BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 6 April 2014

தெனாலிராமன் பட சர்ச்சை, வடிவேலு வீடு முற்றுகை:120 பேர் கைது

வடிவேலு இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘தெனாலிராமன்’ திரைப்படம் ஏப்ரல் 18 ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், ‘தெனாலிராமன்’ படத்தில் மன்னர் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தியிருப்பதாக கூறி சனிக்கிழமை காலை வடிவேலு வீட்டிற்கு அருகே தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை அமைப்பைச் சேர்ந்த 120 பேர் முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து விருகம்பாக்கம் போலீஸார் அவர்களை கைது செய்து சென்னை, ஆர்காடு சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவைத் தலைவர் ஆர்.பாலகுருசாமி கூறுகையில், “படத்தை எங்களுக்கு திரையிட்டு காட்டி, அதில் தவறாகவும், காமெடியாகவும் காட்டப் பட்டிருக்கும் காட்சிகளை நீக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அடுத்தகட்டமாக திங்கள்கிழமை இந்தப் படத்திற்கு தடை கேட்டு நீதிமன்றத்தை நாட உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ரசிகருக்கு இறுதிப் போட்டிக்கான டிக்கெட் வாங்கித் தந்த தோனி!

டி20 உலகக் கோப்பை வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி இன்று இரவு நடக்கிறது. இந்தத் தொடரில் பாகிஸ்தானின் ஆட்டத்தைக் காண, அந்த அணியின் ரசிகர் முகமது பஷீர் சிகாகோவில் இருந்து வந்திருந்தார். தனது தேச அணி அரையிறுதிக்கு முன்னரே வெளியேறினாலும், இந்தியாவின் ஆட்டத்தைக் காண ஊருக்குத் திரும்பாமல் இருந்தார். சமீபத்தில் இந்திய அணி பயிற்சி மேற்கொண்டபோது வேடிக்கை பார்க்க சென்ற இவரை தோனி சந்தித்தார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தைக் காண பஷீர் வந்திருந்ததால், தோனி அவரை அடையாளம் கண்டுகொண்டு அவரைப் பற்றி விசாரித்துள்ளார். தன்னிடம் இறுதிப் போட்டியைக் காண டிக்கெட் இல்லாததை கூறிய பஷீருக்கு பயிற்சியாளரிடம் கூறி காம்ப்ளிமென்ட்ரி டிக்கெட்டை தோனி ஏற்பாடு செய்துள்ளார். மேலும், பயிற்சி நடக்கும் இடத்தில் பஷீர் நெடு நேரமாக நின்று கொண்டிந்ததால், அங்கிருந்த ஒருவரிடம் கூறி, பஷீருக்கு பழங்களும் வாங்கி கொடுத்து இருக்கிறார், தோனி.

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தீவிர ரசிகராக இருந்தவரான பஷீர், இந்தச் சம்பவத்திற்கு பிறகு தோனியின் தீவிர‌ ரசிகராக தான் மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். 

சொத்து விவரங்களை மறைத்தால் வேட்பாளர்களுக்கு சிறை தண்டனை

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், இந்த தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறைகள் என கூறியதாவது:

வேட்பாளர்கள் தேர்தல் செலவுக் கணக்கை வாக்குப்பதிவு முடிந்த 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரத்தில் தங்கள் சொத்துக்கள் பற்றிய விவரங்களை மறைத்தோ அல்லது தவறான தகவலோ தரக்கூடாது. வேட்பாளர்கள் மீது ஏதேனும் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அதை மறைக்கக்கூடாது. அது மிகப் பெரிய குற்றமாகும். அவ்வாறு செய்தால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வேட்பாளருக்கு சிறை தண்டனை கிடைக்கும்.

மேலும், பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தாக்கப்பட்டது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு ஊறு விளைவிக்கக் கூடியவர்கள் எனக் கருதப்படும் 13,927 பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் தந்துள்ளோம்.அவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 20,737 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வாகனச் சோதனையில் இதுவரை ரூ.16.39 கோடி ரொக்கமும், ரூ.6.87 கோடி மதிப்பிலானபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் அதிகபட்சமாக ரூ.2.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இதுவரை பணம், பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. தேர்தல் நடைமுறைகளில் பிரச்சினை ஏற்பட்டால் வாக்குப்பதிவை நிறுத்த தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உள்ளது.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

அ.தி.மு.க. எக்ஸ்பிரஸ் செங்கோட்டை செல்லும் என்று பிரச்சாரம் செய்கின்றனர், ஆனால் அது பெங்களூரை தாண்டாது:ஸ்டாலின்

நேற்று இரவு திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா எந்த தைரியத்தில் ஓட்டு கேட்க பொதுமக்களிடம் வருகிறார் என கேட்டு, அவரை கடுமையாக சாடி பிரச்சாரம் செய்து இருந்தார்.

பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

"தலைவர் கலைஞர் ஆட்சியில் மேலக் கோட்டையில் சமத்துவபுரம் கட்டப்பட்டது. 700 தொகுப்பு வீடுகள், 18 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது, 4 வழி தேசிய நெடுஞ்சாலை, ரிங் ரோடு என திருமங்கலம் பகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். ஆனால் எதையுமே செய்யாத ஜெயலலிதா அம்மையார் எந்த தைரியத்தில் ஓட்டு கேட்க வருகிறார்?

மன்னாதி மன்னன் படத்தை நான் படிக்கும் போது பள்ளிக்கு செல்லாமல் 8 முறை பார்த்துள்ளேன். அதில் வரும் பாடல் வரிகளை எழுதி படிக்கிறார். நான் பாடவே செய்வேன் என்று அச்சம் என்பது மடமையடா பாடலை பாடினார். அச்சம் என்பதால்தான் வாய்தா மேல் வாய்தா வாங்கி கொண்டிருக்கிறார். எனவே அம்மா ஆட்சி என்பது மடமையடா, நாளை தமிழகம் காப்பது கலைஞரடா என்று மாற்றி பாட வேண்டும்.

இவர் அமைதியாக கொட நாட்டில் ஓய்வு எடுத்து கொண்டுள்ளார்.  3 மாதத்தில் மின்வெட்டை சீராக்குவேன் என்றார் இன்று வரை செய்யமால் மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார். பஸ் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு என பல்வேறு துரோகங்களை செய்து வருகிறார்.

தன்மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவில்லை என்ற காரணத்துக்காக பி.ஜே.பி. கூட்டணியை கவிழ்த்து, ரூ.4 ஆயிரம் கோடி செலவில் மறுதேர்தல் நடத்த காரணமாக இருந்தார். பொய்யை தவிர எதையும் பேசாதவர் ஜெயலலிதா. இந்த அ.தி.மு.க. எக்ஸ்பிரஸ் செங்கோட்டை செல்லும் என்று பிரச்சாரம் செய்கின்றனர். இந்த எக்ஸ்பிரஸ் பெங்களூரை தாண்டாது என்று நான் சொல்கிறேன். இந்த ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும். அப்போது தான் மதச்சார்பற்ற ஆட்சி அமையும். எதையுமே செய்யாத ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடுவீர்களா?" என்று ஸ்டாலின் பேசியிருந்தார்.

மோடி பிரதமராக ரஜினிகாந்த் ஆதரவு தரவேண்டும்: ராம்ஜெத்மலானி

மூத்த வழக்கறிஞரும், பாராளுமன்ற மேல் சபை உறுப்பினருமான ராம்ஜெத்மலானி, நேற்று மதுரை வந்தார். மதுரையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"ரஜினிகாந்த் தமிழகத்தில் பிரசித்தி பெற்றவர். அவர் என் நண்பரும் கூட‌. அவருக்கு ஒரு கடமை இருக்கிறது. மோடியை நமது நாட்டின் பிரதமராக்குவதற்கு ரஜினிகாந்தின் சக்தியை பயன்படுத்த வேண்டும். மோடி பிரதமராவதை அவர் ஆதரிக்க வேண்டும். மோடி மதச்சார்பானவர் என கூறுவது தவறு.

குஜராத்தில் அனைத்து முஸ்லிம் இனத்தவரும் சிறந்த கல்வியை பெற மோடி வழி வகுத்துள்ளார். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர். நேர்மையானவர். மோடியைபோல் நேர்மையும், தைரியமும் கொண்டவர் வைகோ. அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன். பாரதீய ஜனதாவை ஆதரித்து பிரசாரம் செய்ய தயாராக இருக்கிறேன். ராஜீவ் கொலை வழக்கில் 3 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வைகோ முயற்சி செய்தார், ஆனால் அவர்கள் 3 பேரையும் விடுதலை செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டு, தான் முயற்சி எடுத்ததுபோல் காட்டிக்கொண்டார்.

நமது நாட்டில் உள்ளவர்கள் வெளிநாடுகளில் 70 லட்சம் கோடி ரூபாயை பதுக்கி வைத்துள்ளனர். வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர். கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறேன். தேர்தல் கமிஷனும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கடிதமும் எழுதி இருக்கிறேன்." என ராம்ஜெத்மலானி கூறினார்.

நான் 5 முறை உங்களால் தமிழகத்தின் முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். 6-வது முறை களைத்துவிட்டாய் என்று என்னை ஒதுக்கிவிட்டீர்களோ?

பாராளுமன்ற தேர்தலையொட்டி கோவையில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:

தி.மு.க. தொடங்கியது தமிழர்களை காப்பாற்ற, தமிழனத்தை காப்பாற்றுவதற்காக தான் என அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்கிறேன். அப்படிப்பட்ட இந்த இயக்கத்தில் இன்றைக்கு உங்களையெல்லாம் நான் நாடியிருப்பது திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஒரு நான்கு பேரை வெற்றிபெற செய்வதின் மூலம் இந்த இயக்கத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும். நாம் சுட்டிக்காட்டுபவர் தான் இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டும் என்ற அந்த ஆசைகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்ல.

நாம் தமிழ் பண்பாட்டோடு வாழ வேண்டும். தமிழன் யாருக்கும் தலை தாழமாட்டான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக தான், இந்த இயக்கம், அன்று தொட்டு இன்று வரையிலே பாடுபட்டு வருகிறது. அப்படிப்பட்ட இயக்கத்துக்கு அண்ணா ஏற்றி வைத்த சுடர் விளக்கு அணையாமல் காக்கும் பெரும்பொறுப்பை உங்களை நம்பி நான் ஏற்று இருக்கிறேன். இந்த மக்களுக்கான ஆட்சியை, நல்லாட்சியை தரவேண்டிய கட்டம் இது.

நம்முடைய பயணத்தில் தேர்தல் என்பது ஒரு கட்டம்.அந்த கட்டத்தை வெற்றிகரமாக தாண்டினால் நாம் எதிர்காலத்தில் நன்மை செய்யலாம். இந்த சமுதாயத்துக்கே நன்மை செய்யலாம். இங்கே பேசியவர்கள் சொன்னார்கள். இந்த மாவட்டத்துக்கு நாம் ஈடுபட்டிருக்கிற பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த திட்டங்கள் தீட்ட வேண்டும். என்னென்ன திட்டங்களையெல்லாம் எண்ணியிருக்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால் திட்டங்கள் மக்களுக்காகத்தான்.

நாங்கள் இங்கு வந்து பேசுவது எங்களுக்காக அல்ல. மக்களுக்காக. ஏழை எளிய பாட்டாளி மக்களை தொழிலாள தோழர்களை வாழ வைப்பதற்காக. ஆட்சி மாறலாம். என்னை பொறுத்தவரை ஏறத்தாழ 1957–ம் ஆண்டு முதல் இதுவரையிலே சட்டமன்றத்திலே தொடர்ந்து பணியாற்றியிருக்கிறேன். நான் 5 முறை உங்களால் தமிழகத்தின் முதல்–அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

6–வது முறை களைத்துவிட்டாய் என்று என்னை ஒதுக்கிவிட்டீர்களோ? அல்லது நானாகவே விரும்பி பெற்றுக்கொண்டேனோ? இந்த இடைப்பட்ட காலத்தில் ஓய்வு கிடைத்துவிட்டது. இவன் எப்போது ஓய்வு எடுப்பான் அந்த நேரத்தில் அடிமைதனத்துக்கு உள்ளாக்கலாம் என்று கருதியவர்கள் அதை வெற்றிகரமாக செய்கிறார்கள். அவர்களின் மனப்போக்கை முறியடிக்க வேண்டும்.

உங்களுக்கு எல்லாம் என்னையும் சேர்த்து விடுதலை வாங்கித்தர வேண்டும். நாம் எல்லாம் தமிழர்கள். அந்த உணர்வை பெற்றாக வேண்டும் என்பதற்காகத்தான் நான் பாடுபட்டு வருகிறேன்.

எனக்கு தெரியாது. ஒரு வேளை இதுவே நான் கலந்து கொண்டிருக்கிற கடைசி தேர்தலாகக் கூட இருக்கலாம். (கருணாநிதி இவ்வாறு கூறியதும் கூட்டத்தினர் எழுந்து நின்று இரண்டு கைகளையும் வேண்டாம் என்பது போல நீண்ட நேரம் அசைத்துக் கொண்டிருந்தார்கள்.)

அப்படி சொல்லாதே சொல்லாதே என்று நீங்கள் கையை வீசுகிறீர்கள். அப்படி சொல்லாமல் இருக்க நாங்கள் தமிழர்களாக வாழ்வோம் என்ற உறுதியை நீங்கள் அளித்தாக வேண்டும். அந்த உறுதியை அளித்தால் ஒன்றல்ல. இரண்டல்ல. பத்து அல்ல. பதினைந்து அல்ல. இன்னும் 50 வருடங்கள் கூட உயிருடன் நான் இருப்பேன்.

அப்படி அல்லாமல் அடிமைத் தமிழ்நாட்டில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டால் அது வாழ்க்கையாக இருக்காது. ஆகவே தான் தமிழன் தமிழனாக வாழவேண்டும். நம்முடைய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் எதை நம்பி நம்முடன் வந்தார்கள். யார் யாரையோ நம்பி பார்த்தோம்.

ஆனால் இந்தியாவில் நமக்கு கிடைத்த கொம்பாக, கிளையாக காவல் அரணாக இருப்பது திராவிட முன்னேற்ற கழகம் தான் என்று நம்பி வந்துள்ளனர். தோழமை கட்சி தலைவர்கள் ஒருநிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார்கள்.

நான் அந்த தோழமை கட்சி தலைவர்களை ஏமாற்ற விரும்பவில்லை. அவர்கள் ஏமாறவும் மாட்டார்கள். எல்லோரும் இணைந்து இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்கள் உயிரை கொடுத்து உழைப்போம் என்ற உறுதியை தோழமை கட்சி தலைவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய 14–வது வயதில் மொழி காக்க குரல் கொடுத்தேன். அந்த மொழி உணர்வு இந்த வயதிலும் பட்டுப்போகவில்லை. இந்த உணர்வு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கெல்லாம் இருந்தால் இனி கட்டாய இந்தி மொழி தமிழகத்தில் நுழையாது. இளைஞர்களாக இருக்கும் நீங்கள் அந்த உறுதியை பெறவேண்டும். என்னை நினைத்து அந்த உறுதியை பெறுங்கள். தமிழ்நாட்டிலே யார் வேண்டுமானாலும் நுழையலாம். அத்துமீறி நுழையலாம். ஆட்சி புரியவே எண்ணம்கொண்டு நுழையலாம் என்ற எண்ணம் மோடிகளுக்கும் ஏற்படாது.

மோடி அல்ல, யாரும் நுழைய முடியாது. மீறி நுழைந்தால் ஒரு கோடியில் தான் நிற்க வேண்டும். மோடிகளுக்கு இங்கே வேலை இல்லை. இந்தியாவுக்கு இருக்கிற சிறப்பே, நாம் கட்டிக்காத்த உறவுகள்தான். நாம் கட்டிக்காத்த வீரம்தான். தேர்தலிலே தோற்காதவர்கள் யார்? தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் எல்லாம் இந்த நாட்டை ஆண்டு முடித்து விட்டார்களா? இல்லை. நம்முடைய லட்சியங்கள் ஈடேற வேண்டும் என்றால் மொத்த தமிழ் இனமும் அதற்கான போர்க்குரலை எழுப்ப வேண்டும்.

நாம் எப்படிப்பட்ட முதல்–அமைச்சரை பெற்று இருக்கிறோம்? என்பது பெங்களூரில் நடைபெறும் அவரது சொத்து குவிப்பு வழக்கு ஒன்றே போதுமான உதாரணம். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.5 ஆயிரத்து 107 கோடி ஆகும்.

இந்த தேர்தலில் அவரை தப்பிக்கவிட்டால் இன்னும் பல கோடி ரூபாய் தமிழ்நாட்டில் சம்பாதிப்பார். அதற்கு இடம் கொடுக்க வேண்டும். நாம் ஏமாற தயாராக இருக்க வேண்டும் என்று எண்ணினால் நீங்கள் இந்த தேர்தலில் எங்களை ஆதரிக்காமல் அவர்களையே ஆதரியுங்கள். அப்போது தான் தமிழ்நாடு பொட்டல் காடாகும். அப்படி ஆக வேண்டும் என்று கருதினால் இந்த தேர்தலில் அந்த அம்மையார் சுட்டிக்காட்டும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

இல்லை என்றால் எங்கள் பேச்சை தயவு செய்து கேளுங்கள். நாங்கள் உங்களோடு இருப்பவர்கள். எங்கள் பேச்சை அலட்சியப்படுத்தினால் வந்ததை அனுபவியுங்கள் என்று சாபம் இடுவதை தவிர வேறு வழியில்லை. ஆகவே நீங்கள் இந்த சாபத்துக்கு ஆளாக மாட்டீர்கள். ஏனென்றால் எதிர்கால தமிழ் சந்ததியை வாழவைக்க முன் வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இவ்வாறு கருணாநிதி பேசியிருந்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media