BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 20 May 2014

குஜராத் முதல்வர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் மோடி


நாட்டின் பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடி நாளை குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். 12 ஆண்டுகளாக குஜராத் முதல்வராக இருப்பவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு குஜராத் எம்.எல்.ஏ பதவியிலிருந்தும் விலகுகிறார் மோடி. தனது ராஜினாமா கடிதத்தை ஆளுனர் கமலா பெனிவலிடம் அளிக்கும் முன்னர் சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்கிறார் அங்கு அவருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.

நாளை மாலை 3.30 மணியளவில் அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார். அதன் பிறகு அடுத்த முதல்வரைத் தேர்வு செய்யும் பாஜக சட்டமன்றக் கட்சி கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார்.

அதிமுகவிற்கு கடுமையாக உழைத்த கோகுல இந்திரா, அவருக்கு வெகுமதியாக அமைச்சர் பதவி வழங்கும் ஜெயலலிதா


நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில், பல்வேறு கருத்துக்கணிப்புகள் மத்திய சென்னை தொகுதியை பொறுத்த வரையில்,  திமுக தான் வெற்றி பெறும் என்று தெரிவித்தபோதிலும், அ.தி.மு.க.வின் அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள கோகுல இந்திரா, தங்கள் கட்சி தலைமையின் நம்பிக்கையை பொய்யாக்காமல் கட்சிக்கு கடுமையாக உழைத்தார்.

மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தனது அண்ணா நகர் தொகுதியில் மட்டும் அதிமுகவுக்கு திமுகவை விட 22687 வாக்குகள் கூடுதலாக கிடைக்கும் வகையில் தீவிரமாக பணியாற்றினார். அதனாலேயே மத்திய சென்னை தொகுதியில் அ.தி.மு.க 45841 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது.

கோகுல இந்திராவின் இந்த தீவிர உழைப்பிற்கும், விசுவாசத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வெகுமதியாக,  அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பாதிரியாளர்களை நாங்கள் காதலிக்கிறோம்; திருமணம் செய்ய அனுமதியுங்கள்- போப் ஆண்டவருக்கு பெண்கள் கடிதம்


கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை. இந்த பழக்கம் கடந்த 1000 ஆண்டகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இத்தாலியை சேர்ந்த 26 பெண்கள் போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:

நாங்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவ மத பாதிரியார்களை காதலிக்கிறோம். அவர்களும் எங்களை மனமாற விரும்புகின்றனர். ஆனால் எங்களை திருமணம் செய்ய விடாமல் மத கோட்பாடு தடுக்கிறது.

இதனால் நாங்கள் கடும் துயருக்கு ஆளாகி இருக்கிறோம். அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. எனவே அவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதியுங்கள்.

உங்களின் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறோம். பல கஷ்டங்களில் தவிக்கும் அவர்களுக்கு மாற்றம் தாருங்கள். இதன் மூலம் அனைத்து தேவாலயங்களிலும் நல்லது நடக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

கடிதத்தில் தங்களின் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களை மட்டும் எழுதி கையெழுத்திட்டுள்ளனர். பல டெலிபோன் நம்பர்களையும் எழுதியுள்ளனர்.

இக்கடிதம் வாடிகன் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக நாடாளுமன்ற குழு தலைவராகவும், பிரதமராகவும் நரேந்திர மோடி தேர்வு


மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, நரேந்திர மோடி புதிய பிரதமராக தேர்வு செய்வதற்கான கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

இதில் பாஜக எம்.பி.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இவர்களைத் தவிர கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் துவங்கி வைத்தார். துவக்க உரையில், மோடியின் பிரச்சாரத்தாலேயே பாஜக அமோக வெற்றி பெற்றதாக புகழ்ந்தார்.

பின்னர், பாஜக நாடாளுமன்றக் குழு தலைவர் பதவிக்கு நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிந்தார். முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி உள்ளிட்ட தலைவர்கள் வழிமொழிய மோடி பாஜக நாடாளுமன்ற குழு தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுகவை வெற்றி பெற செய்த தமிழக மக்களுக்கு செல்போன்கள் மூலம் ஜெயலலிதா நன்றி அறிவிப்பு


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி கூறும் தொலைபேசி அழைப்பு, தேர்தல் முடிவு வெளியாக தொடங்கிய சில மணி நேரங்களில் இருந்தே பல லட்சம் பேருடைய செல்போனுக்கு வர தொடங்கியது.

அச்செய்தியில் முதல் அமைச்சர் ஜெயலலிதா, ‘‘நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கி உள்ள எனது அன்பார்ந்த தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய ஒரு மகத்தான வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கும், வாக்காளப் பெருமக்களுக்கும் மீண்டும் ஒரு முறை எனது இதயங்கனிந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார். , ‘வாட்ஸ் அப்’ மூலமும் இதுபோன்ற நன்றி அறிவிப்பு, அ.தி.மு.க.வின் பல லட்சம் தொண்டர்களையும் சென்று சேர்ந்துள்ளது.

வைகோவிற்கு கௌரவ பதவி அளிக்க பாஜக தலைவர்கள் ஆலோசனை

நரேந்திர மோடியை பிரதமராக தேர்வு செய்யும் கூட்டத்தில் பங்கேற்கும்படி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதையடுத்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ டெல்லி சென்றார். நேற்று அவர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தேர்தலில் வைகோ தோல்வி அடைந்தாலும் அவரை மேல்–சபை எம்.பி.யாக்க பாரதிய ஜனதா தலைவர்கள் திட்டமிட்டனர். பா.ஜனதா அரசு ஆளும் மாநிலத்தில் இருந்து அவரை தேர்வு செய்ய யோசனை கூறப்பட்டது. வைகோவின் நெருங்கிய நண்பரும், பஞ்சாப் முதல் அமைச்சருமான பிரகாஷ்சிங் பாதல் இதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் மேல் சபை எம்.பி.யாக வைகோ மறுத்து விட்டார். இருந்தாலும் வைகோவுக்கு மத்திய அரசில் கௌரவமான பதவி வழங்க பா.ஜனதா தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணி ஏற்பட வைகோ முக்கிய காரணமாக இருந்தார். அதோடு நாட்டில் மோடி அலை வீசுகிறது என்று முதன் முறையாக தனது பிரசாரத்தின்போது பிரகடனப்படுத்தினார்.

இது போன்ற காரணங்களினாலும், தமிழ்நாட்டில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அங்கம்வகிக்கும் கூட்டணி அரசு ஏற்பட வேண்டும் என்ற கருத்திலும் வைகோவுக்கு ஒரு பதவி அளிக்கப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி பதவியில் இருந்து விலகுவதாக கூறிய சோனியா, ராகுல்


காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே, ஏ.கே.அந்தோனி, ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகிக் கொள்வதாக சோனியாவும், ராகுல் காந்தியும் அறிவித்தனர்.

இதற்கு கட்சித் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மன்மோகன் சிங் பேசியபோது, “சோனியா, ராகுல் பதவி விலகுவது பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. தவறுகளைத் திருத்த வேண்டும். அரசு அதிகாரத்தைப் பொறுத்தமட்டில், தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். சோனியாவும், ராகுலும் முன்னின்று கட்சியை வழிநடத்த வேண்டும்” என்றார்.

அவரது கருத்தை உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டதால் சோனியா, ராகுல் தலைமை மீது முழு நம்பிக்கை வைப்பதாகவும் கட்சியை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முழு அதிகாரம் அளித்து கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

கூட்டத்தில் பேசிய மூத்த தலைவர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுவது காங்கிரஸுக்கு சவாலான பணியாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

காங்கிரஸ் படுதோல்விக்கு காரணம் விலைவாசி உயர்வு மற்றும் ஊழல்



மக்களைவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான‌ ஐக்கிய முற்போக்குக் கூட்டணி படுதோல்வியடைந்ததற்கு விலைவாசி உயர்வும், ஊழலும் காரணம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் மன்மோகன் சிங் இவ்வாறு கூறியதாக காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்தன் திவேதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மன்மோகன் சிங் கூறியதாவது:

"என்னுடைய ஆட்சியின் போதாமைகளுக்கு நான் முழுப்பொறுப்பேற்கிறேன். விலைவாசி உயர்வு, மற்றும் ஊழல் குறித்து மக்களிடம் நாம் சரியான முறையில் உரையாடவில்லை. இதனால்தான் இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளது.

சோனியா மற்றும் ராகுல் காந்தி இருவரும் செய்த பங்களிப்புகள், முயற்சிகள் மற்றும் அளித்த ஆதரவு அசாதாரணமானது."

இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

பிஹாரின் புதிய முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி

பிஹாரில் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, ஐக்கிய ஜனதா தளம் அரசின் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் ராஜினாமா செய்தார். இதையடுத்து அதே கட்சியைச் சேர்ந்த ஜிதன்ராம் மாஞ்சி புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. கூட்டத் துக்குப் பின் நிதிஷ் குமார் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘மக்களவைத் தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.  2015-ல் நடைபெறவிருக்கும் சட்ட சபைத் தேர்தலில் தனிப்பெரும் பான்மை கிடைத்தால் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்பேன்” என்றார்.

இதையடுத்து நிதிஷ் தலைமை யில் ஆளுநர் டி.ஒய்.பாட்டீலைச் சந்தித்த எம்.எல்.ஏ.க்கள் ஜிதன்ராம் மாஞ்சி புதிய முதல்வராகப் பொறுப்பேற்பதற்கான உரிமையைக் கோரினர். அதற்கான ஆதரவுக் கடிதத்தையும் ஆளுநரிடம் கொடுத்தனர். தாழ்த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ஜிதன்ராம், மாஞ்சி புய்யான் எனும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media