BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 31 January 2014

அழகிரியின் 63வது பிறந்தநாளுக்கு, 63கிலோ எடை கேக், 63 கிலோ எடை ஏலக்காய் மாலை


அழகிரி நேற்று தன் 63வது பிறந்தநாளை ஒட்டி, 63 கிலோ எடை உள்ள கேக் ஒன்றை வெட்டினார். அந்த கேக்கில், ‘‘மலர் பாதையா... முள் படுக்கையா... எதுவாகிலும் அண்ணன் வழியில்...'' என எழுதப்பட்டு இருந்தது.

தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்ததனால், அவர் தனது வீட்டில் இருந்து விழா நடைபெற்ற ராஜா முத்தையா மன்றம்வரை செல்லவே,  சுமார் 2 மணி நேரம் ஆனது. பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். திமுக தொண்டர் ஒருவர் அலகு குத்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அழகிரியின் ஆள் உயர கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது.
            

கடந்த பிறந்தநாளின் போது அப்பா கருணாநிதியின் கையால் கேக் ஊட்டி விட்ட காட்சியை போட்டோவாக எடுத்து பெரிய பேனராக வைக்கப்பட்டிருந்தது. முன்னாள் மேற்கு மண்டல தலைவர் ஆர்.எம்.பி.சின்னான் 63 கிலோ எடை கொண்ட ஏலக்காய் மாலை கொண்டு வந்து அழகிரிக்கு அணிவித்தார்.

தி.மு.க அழிய போகிறது- சுப்பிரமணியம் சாமி

                                     

இன்று விமான நிலையத்தில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுப்பிரமணியம் சாமி, அழகிரி-ஸ்டாலின் மோதலால் தி.மு.க அழிய போகிறது என்று கூறினார். "ஷாஜகான் காலத்தில் அவரது மகன்கள் இப்படித் தான் சண்டை போட்டுக் கொண்டார்கள். அதன் பிறகு முகலாயர்களின் ஆட்சியே முடிந்துவிட்டது. அதே போன்று அழகிரி-ஸ்டாலின் இடையேயான மோதலால், தி.மு.க.வும் அழியும்." என்று அவர் கூறினார்.

மேலும், தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து, தன் கருத்தை ஏற்கனவே, பா.ஜ.க தலைமையிடம் கூறியதாகவும், அக்கருத்தை அவர்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்பது தெரியவில்லை என்றும் சுப்பிரமணியம் சாமி கூறினார்.

மோடியின் சென்னை கூட்டத்திற்கு தடை கோரி வழக்கு

                                           

வண்டலூரில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி பா.ஜ.க சார்பில் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பாதுகாப்பு காரணங்களுக்காக, முன்னெச்சரிக்கையாக மோடியின் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

"நரேந்திர மோடி பீகாரில் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் குண்டுவெடித்தது.  சென்னையில் மோடி கலந்து கொள்ளும் வண்டலூர் பகுதியும் பதற்றமான பகுதி. போக்குவரத்து நிறைந்த பகுதி. தேசிய நெடுஞ்சாலையையொட்டி பகுதியில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதனால் சமூக மோதலுக்கு அதிக வாய்ப்பு ஏற்படுமோ என அஞ்சுகிறோம். எனவே இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்", என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

எனக்கு தெரியாது..எனக்கு தெரியாது..எனக்கு தெரியாது: கருணாநிதி

                             

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, "கருணாநிதியும், அவர் மகனும் நாடகம் நடத்துகின்றனர். அவர்களது வீட்டிற்குள் பேச வேண்டிய விஷயங்களை, ஊடகங்களின் முன்பு பேசுகின்றனர். அவர்கள் நடத்தும் எந்த நாடகத்திற்கும், தேமுதிக அடிபணியாது." என்று கூறினார்.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் நேற்று இரவு நிருபர்களுக்கு கருணாநிதி பேட்டி அளித்தார். அப்பொழுது பிரேமலதா கருத்து பற்றி கேட்ட போது, "அவருக்குத் தெரிந்த அளவுக்கு நாடகம் பற்றி எனக்குத் தெரியாது. " என்று பதில் அளித்தார். மேலும், திமுக, தேமுதிக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை எந்த நிலையிலே இருக்கிறது என்பதும் தெரியாது என்று கூறினார்.

ஜெயலலிதா மீது இவ்வளவு வழக்குகள் இருக்கும்போது, அவர் பிரதமராக வரவேண்டும் என்பது பற்றிய அவரின் கருத்து கேட்ட போது, பிரதமர் ஆவதற்கு இப்படிப்பட்ட வழக்குகள் இடையூறாக இருக்குமா என்றால், எனக்கு அதைப் பற்றிய சட்ட நுணுக்கங்கள் தெரியாது என்று கருணாநிதி பதிலளித்தார்.

அழகிரியின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்க முடியாது


தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி தனது 63வது பிறந்தநாளை நேற்று மிகச் சிறப்பாக கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "எனது பிறந்தநாள் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட மதுரை மாவட்ட திமுகவினர் 10 பேரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். கலைக்கப்பட்ட மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் திமுக ஏற்றால், சமரசத்திற்கு உடன் படுவேன்." என்று கூறினார்.

இதைப் பற்றி கருணாநிதியிடம் கேட்ட போது, "திமுகவில் உள்ளவர்கள், திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் போன்றவர்களைப் பற்றி அபாண்டமாக பி.சி.ஆர். (தீண்டாமை வன்கொடுமை) குற்றச்சாட்டை போலீஸாரிடம் சொல்லி, அவர்கள் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்த பிறகு, கட்சி அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. " என்று அவர் பதிலளித்தார்.

பிப்ரவரி 2ம் தேதி நடக்கும் மாநாட்டில் கூட்டணியை அறிவிக்கிறார் விஜயகாந்த்

நாளை மறுநாள்  உளுந்தூர்பேட்டையில் நடக்கவிருக்கும் தே.மு.தி.க மாநாட்டில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து நிச்சயம் அறிவிக்கப்படும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க மாநாட்டிற்கு 'ஊழல் எதிர்ப்பு மாநாடு' என, பெயரிடப்பட்டுள்ளது.  மாநாட்டிற்கு காவல்துறையினரின் அனுமதி கிடைத்துவிட்டதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார். அம்மாநாட்டின் முடிவில், தொண்டர்களின் கருத்துகளை முழுமையாக அறிந்து, தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவை வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், 'தங்களுடன் விஜயகாந்த் கூட்டணி அமைப்பது உறுதி' என, பா.ஜ.க நிர்வாகிகள் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடக்கவிருக்கும் மாநாட்டிலேயே விஜயகாந்த், தன் முடிவை அறிவிக்க மாட்டார் என்றும், சென்னை திரும்பியதும், மாநில நிர்வாகிகள், செயலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே, கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media