BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 1 February 2014

பலாத்காரம் செய்ய முயன்றவனை கொலை செய்த மாணவி கைது இல்லை

சென்னையில் பலத்காரம் செய்ய முயன்ற தன் அக்காள் கணவரை தற்காப்புக்காக கொலை செய்த கல்லூரி மாணவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் துறை அவரை விடுவித்தது.

பெற்றோர் இல்லாத காரணத்தால், தன் அக்காள் வீட்டில் தங்கியிருந்த ஹரிப்பிரியா என்ற கல்லூரி மாணவியை, அவரின் அக்காள் கணவர் மேத்யூ, ஏழு வருடங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி இருக்கிறார். கடந்த வியாழக்கிழமையன்று , வீட்டிற்கு மது போதையில் வந்த‌ மேத்யூ, தனது மனைவி ஹேமாவின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி மயக்கமடைய செய்துள்ளார். பின்னர் அவரை வெளியே தள்ளி கதவை பூட்டி, ஹரிப்பிரியாவை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மேத்யூவின் கழுத்தில் ஹரிப்பிரியா தாக்கியுள்ளார். இதில் மேத்யூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸ், பலாத்கார முயற்சியின் போது, பெண் ஒருவர் தன்னை தற்காத்துக்கொள்ள, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அடிப்படையில், ஹரிப்பிரியாவை விடுவித்தனர். அவ்ர் சிறைக்கு அனுப்ப படவில்லை என்று தெரிவித்தனர்.

உத்தர பிரதேசத்தில் 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி, 5 பேர் கற்பழிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் மாவானா பகுதியில் 10-ம் வகுப்பு மாணவியை 5 இளைஞர்கள் கடத்தி கற்பழித்துள்ளனர். கடந்த புதன்கிழமையன்று, கடைக்கு சென்ற அந்த 14 வயது மாணவியை, ஐந்து வாலிபர்கள் கடத்தி, காட்டுக்குள் அழைத்து சென்றனர். பின்னர் அவரது கைகளை கட்டிவிட்டு மயக்க மருந்து கொடுத்துள்ளார்கள்.

அந்த பெண் சுய நினைவை இழந்த பிறகு, ஐந்து பேரும் ஒருவர் மாற்றி ஒருவராக கற்பழித்துள்ளனர். வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து பாலியல் சித்ரவதை செய்து விட்டு,  அந்த ஐந்து பேரும் அப்பெண்ணை அவரது வீட்டின் அருகே விட்டுச் சென்றுள்ளனர்.

நடந்த சம்பவத்தை கேட்டு, அப்பெண்ணின் குடும்பத்தினர், காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக, மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர், மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

ஏ ஆர் ரஹ்மானுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

இரு ஆஸ்கார் விருதுகளை பெற்று, சர்வ தேச புகழ் பெற்ற ஏ ஆர் ரஹ்மானுக்கு, ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக் கல்வி மையமான 'ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து' , கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இசைத் துறையில் ரஹ்மானின் சாதனைகளைப் போற்றும் வகையில் அவருக்கு இப்பட்டம் வழங்க பட்டுள்ளது.

இந்த விருது தனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தருவதாக கூறிய ரஹ்மான், ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோ நகரில் நடந்த இந்த விழாவுக்கு, தனது கே.எம் இசைப் பள்ளி மாணவர்களுடன் சென்று கவுரவத்தை ஏற்றுக் கொண்டார்.

அருணாச்சல் பிரதேச எம்.எல்.ஏ. மகன் டெல்லியில் அடித்துக் கொலை

ஜலந்தரில் தங்கிப் படித்து வந்த இருபது வயதான டேனியம் (இவரது தந்தை அருணாச்சல் பிரதேச மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆவார்),  புதன்கிழமையன்று டெல்லிக்கு வந்திருந்தார். பின்னர் லாஜ்பத் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு தனது நண்பருடன் போயிருந்தார். அப்போது நிடோவின் ஹேர்ஸ்டைலைப் பார்த்த கடைக்காரர்கள் சிலர் அவரைக் கிண்டலடித்துள்ளனர். இதனால் கோபமடைந்த நிடோ, கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் இறங்கினார். கோபத்தில் கடையின் கண்ணாடியை அடித்து உடைத்து இருக்கிறார். இதையடுத்து, கடையில் உள்ள ஐந்து பேர், நிடோவை கம்பி உள்ளிட்டவற்றை வைத்து தாக்கியுள்ளனர். அப்பொழுது, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நிடோவை மீட்டனர்.

இதையடுத்து, நிடோ வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அடுத்த நாள் காலையில் பிணமாகக் கிடந்தார். தாக்குதலில் ஏற்பட்ட காயத்தால்தான் அவர் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகிறது.

இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பையும், அதிரிச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகமும் உத்தரவிட்டுள்ளது.

தேவ்யானி கோப்ரகடே கைது நடவடிக்கை சரியே: அமெரிக்கா அறிக்கை

அமெரிக்காவிற்கான முன்னாள் துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடே, விசா மோசடி குற்றச்சாட்டிற்காக,  கைது செய்யப்பட்டதில் எந்த தவறும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அவர் மீதான விசா மோசடி வழக்கை வாபஸ் பெறவும் மாட்டோம், மன்னிப்பு கோரவும் மாட்டோம் என்று திட்டவட்டமாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

விசா மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான  தேவ்யானி கோப்ரகடேவுக்கு கிரிமினல் நடவடிக்கைகளில் இருந்து தூதரக பாதுகாப்பு கிடையாது என அமெரிக்கா நியூயார்க் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தேமுதிக மாநாடு வெற்றியைத் தடுக்க அதிமுக அரசு முயற்சி செய்கிறது

தேமுதிக மாநாடு வெற்றி பெறுவதை தடுக்க அதிமுக அரசு முயல்கிறது என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், "இந்திய நாட்டின் அடுத்த ஆட்சியை முடிவு செய்யும் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், நடத்துகின்ற ஊழல் எதிர்ப்பு மாநாட்டை அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கிறார்கள். மாநாடு நடைபெறும் திடல் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கழகக் கொடி கட்டுவதற்கும், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கும், பிற அலங்காரங்கள் செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிளக்ஸ் பேனர் வைப்பதற்காக கட்டப்பட்ட மூங்கில் சாரம், கொடிக் கம்பங்கள் போன்றவை விழுப்புரம் மாவட்ட காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். " என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுபோய், தினந்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு, பாலியல் வன்கொடுமை என்ற நிலைமைதான் உள்ளது. இதை சீர்படுத்தும்  நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, தேமுதிகவின் பிளக்ஸ் பேனர்களை அகற்றுவதுதான் காவல்துறை செய்யும் வேலையா? என்ற கேள்வியையும் அவர் எழுப்புயுள்ளார்.

ஊழலை எதிர்க்கும் உயர்ந்த நோக்கத்தோடு பொது மக்களுக்காக மாநாடு நடைபெறுகிறது. இதில் பெரும் அளவில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும், இம்மாநாடு மிகப் பெரிய‌ வெற்றி பெற வேண்டும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.

கேஜ்ரிவால் மீது ஜி.கே.வாசன் வழக்கு போடுகிறார்

இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்வாதிகள் பட்டியல் ஒன்றை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டு இருப்பதற்கு அரசியல் கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்து வருகிறது. இதைப் பற்றி அறிக்கை வெளியிட்ட வாசன், "சட்டத்தின் மீது எவ்வித மரியாதையும் இல்லாத, முன்னேற்றப்பணிகள் மீது எவ்வித அக்கறையுமற்ற பொறுப்பில்லாத கேஜ்ரிவாலிடம் இருந்து எனக்கு நற்சான்றிதழ் எதுவும் தேவையில்லை. அவரை நான் வன்மையாக கண்டிக்கிறேன்." என்று கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியினர், மற்ற அனைத்து அரசியல்வாதிகளும் ஊழல் மலிந்தவர்கள் என்றும், ஏதோ தாங்கள் மட்டுமே யோக்கியமானவர்கள் என்ற ஆணவத்துடன் இருக்கின்றனர் என்று அவர் கடுமையாக சாடினார்.

கேஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு தொடர போவதாக கூறிய வாசன், "என் மீது எந்த வகையான ஊழல் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது. துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சகத்தில் மிகவும் வெளிப்படைத்தன்மை கொண்ட பல மாற்றங்களை நான் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்." என்றும், கேஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெற்று கொண்டு, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதா பிறந்தநாளில் சென்னையில் பிறந்த மற்றும் பிறக்கும் பெண்குழந்தைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம்

தமிழக முதல்வர்  ஜெயலலிதாவின் 58-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட குடியிருந்து வருபவர்களுக்கு,வரும் பிப்ரவரி மாதம் 24ம் தேதி பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் ரூ.10,000 வைப்பு நிதி செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில், பிப்ரவரி 24 அன்று பிறந்த பெண் குழந்தைகளுக்கும் இப்பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசு தொகையினை பெறுவதற்கு உரிய பிறப்பு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றுடன் வரும் 25-2-2014 அன்று மாலை 5 மணிக்குள் சென்னை மாநகராட்சியின் பொது சுகாதார துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தேமுதிக மாநாட்டுக்கு அனுமதி கொடுக்க தாமதம் ஆனது ஏன்?

                                         

தேமுதிக மாநாடு நாளை உளுந்தூர்பேட்டையில் நடக்கவிருக்கிறது. இம்மாநாட்டில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி அறிவிப்பார் என எதிர்பார்க்க படுகிறது. இம் மாநாட்டுக்கு அனுமதி கோரி கடந்த 11-ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலரும், தேமுதிக எம்.எல்.ஏ.வுமான எல்.வெங்கடேசன் மனு அளித்தார். எனினும், மாநாட்டுக்கு போலீஸாரின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு, நேற்று பிற்பகல் தான் மாநாடு நடத்த போலீஸார் அனுமதி அளித்தனர்.

அனுமதி அளிக்கும் முன் இருபத்து நான்கு நிபந்தனைகள் தேமுதிகவிற்கு விதிக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகளில் பேனர், விளம்பரங்கள் வைக்கக் கூடாது. இரவு 10 மணிக்குள் மாநாட்டை முடிக்கவேண்டும். சாலைகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது, போக்குவரத்து இடையூறான வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்பது போன்ற நிபந்தனைகள் இதில் அடங்கும்.

மாநாட்டிற்கு முதலிலேயே அனுமதி அளித்திருந்தால் தமிழகமெங்கும் பேனர்களும், செய்தித்தாள்களில் விளம்பரங்களும் கொடுக்கப்பட்டு கட்சிக்கும், மாநாட்டுக்கும் அதிக விளம்பரம் கிடைத்திருக்கும். அதைத் தவிர்க்கவே இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media