BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 2 April 2014

பம்பரம் சுத்த சுத்த தாமரை மலரும், முரசு கொட்ட கொட்ட தாமரை மலரும்-விஜயகாந்த்

விருதுநகர் தொகுதியின் சிவகாசியில், மதிமுக பொதுச் செயலர் வைகோவை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியது:

"முதன்முதலாக இஸ்லாமியர்களுக்காக வாஜ்பாயிடம் பேசியவர் வைகோ. அவருக்கு வாக்கு சேகரிக்க வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைவிட வயதில் மூத்த வைகோவுக்கு வாக்கு சேகரிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

வி ஃபார் விஜயகாந்த், வி ஃபார் வைகோ, வி ஃபார் வைகோ... நீங்கள் வாக்களித்து வைகோவை மட்டும் அல்ல; நம் அணியில் உள்ள அனைத்து வேட்பாளர்களை வெற்றி அடையச் செய்வீர்கள் என நம்புகிறேன்.

நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தியை பெயர் சொல்லி அழைத்தவர் வைகோ. நாடாளுமன்றத்தையே கதிகலங்க வைத்தவரை, நீங்கள் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். நாடாளுமன்றத்தில் தமிழர் நலனுக்காக வைகோ குரல் கொடுப்பார்.

ஒவ்வொரு தேர்தலிலும் மக்களை ஏமாற்றுபவர் ஜெயலலிதா. நம்பி நம்பி ஏமாந்தவர் வைகோ. அவரை நீங்கள் கைவிடக் கூடாது.

தமிழர்களின் பிரச்சினைகளுக்காக டெல்லியில் பேசக் கூடியவர் வைகோ. நான் போகிறேனோ இல்லையோ, வைகோ டெல்லி சென்று நமக்காக பேசுவார்.

நாற்பது தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். அதன்மூலம் மோடி பிரதமராவது உறுதி. விருதுநகர் தொகுதியில் வைகோ வெற்றி பெற பம்பரச் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

பம்பரம் சுத்த சுத்த தாமரை மலரும், முரசு கொட்ட கொட்ட தாமரை மலரும். வைகோ மிகப் பெரிய பேச்சாளர். அவன் முன்பு எனக்கு பேச்சு வரவில்லை என்பதால் சீக்கிரமே உரையை முடித்துக்கொள்கிறேன்"

இவ்வாறு வைகோவிற்காக பிரச்சாரம் செய்தார் விஜயகாந்த்.

மோடிக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது; அவருக்கு மனநல சிகிச்சை தேவை; அவர் உணர்வற்றவர்-சரத் பவார்

"மோடிக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது; அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.",  என அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில் மோடியை கடுமையாக விமர்சித்து இருந்த சரத் பவார்.  மறுபடியும் அவ்வாறே மோடியை விமர்சித்துள்ளார், பவார்.

மத்தியப் பிரதேச மாநிலம் அலிபக் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பவார் பேசியதாவது:

குஜராத் கலவரத்தில் காங்கிரஸ் எம்.பி. ஜாபர் அலி உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டபோது அங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள காந்திநகரில்தான் மோடி இருந்தார். ஆனால், ஜாபர் அலி வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லக் கூட்ட மோடி முற்படவில்லை. இப்படி உணர்வற்ற ஒரு தலைவர் பல்வேறு சாதிகளையும், மதங்களையும் சேர்ந்த மக்களை எப்படி பாதுகாப்பார்?

மேலும் அவர் கூறுகையில், "தேர்தல் முடிவதற்கு முன்னரே பாஜக பிரதமர் வேட்பாளரை அறிவித்துள்ளது. இது முறையல்ல. தேர்தலுக்குப் பின்னர் தனிப் பெரும்பான்மை பெறும் கட்சியின் எம்.பி.க்கள் சேர்ந்தே பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வது மரபு" என்று பவார் தெரிவித்துள்ளார். 

மோடி பயணித்த ஹெலிகாப்டரின் 3 மணி நேர தாமதிற்கு விமான நிறுவனம்தான் காரணம்-மத்திய விமான போக்குவரத்து துறை


பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நேற்று மத்திய பிரதேச மாநிலம் பரேலி பொதுக் கூட்டத்தில் பேச திட்டமிட்டு இருந்தார். இதற்காக டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனியார் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவர் ஹெலிகாப்டரில் அமர்ந்த நிலையில் அது புறப்பட்டுச் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. 3 மணி நேரம் தாமதத்துக்கு பிறகே ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. அதுவரை அவர் ஹெலிகாப்டரிலேயே அமர்ந்து இருந்தார்.

இதன் காரணமாக மோடி தாமதமாக கூட்டத்துக்கு சென்று பேசினார். அதுவரை மக்கள் வெயிலில் அவதிப்பட்டனர். தாமதத்துக்கு வருத்தம் தெரிவித்து, பொது மக்களிடம் மன்னிப்பு கோரிய‌ மோடி இந்த தாமதத்துக்கு சதி காரணமா? என்று தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே ஹெலிகாப்டர் தாமதமாக புறப்பட்டதற்கு தனியார் விமான நிறுவனம்தான் காரணம் என்று மத்திய விமான போக்குவரத்து துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனம் ஹெலிகாப்டர் பயணம் செய்யும் இடம், நேரம் போன்ற சுற்றுப் பயண திட்டங்களை கடைசி நேரத்தில் தாமதமாகத்தான் கொடுத்தது. மேலும் பரேலி விமான நிலையம் விமானப்படை கட்டுப்பாட்டில் இருப்பதால் விமானப்படை அனுமதியும் கடைசி நிமிடத்தில்தான் பெறப்பட்டது. இதனால் ஹெலிகாப்டர் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. எனவே சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவனம் தான் தாமதத்துக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோனியாவின் சொத்து மதிப்பு ரூ.9 கோடி, அவரது பெயரில் எந்த சொந்த வாகனமும் இல்லை-வேட்பு மனுவில் தகவல்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவில் இணைக்கப்பட்டுள்ள சொத்து விபரம் குறித்த தகவலில், சோனியா காந்திக்கு ரூ.9.28 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.2.81 கோடி அசையும் சொத்துக்களாகவும், ரூ.6.47 கோடி அசையா சொத்துக்களாகவும் உள்ளன. இது கடந்த தேர்தலில் அவர் குறிப்பிட்டிருந்த சொத்து மதிப்பை விட 6 மடங்கு அதிகமாகும். அசையும் சொத்துக்களில் ரூ.85 ஆயிரம் ரொக்கமாகவும், ரூ.66 லட்சம் வங்கியிலும், ரூ.10 லட்சம் பாண்டு பத்திரங்களாகவும், ரூ.1.90 லட்சம் பங்குகளாகவும் உள்ளன. இதுதவிர, ரூ.82.20 லட்சம் மியூச்சுவல் பண்டுகளிலும், வருங்கால வைப்பு நிதியில் ரூ.42.49 லட்சமும், ரூ.2.86 லட்சம் தேசிய சேமிப்பு திட்டத்திலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ரூ.62 லட்சம் ஆபரண நகைகளாகவும் உள்ளன. அசையா சொத்துக்களில், தேராமண்டி கிராமத்தில் ரூ.4.86 கோடி மதிப்புள்ள நிலம், சுல்தான்பூர் கிராமத்தில் ரூ.1.40 கோடி மதிப்புள்ள நிலம் தவிர இத்தாலியில் ரூ.19.90 லட்சம் மதிப்பிலான பரம்பரை சொத்தும் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடைய 2012-13ம் ஆண்டு வருமான வரி கணக்கில், ரூ.14.21 லட்சம் வருமானம் வந்துள்ளதாகவும் அதில் ரூ.9 லட்சம் மகன் ராகுல் காந்திக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அவரது பெயரில் எந்த சொந்த வாகனமும் இல்லை.

கடந்த முறை சொத்துக்களின் மதிப்பு புத்தக மதிப்பின் அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டதாகவும், ஆனால் இந்த முறை நடப்பு சந்தை விலையின் அடிப்படையில் மதிப்பிடப்படுவதால் சோனியாவின் சொத்து மதிப்பு அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தி.மு.க. தலைவர் கருணாநிதி கைகாட்டும் நபரே இந்தியாவின் பிரதமராவார்-அன்பழகன்

தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தாமரைச் செல்வனை ஆதரித்து நேற்று இரவு நடந்த பிரச்சார பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.  தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

பாராளுமன்ற தேர்தல்களில் தி.மு.க.வின் கை எப்போது ஓங்குகிறதோ அப்போதெல்லாம் தமிழக மக்களுக்கு நன்மை விளையும், நீதி நிலைக்கும். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் தி.மு.க.வை தலையெடுக்க விடாமல் ஒடுக்க வேண்டும் என்ற முயற்சி நடக்கிறது. கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா ஒரு மாதத்திற்கு 1 ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுவதாக அறிவித்தார். ஆனால் 5 ஆண்டுகளுக்கு பின் அவருடைய வீட்டில் நடந்த சோதனையில் ரூ.66 கோடி பணம் சிக்கியது. பல்வேறு இடங்களில் அவருக்கு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது 40 தொகுதிகளில் வென்றால் ஜெயலலிதா இந்தியாவின் பிரதமராகலாம் என்று அ.தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள். இத்தகைய முயற்சிகளையெல்லாம் வென்று தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மகத்தான வெற்றி பெறும். தி.மு.க. தலைவர் கருணாநிதி கைகாட்டும் நபரே இந்தியாவின் பிரதமராவார்.

மதச்சார்பற்ற மத்திய அரசு அமைய தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். தர்மபுரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டபோது மக்களுக்கு புதியவர். தற்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றாக அறிமுகமானவர்.

தர்மபுரி தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வர அவர் கடந்த ஆண்டுகளில் பாடுபட்டுள்ளார். இந்த தொகுதியின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் அதிக அளவில் குரல் கொடுத்துள்ளார். அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அன்பழகன் பேசினார்.

காங்கிரஸ் கட்சியில் 10 ஆண்டு சாதனைகளை மக்கள் அறிவர்- சிதம்பரம்

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து தேவக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

10 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் என்ன செய்திருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு முன்பு பாஜக ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தது. பாஜகவிற்கு தமிழ் நாட்டில் பாதி இடங்களில் வேர் கிடையாது. ஆட்களும் கிடையாது. வடநாட்டில் வெற்றி பெற்றதை வைத்து 6 ஆண்டு காலம் ஆட்சி செய்தார்கள். அப்போது நினைவில் நிற்கும்படி எதையும் செய்யவில்லை. அந்த 6 ஆண்டு ஆட்சியையும் காங்கிரசின் 10 ஆண்டு கால ஆட்சியையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அவர்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டு வரவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில்தான் அது வந்தது. அந்த திட்டத்தில் யாரும் பட்டினி இல்லாமல் இருப்பதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. நாட்டில் வறுமை இருக்கிறது. ஏழைகள் இருக்கிறார்கள். ஆனால் யாரும் பட்டினியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நாள் ஒன்றுக்கு ரூ.80 கூலியில் தொடங்கி தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.148 வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு ஆண்டுதோறும் ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளேன். ஆனால் தமிழக அரசு உங்களுக்கு 148 ரூபாய் தருவது கிடையாது. பல இடங்களில் ரூ.65, ரூ.70, ரூ.75 என்று வழங்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. இது உங்களை வஞ்சிப்பதாகும். இதனால் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த ஆண்டிற்கு நிர்ணயம் செய்யப்பட்ட கூலியை அ.தி.மு.க அரசு தராதது அவர்களது குற்றமே ஒழிய பணம் இல்லை என்பது காரணம் அல்ல. செலவுக்கு வரம்புகள் கிடையாது. பணம் நாங்கள் தந்திருக்கிறோம். ஆனால் அவர்கள் உங்களுக்கு தருவது கிடையாது. பா.ஜனதா கட்சிக்கு இந்த திட்டத்தில் நம்பிக்கை கிடையாது. அந்த கட்சி மத்தியிலே தப்பித்தவறி ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்த திட்டத்திற்கு மூடு விழா நடத்தி விடுவார்கள்.

பா.ஜனதா ஆட்சியில் விவசாய கடனை ரத்து செய்தார்களா? காங்கிரஸ் ஆட்சியில் 2008–ம் ஆண்டில் நான் நிதி மந்திரியாக பொறுப்பேற்ற உடன் ரூ.68 ஆயிரம் கோடி விவசாய கடனை ரத்து செய்தேன்.

அதேபோல காங்கிரஸ் ஆட்சியில் நான் போட்ட உத்தரவில் நாடு முழுவதும் 27 லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இப்போது நடைபெறும் தேர்தல் உள்ளாட்சி தேர்தல் அல்ல. பாராளுமன்ற தேர்தல். இந்த தேர்தலில் எங்களுக்கு சவால் விடுவது பா.ஜனதா தான். ஆள் பலம் இல்லாமல் கட்சி பலம் இல்லாமல் எப்படி சவால் விடுகிறார்கள் என்றால் அதற்கு பின்னால் பண பலம் உள்ளது. அந்த கட்சியில் மிக மிக கொழுத்த பணக்காரர்கள், மொத்த வியாபாரிகள், பங்கு சந்தையில் பேரம் செய்யும் தொழில் அதிபர்கள், தங்கம் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்கள் ஆகியோரின் பலத்துடன் பா.ஜனதா கட்சி நமக்கு சவால் விடுகிறது. தமிழ் நாட்டில் பா.ஜனதா கட்சி 8 இடங்களில் போட்டியிடுகிறது. எந்த இடத்திலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. ஆணாதிக்கம் கொண்ட ஆர்.எஸ்.எஸ். பெற்ற பிள்ளை தான் பா.ஜனதா கட்சி.

இவ்வாறு  சிதம்பரம் பேசினார்.

ராகுல் காந்தி, 'வறுமை என்பது ஒரு மனநிலை' என்று கூறியுள்ளார். வாயில் தங்க கரண்டியுடன் பிறந்தவர்களுக்கு வறுமையின் வேதனை எப்படி தெரியும்?

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக‌ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:

பாஜக‌ பிரதமர் வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டவுடன், காங்கிரஸ் நண்பர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். என்னை எளிதாக தோற்கடித்து விடலாம் என்று கூறினர். பா.ஜனதாவுக்கு கூட்டணி கட்சிகள் கிடைக்காது என்றும் கூறினர். ஆனால், இன்று காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பா.ஜனதாவுக்கு புதிய கூட்டணி கட்சிகள் கிடைத்துள்ளன. மோடிக்கு குஜராத்தில் மட்டுமே செல்வாக்கு என்றும் கூறிப்பார்த்தனர். அதுவும் எடுபடவில்லை.

வலிமையான, ஸ்திரமான அரசு அமைக்க 300-க்கு மேற்பட்ட தொகுதிகளிலும், உத்தரபிரதேசத்தில் அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றியை தாருங்கள்.

பாராளுமன்றத்தில் 300-க்கு மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவுடன் பிரதமர் இருந்தால்தான், அவர் சொல்வதை உலகம் கேட்கும். வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியும்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, 'வறுமை என்பது ஒரு மனநிலை' என்று கூறியுள்ளார். வாயில் தங்க கரண்டியுடன் பிறந்தவர்களுக்கு வறுமையின் வேதனை எப்படி தெரியும்? தேர்வு நேரத்தில், மாணவன் பிரார்த்தனை செய்வது போல,  தேர்தல் நெருங்கும் போது தான்'ஏழை, ஏழை, ஏழை' என்று காங்கிரஸ் உச்சரித்துக்கொண்டிருக்கிறது. அதன்மூலம், ஏழைகள் தங்களை காப்பாற்றுவார்கள் என்று கருதுகிறது.

ஏழைகளுக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி, அரசு குடோன்களில் தானியங்களை அழுகிப்போக வைத்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், அதை ஏழைகளுக்கு வினியோகிக்க காங்கிரஸ் அரசுக்கு மனம் இல்லை. பிறகு, சாராய உற்பத்தியாளர்களுக்கு அந்த கெட்டுப்போன தானியங்களை அடிமாட்டு விலைக்கு விற்றது.

விவசாயிகள், ராணுவ வீரர்கள் ஆகியோரும் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கே பாதுகாப்பு இல்லை. விவசாயிகள், தங்களது எதிர்காலம் பாதுகாப்பற்றது என்று கருதி, தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

எனவே, இவற்றை எல்லாம் போக்கி, உங்களுக்கு சேவை செய்ய இந்த சேவகனுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். பா.ஜனதாவுக்கு ஓட்டு போடுங்கள்.

இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

திமுக நிறைய‌ இடங்களில் வெற்றி பெறுவது ‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா கதைதான்’-அழகிரி

நாமக்கல்லில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார் அழகிரி. கூட்டத்தில் தனிக்கட்சி தொடங்குவது குறித்து கட்சியினர் தங்களது கருத்துக்களை கூறினர். அதில் கட்சியினர் பலரும் தனிக்கட்சி தொடங்க வேண்டாம் என கருத்து தெரிவித்தனர். கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம், நாமக்கல் திமுக ஒன்றிய செயலாளர் பி.கணேசன் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனைத்து கட்சியை சேர்ந்தோர் ஆதரவு கேட்டு வருகின்றனர். யாருக்கு ஆதரவு என்பது குறித்து எனது ஆதரவாளர்களுடன் மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறேன். இன்னும் நான்கைந்து மாவட்டங் களில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளேன். தனிக்கட்சி தொடங்க மாட்டேன். அந்த எண்ணம் எனக்கு இல்லை. கட்சித் தலைமை என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு கருணாநிதியை சூழ்ந்துள்ள பலரது சூழ்ச்சியால் ஏற்பட்ட முடிவாகும்.

முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திச்செல்வனும், நானும் இணைந்து செயல்படவில்லை. பிரிந்துதான் செயல்பட்டோம். திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவது ‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா கதைதான்’ அதை அப்புறம் பார்ப்போம். எந்த கட்சி வெற்றி பெறும் என்ற ஜோசியம் எனக்குத் தெரியாது.

இவ்வாறு அழகிரி கூறினார்.

நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டனர்


நாகப்பட்டினம் கல்லாறு பகுதியைச் சேர்ந்தவர் மீனவர்கள் செல்வராஜ் மற்றும் அவரது மகன் கரண். இருவரும்  நேற்று டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட ஒரு படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துவிட்டு திரும்பும் போது டீசல் தீர்ந்து போனது. இதனால் இருவரும் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். அவர்கள் மீனவர்கள் 2 பேரையும் மீட்டு யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச்சென்றனர். நாளை அவர்களின் படகுக்கு உரிய டீசலை வழங்கி திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகவலை ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர் அருள்ராஜ் தெரிவித்தார்

குடியை விடுங்கள், உங்களை உற்றார் உறவினர் சகோதரர்கள் மதிப்பார்கள், மனவேதனையுடன் சொல்கிறேன்- பிரேமலதா

விழுப்புரம் அருகே கெடார் கிராமத்தில் அத்தொகுதி வேட்பாளர் உமாசங்கரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு விஜயகாந்த் மனைவி பிரேமலதா பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

நாளைய இந்தியாவைத் தீர்மானிக்கும் சக்தி இளைஞர்களாகிய உங்களிடம் உள்ளது. பெரும் ஊழலில் உள்ள திமுக, அதிமுகவை அகற்றும் வலிமை உங்களிடம்தான் உள்ளது. உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள். ஏற்கனவே விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் இம்மாவட்ட விவசாயிகளுக்கு தானே புயலினால் பாதிப்பு ஏற்பட்டது.

இக்கூட்டணி விவசாயிகளின் கூட்டணி. எல்லா மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பை உருவாக்கும் கூட்டணி. கடந்த 3 ஆண்டுகளாக எந்தத் திட்டத்தையும் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை. அவரது ஒரே சாதனை டாஸ்மாக் விற் பனையை உயர்த்தியதுதான். டாஸ்மாக்கில் குடித்துவிட்டு அம்மா உணவகத்தில் சாப்பிடுகிறார்கள். அதிலும் தரமான உணவு இல்லை.

அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் குடிபோதையில் பேசியதை பார்த்து, பிரேமலதா,"திருவிழாவில் ஆத்தா இறங்கிவிட்டாள் என்பார்கள். அதுபோல இப்போது உங்களிடம் டாஸ்மாக் அம்மா இறங்கிவிட்டார். இந்த அம்மாவிடம்இருந்து விடுபடுங்கள். அப்போதுதான் உங்களை உங்கள் உற்றார், உறவினர், சகோதரர்கள் மதிப் பார்கள். மனவேதனையுடன் சொல்கிறேன். நீங்கள் முதலில் இதிலிருந்து விடுபடுங்கள்” என்று பிரேமலதா பேசினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media