மோடியை எதிர்த்து விமர்சிப்பவர்களுக்கு தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் இடமில்லை என்றும், அவர்கள் பாகிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும் என்று பீகாரின் நவாடா தொகுதி வேட்பாளர் கிரிராஜ் சிங் கூறியிருந்தார். இதே போல், விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீண் டோகாடியா, முஸ்லீம்கள் இந்துக்கள் வாழும் பகுதியில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும் என கூறியிருந்தார். இந்த இரு கருத்துகளும், அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், மோடி தனது ட்விட்டர் வலைபக்கத்தில், "பொறுப்பற்ற அறிக்கைகளை ஆதரவாளர்கள் தவிர்க்க வேண்டும் என கனிவோடு கேட்டுக்கொள்வதாக" குறிப்பிட்டுள்ளார். மேலும், அத்தகைய வாக்குமூலங்களை தான் ஒரு போதும் ஆதரித்ததில்லை எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார். பாஜக நல்லாட்சி, வளர்ச்சி ஆகியனவற்றை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் கட்சியின் நலம்விரும்பிகள் பெயரில் வெளியாகும் இத்தகைய அறிக்கைகளால் பிரச்சாரம் திசை திரும்புவதாக மோடி குற்றம் சாட்டியுள்ளார்.