BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 25 February 2014

இசையமைப்பாளர் ரஹ்மானை 'ஜீனீயஸ்' என்று புகழும் மத்திய அமைச்சர் கபில் சிபல்


மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் கபில் சிபல் அரசியல்வாதி மட்டும் அல்ல, ஒரு கவிஞரும் கூட‌. இவர் எழுதிய கவிதைகள் இப்போது பாடல்களாக வடிவம் பெற்றுள்ளன.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ள ரானாக் என்ற ஆல்பத்தில் கபில் சிபலின் கவிதை வரிகள் இடம் பெற்றுள்ளன. இது பற்றி கபில் சிபல் கூறுகையில், "எனது கவிதைகளை இசையாக மாற்றுவதற்கு ரஹ்மானை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், அவரது தனிப்பட்ட பணி நேர்த்தி மற்றும் வேறுபட்ட மெல்லிசைகளை படைப்பதில் உள்ள அவரது விருப்பம் ஆகியவையே ஆகும். ரஹ்மான் ஒரு ஜீனியஸ். அவரது இசையில் எனது வார்த்தைகள் அதனுடைய ஆத்மாவை கண்டுள்ளன." என்றும், மேலும் ரஹ்மானை பற்றி பேசிய அவர்,  "ரஹ்மானின் படைப்புகள் புதிதாகவும் பாலிவுட் பாணியிலிருந்து மாறுபட்ட உணர்வையும் கொண்டவை. அவரது குரல் மற்றும் அதன் தன்மை ஆகியவை ஒழுங்கான வடிவத்தை கொண்டுள்ளது. " என்று இசைப்புயலை புகழ்ந்து தள்ளி இருக்கிறார் அமைச்சர்.

"உன் பொன்னு எவன் கூடனா ஓடி போயிருப்பா.. " என்று புகார் கொடுத்த உமா மகேஸ்வரி தந்தையிடம் கூறிய போலீஸார், என் மகளுக்கு ஏற்பட்ட கதி யாருக்கும் வர கூடாது என புலம்பும் தந்தை பாலசுப்ரமணியம்



சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் குடும்பத்தோடு வசித்தும் வரும் பாலசுப்ரமணியம் என்பவரின் மகள் உமா மகேஸ்வரி சென்னையில் தங்கி, சிறுசேரியில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சிப்காட் வளாகத்தில் இருக்கும் புதரின் உள்ளே அழுகிய  பிணமாகக் அவர் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து பாலசுப்ரமணியம் கூறுகையில், என் மகளுக்கு ஏற்பட்டது போன்று வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. எங்கள் மகளைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போது, போலீசார் உங்கள் மகள் காதல் விவகாரத்தில் எங்காவது ஓடியிருப்பார், பொறுமையாக இருங்கள் கண்டுபிடிக்கலாம் என்று மெத்தனமாக பதில் அளித்தனர். சிப்காட் வளாகத்தை சுற்றி நன்கு சோதனை செய்யுமாறு எனது உறவினர்கள் வலியுறுத்தினார்கள். அதன்பேரில் சோதனை நடத்தியபோது தான் என் மகள் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உமாவை அருப்புக்கோட்டையில் இருக்கும் எனது உறவினரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இப்பொழுது இறுதிச் சடங்கையாவது அருப்புக்கோட்டையில் செய்யலாம் என்று தான் என் மகளின் உடலை அங்கு கொண்டு சென்று தகனம் செய்தோம். குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

டிசிஎஸ் பெண் ஊழியர் கொலையில் 4 வட மாநில கட்டுமானத் தொழிலாளர்கள் கைது




சிறுசேரி சிப்காட் வளாகத்தில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில்,  இன்று நான்கு பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மேற்கு வங்கம் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர். இந்த நான்கு பேரும் கொல்லப்பட்ட உமா மகேஸ்வரியின் செல்போனை பயன்படுத்தியபோது சிக்கியுள்ளனர்.

சி.பி.சி.ஐ.டி  அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சிறுசேரியில் முகாமிட்டு கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். அப்போது சிகரெட் துண்டுகள் ,மதுபாட்டில்கள் மற்றும் தலை முடிகளும் சிதறிக் கிடந்தன. இவற்றை சேகரித்து தடயவியல் சோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். உமா மகேஸ்வரி தனது அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு நடந்து செல்லும் ஒரே ஒரு வீடியோ காட்சியை தவிர வேறு எந்த ஆரம்ப கட்ட தடயங்களும் போலீசிடம் சிக்கவில்லை.

காங்கிரஸ்-திமுக செய்த துரோகங்களை பட்டியலிட்ட ஜெயலலிதா


நாடாளுமன்ற தேர்தலையொட்டி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தமிழகத்திற்கு செய்த துரோகங்களை கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டு இருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

கச்சத்தீவை மீட்பதற்காக ஜெயலலிதா அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தமிழகத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்தது

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் 2 லட்சம் கோடி ரூபாயை கொள்ளை அடித்தது

2007ல் வழங்கப்பட்ட காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடாமல் திட்டமிட்டே காலம் தாழ்த்தியது

ஜெயலலிதா மேற்கொண்ட பகீரத முயற்சிகளால் காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை 19.2.2013ல் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரும், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்காமல் கர்நாடகத்திற்கு சாதகமாக நடந்து கொண்டு இருப்பது

மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் வகுப்புவாரி வன்முறை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற முயல்வது

மாநிலத்தின் நிதி ஆதாரங்களைக் குறைக்கும் வகையிலான பொருட்கள் மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்த முனைவது

தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கடைபிடித்து விலைவாசி உயர வழிவகுத்தது

விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலைகளை பலமுறை உயர்த்தியது

மாநிலத்தின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்படும்போதெல்லாம் அதற்கு திமுக உறுதுணையாக இருந்தது

சமூக நீதிக்கு கேடு விளைவிக்கும் வகையில் மருத்துவப்படிப்பில் பொது நுழைவுத் தேர்வை நுழைக்க நடவடிக்கை எடுக்க முனைவது

தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பில் இருந்து வழங்க மறுப்பது

ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் அதிக சேனல்களை கண்டு களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு DAS அனுமதி வழங்க மறுப்பது

தமிழகத்திற்குரிய மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டே வருவது

இலங்கை தமிழர்களை அழிப்பதற்காக இலங்கை நாட்டு ராணுவத்திற்கு பயிற்சியையும், ஆயுதங்களையும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கியபோது திமுக அதை தட்டிக் கேட்காமல் மவுனம் சாதித்தது

இலங்கை இனப் போரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், அங்குள்ள இலங்கை தமிழர்களை கொத்து கொத்தாக இலங்கை ராணுவம் கொன்று குவிக்க உறுதுணையாக இருந்தது

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்ற மக்கள் விரோத மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் கொள்கைக்கு திமுக ஆதரவு அளித்தது

மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின் குறை மாநிலமாக மாற்றி தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்தது

இத்தகைய துரோகங்களை தமிழக மக்களுக்கு திமுக-காங்கிரஸ் இழைத்திருப்பதாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.
 

பரமக்குடி கலவரத்தில் கணவனை இழந்த‌ மனைவியை வாழ்க்கைத் துணையாக்கிய ராஜேந்திரன்


‘‘ஆண்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், ஒரு பெண் கண வனை இழந்தாலோ, பிரிந்து வாழ்ந்தாலோ இன்னொரு திருமணம் செய்துகொள்ள இந்த ஆணாதிக்க சமுதாயம் அவ்வளவு எளிதில் விடுவதில்லை. இந்த நிலையை மாற்றவேண்டும். கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் சிந்தனை." என்று கூறும் ராஜேந்திரன், இமானுவேல் சேகரன் பேரவையின் பரமக்குடி ஒன்றியச் செயலாளர் ஆவார். இவர் தன் சிந்தனைக்கு ஏற்றார்போல், கணவனை இழந்து நின்ற பெண்ணை மணம் முடித்துள்ளார்.

பரமக்குடியில் 2011ல் நடந்த இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் நடந்த கலவரத்தின்போது நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 பேரில் ஒருவர், ஜெயபால். அவர் இறந்தபோது, அவரின் மனைவி காயத்ரி நிறைமாத கர்ப்பிணி, அடுத்த 18-வது நாள் ஆண் குழந்தைக்கு தாயானார். இந்த நிலையில்தான் காயத்ரியை மறுமணம் செய்துகொள்ள முன்வந்திருக்கிறார், ராஜேந்திரன். அவர் விருப்பத்தை காயத்ரியிடம் எடுத்துச் சொல்லி சம்மதம் பெற்ற இமானுவேல் சேகரன் பேரவையினர் இருவருக்கும் கடந்த 16-ம் தேதி பரமக்குடியில் திருமணம் செய்துவைத்துள்ளனர்.

இமானுவேல் சேகரன் நினைவு தினத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது தோழர் ஜெயபால் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானார். அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. அந்த பாதிப்புதான் அவரது துணைவியாருக்கு மறுவாழ்வு கொடுக்கும்படி என்னை உந்தியது’’ என்கிறார் ராஜேந்திரன்.

சென்னை மக்களுக்கோர் நற்செய்தி: 65 இடங்களில் சில்லறை மெஷின்கள்


சென்னையில் முக்கிய பகுதிகளான அண்ணா சாலை, கிண்டி, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் 65 வங்கிகளில் சில்லறை மெஷின்கள் வைக்கப்பட்டுள்ளன. 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை செலுத்தி 1, 2, 5 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்ளலாம்.  சில்லறை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாடு முழுவதும் ‘காயின் வெண்டிங் மெஷின்களை’ ரிசர்வ் வங்கி அமைத்து வருகிறது. சென்னையில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்பட அரசு மற்றும் தனியார் வங்கிகளில் சில்லறை மெஷின் வைக்கப்பட்டுள்ளன.

ரூ.1, ரூ.2, ரூ.5 நாணயங்கள் வெளியேற இந்த மெஷினில் 3 துவாரங்கள் இருக்கின்றன. 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை உள்ளே செலுத்தினால் அந்த துவாரங்கள் வழியாக சில்லறைகளை பெற்றுக்கொள்ளலாம். இது பயனுள்ள வகையில் இருப்பதாக பொதுமக்கள் பலரும் கூறுகின்றனர்.

தாயை அடித்து முன்பல்லை உடைத்தவருக்கு பொதுமக்கள் முன்பு 2400 கசையடிகள், 5 ஆண்டுகள் சிறை, அவருக்கும் பல் உடைக்கப்படும் என தீர்ப்பளித்த நீதிமன்றம்

சவூதி அரேபியாவைச் சேர்ந்த 30களில் இருக்கும் நபர் ஒருவர் தனது தாயுடன் காரில் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட விவாதத்தில், ஆத்திரம் அடைந்த அந்த நபர் தனது தாயை அடித்துள்ளார். இதனால் தாயின் முன் பல் உடைந்துவிட்டது. இதையடுத்து தன்னை மகனிடம் இருந்து காப்பாற்றுமாறு அந்த தாய் சோதனைச்சாவடியில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். தாயை தாக்கிய மகனை போலீசில் ஒப்படைத்து,  மெக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தினர். தனது தாயை அடித்து பல்லை உடைத்ததை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறை, 2,400 கசையடி, ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒரு முறை பொதுமக்கள் முன்பு அவருக்கு 40 கசையடிகள் கொடுக்கப்படும், அவரது பல் ஒன்றும் உடைத்து எடுக்கப்படும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் காவலர் தற்கொலை எண்ணிக்கையில் முதல் இடம் வகிக்கிற மாநிலம், தமிழ்நாடு



இந்தியாவில் காவலர் தற்கொலை எண்ணிக்கையில் முதல் இடம் வகிக்கிற மாநிலம், தமிழ்நாடு. 2012ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 58 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

படபடப்பு, புலம்பல், சந்தேகம், குழப்பம், தெளிவின்மை என எதிர்மறை உணர்ச்சிகளில் அவர்கள் அதிக நேரம் செலவிடுவதும், குடும்பத்துடன் நேரம் செலவிடவும் அன்பு செலுத்தவும் பணிச்சூழல் இடமளிக்கவில்லை என்பதாலும் ஏற்படும் மன அழுத்தமே அவர்களை தற்கொலைக்கு தூண்டும் காரணங்கள் என மனநல நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்கொலை செய்துகொள்ளும் காவலர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். மன உளைச்சலுக்கு ஆளாவதில் ஆண்களை விட, பெண் காவலர்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும் பெண்கள் அவற்றை எளிதில் கடந்து விடுகின்றனர், ஒருசிலர்தான் தற்கொலை வரை செல்கின்றனர் என கூறப்படுகிறது.

காவலர்களுக்கு தங்கள் உரிமைகளைக் கேட்க அமைப்பு கிடையாது. காவலர்களின் பிரச்னையை மேலோட்டமாகப் பார்க்காமல், அவர்களின் தேவைகள் என்ன, அவற்றை நிறைவேற்றுவது எப்படி என ஆக்கப் பூர்வமாக செயல்பட வேண்டியது அரசின் கடமை. தமிழக அரசு, காவல்துறையினரின் மனநலத்தைக் காக்க கூடுதலாக அக்கறை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media