BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 16 March 2014

"ஓட்டு போடுங்கள், பணம் வாங்காமல் போடுங்கள்" என தேர்தல் ஆணையம் தயாரித்த குறும்படத்தில் கூறும் கமல்


பணம் வாங்கி கொண்டு பொது மக்கள் ஓட்டு போடும் வழக்கத்தை பாராளுமன்ற தேர்தலில் முறியடிக்க இந்திய தேர்தல் ஆணையம் பெரும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, குறும்படம் ஒன்றையும் தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது.

இதில் நடிகர் கமல்ஹாசன் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளார். இதற்கான வீடியோ சி.டி. நேற்று வெளியிடப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இதனை வெளியிட்டார். 25 வினாடிகள் ஓடக்கூடிய இந்த சி.டி.யில், நடிகர் கமலஹாசன் பேசியிருப்பதாவது:

நாட்டுக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளில் மிகவும் முக்கியமானது வாக்களிப்பதாகும். வேட்பாளர்களின் தகுதிகளை உணர்ந்து சுயசிந்தனையுடன் ஓட்டுப்போடுவதே வாக்களிப்பதாகும். இந்த வேட்பாளர் எத்தனை பணம் கொடுத்தார். அந்த வேட்பாளர் எத்தனை பணம் கொடுத்தார் என எண்ணி வாக்களிக்காதீர்கள்.

நாம் நமது எதிர்காலத்தை எந்த வேட்பாளரின் கையில் ஒப்படைக்கப்போகிறோம் என சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஒரு சிறிய தொகைக்காக தன்மானத்தையும், எதிர்காலத்தையும் விற்றுவிடாதீர்கள். ஜனநாயகம் தழைக்க சிந்தித்து மனசாட்சிப்படி வாக்களிப்போம். எந்த சூழ்நிலையிலும் வாக்கினை விற்கமாட்டோம் என்று உறுதி ஏற்போம்.

இவ்வாறு நடிகர் கமலஹாசன் குறும்படத்தில் பேசியுள்ளார்.

மோடி அலை வீசவில்லை, ஆம் ஆத்மி அலையே வீசுகிறது, மோடியை எதிர்த்து வாரனாசியில் போட்டியிட விருப்பம்-கெஜ்ரிவால்



இன்று பெங்களூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், நரேந்திர மோடியை எதிர்த்து வாரனாசி தொகுதியில் தேர்தலில் போட்டியிட விருப்பம் என்றும், நாட்டில் மோடி அலை வீசவில்லை என்றும், ஆம் ஆத்மி அலையே வீசுகிறது என்றும் கூறினார். இம்மாதம் 23ம் தேதி, இன்னொரு பொதுக்கூட்டம் நடத்தி விட்டு, மக்களின் ஆதரவு அளவை தெரிந்து கொண்டு, தேர்தலில் போட்டியிடுவது பற்றி இறுதியாக முடிவு செய்வதாக கூறினார்.

மேலும் பேசிய அவர், குஜராத் மாநிலம் வளர்ச்சி அடைந்து விட்டது என ஊடகங்கள் கூறுவதில் உண்மையே இல்லை என்றும், அம்மாநிலத்தை நேரில் சென்று தான் கண்ட போது அதிர்ச்சி அடைந்ததாகவும் கெஜ்ரிவால் கூறினார். மோடி ஆட்சியில், கடந்த 10 ஆண்டுகளில், 60,000 சிறுதொழில் நிர்வாகங்கள் மூடப்பட்டிருக்கிறது என்றும், 800 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

முகேஷ் அம்பானியின் ஒரு பாக்கெட்டில் ராகுல் காந்தியும், மற்றொரு பாக்கெட்டில் மோடியும் இருப்பதாக கூறிய கெஜ்ரிவால், ஆங்கிலேயர்கள் 200 வருடங்கள் இந்தியாவில் கொள்ளை அடித்ததை விட, மன்மோகன் சிங், சோனியா மற்றும் ராகுல் தலைமையில் காங்கிரஸ் 10 வருடங்களில் கொள்ளை அடித்தது அதிகம் என்றும் குற்றஞ்சாட்டினார்.

2009ல் அடைந்த வெற்றியை விட இந்த தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றியை பெறும்- ராகுல் காந்தி


ராகுல் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சி தோல்வியடையப்போகும் கட்சியல்ல என்றும் 2009 தேர்தலில் பெற்ற வெற்றியை விட அதிக தொகுதிகளில் தங்கள் கட்சி வெற்றி பெறும் என்றார்.

மூன்றாவது முறையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி கண்டிப்பாக அமையும் என்ற அவர், 10 வருடங்களாக ஆட்சி நடத்துவதால் மக்களுக்கு தங்கள் மீது சிறிய அளவிலான அதிருப்தி நிலவுவதாக ஒப்புக்கொண்டார். நிதியமைச்சர் ப. சிதம்பரம் தங்கள் கட்சி தோல்வி அடையப்போகும் கட்சி என ஒத்துக்கொண்டதை அவர் மறுத்தார்.

கடுமையான போட்டியை சந்திக்கும் தங்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என கூறிய அவர், எவ்வளவு தொகுதிகளில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தான் குறி சொல்பவனல்ல என்று தெரிவித்தார்.

 பல நல்ல திட்டங்களை தாங்கள் செய்தபோதும், அது பற்றி மக்களிடம் எடுத்து கூறும் முயற்சியை செய்யமால் தவறவிட்டதாக அவர் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.

அழகிரி ஆதரவுடன் காங்கிரஸ் வெற்றிபெறும், மதுரை காங்கிரஸ் உறுதி

மு.க.அழகிரி ஆதரவுடன் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெறும் என்று மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜ‌ய்பிரபாகர் தெரிவித்துள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதுவே தொண்டர்களின் கோரிக்கையாக இருந்தது. இதுவரை 40 தொகுதிகளுக்கு 1200 பேர் விருப்ப மனு தாக்கல் செய்து உள்ளனர். இந்த முறை 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் காங்கிரசின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி எம்.பி.யை ஆரூண் எம்.பி. சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு மு.க.அழகிரி ஆதரவாக இருக்கிறார். அவரது ஆதரவுடன் காங்கிரஸ் வெற்றிபெறும்.

மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகள் இந்த முறை போட்டியிட வில்லை என்ற தகவல் தவறானது. அவர்கள் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய இருப்பதால் இளைஞர்களுக்கு வழிவிட்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இவ்வாறு அவர் கூறினார்.

தர்மபுரியில் ராமதாஸ், விஜயகாந்த் தனித்தனியாக பிரச்சாரம்


இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி தொகுதிகளில் நரேந்திர மோடியை ஆதரித்து பிரச்சாரம் செய்யவிருக்கிறார். இன்று மாலை 3 மணிக்கு கிருஷ்ணகிரி கார்னேசன் திடலில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பேசி முடித்த பின்பு,  தர்மபுரியில், சந்தைப்பேட்டை சாலையில் மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகிறார்.

பாரதிய ஜனதா கூட்டணியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி தொகுதிகள் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் என்றாலும் பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் ஓட்டு கேட்பாரா என்று இன்று தெரியவரும்.

இந்த நிலையில் தர்மபுரியில் இன்று மாலை டாக்டர் ராமதாஸும் தனியாக பிரச்சாரம் செய்கிறார். தர்மபுரி தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தர்மபுரி பேருந்து நிலையத்தை அடுத்த டெலிபோன் நிலையம் அருகே நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகிறார்.  மேடையில் டாக்டர் ராமதாஸ் படம் மட்டும் வைக்கப்பட்டு உள்ளது மற்றும் கூட்டம் நடை பெறும் இடம் அருகே பா.ம.க. கட்சி கொடிகள் மட்டும் கட்டப்பட்டு உள்ளது, கூட்டணி கட்சிகளின் கொடிகள் எதுவும் கட்டப்படவில்லை.

காங்கிரஸை விமர்ச்சிக்கும் ஜெ. ஏன் பாஜகவை விமர்சிப்பதில்லை?, அதிமுக-பாஜக இடையே மறைமுக தொடர்பு

நெல்லையில் தி.மு.க. வேட்பாளர் தேவதாச சுந்தரத்தை ஆதரித்து திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின், இறுதியாக பாளை மார்க்கெட் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நெல்லையில் இருந்து சென்னைக்கு நான்கு வழிச்சாலை அமைத்து பயண நேரத்தை பாதியாக குறைத்துள்ளோம். இது ஜெயலலிதாவுக்கு தெரியாது. ஏனென்றால், அவர் சாலையில் செல்லாமல் ஆகாயத்தில் வந்து ஆகாயத்திலேயே செல்கிறார்.

சேது சமுத்திர திட்டத்தால் தமிழகத்திற்கு மட்டும் இன்றி இந்தியாவே வளம்பெரும். 40 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. ஜெயலலிதா தடைபெற்றதால் அந்த பணிகள் முடியாமல் உள்ளது.

காங்கிரசையும் தி.மு.க.வையும் விமர்சனம் செய்யும் ஜெயலலிதா, ஏன் பாரதிய ஜனதாவை விமர்சித்து பேசவில்லை. அத்வானி குறித்து ஏன் பேசவில்லை. அ.தி.மு.க.வுக்கும் பி.ஜே.பி.க்கும் மறைமுக தொடர்பு உள்ளது.

கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் ஜெயலலிதா இந்த பகுதிக்கு என்ன செய்தார்? ஏற்கனவே தி.மு.க.வில் தொடங்கப்பட்ட திட்டங்களை முடக்கி வைத்துள்ளார். தி.மு.க. ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எந்த திட்டமும் வழங்கவில்லை என்கிறார். இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்றார். ஆனால் தி.மு.க. 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது.

பா.ஜ.க. மதவாத கட்சி அல்ல, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கரசேவையை ஆதரித்து பேசியவர் ஜெயலலிதா. ஆனால் தி.மு.க. சிறுபான்மையினருக்கு ரூ.47 கோடி கடன், 4 லட்சத்து 24 ஆயிரத்து 867 மாணவர்களுக்கு ரூ.321 கோடியே 27 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. போப் ஆண்டவர் கூறிய கருத்தை எதிர்த்தார். இப்போது 3 ஆண்டு காலம் வீடியோவில் தான் ஆட்சி நடக்கிறது. தமிழகம் பொருளாதாரத்தில் மற்ற மாநிலங்களை விட மிகவும் பின்தங்கி விட்டதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஆட்சிக்கு பாடம் புகட்ட நாடாளுமன்ற தேர்தலில் தேவதாச சுந்தரத்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் கூறியிருந்தார்.

மத்திய மந்திரி மணீஷ்திவாரி மருத்துவமனையில் அனுமதி


மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி மணிஷ்திவாரி நேற்று தெற்கு டெல்லியில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 48 வயதான‌அவர் இருதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மணீஷ்திவிவாரி கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான கழக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

பஞ்சாப் மாநிலம் லூதியானா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மணீஷ்திவாரி மீது சமீபத்தில் கூறப்பட்ட புகார்கள் காரணமாக அவரது தொகுதியை மாற்றும் முடிவை கட்சி தலைமை எடுத்த வருவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

100 சீட்கள் மட்டுமே காங்கிரஸ் பெறும் என்று கூறுவது 'ஜோக்', தேர்தலில் காங்கிரஸ் 200 சீட்களுக்கு மேல் பெறும்-ராகுல்


நேற்று கூகுல் ஹேங்க் அவுட் மூலம், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், ஒடிசா, மஹாராஷ்ட்ரா, பஞ்சாப்  என ஏழு மாநிலங்களில் உள்ள கட்சி தொண்டர்களிடம் உரையாடிய ராகுல் காந்தி பேசியதாவது:

100 சீட்களை மட்டுமே காங்கிரஸ் பெறும் என்று பல கருத்துக்கணிப்புகள் முடிவுகளை வெளியிட்டு வருவது நகைச்சுவையானவை. வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும், நரேந்திரமோடி மற்றும் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவது என்ற கேள்விக்கு இடமே இல்லை.

உங்களை நம்பிக்கையிழக்க செய்வதற்காகவே எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன. நீங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருந்தால் நாம் அவர்களை நொறுக்கி விடலாம். உங்கள் மனதில் சந்தேகம் இல்லாமல் இருந்தால் நாம் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம்.

இதேபோல கடந்த 2004 தேர்தலிலும் நாங்கள் தோல்வியடைவோம் என்று பல கருத்துக்கணிப்புகள் முடிவுகளை வெளியிட்டது. ஆனால் காங்கரஸ் வெற்றி பெற்றது. 2009 தேர்தலிலும் அப்படித்தான் கூறின. ஆனால் அதைவிட இரண்டு மடங்கு வெற்றியை பெற்றோம்.

இப்போது மூன்றாவது தேர்தலை எதிர்நோக்குகிறோம். காங்கிரஸ் சரியாக செயல்படவில்லை என்று அவர்கள் எப்போதும்  கூறிக்கொண்டேதான் இருப்பார்கள். நாம் கருத்துக்கணிப்புகளை சட்டம் என கருதிவிடக் கூடாது. வலுவான தேர்தலுக்காக போராட வேண்டும்.

நீங்கள் எதிர்கட்சியை பார்த்தால் தெரியும், ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு மனிதரால் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். இதை அவர்களுடைய மூத்த தலைவர்களே சொல்கிறார்கள். அவர்கள் ஒரு பக்கமாக சென்று கொண்டிருக்கிறார்கள். நாம் அதற்கு முற்றிலும் மாறான மற்றொரு திசையில் சென்று கொண்டிருக்கிறோம்.”

இவ்வாறு ராகுல் காந்தி தனது உரையாடலின் போது காங்கிரஸ் தொண்டர்களிடம் கூறினார்.

மோடி வாரணாசியில் போட்டியிடுகிறார், மேலும் பல முக்கிய தலைவர்கள் போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு

மோடி வாரணாசியில் போட்டியிடுகிறார், மேலும் பல முக்கிய தலைவர்கள் போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media