BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 28 February 2014

ஐஎன்எஸ் சிந்து ரத்னா விபத்தில், மற்றவர்களைக் காப்பாற்றி விட்டு, உயிரை விட்ட இரண்டு கடற்படை அதிகாரிகள்


ஐஎன்எஸ் சிந்து ரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி இரண்டு கடற்படை அதிகாரிகள் , 32 வயதான 'லெப்டினென்ட் கமாண்டர்' கபிஷ் முவால் மற்றும் 30 வயதான மனோரஞ்சன் குமார் உயிர் இழந்துள்ளனர்.

முவாலின் சகோதரர் ஆசிஷ் இதுகுறித்துக் கூறுகையில், "எனது சகோதரர் போரில் இறந்திருந்தால் கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் இப்படி உயிரிழந்திருப்பது பெரும் வருத்தமாக உள்ளது. இந்தக் கப்பல் மிகவும் குறைபாடுகளுடன் இருப்பதாக என்னிடம் முவால் பலமுறை கூறியுள்ளார் . எல்லோருக்குமே இது தெரியும். கடைசி முறையாகத்தான் இந்தக் கப்பலை சோதிக்க அனுப்பினர். ஆனால் அது இருவரின் உயிரைப் பறித்து விட்டது." என்று வருத்தத்துடன் கூறினார் .

கப்பலில் இருந்த ஒரு பேட்டரியில் ஏற்பட்ட கசிவுதான் தீவிபத்துக்குக் காரணம் என்கிறார்கள். மேலும் முவால் மற்றும் குமார் ஆகியோர் இருந்த அறைக்குள் தீயை அணைக்க வைத்திருக்கும் தீத்தடுப்பான் கருவியிலிருந்து வெளியான விஷ வாயுவும் அறைக்குள் புகுந்து விட்டதால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தீ மற்றும் விஷவாயுவும் பரவியதைத் தொடர்ந்து, முவாலும், குமாரும் தங்களது அறைக்குள் இருந்தவர்களை வேகமாக வெளியே தள்ளிக் காப்பாற்றியுள்ளனர். வேறு யாரும் உள்ளே சிக்கியுள்ளனரா என்றும் பார்த்துள்ளனர். அப்போதுதான் இவர்கள் இருவரும் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

கடற்படை வீரர்களின் உயிர் தியாகத்திற்கு 'சல்யூட்' செய்ய விரும்புவோர்கள், லைக் போடுங்கள்!

கொழும்புவில் விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்': வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலை - கொந்தளிக்கும் வைகோ


விஜய் டிவி சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்துவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் செயல் என்று மதிமுக கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஜெனீவாவில் மனித உரிமைக் கவுன்சிலில் நியாயம் கிடைக்க தாய்த் தமிழகத்திலும், தரணியெங்கும் நீதிக்கான முழக்கம் எழுந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சிங்கள ராஜபக்சே அரசு வஞ்சகமான வேலையைச் செய்கிறது. கொடியவன் கோத்தபய ராஜபக்சே கூட்டம் பின்னணியில் செய்திருக்கிற ஏற்பாட்டில் இலங்கையில் இசை நிகழ்ச்சி என்ற பெயரில் மார்ச் 1-ஆம் தேதியும், 2-ஆம் தேதியும் உலக நாடுகளை ஏமாற்றும் வேலைக்கு ஏற்பாடாகி உள்ளது.

ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகளை மறைப்பதற்காக நரித் தந்திரத்தோடு இந்த இசைவிழாவை நடத்துகிறார்கள்.
இந்நிலையில் கொழும்பில் சிங்களவன் நடத்தும் கேளிக்கைக் கொண்டாட்டங்களில் தமிழ்நாட்டு இசைக் கலைஞர்களைப் பங்கேற்க வைப்பதன்மூலம் தாய்த் தமிழகத்தில் சிங்கள அரசுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று வெளி உலகத்திற்குச் சொல்வதற்காகவே இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது.

ரோமாபுரி பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்ததுபோல விஜய் தொலைக்காட்சி இசைக் கலைஞர்கள் அங்கு பாடப் போகிறார்களா? ஈழத் தமிழர்கள் எழுப்பிய மரண ஓலம் இன்னும் அங்கு காற்றில் கலந்துதான் இருக்கிறது. காயப்பட்டுப் போன தமிழர்கள் மனங்களில் நெருப்பைப் போடும் வேலையில் விஜய் தொலைக்காட்சி ஈடுபட வேண்டாம்.

மார்ச்1 மற்றும் மார்ச் 2 ஆகிய தேதிகளில் சிங்கள அரசின் பின்னணியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிகளில் விஜய் தொலைக்காட்சியில் பாடுகின்ற இசைக்கலைஞர்கள் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

உலகில் இசைக் கலையை முதலில் தந்தவர்களே தமிழர்கள்தான். இசைக்கலைஞர்கள் மீது நான் மிகுந்த மதிப்பு கொண்டிருக்கிறேன். எனவே, அவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கண்டிப்பாகப் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்காக மேற் கொள்ள இருக்கும் இசைக் கலைஞர்களின்  இலங்கை பயணத்திற்கு, மாணவ அமைப்பினர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் எளிய மக்கள் கட்சி யாக மாறும் ஆம் ஆத்மி கட்சி - எ.ம.க.வில் இணைந்த சுப.உதயக்குமார் அறிக்கை



அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் எளிய மக்கள் கட்சியில் (AAP) இணைகின்றனர்

10 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் இல்லத்தை காலி செய்ய தயாராகும் மன்மோகன் சிங்


பிரதமர் மன்மோகன் சிங், தற்போது டெல்லியின் ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள பிரதமருக்கான‌ அதிகாரபூர்வ இல்லத்தில் வசித்து வருகிறார். வரும் நாடாளுமன்ற தோ்தலுக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ள பிரதமர் மன்மோகன் சிங், தற்போது குடியிருக்கும் பிரதமர் இல்லத்தை காலி செய்துவிட்டு, மோதிலால் நேரு பிளேஸ் பங்களாவுக்கு குடியேற தயாராகி வருகிறார்.

இந்த பங்களாவில் தான் டெல்லியின் முன்னாள் முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் வசித்து வந்தார். இந்த பங்களாவை, மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நான்கு படுக்கைகள் கொண்ட இந்த மிகப்பெரிய பங்களாவில், மன்மோகன் சிங் குடியேற உள்ளதால், பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருகிறது.

ஓட்டுக்கு பணம் வாங்கினாலும், கொடுத்தாலும் 1 வருடம் சிறை தண்டனை


பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறியதாவது:

தேர்தல் நேரத்தில் ஓட்டு போட பணம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம். பணம் கொடுப்பதும், வாங்குவதும் வீடியோ ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு ஒரு வருடம் ஜெயில் தண்டனை வழங்கப்படும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை, வாங்குவதை தடுக்க பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். திரை அரங்குகள், போஸ்டர்கள், அறிவிப்பு பலகைகள், தொலைக்காட்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். பறக்கும் படைகள் அமைக்கப்படும். பணம் கொண்டு செல்வதை தடுக்க இந்த பறக்கும் படைகள் பயன்படுத்தப்படும். பதட்டமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். 30 சதவீத வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் பொது மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களிலும், சுவர்களிலும் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் பொது இடங்களில் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. தனியார் இடங்களில் அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம். தமிழ்நாட்டில் ஓரே கட்டமாக தேர்தல் நடத்தும்படி அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதை தலைமை தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்துள்ளோம். தேர்தல் தேதி அறிவிக்கும் போதுதான் எத்தனை கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்பது தெரியும். பொது இடங்களில் அரசியல் கட்சியின் சின்னங்கள் இருந்தால் தேர்தல் விதிகளின்படி மூடி மறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நிருபர்களிடம் கூறினார்.

மோடியை ஆண்மையற்றவர் என்றழைத்த சல்மான் குர்ஷித், தான் ஆண்மை உள்ளவர் என நிரூபிப்பாரா?




 உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், '2002'ம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்தபோது நரேந்திரமோடி அங்கு போனாரா? கலவரத்தை ஏன் தடுக்கவில்லை? கலவரக்காரர்களை தடுக்க முடியாத அவர் ஆண்மை அற்றவர். வலிமையானவராக இருந்திருந்தால் நிச்சயம் கலவரத்தை தடுத்து இருப்பார்' என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பாஜக‌ மத்தியில் மட்டுமல்ல, ராகுல் காந்தியே கூட சல்மான் குர்ஷித்திற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். ஆனாலும், தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கோரப் போவதில்லை என தெரிவித்தார் சல்மான் குர்ஷித். மேலும், நரேந்திரமோடியை 'ஆண்மை அற்றவர்' என்று நான் கூறியதில் எந்த தவறும் இல்லை என்று அவர் கூறினார்.


இந்நிலையில், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, சல்மான் குர்ஷித் விமர்சனம் குறித்துக் கூறுகையில், ‘மோடியை ஆண்மையற்றவர் என விமர்சித்த குர்ஷித் தான் அவ்வாறு இல்லை என்பதை நிரூபிப்பாரா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

போராடி எதையும் சாதிக்க முடியவில்லை, ஆம் ஆத்மி கட்சியில் இணைகிறோம், இது ஒரு புதிய துவக்கம் - சுப.உதயக்குமார் அறிக்கை

போராடி எதையும் சாதிக்க முடியவில்லை, போராட்டத்தை மக்களிடம் கையளிக்கிறோம், நாங்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைகிறோம், இது ஒரு புதிய துவக்கம் - சுப.உதயக்குமார் அறிக்கை

'கோச்சடையான்' இசையை மார்ச் 9 அன்று வெளியிட போகும் மாபெரும் நடிகர்..


கோச்சடையான் இசை வெளியீட்டு விழா மார்ச் 9ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொண்டு, இசையை வெளியிட போகிறவர், அமிதாப் பச்சன். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ரஜினிகாந்த் சொந்தக் குரலில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். இந்த படத்தின் முழுப் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

கோச்சடையான்' இசை வெளியீட்டு விழாவில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சிறப்பு விருந்தினராக நடிகர் அமிதாப் பச்சன் கலந்துக் கொள்ள இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஜாக்கி ஷராப், ஷோபனா, ருக்மணி மற்றும் பலர் நடித்து இருக்கும் இப்படத்தில், ஷோபனாவும், ரஜினியும் இணைந்து நடனமாடும் போட்டிப் பாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

ஐந்து இந்தியர்களை உயிருடன் புதைத்தோம், சவுதி நீதிமன்றத்தில் 3 குற்றவாளிகள் வாக்குமூலம்


2010ம் ஆண்டில், சவுதி அரேபியாவில் உள்ள காதிப் பகுதியில் இருக்கும் பண்ணை ஒன்றில் குழி தோண்டியபோது அதில் 5 எலும்புக்கூடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் மற்றும் சிலரை கைது செய்தனர்.

 கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவர் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். இது குறித்து ஒருவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

5 ஊழியர்கள் கைகள் கட்டப்பட்டு பண்ணை வீட்டு வரவேற்பு அறையில் இருப்பதை நாங்கள் பார்த்தோம். அப்போது என்னுடன் இருந்த நண்பர் அவர்களின் கைகள் ஏன் கட்டப்பட்டுள்ளது என்று எங்களுக்கு விருந்து அளித்தவரிடம் கேட்டார். அதற்கு அவர், அநத் 5 பேரில் ஒருவர் ஸ்பான்சரின் மகள் மற்றும் சில பெண்களுடன் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

நான் அந்த 5 இந்திய ஊழியர்களை பார்த்தபோது அவர்களின் கைகள் கட்டப்பட்டு அவர்கள் சுயநினைவின்றி இருந்தனர். நாங்கள் பக்கத்து அறைக்கு சென்று மது அருந்தினோம். அப்போது ஒருவர் கத்தும் சத்தம் கேட்டு வந்து நான் அவரை கன்னத்தில் அறைந்தேன். அதன் பிறகு என்னுடன் வந்த நண்பர் அந்த ஊழியரை கம்பால் அடித்தார். அவருக்கு ரத்தம் வரும் வரை அடித்தார். உடனே அந்த 5 பேரையும் வேறு ஒரு அறைக்கு கொண்டு சென்று நாங்கள் 3 பேரும் சேர்ந்து அவர்களை அடித்து நொறுக்கினோம். நாங்கள் மது அருந்திக் கொண்டும், புகைபிடித்துக் கொண்டும் அவர்களை அடித்தோம். உடனே எங்களுக்கு விருந்து அளித்தவர் பண்ணை நுழைவாயிலில் உள்ள கேட்டுக்கு பின்னால் இருக்கும் குழியில் அந்த 5 பேரையும் உயிருடன் புதைத்துவிடலாம் என்றார். இதையடுத்து அவர்களின் கை, கால்களை கட்டி, வாயில் டேப் ஒட்டி குழியில் உயிருடன் புதைத்தோம். அப்போது அவர்களின் ஐ.டி. கார்டுகளையும் குழியில் போட்டுவிட்டோம். காலை தொழுகைக்கு நேரம் ஆனதால் நானும், என் நண்பரும் சென்றுவிட்டோம் என்றார்.

தி.மு.க.வின் கூட்டணி கதவுகள் மூடப்பட்டு விட்டன.. இனிமேல் எந்த ஒரு கட்சிக்கும் அழைப்பு கிடையாது- ஸ்டாலின்



லோக்சபா தேர்தலுக்கான தி.மு.க.வின் கூட்டணி கதவுகள் மூடப்பட்டு விட்டன.. இனிமேல் எந்த ஒரு கட்சிக்கும் அழைப்பு கிடையாது என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் நேற்று பல்வேறு கட்சிகளில் இருந்து 4 ஆயிரத்து 806 பேர் விலகி,  தி.மு.க.வில் இணையும் விழா நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

திருச்சியில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு மற்றவர்கள் தி.மு.க மீது கொண்டிருந்த கண்ணோட்டம் மாறிவிட்டது. தி.மு.க.வின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்திருப்பதை திருச்சி மாநாடு உறுதி செய்துள்ளது. தி.மு.க. தற்போது 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணலை நடத்தி முடித்துள்ளது. நேர்காணலின் போது கலந்துகொண்ட தி.மு.க.வினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக தெரிவித்த கருத்து, தி.மு.க. கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும். அதற்கு தி.மு.க தற்போது அமைத்துள்ள கூட்டணியே போதுமானதாகும் என்பதுதான். எனவே தி.மு.க.வின் கூட்டணி கதவுகள் மூடப்பட்டு விட்டது. இனிமேல் எந்த கட்சிக்கும் அழைப்பு கிடையாது.

சென்னையில், கையெழுத்து வளர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய டென்டுல்கர்


நேற்று முன் தினம், சென்னையில் ரெனால்ட்ஸ் நிறுவனத்தின் ‘ரைட்விஸ்’என்ற கையெழுத்து வளர்க்கும் திட்டத்தை சச்சின் டென்டுல்கர்  தொடங்கி வைத்தார். அப்பொழுது அவர் பேசியதாவது:

நான் சிறு வயதில் வெளியூரில் தங்கியிருந்த காலங்களில் எனது பெற்றோருக்கு கடிதம் எழுதுவேன். எனது மனைவி அஞ்சலிக்கும் கடிதங்களை எழுதியிருக்கிறேன். அது மிகவும் சுவாரசியமான அனுபவம். எழுதுவதும் கிரிக்கெட் விளையாடுவதும் ஒரே மாதிரிதான். இரண்டுக்கும் முறையான பயிற்சி தேவை, சரியான நுணுக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும். இரண்டிலும் போதிய பயிற்சி இருந்தால்தான் தன்னம்பிக்கையுடன் செயலில் இறங்க முடியும். கணினி பயன்படுத்துவதை விட எழுதும் போது நிறைய தகவல்கள் ஆழ் மனதில் பதியும் என்றார்.

மேலும் அவர் பேசிய போது, தனது மனைவியின் கையெழுத்து மிகவும் அழகானது, பார்ப்போர் அனைவரும் அவரது கையெழுத்தை ரசிப்பர் என்று கூறினார். கிரிக்கெட் விளையாடும் போது, பந்தை அடிக்கும் திறன் தனக்கு இயற்கையாகவே வந்துவிட்டது என்றும், ஆனால் அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது, தகவல் தொழில்நுட்பம் இந்தளவுக்கு வளராத காலத்தில், மனைவிக்கு தன் கையால், கடிதங்கள் எழுதுவது என்பது தான் என்று அவர் கூறினார். கிரிக்கெட் ஆட்டக்காரர்களில், அணில் கும்ப்ளேவிற்கு, கையெழுத்து அழகாக இருக்கும் என்று அவர் கூறினார்.

ஜெயலலிதாவை சந்தித்ததற்காக, பாமகவை விட்டு நீக்கப்பட்ட எம்.எல்.ஏ


பா.ம.க வை சேர்ந்த எம்.எல்.ஏ அணைக்கட்டு கலையரசுவை அக்கட்சியில் இருந்து நீக்கியதாக, பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ம.கலையரசு, தொகுதியில் உள்ள கட்சியினருக்கு விரோதமாகவும், கட்சி வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்பட்டு வந்ததுடன், கட்சியின் கட்டுப்பாடடை மீறியும், கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதால், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பசுமை நாயகர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ம.கலையரசு நீக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media