BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 1 March 2014

டாக்டர் இப்படிச் செய்வார்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. ஜெ.வை சந்தித்ததற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாமக எம்.எல்.ஏ அதிர்ச்சி


அணைக்கட்டுத் தொகுதி பாமக எம்.எல்.ஏ. கலையரசு, சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். தொகுதி சார்ந்த குறைகள், பணிகள் தொடர்பாக முதல்வரைச் சந்தித்ததாகவும் அவர் கூறியிருந்தார். இந்த சந்திப்புக்கு பிறகு, உடனடியாக பாமக வை விட்டு நீக்கப்பட்டார் கலையரசு.

இதனால் அதிர்ச்சியடைந்த கலையரசு இதைப் பற்றி கூறுகையில், "என் தொகுதியில் தாலுகா அலுவலகம் வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதன்படி முதல்வர் ஜெயலலிதா அமைத்துக் கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கவே அவரை நான் சத்தித்தேன். அப்போது அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்துவிட்டு வந்தேன். ஆனால், என்னை பாமகவில் இருந்து நீக்கிவிட்டனர். இதைக் கேள்விப்பட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவாக செயல்படுவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை." என்று தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையானை மொட்டை அடித்து தரிசனம் செய்து விட்டு, மலைப்பாதையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட பக்தர்


திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, மலைக்கு செல்லும் வாகன பாதையில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி பிணமாக கிடந்தார். அவரது சட்டைப்பையில் ஒரு துண்டு சீட்டில் இருந்த போன் நம்பரை வைத்து போலீஸ் விசாரித்த போது, அதில் அவர் திருவண்ணாமலையை சேர்ந்த சதீஷ் (வயது 26) என்பது தெரியவந்தது.

இவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. பிணத்தை மீட்டு திருமலை அஸ்வினி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து சதீஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா அறிவித்து இருக்கும் 8 வன்னிய வேட்பாளர்களையும் திரும்ப பெற வேண்டும் - ராமதாஸ்



கடலூர் மாவட்டத்தில்வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக மகளிர் அரசியல் எழுச்சி மாநாட்டில் பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், "கடலூர் உட்பட 10 தொகுதிகளில் பாமக தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஜெயலலிதா வன்னிய சமுதாயத்தினருக்கு எதிராக செயல்படுகிறார். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் 8 பேர் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அறிவித்துள்ளார். வன்னியர்களை அறவே வெறுக்கும் ஜெயலலிதா, தான் அறிவித்துள்ளள 8 வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்களைத் திரும்பப் பெற வேண்டும். அதிமுக சார்பில் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை நிறுத்தி போட்டியிட வேண்டும்." என்று கூறியுள்ளார்.

7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்த‌ மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் நாளை கூட்டம்


ராஜீவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, சென்னை மெரினா கடற்கரையில் நாளை நடைபெறும் கண்டன போராட்டத்தில் கலந்து கொள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1991 மே 21-இல் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தில் துளியளவும் தொடர்பில்லாத குற்றமற்ற நிரபராதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் 23 ஆண்டுகள் சிறையில் அவதியுற்றனர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432-ஆவது பிரிவின்கீழ் ஆயுள் தண்டனையைக் குறைத்து விடுவிக்கவும் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி ஏழு பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து அதைத் தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி அறிவித்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏழு பேரையும் விடுதலை செய்வதற்குத் தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

23 ஆண்டுகள் சிறைச்சாலையில் துன்புற்ற ஏழு பேரையும் விடுதலை செய்வது மனிதாபிமான நடவடிக்கை ஆகும். ஆனால், அத்தகைய மனிதநேய எண்ணமின்றி தமிழ்க்குல மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வரும் மத்திய காங்கிரஸ் அரசின் போக்கைக் கண்டிக்கும் வகையிலும் ஏழு தமிழர்களையும் சிறையிலிருந்து விடுவிக்கக் கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகில் மார்ச் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு மக்கள் பெருந்திரள் ஒன்றுகூடல் நிகழ்வை மே பதினேழு இயக்கம் முன்னெடுத்து நடத்துகின்றது.

அந்த நிகழ்ச்சியில் மனிதஉரிமை ஆர்வலர்களும், ஈழத் தமிழ் உணர்வாளர்களும், மாணவச் செல்வங்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்".

இவ்வாறு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கணவரால் எரித்து கொல்லப் பட்ட பெண், ராகுல் காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்கிறது அசாம் போலீஸ்


ராகுல் காந்தி அசாம் சென்றிருந்த போது, அவரை முத்தமிட்ட பெண், கணவரால் எரித்து கொல்லப்பட்டார் என்ற செய்தி இன்று காலை வெளியாகி இருந்தது. அந்த பெண் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தான் என்றும் ஆனால் அவர் ராகுல் காந்தியை முத்தமிடவில்லை மற்றும் அவர் ராகுல் இருந்த இடத்தில் கூட அவர் இல்லை என்றும் அசாம் போலீஸ் தெரிவித்துள்ளனர்.

எரித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கும், அவர் கணவருக்கும் இடையே தொடர்ந்து நடந்து வந்த தகராறுகள் காரணமாக கூட அவர் இறந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அந்த பெண்ணின் கணவருக்கும், 40% தீக்காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது  என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெயலலிதாவை பார்த்து ஆசி பெற்ற கையோடு, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரைந்த‌ அதிமுக வேட்பாளர்கள், பின்னணியில் இருக்கும் காரணம்..


அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், நேற்றைய தினம் அமாவாசை என்பதால்,  சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை தனித்தனியாக சந்தித்து ஆசி பெற்றனர். இதை தொடர்ந்து, வேட்பாளர்களில் ஒரு குழுவினர், மொத்தமாக திருப்பதிக்கு படை எடுத்து சென்றனர்.

இதன் காரணம் என்னவென்று விசாரித்த போது, வேட்பாளர் பட்டியலில் எந்த மாற்றங்களும் வர கூடாது, அம்மா மனம் மாறி விடக் கூடாது, வேட்பாளர் பட்டியலிலிருந்து தங்களது பெயர்கள் நீக்க பட‌க் கூடாது, கூட்டணிக் கட்சிக்கு நமது தொகுதியை ஒதுக்கி விடக் கூடாது என்று ஏழுமலையானிடம் வேண்டிக் கொள்ளவே இந்தப் பயணத்தை மேற்கொண்டனராம் என தெரிய வந்தது.

சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் வாங்க, ஒவ்வொரு முறையும் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை எடுத்து செல்ல தேவையில்லை. சென்னை இ-சேவை மையங்களில் புதிய வசதி


சென்னையில் 14 இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் ஒரு முறை தங்கள் சான்றிதழ்களை சமர்பித்து ஒரு பிரத்யேகமான எண்ணை பெற்ற பிறகு, அதை பயன்படுத்தியே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், விதவைகளுக்கான சான்றிதழ், மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், உள்ளிட்டவைகளை ஒரே இடத்தில் பெறலாம். இன்னும் சில நாட்களில் தண்ணீர் வரி, சொத்து வரி, மின்சார கட்டணம் உள்ளிட்டவைகளையும் செலுத்தலாம். மயிலாப்பூர் மையத்தில் தற்போதிலிருந்தே வரி மற்றும் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த மையங்கள் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை இயங்கும்.

தற்போது எழும்பூர்-நுங்கம்பாக்கம், மாம்பலம்-கிண்டி, மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி தாலுகா அலுவலகங்களிலும், அடையார், அண்ணா நகர் மற்றும் பேசின் பிரிட்ஜ் மண்டல அலுவலகங்களிலும், சைதாப்பேட்டை, அசோக் நகர் சென்னை குடிநீர் அலுவலகங்களிலும், ஆறு நகர்ப்புற கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களிலும் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த இ-சேவை மையங்களில் விண்ணிப்பதாரர் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, உள்ளிட்ட தங்களது சான்றுகளின் அசலை தர வேண்டும். அவை ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் ஏற்றப்பட்டு, பின்பு பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்கள் கணினியில் அலுவலரால் பதிவு செய்யப்படும். பிறகு 13 இலக்கு கொண்ட கேன் (CAN) எண் தரப்படும். இந்த கேன் எண்ணைக்கொண்டு வேண்டிய சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும், இது போன்ற மையங்கள் ஆரம்பிக்கப்பட்ட பிறகு, கேன் எண்ணைப் பயன்படுத்தி எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த சான்றிதழையும் பெற்றுக் கொள்ளலாம்.

ராகுல் காந்தியை முத்தமிட்ட பெண்ணை அவரது கணவரே எரித்து கொன்ற கொடூரம்.

அஸ்ஸாமில் ராகுல் காந்தியை முத்தமிட்ட பெண்ணை அவரது கணவரே எரித்து கொன்ற கொடூரம்.

இன்று மு.க. ஸ்டாலின் பிறந்தநாள், 7 மாணவ-மாணவிகள் உள்பட 22 பேருக்கு மடிக்கணினிகள்


திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் இன்று தனது 62வது பிறந்த நாளையொட்டி திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து பெற்றார். மனைவி துர்கா ஸ்டாலின், தாயார் தயாளு அம்மாள், சகோதரி செல்வி உள்ளிட்டோர் முன்னிலையில் கேக் வெட்டினார்.  இன்று காலை 8 மணி முதல், தொண்டர்களிடம் வாழ்த்துக்களை பெற்றவாறு வருகிறார்.

தி.மு.க. இலக்கிய அணி சார்பில் பிராட்வேயில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற அரங்கில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சிறந்த இளைஞர்களுக்கு விருது வழங்குதல் மற்றும் கருத்தரங்கம் நடக்க உள்ளது. தி.மு.க. தலைமை இளைஞர் அணி துணைச்செயலாளர் செந்தில்குமாருக்கு "சிறந்த இளைஞர்" எனும் விருது வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, "தலைவர் கலைஞர் வழியில் தளபதி" என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.

மேலும் ,அவரது பிறந்தநாளையொட்டி முகநூல் (பேஸ்புக்) மூலம் சிறப்பான கருத்துக்களை எடுத்துரைத்த 7 மாணவ-மாணவிகள் உள்பட 22 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் நடந்தது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கினார்.

கொழும்புவில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை- விஜய் டிவி


விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை, கொழும்புவில் நடத்தப்போவதாகவும், இதில் அந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற சோனியா, திவாகர் உள்ளிட்டோர் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து விஜய் டிவி மற்றும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்த கலைஞர்களுக்கு கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனங்கள் கிளம்பியது.

இது குறித்து, விஜய் டிவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதிலும், தமிழ் மண்ணின் மாண்பை நிலை நிறுத்துவதிலும் என்றென்றைக்கும் உறுதியான நிலைப்பாடுகளுடனே இருந்திருக்கிறது விஜய் டிவி. இனிமேலும் இருக்கும். உலக அளவில் தமிழர்களின் பெருமையையும், திறமையையும் முன்னிறுத்துவதை தன் முதல் கடமையாக வைத்திருக்கிறது. இதனாலேயே விஜய் டிவியின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் உலகத் தமிழர்களின் அன்பும், ஆதரவும் பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி குழுமம் பற்றி வருகிற சில உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறோம். மார்ச் 1-2 தேதிகளில் இலங்கையில் நடக்கிற இசை நிகழ்ச்சிக்கும், விஜய் தொலைக்காட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது மட்டுமல்ல, இதற்கு முன் விஜய் தொலைக்காட்சி இலங்கையில் எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்தியதும் இல்லை. விஜய் டிவி குறித்து இது போன்று வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. விஜய் டிவி எப்போதும் தமிழர்களின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு பொறுப்புடன் செயல்பட்டு வந்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்தல் வரை அம்மா திட்டத்தை தடை செய்யலாமா என‌ தேர்தல் ஆணையம் பரிசீலனை


தமிழக‌ முதல்வர் ஜெயலலிதாவை குறிக்கும் வகையிலான பெயரைக் கொண்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ்,  தமிழகத்தில் மூலை முடுக்குகளில் உள்ள மக்களுக்கு பல்வேறு அரசுத்துறைகளின் சேவைகள் அவர்களது பகுதிகளுக்கே சென்று வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்கள், பட்டா மாறுதல் மற்றும் பிற கோரிக்கைகள் உள்ளிட்ட 33.13 லட்சம் மனுக்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் இத்திட்டத்தை, தேர்தல் முடியும் வரை தடை விதிக்கலாமா என்று தேர்தல் ஆணையம் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது.

“இத்திட்டத்தினை வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் கூறும் என்றே தெரிகிறது." என்று வருவாய் துறை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

தேர்தல் அறிக்கைக்குப் பிறகு, இது பற்றி இறுதி முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

கொலையாளியை கண்டுபிடிக்க உதவிய பேசும் கிளி


ஆக்ராவில் உள்ள இந்தி பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியர் விஜய் ஷர்மா என்பவரின் மனைவி நீலம் என்பவர், பிப்ரவரி 20ம் தேதி கொலை செய்யப்பட்டு, தனது வீட்டில் பிணமாக கிடந்தார். போலீசார் கொலையாளியை தேடி வந்த நிலையில், ஷர்மாவின் உறவுக்கார பையன் அஷுதோஷ் என்பவர், வீட்டினுள் வரும் போதெல்லாம், நீலம் தன் வீட்டில் வளர்த்த கிளியின் நடத்தையில் வித்தியாசம் இருப்பதை கவனித்து வந்தார் விஜய் ஷர்மா.

அஷூதோஷ் கிளியின் கூண்டை கடக்கும் போதெல்லாம், கிளி பேச பயந்து அமைதி கொண்டிருந்ததாக ஷர்மா கூறினார். சந்தேகத்தின் பெயரில், கிளியிடம் ஒவ்வொரு பெயராக சொல்லி கொண்டே வரும்போது, 'அஷுதோஷ்' என்று கூறிய போது, "உஸ்னே மாரா.. உஸ்னே மாரா (அவன் தான் கொன்றான்)" என்று கிளி கத்தி இருக்கிறது.இது பற்றி, போலீஸிடம் தெரிவித்த போது, அஷுதோஷிடம் விசாரணை நடத்தின‌ர். அவரும், பணத்திற்கு ஆசைப்பட்டு தான் நீலத்தை கொலை செய்ததை போலீசிடம் ஒப்பு கொண்டார்.

இவ்வழக்கில், கொலையாளியை கண்டுபிடிக்க கிளி தான் பேருதவியாக இருந்தது என போலீசார் தெரிவித்தனர்.

சவுக்குக்கு தடைவிதித்த நீதிபதி பெயரிலேயே இணையதளம் ஆரம்பித்த சவுக்கு

சவுக்கு இணையதளத்தை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு - உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல உள்ளது சவுக்கு தரப்பு.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media