BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 16 May 2014

மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறோம்; தோல்விக்கு பொறுப்பேற்ற சோனியா, ராகுல்


மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்து இருக்கும் படு தோல்விக்குப் பொறுப்பேற்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் இருவரும் தெரிவித்தனர்.

இது குறித்து சோனியா கூறியதாவது: "மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம். புதிதாக அமையவுள்ள அரசுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்றுக் கொள்கிறேன்".

இதே போல் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து, இது மோசமான தோல்வி என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "தோல்விக்கான காரணம் குறித்து நிறைய யோசிக்க வேண்டும். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" எனவும் அவர் தெரிவித்தார்.

வதோதராவில் நரேந்திர மோடி வெற்றி உரை

பாஜகவின் வெற்றிக்குப் பின்னர்,  குஜராத் மாநிலம் வதோதராவில் நரேந்திர மோடி தனது முதல் உரையை ஆற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

"பாஜக முன்னிலை நிலவரங்கள் வெளியான உடனேயே பல்வேறு ஊடகவியலாளார்கள் என்னிடம் தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டனர். ஆனால், வதோதராவில்தான் முதலில் பேச வேண்டும் என விரும்பினேன். அதனாலேயே இங்கே உங்கள் முன் பேசுகிறேன்.

வதோதராவில் நான் 50 நிமிடம் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்தேன். ஆனால், எனக்கு ஆதரவாக பெரும் அளவில் வாக்களித்து, 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளீர்கள். வதோதரா சகோதர, சகோதரிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயக நடைமுறைகளை கருத்தில் கொண்டு மக்கள் இந்த தீர்ப்பை அளித்துள்ளனர் என்பதை உணர்கிறேன். புதிய சாதனையை படைக்க உதவிய வதோதரா மக்களுக்கு தலை வணங்குகிறேன்.

தேர்தலில் அதிக அளவில் மக்கள் வாக்கு அளித்துள்ளதற்கு தேர்தல் ஆணையத்தை பாராட்டியாக வேண்டும்.

காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சிக்கு முதல் முறையாக இந்திய மக்கள் மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ளனர். வலுவான கொள்கைகள் கொண்ட தேசியவாத கட்சிக்கு மக்கள் தனிப் பெரும்பான்மை அளித்துள்ளனர். இதற்காக இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தருணம் தேசத்துக்காக வாழ்ந்து சாதிக்க வேண்டிய தருணம், தேசத்துக்காக உயிர் நீக்கும் தருணம் அல்ல. எனவே, இந்திய தேசத்தில் நல்லாட்சி புரிவேன்.

மத்தியில் அமையவுள்ள அரசு, இந்திய மக்கள் அனைவருக்கும் சொந்தமான அரசு. ஒரு தனிப்பட்ட கட்சிக்கோ, ஒரு குறிப்பிட்ட மதத்துக்கோ சொந்தமானது அல்ல.

இந்த அரசு மக்களால், மக்களுக்காக, மக்களே உருவாக்கிய அரசு. இந்த அரசின் முக்கியத்துவம் நாட்டின் வளர்ச்சியிலேயே இருக்கிறது. நல்ல காலம் கனிந்துவிட்டது. எனது வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியையும் என் தேசப் பணிக்காக அர்ப்பணிக்கிறேன்"

இவ்வாறு நரேந்திர மோடி பேசியிருந்தார்.

இந்த தேர்தலின் ஹீரோக்களும் ஸீரோக்களும் !!!

சட்டம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் கபில் சிபல் தான் இரண்டு முறை வெற்றி பெற்ற சந்தினி ஷௌக் தொகுதியில் தோற்றார் .

பாஜகவின் ஆனந்த் குமார் காங்கிரசின் நந்தன் நிலகேனியை வீழ்த்தினார் .

லோக்சபா மீரா குமார் தோற்றார் .

கிரண் கெர் நான்கு முறை பாரளுமன்ற உறுப்பினரான் பவன் குமார் பண்சாலை வீழ்த்தினார் .

மத்திய அமைச்சர் குலாம் நபி அசாத் உதம்பூர் தொகுதியில் தோற்றார் .

ராஷ்ட்ரிய ஜனதா தல் கட்சியின் தலைவர் லாலுவின் மகள் மற்றும் மனைவி தோல்வியை சந்தித்தனர் .

ஆம் ஆத்மியின் வேட்பாளரான நகைச்சுவை நடிகர் பக்வாத் மன் வென்றார் .

ஆ.ராஜா நீலகிரியில் தோல்வியுற்றார் .

தனியாக போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங் பாஜகவிடம் தோல்வியுற்றார் .


போராட்ட வாழ்வின் அங்கமே தோல்விகளும் படிப்பினைகளும்தான்- வைகோ


மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், தொடர் தோல்விகளால் மனரீதியாகப் பலவீனம் அடைந்துள்ளீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ: ''போராட்ட வாழ்வின் அங்கமே தோல்விகளும் படிப்பினைகளும்தான். இடையறாது தோல்விகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து வெற்றிகளைப் பெற்ற மாவீரர்கள், மாமனிதர்களின் வரலாறுகள்தாம் என்னை இயக்கிக்கொண்டே இருக்கின்றன.

எந்தக் கட்டத்திலும், தோல்வியால் மனம் கலங்கியது இல்லை. மாறாக, தோல்விச் செய்தி கிடைத்தவுடன், அந்தக் கணத்திலேயே எழுந்து வேகமாகப் பணி ஆற்றத் தொடங்கிவிடுவேன்" என்றார்.

மேலும், 96 சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க. ஓர் இடத்தில்கூட வெற்றி பெறாததை சுட்டிக் காட்டியதோடு முழுமையாகத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, நிர்வாகக் குழுக் கூட்டத்தை நடத்த அரங்கத்தை ஏற்பாடு செய்ததையும் சுட்டிக்காட்டினார்.

திமுக அழுக்காக உள்ளது; அதை நீக்காவிட்டால், 2016 சட்டமன்ற தேர்தலிலும் படு தோல்வி தொடரும் -அழகிரி


மக்களவை தேர்தலில் திமுக தமிழகத்தில் 1 இடத்தில்கூட வெற்றி பெறாத நிலையில் இது குறித்து திமுக முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

பேட்டியில் மு.க.அழகிரி கூறியதாவது: "திமுக தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தால் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டிருக்காது.

திமுக கட்சி அழுக்காக உள்ளது. அழுக்காக இருக்கும் துணியை அழுக்கு நீங்க வெளுப்பது போல் திமுகவில் அடைந்துள்ள அழுக்கையும் நீக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே கட்சி மேலும் வளரும் இல்லாவிட்டால் 2016 சட்டமன்ற தேர்தலிலும் இதே நிலை தான் நீடிக்கும்.

அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு அக்கட்சி பணத்தை வாரி இரைத்ததே காரணமாகும்.

நான் கட்சியில் இருந்து வீண் பழி சுமத்தப்பட்டு நீக்கப்பட்டேன். அவ்வாறு நீக்கப்படாமல் இருந்திருந்தால் வேட்பாளர்கள் தேர்வு சிறப்பாக நடைபெற்றிருக்கும். குறிப்பாக தென் மண்டலங்களில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் நல்ல ஆலோசனைகளை கூறியிருப்பேன். திமுகவில் ஒருவர் மட்டுமே ஆல் இன் ஆல் அழகுராஜா போல் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இது கட்சிக்கு நல்லதல்ல".

இவ்வாறு அழகிரி கூறினார்.

மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து !

பாஜக தனிப்பெரும்பான்மை நோக்கி சென்று கொண்டுள்ளது . இதனால் மோடி தான் அடுத்த பிரதமர் என்று உறுதியாகிவிட்டது . இந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன .

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மோடியை தொடர்பு கொண்டு தன் வாழ்த்தை தெரிவித்தார் .


அருண் ஜெட்லி தோல்வி !!

பாஜக தனிப்பெரும்பான்மை நோக்கி பயணித்து கொண்டு இருக்கும் நிலையில் அந்த கட்சியின் அருண் ஜெட்லி அம்ரிசர் தொகுதியில் தோல்வியுற்றார் . அவரை எதிர்த்து போட்டியிட்ட அம்ரிந்தர் சிங் வெற்றி பெற்றார் . இது தான் ஜெட்லியின் முதல் தேர்தல் .

ஜெட்லி தான் அடுத்த நிதியமைச்சர்  என பாஜக தரப்பில் செய்திகள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்தியா வென்றது - டிவிட்டரில் மோடி !!

வததோராவில் வென்ற மோடி , வாரணசியிலும் வெல்லும் நிலையில் உள்ளார் . இந்நிலையில் டிவிட்டரில் இந்தியா வென்றுவிட்டது என்று டிவிட் செய்தார் . இந்த டிவிட் 20 நிமிடத்தில் 27,542 முறை ரிட்விட் செய்யப்பட்டது .




மோடி வடோதராவில் இமாலய வெற்றி !!

மோடி ( பாஜக )          -  827516
தேவ்ராம் (காங்கிரசு )              - 267581


மோடி இமாலய வெற்றி நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறார்  . 

இந்திய அளவில் மாநிலக் கட்சிகளில் அதிமுகவுக்கு தனிப் பெரும்பான்மை!


மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில், இந்திய அளவில் மாநிலக் கட்சிகளை எடுத்துக் கொண்டால், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியாகத் திகழ்கிறது. 

முற்பகல் 11.30 நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் அதிமுக 37 தொகுதிகளில் பெருவாரியான வாக்குகளில் முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்திய அளவில் மாநில கட்சிகளில் அதிமுகதான் தனிப் பெரும்பான்மை கட்சியாகத் திகழ்கிறது. 

தமிழகம் மற்றும் புதுவையில் காங்கிரஸ், பாமக, பாஜக கட்சிகள் தலா ஒரு தொகுதியில் முன்னணியில் இருக்கின்றன.

வைகோ பின்னடைவு !!

விருதுநகர் தொகுதி நிலவரம் !!

ராதாகிருஷ்ணன் (அதிமுக)   -    33,401
வைகோ ( மதிமுக )                -     18,882
ரத்தினவேலு  (திமுக )            -     16,956


தேர்தல் முடிவுகள் எதிரொலியாக, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளைக் கடந்து புதிய வரலாறு


மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை 9.45 மணியளவில் சென்செக்ஸ் 1267.62 புள்ளிகள் உயர்ந்து 25,173.22 என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது.

இதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 389.00 புள்ளிகள் உயர்ந்து 25,173.22 ஆக இருந்தது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெறும் வகையில் முன்னணியில் உள்ளது.

இதன் எதிரொலியாக, மும்பை பங்குச்சந்தையில் வரலாறு காணாத உச்சம் நிலவுகிறது.

மத்தியில் ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக கூட்டணி, நாட்டி அடுத்த பிரதமராகிறார் மோடி

முற்பகல் 10 மணி நிலவரப்படி, பாஜக கூட்டணி 306 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக மட்டும் தனித்து சுமார் 260 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதனால், தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை பாஜக வசப்படுத்தினாலும் ஆச்சரியமில்லை. இதையடுத்து, மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது மற்றும் நாட்டின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பது உறுதியாகிறது.

நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ் இந்தத் தேர்தல் படுதோல்வியைச் சந்திக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 72 இடங்களிலும், இதர கட்சிகள் 158 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, காலை 10 மணி நிலவரப்படி 37 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

2014 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நிலவரம்


2014 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்
இந்தியா‬ 10:03 am நிலவரம்
பாஜக கூட்டணி                                  303
காங்கிரஸ் கூட்டணி                          74
இடதுசாரிகள்                                      13
இதர கட்சிகள்                                    139
தமிழ்நாடு‬ / புதுவை 10:04 am நிலவரம்
அ. தி. மு. க                                        37
தி. மு. க                                                0
பா. ஜ. க                                                1
தே. தி. மு. க                                        0
பா. ம. க                                                1
ம. தி. மு. க                                          0
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media