BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 25 March 2014

ஒபாமா, மிஷெல் ஒபாமாவை மனித குரங்குகளாக சித்தரித்ததற்க்காக மன்னிப்பு கோரிய செய்தித்தாள்

பெல்ஜியன் நாட்டில் 'டீ மார்கன்' என்ற செய்தித்தாள், கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவையும், மிஷெல் ஒபாமாவையும், மனித குரங்குகள் போன்று சித்தரிக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர்.

இந்த புகைப்படம் ஒபாமா மற்றும் மிஷெல் ஒபாமவை அவமதிக்கும் வகையில் இருப்பதால்,  சமூக வலைதளங்களில் இது குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டு, மக்கள் இதைப் பற்றி விவாதிக்க தொடங்கினர்.   கண்டனத்திற்குரிய அந்த புகைப்படத்தை செய்தித்தாளில் வெளியிட, ஒப்புதல் அளித்த பத்திரிக்கை ஆசிரியர் யார் என்ற கேள்வியை பலரும் எழுப்பினர். இந்நிலையில், தான் செய்த தவறை உணர்ந்து, டீ மார்கன் செய்தித்தாள், மன்னிப்பு செய்தி ஒன்றை வெளியிட்டது.  அச்செய்தியில், நகைச்சுவைக்காக மட்டுமே அப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டதாகவும், இனவெறி தாக்குதல் என்ற எண்ணத்தில் இல்லை, ஆனால், அனைவரும் அதை வெறும் நகைச்சுவையாக எடுத்து கொள்வார்கள் என தாங்கள் நம்பியது தவறு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடியை எதிர்த்து கேஜ்ரிவால் போட்டியிடுவதாக உறுதி


நாடாளுமன்ற தேர்தலில், உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக கேஜ்ரிவால் இன்று உறுதி செய்தார்.

இன்று நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பொதுக்கூட்டங்களுக்கு ஹெலிகாப்டரிலேயே வந்துவிட்டு பின்னர் அதிலேயே சென்று விடுகிறார். அவர் மக்களுடன் கலந்து பேசுவது கிடையாது. அவர் மக்களிடம் ஏதோ மறைக்க நினைக்கிறார் என்பது உறுதி. சில மாதங்களுக்கு முன்பு மோடியை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறினேன். ஆனால் என்னிடம் இவர்களது கட்சியைப் போன்று பணம் கிடையாது. இத்தேர்தலில் எங்களது கட்சியின் நிதிக்காக இந்நாட்டு மக்களாகிய உங்களிடம் பணம் பெற்று, அப்பணத்திலேயே போட்டியிட நான் விரும்புகிறேன்.  எனக்கு எம்.பி.யாக வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. ஊழலுக்கு எதிராக போராடுவதே எங்களது குறிக்கோள். ஆகவே வருகிற தேர்தலில் மோடி போட்டியிடவுள்ள இத்தொகுதியில் அவரை எதிர்த்து நான் கண்டிப்பாக போட்டியிடுவேன். மோடியை மட்டுமல்லாது ராகுலையும் வீழ்த்த வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்” என்று தெரிவித்தார்.

தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடருவேன்: அழகிரி


மு.க.அழகிரி, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி தற்காலிகமாக திமுக வில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். ஆனால், இன்று அவரை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்க முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி அறிவித்தார். 

இதனையடுத்து மு.க.அழகிரி மதுரையில் பேட்டியளித்த போது, “நான் நீக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். எந்தவித முன்னறிவிப்புமின்றி என்னை நீக்கியதற்கும் எனது குற்றச்சாட்டுகளுக்கும் தி்.மு.க.  கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். நான் நீக்கப்பட்டதால் நானும் என்னைச் சேர்ந்தவர்களும் கட்சியில் இருந்து வெளியேறுவோம் என்று அர்த்தம் கிடையாது. மேலும் தி்.மு.க. எங்களுக்கு சொந்தமில்லை என்றும் அர்ததம் கிடையாது. எந்த மாற்றுக் கட்சிக்காரர்களையும் நான் ஆதரிக்கவில்லை. நானும் எனது ஆதரவாளர்களும் என்றும் தி்.மு.க.வை சேர்ந்தவர்களாகத்தான் இருப்போம்” என்று தெரிவித்தார்.

கடலில் மூழ்கிய மலேசிய விமான பயணிகள் குடும்பத்திற்கு 5000 டாலர் இழப்பீடு


கடந்த 8-ம் தேதி 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்று காணாமல் போன‌ மலேசிய விமானம்,  இந்திய பெருங்கடலில் விழுந்து நொறுங்கியதாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில் பயணம் செய்த எவரும் பிழைத்து இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த விமானத்தில் பயணம் செய்த தங்களது உறவினர்கள் உயிருடன் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செலவில் சீனத் தலைநகர் பீஜிங், மலேசிய தலைநகர் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல்களில் தங்கியிருந்தவர்களுக்கு இந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, கோலாலம்பூர் மற்றும் பீஜிங் நகரில் உள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவன அலுவலகங்களின் முன்பு விபத்துக்குள்ளான விமானத்தில் சென்ற பயணிகளின் உறவினர்கள் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்து பலியான 239 பயணிகளின் உறவினர்களுக்கும் தலா 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 3 லட்சம் ரூபாய்) இழப்பீடாக வழங்கப்படும் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

மோடி, கெஜ்ரிவால் இருவருமே இந்திய ஜனநாயகத்தின் குழப்பவாதிகள்-வீரப்ப மொய்லி


மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி இன்று பெங்களூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, "நரேந்திர மோடி பிரதமர் ஆக முடியாது. அவர் தனது கட்சிக்குள் சர்வாதிகார வழியில் சென்றுகொண்டிருக்கிறார். குஜராத்தில் அவர் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தலைவர்களை வெளியேற்றிவிட்டார். இப்போது, நாடு முழுவதும் அந்த வேலையை செய்யத் தொடங்கியுள்ளார்." என மோடியை சாடி பேசியிருந்தார். மேலும் அவர் பேசுகையில், "பாராளுமன்ற அமைப்பை மதிக்காத மோடியை இறுதியில் நாடு ஓரங்கட்டிவிடும். தேசிய ஜனநாயக கூட்டணிகளுக்கு மோடி தீண்டத்தகாதவராக மாறிவிடுவார்." என்று கூறியுள்ளார்.

வாரணாசியில் கெஜ்ரிவால், மோடி ஆகியோருக்கிடையிலான போட்டி குறித்து கேட்டபோது, அவர்கள் இருவருமே இந்திய ஜனநாயகத்தின் குழப்பவாதிகள் என்று பதிலளித்தார் மொய்லி.

நியாயமான விசாரணைக்கு சீனிவாசன் ராஜினாமா செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்


ஐ.பி.எல். சூதாட்ட புகார் தொடர்பான 'நீதிபதி முகுல் முத்கல் அறிக்கை' மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் போது, ஐ.பி.எல் சூதாட்ட சர்ச்சை குறித்து நேர்மையான, நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்றால் பி.சி.சி.ஐ தலைவர் பதவியை சீனிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும் என நீதிபதி ஏ.கே.பட்நாயக் தெரிவித்தார்.  அப்போது குறிக்கிட்ட சீனிவாசன் தரப்பு வழக்கறிஞர் சி.எ.சுந்தரத்திடம், "அறிக்கையை உங்களிடம் அளிக்கிறோம், அதனை முழுமையாக ஆராய்ந்து பாருங்கள். சீனிவாசனின் வழக்கறிஞராக இல்லாமல் உங்கள் நிலைப்பாட்டை தெரிவியுங்கள். முதல் அறிக்கை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவர் கொண்ட விசாரணைக் குழு அளித்தது. இரண்டாவது அறிக்கை முகுல் முத்கல் குழுவின் அறிக்கை. இரண்டு அறிக்கைக்கும் முரண் இருக்கிறது. இதனை வைத்து, அறிக்கையில் சில குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறினால், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?" என்ற கேள்வியை நீதிபதி எழுப்பினார்.

வாரணாசி சென்ற கேஜ்ரிவால் மீது மை, முட்டைகள் வீசப்பட்டது, அவரை துரோகி என கூறி சிலர் கோஷம்


 
வாரணாசி மக்கள் விரும்பினால், அத்தொகுதியில் பாஜக பிரதம வேட்பாளார் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட தாம் தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருந்தார். இந்நிலையில், அந்தத் தொகுதி மக்களின் கருத்துகளை நேரில் கேட்பதற்காக தமது கட்சித் தலைவர்களுடன் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று வாரணாசி சென்றிருந்தார். கங்கை நதியில் நீராடிய கேஜ்ரிவால், காசி விஸ்வநாதர் மற்றும் கால பைரவர் கோயிலுக்குச் சென்றார். அப்போது நூற்றுகணக்கான பாஜகவினர் திரண்டு கேஜ்ரிவாலை எதிர்த்து “துரோகி” என்று கோஷமிட்டனர்.

விஸ்வநாதர் கோயிலில் இருந்து மக்கள் மத்தியில் நடந்து வந்த கேஜ்ரிவால் மீது அடையாளம் தெரியாத நபர்கள் முட்டைகளையும் மை-யையும் வீசினர். இதனைத் தொடர்ந்து, அங்கு "மோடி... மோடி" என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து எதிர்ப்பு கோஷம் ஒலித்த போதிலும், அங்கிருந்து புன்னகையுடன் வெளியேறினார். இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மியின் உ.பி. பொறுப்பாளர் சஞ்சய் சிங் மற்றும் முன்னாள் டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி ஆகியோருடன் வேனில் இருந்தபடி பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினார்.

அழகிரி திமுகவில் இருந்து நிரந்தர நீக்கம், அன்பழகன் வெளியிட்ட அறிக்கை மற்றும் அதன் பின்னணி



கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கு ஒழுங்கு நடவடிக்கையாக திமுகவில் இருந்து மு.க.அழகிரியை நிரந்தரமாக நீக்குவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

"தி.மு.க. தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததனால், கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், கழகத்தலைமையையும் - கழக முன்னோடிகளையும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்து வருவதாலும், கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும்தி.மு.கழகத்திலிருந்து அறவே நீக்கி வைக்கப்படுகிறார்."

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க. அழகிரி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட பின் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சமீபத்தில் சந்தித்தார். கடந்த இரண்டு தினங்களாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக சிவகங்கை தொகுதி வேட்பாளர் ஹெச்.ராஜா ஆகியோர் அழகிரியை நேரில் சென்று சந்தித்தனர். இது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்பு வெளியானதாக கூறப்படுகிறது.

சிற்றுந்துகளில் இலை சின்னங்களை மறைக்க இன்றுமுதல் நடவடிக்கை


அரசுப் போக்குவரத்துக் கழக சிற்றுந்துகளில் வரையப்பட்டுள்ள இலைகள் அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையைப் போல உள்ளதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டதால் பஸ்களில் உள்ள இலை படங்களை மறைக்க வேண்டும் என்றும் கோரி தேர்தல் ஆணையத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.

இந்த மனு மார்ச் 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறிய பஸ்களில் உள்ள இலை படங்களை மறைக்க உத்தரவிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தச் சூழலில் சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள இலைகளை மறைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் முடிவு சரியானதே என்று தீர்ப்பு கூறியது.

இந்நிலையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், தமிழக அரசின் சிறிய பஸ்களில் உள்ள இலை ஓவியங்களை மறைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜெ. மாதிரி 18 வாய்தாக்கள் வாங்க மாட்டேன், 2ஜி வழக்கில் குற்றமற்றவன் என நிரூபிப்பேன்- ஆ.ராசா


 தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் உதகையில் நேற்று நடை பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நீலகிரி  தொகுதி வேட்பாளர்  மற்றும் 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரன ஆ.ராசா பேசியது:

சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் ஆஜராகாமல்  தமிழக‌ முதல்வர் ஜெயலலிதா இதுவரை 18 முறை வாய்தா வாங்கியுள்ளார். ஆனால் என் மீது போடப்பட்டுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகி வருகிறேன்.

வரும் 4-ம் தேதி டெல்லியில் நடக்கும் விசாரணையில் நேரில் ஆஜராக உள்ளேன். இந்த வழக்கில் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என்றார். 

இந்நிலையில் பாஜக-வில் இருந்து விலகிய மூத்த வழக்கறிஞர் எல்.சந்திரசேகரனுடன் குன்னூர் வட்டார பாஜக நிர்வாகிகள் 50 பேர் ஆ.ராசா முன்னிலையில் திமுக-வில் இணைந்தனர்.

அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை. கை சின்னத்திற்கு ஓட்டு போட்டால், ஒரே கல்லில் இரு மாங்காய்கள் அடிப்பது போலாகும்- சிதம்பரம்


சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், தனது மகனுமான கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து, மானாமதுரை பகுதியில் ப. சிதம்பரம் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்பொழுது அவர் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியிலும் நிறை, குறைகள் இருக்கின்றன. தவறு செய்தவர்கள் இருக்கின்றனர். தனிநபர் செய்யும் தவறை, ஒரு கட்சி செய்த தவறாக எடுத்துக் கொள்ள முடியாது. தவறு செய்தவர்களை காங்கிரஸ் கட்சி தண்டித்துள்ளது.

சில பத்திரிகைகள் அரசியலை விட்டு நான் ஓய்வு பெறுவதாக எழுதுகிறார்கள். அரசியலை விட்டு நான் ஓய்வு பெறவில்லை. எனக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைப் புதுப்பிக்கவேண்டும். புத்துயிர் ஊட்ட வேண்டும். இந்தியாவில் 83 கோடி இளைஞர்கள் உள்ளனர். தேர்தலில் சரிபாதி இளைஞர் களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என காங்கிரஸ் மாநாட்டில் கூறினேன். அதில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்பு அளித்துள்ளனர்.

மாமரத்தில் ஒரு கல்லைப் போட்டு இரண்டு மாங்காய் விழுந்தால் இரட்டிப்பு சந்தோஷம். உங்கள் வாக்கை கைச்சின்னத் தில் போடுங்கள். டெல்லியில் உங்களுக்காக பேசுவதற்கு ஒரு பிரதிநிதியும் (கார்த்தி சிதம்பரம்), தொகுதியில் உங்கள் சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்ள மற்றொரு பிரதிநிதியும் (ப.சிதம்பரம்) கிடைப்பர் என்றார்.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க தமிழக அரசிற்கு அதிகாரம் இல்லை-மத்திய அரசு மனு


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.  இது தொடர்பாக‌ உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு குற்றவாளிகளையும் விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு, அரசமைப்புச் சட்டம் பிரிவு 14, 21-ன் படி தவறானதாகும்.

இந்த வழக்கில் மத்திய அரசின் சட்டங்களின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, அவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 435-ல் மத்திய அரசுடன் ஆலோசிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை, ஒப்புதல் பெற வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இவ்வாறு மத்திய அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட விசாரணை நாளை நடைபெறவுள்ளது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media