன் பிற நகர்ப்புற மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்தகட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் கூடுதலாக தலா ஒரு அம்மா உணவகம் வீதம், 200 அம்மா உணவகங்கள்; ஏற்கெனவே அம்மா உணவகங்கள் நிறுவப்பட்ட மதுரை, வேலூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி தவிர்த்து, ஏனைய மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் தலா ஒன்று வீதம் 27 அம்மா உணவகங்கள், 124 நகராட்சிகளில் 129 அம்மா உணவகங்கள்; திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சிகளில் தலா ஒன்று வீதம்,

2 அம்மா உணவகங்கள்; கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகராட்சிகளில் கூடுதலாக தலா ஒன்று வீதம் 2 அம்மா உணவகங்கள் என மொத்தம் 360 புதிய அம்மா உணவகங்களை திறக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த அம்மா உணவகங்கள் விரைவில் செயல்படத் துவங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கெனவே தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அம்மா உணவகங்களுடன், இவற்றையும் சேர்த்து, மொத்தம் 654 அம்மா உணவகங்கள் மக்களின் தேவையை நிறைவு செய்யும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை, மலிவான விலையில் தரமான உணவை மேலும் பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பெற வழி வகுக்கும்

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் விழா வேண்டாம் என சொல்லியும், அன்பழகனும், ஸ்டாலினும் கேட்கவில்லை- கருணாநிதி

வருகிற 3ம் தேதி,  திமுக தலைவர் கருணாநிதியின் 91வது பிறந்தநாள். அதனை ஒட்டி திமுகவினருக்கு அவர் விடுத்த பிறந்தநாள் செய்தி வருமாறு:

'' 'காலமும், அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை' என்பது முதுமொழி. தற்போது தான் கட்சியினர் எனது 90வது வயதைக் கொண்டாடி ஏழையெளியோருக்கு பல்வேறு வகை உதவிகள் வழங்கி நிறைவு செய்தது போல் இருக்கிறது. அதற்குள் எனக்கு 91வது பிறந்த நாளாம்!

இந்த ஆண்டு என்பிறந்த நாள் விழா எதுவும் வேண்டாமென்று நான் எவ்வளவோ சொல்லியும், கழகப் பொதுச் செயலாளர் அன்பழகனும், பொருளாளர் ஸ்டாலினும், மற்றும் என்னுடன் எப்போதும் உடன் இருக்கும் கழக முன்னணியினர் சிலரும் கேட்கவில்லை.

பொதுச் செயலாளர், பேராசிரியர் என் மீது வைத்துள்ள வற்றாத பாசத்தினால், இந்த 92 வயதிலும், இரண்டு முறை எனது வீட்டிற்கே வந்துவிட்டார்; நான் ஒப்புதல் அளித்த பிறகுதான் விட்டார். மேலும் என்னுடைய பிறந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டுமென்று நீண்ட விளக்க அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்திற்கும், மைசூருக்கும் இடையே காவிரி நதி நீர் ஒப்பந்தம் ஏற்பட்ட அதே 1924ஆம் ஆண்டில் பிறந்து, 1938இல் கரங்களில் புலி, வில், கயல் பொறித்த தமிழ்க்கொடி ஏந்தி, 'வாருங்கள் எல்லோரும் மொழிப் போருக்குச் சென்றிடுவோம்!' என்று பரணி பாடிக் கொண்டே பொது வாழ்க்கையைத் தொடங்கியவன் நான்.

நீண்ட, நெடிய என்னுடைய பொது வாழ்க்கையில் தமிழகத்தில் நான் செல்லாத ஊரில்லை; பார்க்காத தமிழ் மக்கள் இல்லை; பேசாத மேடையில்லை என்று சொல்லும் அளவுக்கு, கழகத்தை நாட்டின் அனைத்து மூலைமுடுக்குகளுக்கும் கொண்டு செல்ல முதுகொடியப் பயணம் செய்திருக்கிறேன். தந்தை பெரியாரால் செதுக்கப்பட்டு, பேரறிஞர் அண்ணாவால் செம்மைப் படுத்தப்பட்ட நான், அரசியல் வாழ்க்கையின் அத்தனை பரிமாணங்களையும் பார்த்து விட்டேன்.

கழகம் எனக்கு தாய் - தந்தைக்கு இணையானது. 'முரசொலி' எனது மூத்த பிள்ளை. 'நான் தென்றலைத் தீண்டியதில்லை; தீயைத் தாண்டியிருக்கிறேன்' என்பது திரைப் படத்திற்காக என்னால் எழுதப்பட்ட வெறும் வசனம் அல்ல: அது தான் என் வாழ்க்கைச் சுருக்கம்!

தமிழக அளவில் மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், பசும்பொன் தேவர், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், பெரியவர் பக்தவத்சலம், பொதுவுடைமை வீரர் ஜீவா, பி. ராமமூர்த்தி, அருமை நண்பர் எம்.ஜி.ஆர்., மணலி கந்தசாமி என இன்னும் பலரோடு அரசியல் செய்திருக்கிறேன்.

அகில இந்திய அளவில், அண்ணல் ஜெயப்பிரகாஷ் நாராயண், இந்திரா காந்தி, பாபு ஜெகஜீவன் ராம், காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா, மொரார்ஜி தேசாய், இளந்தலைவர் ராஜீவ் காந்தி, வி.பி. சிங், ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய், சோனியா காந்தி, மன்மோகன் சிங், என்.டி. ராமராவ், நம்பூதிரிபாத், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், சுர்ஜித் பர்னாலா, ராம் விலாஸ் பஸ்வான் என இன்னும் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரோடு இணைந்தும், எதிர்த்தும் அரசியல் பணியாற்றியிருக்கிறேன்.

இன்னும் சொல்லப் போனால், 'கல்லால் இதயம் வைத்து, கடும் விஷத்தால் கண் அமைத்து, கணக்கில்லாப் பொய்களுக்குக் காரணமாய் நாக்கு அமைத்து, கள்ள உரு அமைத்து, கன்னக்கோல் கை அமைத்து, நல்லவர் என்றே சிலரை - உலகம் நடமாட விட்டதடா!' என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளுக்கு உருவகமான சிலரை எதிர்த்தும், அரசியல் செய்திட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போதும், தமிழ் மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, அதை நான் தட்டிக் கழித்ததில்லை.

1957ஆம் ஆண்டு என்னுடைய 33வது வயதில், அறிஞர் அண்ணாவின் ஆணைப்படி, முதல் முறையாக குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். 2011 ஆம் ஆண்டு 87வது வயதில், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இதுவரையில் சட்டப் பேரவைத் தேர்தலில் ஒரு முறை கூடத் தோற்காமல், பன்னிரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறேன். இடையில் 1984 முதல் 1986 வரையில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறேன். பேரறிஞர் அண்ணா 1967ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது 1969 வரை இரண்டாண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், பின்னர் ஐந்து முறை மொத்தம் 19 ஆண்டுகள் முதலமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறேன்.

இவ்வாறு ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராகவும், பன்னிரண்டு முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் பணியாற்றிய போதிலும், என்னுடைய எளிய வாழ்க்கை முறைகளை நான் எப்போதும் மாற்றிக் கொண்டதில்லை என்பதை தமிழகம் நன்கறியும். திரையுலகில் ஈடுபட்ட போது, குறைந்த விலைக்கு வாங்கி நான் தற்போது வசிக்கும் தெரு வீட்டைக் கூட, என் வாழ்நாளுக்குப் பிறகு ஏழையெளியோர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மருத்துவ மனையாக இயங்கஎழுதிக் கொடுத்து விட்டேன்.

இதுவரை என் வாழ்க்கை நிகழ்வுகளை 'நெஞ்சுக்கு நீதி' என்ற தொகுப்பாக ஆறு பாகங்கள் - சுமார் 4,600 பக்கங்கள் - எழுதி நூலாக வெளியிட்டிருக்கிறேன். இதுதவிர சட்டமன்றத்தில் நான் ஆற்றிய உரைகள் 6000 பக்கங்கள் கொண்ட நூல்களாக வெளி வந்துள்ளன. மேலும் 'ரோமாபுரிப் பாண்டியன்' , 'கவிதை மழை', 'தென்பாண்டிச் சிங்கம்', 'முத்துக்குளியல்' இரண்டு பாகங்கள், 'புதையல்', 'சங்கத் தமிழ்', 'பொன்னர்-சங்கர்', 'பாயும் புலி பண்டாரக வன்னியன்', 'குறளோவியம்', 'குறள் உரை', 'தொல்காப்பியப் பூங்கா' என நூல்ற்றுக்கும் மேலான என்னுடைய நூல்ல்கள் வெளி வந்துள்ளன. சுமார் 75 திரைப் படங்களுக்கு கதை வசனம் தீட்டியிருக்கிறேன். மொத்தத்தில் இருபதாயிரம் பக்கங்களுக்கு மேல் நான் எழுதியவை நூல்களாக வெளி வந்துள்ளன.

இவற்றையெல்லாம் நான் என்னுடைய பெருமையைப் பறை சாற்றிக் கொள்வதற்காகக் கூறவில்லை. என்னுடைய வாழ்நாளை வீணாகக் கழிக்காமல், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் பயன்படத் தக்க வகையில் என்னால் இயன்ற வரை உழைத்திருக்கிறேன் என்பதை விளக்குவதற்காகவே குறிப்பிட்டுள்ளேன்.

1969ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா கழகத்தை நம்முடைய கரங்களிலே ஒப்படைத்து விட்டு மறைந்தார். கடந்த 45 ஆண்டுகளாக கழகத்தின் தலைமைப் பொறுப்பு என்னுடைய தோள்களிலே ஏற்றப்பட்டுள்ளது. இந்த 45 ஆண்டுகளில் நம்முடைய கழகத்தில் எத்தனையோ பிரச்சினைகள், துரோகங்கள், தூற்றல்கள், எள்ளல் ஏகடியங்கள், சச்சரவுகள் - ஆர்ப்பரித்து வந்த அத்தனையையும் சாதுர்யமாக அடக்கிச் சமாளித்துத் தான் கழகம் அமைதியாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது. 'கழகத்தை உடைத்து விட்டேன்' என்று கர்ச்சனை செய்தவர்கள், அண்ணா அறிவாலயத்தையும், அண்ணா தந்த இரு வண்ணக் கொடியையும் கைப்பற்றிச் சொந்தம் கொண்டாடத் துடித்தவர்கள், தீக்குண்டத்தில் கிடத்தப்பட்ட போது, அதன் மீது பெட்ரோலை ஊற்றத் துணிந்தவர்கள் என உடன் பிறந்தே கொல்லும் வியாதியைப் போன்ற எத்தனையோ அதிசய மனிதர்களின் சதிகளையும், தந்திரோபாயங்களையும் தவிடு பொடியாக்கி, இரட்டிப்பு எழுச்சியோடு ஏற்றம் பெற்று கழகம் வளர்ந்திருக்கிறது.

என்னைப் பொறுத்தவரையில், தந்தை பெரியாரிடம் பெற்ற பயிற்சியைக் கருத்தில் தேக்கி, அறிஞர் அண்ணா கற்றுத் தந்த வழிமுறைகளிலிருந்து கிஞ்சிற்றும் பிறழாமல்; சுயமரியாதையும், பகுத்தறிவும் பெற்ற சாதிமதப் பேதமற்றதும், சோஷலிச அடிப்படையில் ஆனதுமான சமுதாயம் - சமத்துவம் - சமூக நீதி - தமிழ் மொழியின் முதன்மை - தமிழர் மேம்பாடு என; இவற்றுக்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பவன்; தோல்வியாயினும், வெற்றியாயினும் துவளாமல் இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருபவன் நான்.

'அடித்தாலும், அணைத்தாலும் நான் உந்தன் பிள்ளை' என்பதற்கொப்ப, எந்த நிலையிலும் நான் நாட்டிற்காகவும், மொழிக்காகவும் ஆற்ற வேண்டிய பணியை தள்ளி வைத்ததும் இல்லை; தமிழ் மக்களிடமிருந்து என்றைக்கும் விலகி நின்றதும் இல்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் பெரும் தோல்வி கண்டுள்ளது. இது போன்ற தோல்விகளை கடந்த காலத்தில் கழகம் பெற்று, மீண்டெழுந்து வெற்றி முகட்டை எட்டிப் பிடித்திருக்கிறது. எனினும் இப்போதைய தோல்விக்குப் பலராலும் பல்வேறு காரணங்கள் விமர்சனமாக வைக்கப்படுகின்றன. கழகச் செயல்வீரர்கள் சிலர் அவர்கள் வழக்கமாக ஆற்றிட வேண்டிய தேர்தல் பணிகளைப் புறக்கணித்து முடங்கி விட்டனர்; அல்லது அவர்களது நடவடிக்கைகள் வாக்காளர்களின் வெறுப்பையும், வருத்தத்தையும் வரவழைத்துள்ளன; என்பதும் ஒரு காரணமாக முன் வைக்கப்படுகின்றது. அண்ணா ஒரு முறை, 'தம்பீ! உன்னை யாராலும் அழித்திட முடியாது; உன்னை நீயே அழித்துக் கொண்டால் தவிர!' என்று சொன்னார்.

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பது புறநானூற்றுப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் வாக்கு! அதாவது நன்மைகள் வந்தாலும், தீமைகள் வந்தாலும், அவற்றுக்கெல்லாம் காரணம் நாம் தானே தவிர, பிறர் அல்ல. எனவே அந்த அரிய கருத்துகளையெல்லாம் எண்ணிப் பார்த்து இந்தத் தேர்தல் முடிவினை கட்சியினர் தம்மை கூர் தீட்டிக் கொள்ளவும், செம்மைப்படுத்திக் கொள்ளவும் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்; ஒவ்வொருவரும் சுய பரிசீலனை (Self-Introspection) செய்து நாம் எங்கிருக்கிறோம் - என்ன செய்கிறோம் - அதன் விளைவுகள் என்ன - நமது பயணமும், பாதையும், கட்சியின் லட்சியங்களுக்கும், கொள்கைகளுக்கும் முழுவதுமாய் இயைந்த வகையில் இருந்திட எப்படிப்பட்ட சிந்தையும் செயலும் வேண்டுமென்று உணர்ந்து கொள்ள வேண்டும். அதுவே நாம் அடுத்து பெறப் போகும் வெற்றிக்கு அச்சாரமாக அமையும். இதுவே நான் வழங்கும் பிறந்த நாள் செய்தி" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக மீனவர்கள் 33 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்


இலங்கை கடற்படையினால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 33 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

 "கடந்த 45 நாள்களாக அமல்படுத்தப்பட்டிருந்த மீன்பிடித் தடைக் காலம் முடிவடைந்த நிலையில், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களில் 33 அப்பாவி மீனவர்களையும், அவர்களது 7 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றுவிட்டார்கள் என்பதை மிகுந்தத் துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 3 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் 76 கைது நடவடிக்கைகளாலும், 67 தாக்குதல் நடவடிக்கைகளாலும் இந்திய மீனவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக, முந்தைய பிரதமருக்கு நான் பலமுறை கடிதம் எழுதி, தூதரக ரீதியில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து, இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், அதனால் எந்தப் பலனும் இல்லை.

இந்த நிலையில், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 33 மீனவர்களையும், அவர்களது 7 விசைப்படகுகளையும் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றிருக்கிறார்கள். மீனவர்கள் அனைவரும் இலங்கையின் தலைமன்னாருக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

மத்தியில் புதிய அரசு பொறுப்பெற்றுள்ளதால், தங்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை, தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தப் பிரச்சினையால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரு தரப்பு மீனவர்கள் இடையிலான பேச்சுவார்த்தையிலும் உரிய பலன் கிடைக்கவில்லை. இதற்கு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அலட்சியப் போக்கும் பலவீனமான அணுகுமுறையும்தான் காரணம்.

உங்கள் தலைமையின் கீழ், இந்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் என்று நம்புகிறேன். தமிழக மீனவர்களின் துயரத்தை முழுமையாக போக்கும் வகையில், நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விவகாரத்தில், கடந்த ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்தச் சூழலில், மத்தியில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நடவடிக்கைகளால், தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என லட்சக்கணக்கான மீனவ மக்கள் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறார்கள்.

எனவே, இந்தப் பிரச்சினையில் நீங்கள் நேரடியாகத் தலையிட்டு, வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் இலங்கை அதிகாரிகளை அணுகி, உடனடியாக 33 மீனவர்களையும், 7 விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதுபோன்ற சம்வங்கள் மீண்டும் நடைபெறாத வகையில், இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புகிறேன். உடனடி நடவடிக்கையை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சபாநாயகர் மீரா குமார் தோற்ற செய்தியைக் காண்பித்ததற்காக லோக்சபா டிவி தலைமை அதிகாரி பணி நீக்கம்


மே 30ஆம் தேதியிட்ட கடிதம் ஒன்றில் லோக்சபா தொலைக்காட்சி தலைமை அதிகாரி ராஜிவ் மிஸ்ராவின் பதவிக்காலம் மே 31ஆம் தேதியோடு முடிவடைகிறது என்று சபாநாயகர் மீரா குமார் குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பீகார் மாநிலத்தின் சசாராம் தொகுதியில் சபாநாயகர் மீரா குமார் தோற்ற செய்தியைக் காண்பித்ததற்காக தான் நீக்கப்பட்டதாக ராஜிவ் மிஸ்ரா செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்துள்ளார்.

"சசாராம் தொகுதியில் தோற்ற செய்தியை காண்பித்த பிறகே மேடம் என் மீது கடும் கோபத்தில் இருந்ததாக உடன் பணியாற்றியவர்கள் என்னிடம் தெரிவித்தனர்” என்று ராஜிவ் மிஸ்ரா கூறியுள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியன்று ராஜிவ் மிஸ்ராவின் ஒப்பந்தம் அடுத்த உத்தரவுகள் வரும் வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் அவரது தலைமையின் கீழ் லோக்சபா தொலைக்காட்சி லாபத்துடன் இயங்கியதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

500 ரூபாய் பிரச்சினையால் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து தற்கொலை

நாகை மாவட்டத்தை சேர்ந்த நாகராஜன் என்பவருக்கு இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் செந்தில் சென்னையில் ஒரு பேன்சி ஸ்டோரிலும் இளைய மகன் சதீஷ் உள்ளூரிலிலேயே இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் தொழிலையும் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த புதன் கிழமை இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கி விற்றதில் கிடைத்த லாபத்தில் 500 ரூபாயை குடும்பத்துக்குத் தெரியாமல் சதீஷ் செலவு செய்திருக்கிறார். இது தெரிந்த நாகராஜன் மகனை கண்டித்திருக்கிறார்.

தந்தை தன்னை திட்டி விட்டாரே என்கிற வருத்தத்தில் மனம் உடைந்த சதீஷ், விஷம் அருந்திவிட்டு வீட்டில் வந்து படுத்து விட்டார். இரவு 2 மணியளவில் அவர் வாந்தி எடுத்தபோது விஷம் அருந்தியது தெரியவந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சதீஷை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

மகன் விஷம் குடித்து கிடக்கும் நிலையில் எழுந்திருக்காமல் படுத்துக் கிடக்கும் நாகராஜனை எழுப்பியபோதுதான் தெரிந்தது, அவரும் விஷம் அருந்தி இறந்து கிடந்தது. வீட்டில் தந்தையும், மருத்துவமனையில் மகன் சதீஷும்  இறந்தார்கள். வியாழக்கிழமை தந்தை மகன் இருவருக்கும் இறுதி சடங்கு நடைபெற்றது. பிறகு, வீட்டில் இருந்தது நாகராஜனின் மனைவி ராஜலட்சுமியும், செந்திலும்தான். இருவரும் என்ன பேசினார்கள்? எப்படி இந்த முடிவை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. சனிக்கிழமை காலையில் அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தபோது, அவர்கள் இருவரும் உத்தரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து போயிருந்தது தெரியவந்தது.

கருணாநிதி 91-வது பிறந்தநாள்: இன்று முதல் தொடங்குகிறது 3 நாள் கொண்டாட்டம்

திமுக தலைவர் கருணாநிதியின் 91-வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் 3 நாட்கள் விழா நடக்கிறது.

திமுக மகளிரணி சார்பில் கருணாநிதியின் பிறந்த நாள் விழா அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இதில் திண்டுக்கல் லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.

மாலை 6 மணிக்கு இலக்கிய அணி சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில், தமிழறிஞர் பிச்சினிக்காடு இளங்கோவுக்கு ரூ.10 ஆயிரம் கொண்ட கலைஞர் இலக்கிய பொற்கிழியும், கேடயமும் வழங்கப்படுகிறது.

இரவு 7 மணிக்கு செல்வகணபதி தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.

நாளை (2-ம் தேதி) மாலை 4.30 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் திமுக இளைஞரணி சார்பில் திரைப்பட பாடகர்கள் பங்கேற்கும் தெம்மாங்கு தேனரங்கம், தமிழறிஞர்கள் பங்குபெறும் வாழ்த் தரங்கம் நடக்கவுள்ளது. வாழ்த் தரங்குக்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்குகிறார்.

கருணாநிதி பிறந்த நாளான 3-ம் தேதி காலை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ரத்தம் மற்றும் கண் தான முகாம்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அன்று காலை 7 மணிக்கு மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்திலும், பின்னர் பெரியார் நினைவிடத்திலும் கருணாநிதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். காலை 9 மணி முதல் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்து பெறுகிறார். மாலையில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் பிறந்தாள் விழா பொதுக்கூட்டத்திலும் கருணாநிதி பங்கேற்கிறார்.

அமெரிக்காவில் இருக்கும் ஏழை மக்களின் உணவகங்களைவிட, அம்மா உணவகங்கள் த‌ரத்தில் உயர்ந்திருக்கிறது- எகிப்து அதிகாரிகள் பாராட்டு


எகிப்து நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் தொழில்நுட்ப மதிப்பீட்டாளர் டாக்டர் அகமது கலீல் மற்றும் அத்துறையின் அங்கீகார இயக்குனர் முகமது அப்துல் ரெஸ்க் உள்ளடக்கிய குழு சென்னை வந்திருந்தது. நேற்று சென்னை பொது மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகம் மாநகராட்சி அதிகாரிகளால் இவர்களுக்கு சுற்றி காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு வழங்கப்பட்ட உணவு வகைகளை சுவைத்த அப்துல் ரெஸ்க் இந்த உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் உலகின் பிற பகுதிகளில் பெறப்படும் கட்டணத்தையே ஒத்திருந்தது என்று குறிப்பிட்டார். சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளே இங்கு பொதுமக்களுக்கு அளிக்கப்படுகின்றது என்று கூறிய ரெஸ்க், இது மாநில அரசின் ஒரு நல்ல முயற்சி என்றும் பாராட்டினார். இந்த நடைமுறையை தங்கள் நாட்டிலும் செயல்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையை அவர் வெளியிட்டார்.

அம்மா உணவகங்களின் நடைமுறையையும் அதனால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளையும் தாங்கள் கவனித்ததாக அகமது கலீல் கூறினார். அமெரிக்காவில் நடைபெற்றுவரும் ஏழை மக்களின் உணவகங்களைவிட இவை தரத்தில் உயர்ந்திருப்பதாக இவர்கள் தெரிவித்தனர்.

உ.பி பலாத்கார வழக்கு: சிபிஐ விசாரணைக்கு அகிலேஷ் அரசு ஒப்புதல்; ரூ. 5 லட்ச நிவாரண நிதியை நிராகரித்த பெற்றோர்கள்

உத்தர பிரதேசத்தில் உள்ள படான் மாவட்டத்தின், 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, ஊரின் மத்தியில் இருந்த மரத்தில் தூக்கிட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு அகிலேஷ் தலைமையிலான மாநில அரசு ஒப்புதல் அளித்து, அதற்காக பரிந்துரைத்துள்ளது.

இந்த வழக்கில், இதுவரை, 2 போலீசார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என்றும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் முன்னதாக கோரிக்கை விடுத்தனர்.

பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர், நிவாரண நிதியை நிராகரித்தனர்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இத்தகவல் குறித்து அறிந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media