BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 5 November 2014

உணவே மருந்து : வேர்கடலையின் மகிமை

வேர்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்து தான். இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்து வருகின்றது. ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை என்றே தெரிகிறது. காரணம் வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்ற படியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும். ஏனெனில் இதிலுள்ள சர்க்கரையின் அளவு இரத்தத்தில் மிக மிக குறைந்த அளவே சேருவதால் பயமில்லாமல் சாப்பிடலாம். மேலும் இதில் இருக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருள் இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆகவே இவர்கள் அன்றாட உணவில் தைரியமாக வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம்.

வேர்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது. மாறாக ரத்த கொதிப்பு குறையும். வேர்கடலையில் நைட்ரிக் அமிலம் என்ற வேதிப் பொருள் உள்ளது. இவை வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் இதில் காணப்படும் ஆன்ட்டி ஆக்ஸடென்ட்ஸ் போன்ற உயிர் வேதிப் பொருட்கள் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாக்காமல் தடுக்கிறது. வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் வேர்கடலை சாப்பிட்டால் மலசிக்கல் ஏற்படாது. ஆகவே கர்ப்பிணிகள் கூட வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது.
வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் தான் நிறையச் சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்கலாம். 

பொதுவாக உடல எடையை குறைப்பவர்கள் நொறுக்கு தீணிக்கு பதிலாக வேர்க்கடலையை சாப்பிடலாம், ஏனெனில் இவை சாப்பிட்ட திருப்தி விரைவிலேயே கிடைப்பதால் மேலும் மேலும் எதையாவது சாப்பிட்டு உடல் எடையை கூட்டும் நிலை வராது. ஆனாலும் இதில் உடல் எடையைக் கூட்டும் புரத சத்து அதிகமிருப்பதால் அளவோடு சாப்பிடவது தான் இவர்களுக்கு நல்லது. இதிலுள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் முதுமையில் ஏற்படும் ஆஸடியொபோராசிஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோயையும் தடுக்க உதவுகிறது.

ஏ.டி.எம். மையத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள்


சேலம் மாவட்டம், ஆத்தூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தபோது கள்ள ரூபாய் நோட்டுகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்தூர் விநாயகபுரத்தில் உள்ள வங்கியின் ஏடிஎம் மையத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர் கிருஷ்ணன் என்பவர் பணம் எடுத்தார். அதில் 3 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கள்ள நோட்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல முருகேசன் என்பவர் பணம் எடுத்தபோதும் ரூ. 3 ஆயிரம் மதிப்பில் கள்ள நோட்டுகள் வந்தது. இதைத் தொடர்ந்து, 5 பேர் பணம் எடுத்தனர். அவர்களுக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள் கிடைத்தன. இதனால், அந்த ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கியில் கள்ள ரூபாய் நோட்டுகளை அளிக்கப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மறைமுகப் போர்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் "பென்டகன்' அறிக்கை

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் மூலம் மறைமுகப் போரில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத் தலைமையகம் (பென்டகன்), அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தனது அறிக்கைகளை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பென்டகன் தாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், கடந்த ஆறு மாத காலத்துக்கான 100 பக்கங்கள் கொண்ட அறிக்கையை, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பென்டகன் தாக்கல் செய்துள்ளது. அதில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாத அமைப்புகள் செயல்படுவது தொடர்பான பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: ஆப்கானிஸ்தானில் அமைதியைச் சீர்குலைப்பதற்கும், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு கேடு விளைவிக்கும் நோக்கிலும் ஆப்கானிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படுகின்றன.

ஆப்கானிஸ்தானில் தான் இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெறுவதற்காகவும், இந்தியாவின் ராணுவ வல்லமைக்கு நேரடியாக ஈடுகொடுக்க முடியாததாலும் பயங்கரவாதிகள் மூலம் இந்த மறைமுகப் போரினை பாகிஸ்தான் தொடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானின் மறுசீரமைப்புக்கு உதவுவோம் என்ற உறுதிமொழிக்கு முரணாக, பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தான் உறவு வைத்துள்ளது. ஆப்கன்-பாகிஸ்தான் உறவில் இந்தப் பயங்கரவாத அமைப்புகள் நெருடலை ஏற்படுத்தி வருகின்றன. மோடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்க தாக்குதல்: கடந்த மே மாதத்தில் இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க சில நாள்களே இருந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஹிந்து தேசியவாத அமைப்பைச் சார்ந்தவர் என மோடி அறியப்படும் காரணத்தாலேயே, அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தத் தாக்குதலை பயங்கரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பே காரணம் என அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த ஜூன் மாதமே தெரிவித்தது.

ஆப்கனுக்கு இந்தியா உதவி: பல்வேறு இடர்பாடுகளுக்கும் மத்தியில், ஆப்கானிஸ்தானின் மறுசீரமைப்புக்கு இந்தியா தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் பாதுகாப்பும், ஸ்திரத்தன்மையும் உறுதிப்படுத்தப்படுவதே, அது சார்ந்த பிராந்தியத்துக்கும், மத்திய ஆசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் நன்மை பயக்கும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஆப்கானிஸ்தானில் சாலை மேம்பாடு, மின்சார உற்பத்தி, சுரங்கப் பணிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகளுக்கு இந்தியா சிறந்த பங்களிப்பை நல்கி வருகிறது.மேலும், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்குத் தேவையான உதவிகளையும், அந்நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு தனது நாட்டில் சில பயிற்சிகளையும் இந்தியா அளித்து வருகிறது.அதேசமயத்தில், ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு நேரடியாக எவ்வித உதவியையும், பயிற்சியையும் இந்தியா வழங்கவில்லை என பென்டகன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"இந்தியாவின் கூற்று நிரூபணம்': பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது என்ற தனது நிலைப்பாட்டை பென்டன் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது என இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் செய்தியாளர்களிடம் செவ்வாய்கிழமை கூறியதாவது: அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகமான பென்டகன், தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளைக் கொண்டு பாகிஸ்தான் மறைமுகப் போரை தொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து கூறி வந்துள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை பென்டகன் அறிக்கை உறுதிப்படுத்திவிட்டது என அவர் தெரிவித்தார்.

எல்லைப் பிரச்னையைத் தீர்க்க அவகாசம் தேவை: சீனத் தூதர்

"இந்திய-சீன எல்லைப் பிரச்னையைத் தீர்க்க போதிய அவகாசம் தேவை' என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் லீ யுசெங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வரும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் ரூ. 1.23 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய சீன அரசு திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒத்துழைப்பு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். சீனாவில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்தியாவுக்கு 24 மணி நேரம் மின்சாரமும் கிடைக்க வாய்ப்புள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்ல புதிதாக அமைக்கப்பட்ட பாதையைத் திறக்க அண்மையில் சீனா ஒப்புதல் அளித்திருப்பதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் இப்பாதை செயல்படத் தொடங்கும் என்று லீ யுசெங் தெரிவித்தார்.

இலங்கைச் சிறையில் தமிழக மீனவர்களுடன் இந்தியத் தூதர் சந்திப்பு

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களை அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் யஷ் சின்ஹா செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். மீனவர்களை விரைவில் இந்தியாவுக்கு மீட்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதுகுறித்து, தில்லியில் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரை, சிறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்தியத் தூதர் யஷ் சின்ஹா, செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அவர்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான உடைகள் உள்ளிட்ட பொருள்களை தூதர் வழங்கினார். தங்களை நேரில் சந்தித்துப் பேசியதால் மகிழ்ச்சியடைந்த மீனவர்கள், யஷ் சின்ஹாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த வழக்கில் மீனவர்களுக்கு இந்திய அரசு ஆதரவு அளிக்கும் என்றும், அவர்களை விரைவில் விடுவித்து, இந்தியாவுக்கு அழைத்து வர அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுக்கும் என்றும் யஷ் சின்ஹா உறுதியளித்தார். அப்போது, தமிழகத்தில் உள்ள உறவினர்களிடம் தொலைபேசி மூலம் பேசுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இன்னும் ஓரிரு நாள்களில், அவர்கள் தொலைபேசி மூலம் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று சிறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

மேலும், தங்கள் உறவினர்களுக்குக் கடிதம் அனுப்பவும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று சையது அக்பருதீன் தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தியதாக கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன் கே.பிரசாத், ஜே.லாங்லட் ஆகியோருக்கு கொழும்பு நீதிமன்றம் கடந்த 30ஆம் தேதி மரண தண்டனை விதித்தது. இந்த விவகாரம், இந்திய-இலங்கை உறவில் நெருடலை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மீனவர்களை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media