BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 29 March 2014

இலங்கைத் தமிழர்களுக்காக சிறையில் இருந்தீர்களா, முதல்வர் என்றால் உளறுவதா?- ஜெ.விடம் கருணாநிதி கேள்வி




இன்று கேள்வி - பதில் வடிவில் வெளியிடப்பட்ட‌ கருணாநிதியின் அறிக்கை:

"இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக்கூட தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்ற கருணாநிதிக்கு துணிவில்லை, இந்தப் பயத்துக்கு காரணம் தன்னலம்" என்று திண்டுக்கல்லில் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

முதலமைச்சர் என்றால் எதை வேண்டுமானாலும் உளறலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார் போலும். இலங்கைத் தமிழர்களுக்கு அண்ணா உயிரோடு இருந்தபோதே, 29-1-1956 அன்று சிதம்பரம் நகரில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்தவனே நான்தான். அப்போது ஜெயலலிதா குழந்தையாகத்தான் இருந்திருப்பார்.

இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக்கூட சட்டப்பேரவையில் நான் நிறைவேற்றவில்லை என்று ஜெயலலிதா கூறுகிறார் அல்லவா?

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக 24-8-1977 அன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தி, 5 லட்சம் பேர் கலந்துகொண்ட பேரணியே நடத்தினோம். 27-7-1983 அன்று சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடத்தினோம். 21-8-1981 அன்று ஈழத் தமிழர்கள் பிரச்சினை பற்றி எதிர்க்கட்சி வரிசையில் இருந்து பேரவையில் விரிவாகப் பேசியிருக்கிறேன். 25-8-1981 அன்று தமிழ் இளைஞர் தனபதி இலங்கையில் கொல்லப்பட்டது பற்றி பேசியிருக்கிறேன். 27-8-1981, 13-9-1981, 4-8-1982, 15-7-1983, 13-8-1983, 5-5-1986, 19-10-2008 ஆகிய நாள்களிலும் மேலும் பல நாள்களிலும் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி "முரசொலி"யில் அவ்வப் போது ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து எழுதியிருக்கிறேன்.

10-8-1983இல் நானும், க.அன்பழகனும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறோம். 13-6-1985 அன்று இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக "டெசோ" என்ற அமைப்பினை உருவாக்கினோம். அந்த அமைப்பின் சார்பில் 4-5-1986 அன்று மதுரை யிலும், 12-8-2012 அன்று சென்னையிலும் மிகப் பெரிய மாநாடுகளை நடத்தியிருக்கிறோம். 3-6-1986 அன்று இலங்கைத் தமிழர் பிரச்சினைக் காக என்னுடைய பிறந்த நாளை ரத்து செய்த போதிலும், அன்று உண்டியல் மூலம் வசூலான தொகையை தமிழ்ப் போராளி இயக்கங்களுக்கு பங்கிட்டுக் கொடுத்திருக்கிறேன்.

15-10-1987 அன்று ஐந்து இலட்சம் மக்கள் கலந்துகொண்ட பேரணியை நடத்தினோம். 6-11-1987 அன்றும், 24-10-2008 அன்றும், சென்னையில் மாபெரும் மனிதச் சங்கிலி நடத்தியிருக்கிறோம். 21-2-2009 அன்று தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் இளைஞர் சங்கிலி நடத்தினோம்.

15-3-1989 அன்று டெல்லியில் அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை இரண்டு முறை சந்தித்து, ஈழத் தமிழர் பிரச்சினைக்காக விவாதித்திருக்கிறேன். அதே 1989ஆம் ஆண்டு சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழக விருந்தினர் மாளிகையில் போராளிகள் அனைவரையும் அழைத்துப் பேசி, விவரங்களை அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன்.

30-3-1990 அன்று சட்டப்பேரவையில் இந்திய அமைதிப்படை தமிழகம் திரும்பியபோது முதலமைச்சர் என்ற முறையில் ஏன் வரவேற்கவில்லை என்று கேட்டபோது, இந்திய ராணுவம் இலங்கையிலே எப்படி நடந்து கொண்டது என்பதைப் பற்றி 1988ஆம் ஆண்டு பிரபாகரன் எழுதிய கடிதத்தையே அவையிலே படித்துக் காட்டி, இந்திய ராணுவத்தின் மீது கழகத்திற்கு சகலவிதமான மரியாதையும் உண்டு, ஆனால் இலங்கையிலே அந்த ராணுவம் இலங்கைத் தமிழர்களையே தாக்கி நசுக்கிட முயற்சித்தது என்பதால்தான் வரவேற்கச் செல்ல வில்லை என்றும், ராணுவம் மதிக்கத்தக்கது, மரியாதைக்குரியது, ஆனால் தவறு செய்யும்போது ராணுவத்தை ஆதரிக்க வேண்டுமென்பதில்லை என்று பதில் அளித்திருக்கிறேன்.

சென்னையில் 14-10-2008 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியிருக்கிறேன். 24-4-2009 அன்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. 4-12-2008 அன்று தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தோம். நான் முதலமைச்சராக இருந்த போது, இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக 50 கோடி ரூபாய்க்கு மேல் நிதி சேர்த்து மத்திய அரசின் உதவியோடு இலங்கைத் தமிழர்களுக்கு உதவினோம்.

இவ்வாறெல்லாம் ஈழத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து போராடி வந்ததோடு, ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போது 23-8-1990 அன்று சட்டப் பேரவையில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறேன். அதைக் காரணமாகக் காட்டித்தான் 1991ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கழக ஆட்சி இரண்டாவது முறையாகக் கலைக்கப்பட்டது.

தமிழகச் சட்டப்பேரவையில் 23-4-2008 அன்று இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு தீர்மானத்தை நான் முன்மொழிந்து நிறைவேற்றிடச் செய்தேன். 12-11-2008 அன்று பேரவையில் மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினோம். முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினீர்களா என்று கேட்ட கேள்விக்கு இதுதான் என்னுடைய பதில்.

என்னைக் கேள்வி கேட்ட முதலமைச்சரிடம் நான் ஒரு கேள்வியைத் திருப்பிக் கேட்கிறேன். 15-9-1981 அன்று என்னுடைய தலைமையில் இலங்கைத் தமிழர்களுக்காக மறியல் நடைபெற்று கைது செய்யப்பட்டிருக்கிறேன். 16-5-1985 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மறியலில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டிருக்கிறேன். நான் சிறையில் அடைபட்டதற்காக தமிழகத்தில் ஏழெட்டு பேர் தீக்குளித்தும், தற்கொலை செய்து கொண்டும் இறந்தார்கள்.

என்னைக் கேள்வி கேட்ட ஜெயலலிதா, நீங்கள் இலங்கைத் தமிழர்களுக்காக எத்தனை முறை கைது செய்யப்பட்டு சிறையிலே இருந்தீர்கள்? இலங்கைத் தமிழர்களுக்காக நீங்கள் ஏற்றுக்கொண்ட இழப்பு என்ன? ஆட்சியை இழந்தீர்களா? அல்லது குறைந்தபட்சம் உங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையாவது ராஜினாமா செய்திருக்கிறீர்களா?

இப்போது சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி வானளாவப் பேசி பெருமைப்பட்டுக் கொள்கிறீர்களே, நீங்கள் 16-4-2002 அன்று இதே சட்டப் பேரவையிலே இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று எகிறிக் குதித்தீர்களே; இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இந்திய ராணுவம் எண்ணவில்லை, போர் என்றால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப் படுவது சகஜம்தான் என்று ஈழத் தமிழர்களின் விடுதலைப் போரையே கேலி செய்து 17-1-2009 அன்று, அறிக்கை விடுத்தீர்களே, அதையெல்லாம் தமிழ்நாட்டு மக்களும் உலகத் தமிழர்களும் மறந்திருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டு தற்போது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மாய்மாலம் செய்கிறீர்களா?

மின் பிரச்சினையில் குற்றச்சாட்டு

மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, "யாரும் கவலைப்பட வேண்டாம், மின்வெட்டே இல்லாத மாநிலமாக விரைவில் தமிழகம் திகழும்" என்று சொல்லியிருக்கிறாரே?

கடந்த மூன்றாண்டு காலமாக, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதையேதான் திரும்பத் திரும்பச் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். விரிவாகச் சொல்ல வேண்டுமேயானால், அ.தி.மு.க.வின் சட்ட மன்றத் தேர்தல் அறிக்கையிலேயே, தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றால் நான்கு மாதங்களில் மின் வெட்டு இல்லாமல் செய்வோம் என்று அறிவித்தார்கள்.

ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, 2011ஆம் ஆண்டு ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா "தற்போதுள்ள 3 மணி நேர மின்வெட்டினை 2 மணி நேரமாகக் குறைப்போம். ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும்" என்றார்.

அ.தி.மு.க. ஆட்சியில் 4-8-2011 அன்று பேரவையில் வைத்த நிதிநிலை அறிக்கையில், "மின்சக்தியின் உற்பத்திக்கேற்ப மின்வெட்டு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, 2012 ஆகஸ்டு மாதத் திற்குள் மாநிலம் முழுவதும் முற்றிலுமாக நீக்கப்படும்" என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு, 2012ஆம் ஆண்டு, ஆளுநர் உரை மீதான விவாதத் திற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, "ஜூன் மாதம் முதல் மின் பற்றாக்குறை படிப்படி யாகக் குறையும். அடுத்த ஆண்டு மத்தியில், மின் பற்றாக்குறை முழுவதுமாக நீக்கப்படும்" என்றார்.

28-3-2012 அன்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில், "படிப்படியாக மின்வெட்டு நேரம் குறைக்கப்படும் என்று அறிவித்தார், ஜூன் மாதத்திலிருந்து படிப்படியாக குறைக்கப்படுமென்று தான் அறிவித்திருக்கிறோம். இப்போது மார்ச் மாதத்தில் தான் இருக்கிறோம். இன்னும் 3 மாத காலம் பொறுத்திருங்கள்" என்று கூறினார்.

மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் அளித்த பேட்டியில் "இந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரையில் மட்டும் தான் தமிழகம் மின்பற்றாக்குறையை அனுபவிக்கும். இந்த மூன்று மாதங்களை மட்டும் பொறுத்துக் கொண்டால், தமிழகத்தில் மின் பற்றாக்குறையே இருக்காது" என்றார்.

25-10-2013 அன்று "இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறும்" என்று முதல்வர் ஜெயலலிதா பேரவையில் அறிவித்தார். 3-2-2014 அன்று 2014ஆம் ஆண்டுக்கான ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, "பல தடைகளைத் தகர்த்தெறிந்து கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் அரசு எடுத்த பகீரத முயற்சிகளின் காரணமாக இருளில் மூழ்கி யிருந்த தமிழகம் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கி யுள்ளது. நான் ஏற்கனவே உறுதி அளித்தபடி மின்வெட்டே இல்லை என்ற நிலைமையை தமிழகம் விரைவில் எட்டிவிடும்" என்றார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் அடிக்கடி வாய்தா வாங்கி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கு முயற்சி செய்துவருவதைப் போல எண்ணிக் கொண்டு, இந்த மின்வெட்டு பிரச்சினையிலும் இந்த ஆட்சியினர் தொடர்ந்து மூன்றாண்டு காலமாக கவலை வேண்டாம்,

மின்வெட்டே இல்லாத மாநிலமாக விரைவில் தமிழகம் ஆகும், மின்மிகை மாநிலமாக மாறும் என்றெல்லாம் குழந்தைக்கு நிலாவைப் பிடித்துத் தருவதாக கதை சொல்வதைப் போல கற்பனையான வாக்குறுதி களைக் கொடுத்து, தமிழ் மக்களை ஏமாற்றியே ஆட்சிக் காலத்தைக் கடத்திவிடலாம் என்று எண்ணுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் திறமை சாலிகள், இவருடைய பொய்க்கும் பித்தலாட்டத் திற்கும் இனியும் ஏமாற மாட்டார்கள்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

மௌன குரு பேசினார்; பிரிவினை அரசியல் செய்கிறது பாஜக: மன்மோகன்


அசாம் மாநிலத்தில் சிப்சாகர் மாவட்டம் கும்டாயில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர் பிஜோய் கிருஷ்ண ஹேண்டிக்கை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

அப்போது, “பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் மொழிகள் கொண்டது இந்தியா. நாட்டைப் பிரிக்கும் அரசியல் நடத்தும் பா.ஜனதா கட்சியால் நாட்டுக்கு வளர்ச்சியை கொண்டு வர முடியும் என்று நான் நினைக்கவில்லை” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஒரு நபரை அடிப்படையாக வைத்து அவர்கள் அரசியல் செய்கிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்கான எந்த குறிப்பிட்ட கொள்கைகளும் அவர்களிடம் இல்லை என்று கூறிய பிரதமர், பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நலத்திட்டங்களை பட்டியலிட்டு முடித்தார்.

இந்திய நாட்டின் பாரத பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவிற்கு மட்டுமே உண்டு-மதுரை ஆதீனம்

 
சிவகாசியில் அ.தி.மு.க. சார்பாக மாபெறும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக ப‌ங்கேற்ற மதுரை ஆதீனம் கலந்து கொண்டு பேசியதாவது:

இந்த நாடு பல்வேறு துறைகளில் சீரழிந்து போய்விட்டது. பொருளாதார துறையில் மட்டும் அல்ல பயங்கரவாதத்திலும் இந்த நாடு சீரழிந்து சின்னாபின்னமாகி விட்டது. தமிழகத்தில் கல்வித்துறை, விளையாட்டுத்துறை உட்பட பல்வேறு துறைகளில் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்.

நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜீ, மாயாவதி, தேவகவுடா உட்பட அனைத்து தேசிய தலைவர்களும் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் பாரத பிரதமராக வரவேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்திய நாட்டின் பாரத பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவிற்கு மட்டுமே உண்டு. வரும் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிபெற செய்யவைக்கும் கடமை, பொறுப்பு, ஒவ்வொறு தமிழனுக்கும், தமிழச்சிக்கும் இருக்கின்றது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

இவ்வாறு மதுரை ஆதீனம் கூறியிருந்தார்.

ஜெயலலிதாவுடன் கூட்டணியை புதுப்பிக்க விரும்புகிறோம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி


கவ்ஹாத்தியில் இன்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க. தவிர்த்து அமையும் எந்தவொரு மதச்சார்பற்ற அரசுக்கும் இடதுசாரிகள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வை ஆதரிக்காத ஜெயலலிதா, நிதிஷ் குமார் அல்லது நவீன் பட்நாயக் இவர்களில் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்க எங்களது கட்சி தயாராக உள்ளது. இருப்பினும் இந்த இரு கட்சிகளுக்கும் எதிரான நிலைப்பாட்டை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கொண்டிருக்கும் பட்சத்தில் அவருடனான கூட்டணியை புதுப்பிக்க நாங்கள் விரும்புகிறோம். 

கடந்த 2009ல் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தற்போதைய நிலையில் கேரளாவில் எங்களது கட்சி நன்கு வலுப்பெற்றுள்ளது. திரிபுரா, மேற்கு வங்காளத்திலும் நாங்கள் நல்ல நிலையில் உள்ளோம்” என்று தெரிவித்தார்.

மக்களுக்கு இனவாத விஷம் தேவையில்லை, வாய்ப்புகளே தேவை-நரேந்திர மோடி


ஹ‌ரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் கோஹனா பகுதியில் இன்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “நாட்டு மக்கள் காங்கிரசின் வாக்குறுதிகளால் வெறுத்துவிட்டனர். நான் திட்டங்களை நிறைவேற்றும் நோக்குடன் வந்திருக்கிறேன். காங்கிரஸ் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. ஆனால், முன்னேற்றம்தான் மக்களுக்குத் தேவை, பிரிவினை தேவையில்லை. மக்களுக்கு திறமைகள், வேலைவாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு தேவை. அவர்களுக்கு சூழ்ச்சிகள், அரசியல், இனவாத விஷம் தேவையில்லை. மக்களுக்கு வாய்ப்புகள் தேவை. சந்தர்ப்பவாதம் தேவையில்லை” என்று கூறினார். 

திமுக வேட்பாளரை தோற்கடியுங்கள்: ஆதரவாளர்களுக்கு அழகிரி

தனது ஆதரவாளரின் உறவினர் ஒருவர் இறந்ததை ஒட்டி ஆறுதல் சொல்வதற்காக உசிலம்பட்டி சென்றிருந்த மு.க.அழகிரி,  அங்கு தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய போது, தேனி தொகுதி திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கத்தை தோற்கடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸார் மனம் வருந்தி வருவார்களேயானால், அவர்களை திமுக ஆதரிக்கும் என்று சென்னையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கருணாநிதி கூறியிருந்தார். இது குறித்து அழகிரி கூறுகையில், தான் ஒரு போதும் காங்கிரஸ் கூட்டணிக்கோ இல்லை வேறு எந்த ஒரு கட்சியுடன் கூட்டணி அமைக்கவோ முற்பட்டதில்லை என்று கூறினார்.

மோடியை கொன்று விடுவேன் எனக் கூறிய வேட்பாளர் கைது



"உத்தரப் பிரதேசத்தை குஜராத் போல் மோடி மாற்ற முயன்றால் நாங்கள் அவரை துண்டு துண்டாக்குவோம். இதற்காக நான் தாக்கப்படுவேன் என்றோ கொல்லப்படுவேன் என்றோ பயப்பட மாட்டேன். மோடிக்கு எதிராக நான் போரிடுவேன். உ.பி.யை அவர் குஜராத் என நினைக்கிறார். குஜராத்தில் 4 சதவீதம் பேரே முஸ்லிம்கள். ஆனால் உ.பி.யில் 42 சதவீதம் பேர் முஸ்லிம்கள்" என்று உத்தர பிரதேச சஹரன்பூர் தொகுதி வேட்பாளர் இம்ரான் மசூத் பேசியிருந்தார்.

"நான் மிகுந்த எச்சரிக்கையுடன் வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க வேண்டும். தேர்தல் பிரச்சார அனலில் அவ்வாறு பேசிவிட்டேன்” என்று மசூத் கூறி தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.

சஹரான்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடிக்கு எதிராக மசூத் இவ்வாறு பேசும் வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து மசூத் மீது சஹரான்பூர் மாவட்டம், தேவ்பாத் காவல் நிலைத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மசூத் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிந்தது. இந்நிலையில் அவர் இன்று காலை சஹரான்பூரில் கைது செய்யப்பட்டார்.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media